Friday, October 23, 2009

மாறுமா அரசுப் போக்குவரத்துக் கழகம்

தீபாவளியையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாகப் பயணிகள் நடத்துநர்களிடம் கேட்டபோது, "முன்பதிவு மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம், சிறப்புப் பேருந்து என்பதற்காகக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்றனர்.

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்தவர்களும், கொண்டாடி முடிந்து பணிக்குப் புறப்பட்டுச் சென்றவர்களும் பேருந்து நடத்துநர்களிடம் வாக்குவாதம் செய்து, வேறு வழியில்லாமல் பயணச்சீட்டு பெற்றுப் பயணித்தனர்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஏற்கெனவே மக்களவைத் தேர்தல் நேரத்தின்போது, சென்னை மாநகரப் பேருந்துகளின் கட்டணத்தை இரவோடு இரவாகக் குறைத்து அறிவித்ததும், பின்னர் கட்டணமே குறைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டதும் அறிந்ததே. "முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தவர்கள், இதை மறைக்காமல் இருப்பார்களா?'

வருவாய் ஈட்ட பண்டிகை நாள்களிலும், திருவிழாக்காலங்களின்போதும் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, நஷ்டம் அடையச் செய்துவரும், சாதாரண மக்களும் அறிந்த சிலவற்றை போக்குவரத்துக் கழகம் சீரமைத்தாலே போதும். ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் போக்குவரத்துக் கழகத்துக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ஒரே துறையில் அரசும், தனியாரும் ஈடுபடும்போது, தனியாருக்குச் சலுகைகளை வழங்க அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் முற்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதால், இதற்கு அவர்களும் உடன்படுகின்றனர்.

தனியார் பேருந்துகளுக்கு லாபகரமான "ரூட்'களை வழங்குவதிலும், "பீக் ஹவர்ஸ்' நேரங்களில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிப்பதும் உண்டு. இது தனியார் பேருந்து முதலாளிகள், அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம். பேருந்து நிலையங்களில் தனியார் பேருந்து மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நேரத்துக்கும் இடையே "டைமிங்' தொடர்பாகப் பிரச்னைகள் ஏற்படும். அரசுப் பேருந்துகளை ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்கூட்டியே எடுக்குமாறும், நேரம் கடந்தும் தனியார் பேருந்துகளை எடுக்க மறுக்கும் செயல்களும் நடைபெறும்.

இதற்காக தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக பல வகைகளில் "செல்வாக்கு' உடைய உள்ளூர் பிரமுகர்கள் இருப்பார்கள். சில நேரங்களில் அரசுப் பேருந்து ஊழியர்களைத் தாக்க முயலும் சம்பவங்களும் நடைபெறும்.

பேருந்து நிலையங்களில் நடைபெறும் இச்சம்பவங்களைத் தவிர்க்க, தனியாருக்குச் சாதகமாக அரசுப் பேருந்து ஊழியர்கள் நடந்துகொள்வதும் உண்டு. இதற்காக ஊழியர்கள் மட்டத்தில் "கவனிப்பு'ம் உண்டு.

இதனால், தனியார் பேருந்தில் ஏராளமான பயணிகள் நின்றுகொண்டு பயணிப்பதையும், அரசுப் பேருந்துகள் காலியாகச் செல்வதையும் காணமுடியும்.

அரசுப் பேருந்துகளில் ஏற்படும் சிறு பழுதுகளை உடனடியாகச் சரி செய்வது இல்லை. அந்தப் பழுதுகளுடனே பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும். சில மாதங்கள் கழித்து பெரும் பழுது ஏற்படும்போதுதான், அதை நிறுத்தி சரிசெய்வது உண்டு. நூற்றுக்கணக்கில் செலவழிக்க வேண்டிய செலவு அப்போதே செய்யாமல் நாள்கணக்கில் இழுத்தடித்து, பல்லாயிரக்கணக்கில் செலவு செய்கின்றன போக்குவரத்துக் கழகங்கள்.

தொலைதூரப் பயணத்தின்போது, பயணிகள் உணவு, தேநீர் அருந்தவும், இயற்கை உபாதைகளுக்காகவும் சில இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவது உண்டு. பேருந்துகள் நிற்கும் இடம் பெரும்பாலும் நகர்ப் பகுதியாக இருக்காது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக நெடுஞ்சாலைகளின் ஓரம் பேருந்து பயணிகளுக்காகவே அமைக்கப்படும் சிறு வணிக வளாகமாகவே அது காணப்படும். இங்கு அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் கடைகளை அமைத்திருப்பர். இங்கு விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலை, அப்பொருளின் உண்மையான விலையைவிட சில மடங்கு அதிகமாக இருக்கும்.

இவ்விடங்களில் பேருந்துகள் நின்று செல்வதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை "கவனிப்பு' நடைபெறுகிறது.

இவ்வாறாக அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தனியாருக்குச் சாதகமாக நடந்துகொண்டு, அவர்களின் மூலம் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவற்றையெல்லாம் அரசுப் போக்குவரத்துத் துறை நிர்வாகம் கண்டறிந்து களைந்தால், அரசுப் போக்குவரத்துக் கழகம் தனது ஆண்டு வருவாயில் மேலும் சில நூறு கோடி ரூபாய்கள் கிடைக்கும்.

இவ்வாறு பயணிகள் அனைவரும் அறிந்த சில தவறுகளைக் களைந்து, வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் முயலவில்லை. மாறாக, பண்டிகை நாள்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டது.

பண்டிகை நாள்களில் உள்ளூர் வணிகக் கடைகளில் சிலர் "இனாம்' கேட்பதுபோல், பயணிகளிடமும் அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்கத் தொடங்கிவிட்டதா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

கட்டுரையாளர் : தி. நந்தகுமார்
நன்றி : தினமணி

No comments: