Wednesday, November 26, 2008

போராட்டக்காரர்களின் திடீர் முற்றுகையால் பாங்காக் விமான நிலையம் மூடல் ; விமானங்கள் ரத்து

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று அதிகாலை திடீரென்று பாங்காக் விமான நிலையத்திற்குள் நுழைந்து முற்றுகையிட்டதால், விமானங்கள் எதையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் இயங்காததால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாமல் திணறிப்போய் இருக்கிறார்கள். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பீப்பில்ஸ் அலையன்ஸ் ஃபார் டெமாகிரசி ( பிஏடி ) என்ற அமைப்பினர் இன்று அதிகாலை வேளையில் திடீரென பாங்காங் சுவர்னபூமி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டனர். விமானம் புறப்படுகிற இடம் வரை வந்து விட்ட அவர்கள் அங்கேயே அமர்ந்து விட்டனர். இதனால் நிலைகுழைந்து போன விமான நிலைய அதிகாரிகள், விமானங்களை நிறுத்த வேண்டியதாகி விட்டது. எங்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. எனவே காலை 4.00 மணியில் இருந்து ( தாய்லாந்து நேரம் ) விமானங்கள் இறங்குவதையும் புறப்படுவதையும் முற்றிலுமாக நிறுத்தி விட்டோம். இதனால் 78 விமானங்கள் நிறுத்தப்பட்டு விட்டது என்று பாங்காக் விமான நிலைய இயக்குனர் செரிராத் பிரசுதனன் தெரிவித்தார். விமான நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதால் அங்கிருந்த சுமார் 3,000 பயணிகள் அங்கேயே இருக்க வேண்டீயதாகி விட்டது. பயணிகளால் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள்ளும் போக முடியவில்லை. ஏனென்றால் அங்கேயும் போராட்டக்காரர்கள் அமர்ந்து ரோட்டை மறித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள பெரு நாட்டுக்கு சென்றிருக்கும் தாய்லாந்து பிரதமர் சொம்சாய் வோங்சவாத்தை, தாய்லாந்து திரும்ப விடாமல் தடுக்கும் நோக்கத்தில்தான் இவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்



No comments: