கடந்த புதன்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கிளம்பிய 543 மீன்பிடிக்கும் விசைப் படகுகளில் 538-தான் வியாழனன்று ராமேஸ்வரம் திரும்பி இருக்கிறது. ஐந்து படகுகளை இலங்கையில் கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததுடன் நில்லாமல் அதிலிருந்த மீனவர்களையும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர்களைத் தாக்குவதும், தங்களது எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறிக் கைது செய்வதும் இலங்கைக் கடற்படையினருக்குப் புதிய விஷயமொன்றும் அல்ல. கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் நான்கு பேர் மட்டுமே மன்னாரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளனர். ஏனைய 17 பேரின் கதி என்ன என்பது ராஜபட்ச அரசுக்குத்தான் வெளிச்சம்.
இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்து மீன்பிடிப்பதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடந்த செப்டம்பர் 12-ம் தேதிதான் மீண்டும் கடலுக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களது 22 நாள் போராட்டம் இலங்கை அரசு தந்த உறுதிமொழியைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் முடிவுக்கு வந்தது. நான்கே நாள்களில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
தூத்துக்குடி பகுதிகளில் மீனவர்கள் அநேகமாகத் தங்களது தொழிலை நிரந்தரமாக விட்டுவிட்ட நிலைமை. ராமேஸ்வரத்திலோ, நித்திய கண்டம் பூரண ஆயுசாகக் கடலுக்குள் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இந்த மீனவர்கள்மீது தாக்குதல் நடத்துவதும், இவர்களைப் பிடித்து வைப்பதும் விடுதலைப்புலிகள்தான் என்று குற்றம்சாட்டித் தப்பித்து வந்தது இலங்கை அரசு. தங்கள்மீது பழி போடுவதற்காக மீனவர்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்த நிகழ்வுகள் ஏராளம், ஏராளம்.
போதாக்குறைக்கு, இந்திய அரசும் இந்த அப்பாவி மீனவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி செய்கிறார்கள் என்றும், அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உணவுப்பொருள்களைக் கடத்திச் சென்று கொடுக்கிறார்கள் என்றும் சந்தேகப்பட்டது. இப்போதுதான், இலங்கையில் அமைதி ஏற்பட்டு விட்டது என்று பெருமை பாராட்டிக் கொள்கிறார்களே... விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் என்று எக்காளமிடுகிறார்களே... அப்படியானால், இந்த அப்பாவி மீனவர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்? வேண்டுமென்றே இம்சிக்கப்படுகிறார்கள்?
""மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன்களுக்காகக் காத்திருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் சிறிய கப்பல்களில் அணிஅணியாக வந்துள்ளனர். இதைக் கண்டு அச்சமுற்ற தமிழக மீனவர்கள் தங்களது படகுகளை அவசர அவசரமாகக் கரைக்குத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து, டீசல் கேன்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடலில் தூக்கி வீசியுள்ளனர். மீனவர்களைத் துப்பாக்கிக் கட்டையால் தாக்கி, படகுகளைச் சேதப்படுத்தி இறுதியாக 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறி நடத்தப்படும் முதல் வன்முறைச் சம்பவம் அல்ல இது. இதுவரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன~இது தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பு. அதாவது, அரசே ஒத்துக்கொண்டிருக்கும் விஷயம்.
தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் போன்ற வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இந்தியக் கடற்கரை ஓரமாக மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலைமை. ஆழ்கடலில் நள்ளிரவில், இது எங்கள் எல்லைக்கு உள்பட்டது என்று இலங்கைக் கடற்படை கூறும்போது அப்பாவி மீனவர்கள் என்னதான் செய்ய முடியும்? கச்சத்தீவில் வலைகளை உலர்த்தும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இருக்குமானால், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும் உண்டு என்பதுதானே பொருள்?
இலங்கைக் கடற்படையின் உண்மையான நோக்கம் மீனவர்களைத் தாக்குவது அல்ல. இந்த மீனவர்களைத் தாக்கும்போது, தமிழகம் கோபத்தில் கொந்தளிக்க வேண்டும். அப்போது மத்திய அரசு, அண்டை நாடான இலங்கையைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று கண்டும் காணாமலும் இருந்து தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். இதில் இலங்கை அரசுக்கு ஒரு குரூர சந்தோஷம்.
"உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதை நிறுத்திவிட்டு, கச்சத்தீவை மீட்டெடுக்க, நமது மீனவர்களின் உரிமையை நிலைநிறுத்த, எல்லாவற்றிற்கும் மேலாக, இந்து மகா சமுத்திரப் பகுதிகளில் இந்தியாவின் மேலாண்மையை நிலைநாட்டக் குரல் எழுப்ப வேண்டிய நேரமல்லவா இது?
இது மீன்பிடிப்பதற்குப் போடப்படும் தடை அல்ல. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசால் வீசப்படும் சதி வலை!
நன்றி : தினமணி
Friday, October 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment