Thursday, December 24, 2009

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்: அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய முடிவு

அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர், அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய ஆலோசனை மேற் கொள்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப் பது குறித்து விவாதிக்கப்படும் பட்சத்தில், அவைகள் விலை அதிகரிக்கும் . இந்த கூட்டத்தில், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் கிரிட் எஸ்.பாரீக் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோலியத் துறை குறிப்பாக அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆராய, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, அரசு வழங்கும் எண்ணெய் கடன் பத்திரங்களை கொடுக்காததால், இரண்டாவது காலாண்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகிய தனியார் எண்ணெய் நிறுவனங்களும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க கேட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.49 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.38 ரூபாயும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தொடர்பாக அரசின் விலை நிர்ணய கொள்கை குறித்து ஆய்வு செய்த குழு, அடுத்த மாதம் இறுதியில் தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


No comments: