Thursday, December 24, 2009

தமிழில் டிஸ்கவரி சேனல்: பெண்கள், குழந்தைகள் ஆர்வம்

தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனலை பார்ப்பதில், பெண்களும், குழந்தைகளும் அதிகம் ஆர்வம் காட்டுவதால், 'டிவி' சீரியல்கள் பார்ப்பது குறைந்து வருகிறது. கலாசாரத்திற்கு எதிரான விஷயங்களை, சீரியலாக தயாரித்து சில 'டிவி' சேனல்கள் ஒளிபரப்புகின்றன. பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு தயாரிக்கும் சீரியல்களை பார்க்கும் டீன்-ஏஜ் மாணவர்கள், குழந்தைகள், தவறான பாதைக்கு செல்லும் நிலை உள்ளது. சினிமாவை போல் 'டிவி' சீரியல்களுக்கு சென்சார் போர்டு இல்லாததால், வக்கிரம், குரூரம், ஆபாசம், வன்முறை என, கலாசார சீரழிவிற்கு வித்திடும் வகையில், சில சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இது, சமூக நல ஆர்வலர்களுக்கு, பெரும் கவலையை அளித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக, டிஸ்கவரி சேனல் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பொது அறிவு சம்பந்தமான பூகோளம், விண்வெளி, மருத்துவம், வனவிலங்குகள், காட்டில் உள்ள அதிசயங்கள், பழங்கால மக்களின் வாழ்க்கை முறை என, உலகிலுள்ள அனைத்து அம்சங்களையும் கண்முன் நிறுத்துகிறது. நேரில் சென்று பார்க்க முடியாத பல இடங்களை, தத்ரூபமாக படமாக்கி, அரிய தகவல்களோடு அளிக்கின்றனர். ஆங்கிலத்தில் ஒளிபரப்பானவரை, மொழி புரியாததால், கிராமங்களில், தகவல் புரியாமல் வேறு சேனலை மக்கள் பார்த்து வந்தனர். தற்போது, சுவாரசியம் குறையாமல் வசனங்களும், தகவல்களும் தமிழில் தருவதால், அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பார்க்க துவங்கியுள்ளனர். தங்களின் குழந்தைகளுக்கும் இச் சேனலை பார்க்க அறிவுறுத்துகின்றனர். சீரியல் பார்க்க நினைக்கும் பெற்றோரும், குழந்தைகளின் நச்சரிப்பதால் டிஸ்கவரி சேனல் பார்க்கத் துவங்கியுள்ளனர். முக்கியமாக, இரவு நேரங்களில், சுவாரசியம் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இதனால், தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனல் பார்க்கும் ஆர்வம், பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.
நன்றி : தினமலர்


No comments: