தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறை காரணமாக தினமும் 2 மணி நேரம் மின்தடை நடைமுறையில் உள்ளது. மின்சாரப் பயன்பாட்டின் தேவைக்கும், மின்சார உற்பத்திக்கும் இடைவெளி அதிகமாக இருப்பதால் 2000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இது 11 சதவீதப் பற்றாக்குறை என மின்வாரியம் கணக்கிட்டுள்ளது.
இதன் காரணமாக நிரந்தரமான மின்தடையை நாம் அனுபவித்து வருகிறோம். இன்றைய சூழலில் ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால் 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ததற்கு ஈடாகக் கருதப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறைக்கு உடனடியாகத் தீர்வு காண வாய்ப்பில்லை என மின்சார வாரியமே தெரிவிக்கிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் மின்சாரம் கிடைக்க மேலும் 5 ஆண்டுகள் ஆகலாம்.
தேவையான மின்சாரம், நீர்த்தேக்கங்கள், அனல் மின்நிலையங்கள், காற்றாலை, இயற்கை வாயு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி விகிதத்தைவிட பயன்பாடு அதிகமாக இருப்பதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் மின்சாரத் தேவை அதிகரித்துவிட்டது. ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவசாயம், குடிசை வீடுகள், நெசவாளர்களுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. எனவே, மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.
அண்மையில் மின்வாரியம் மின்சார சிக்கன வாரவிழாவைக் கொண்டாடியது. இந்த விழாவில் மின்வாரிய ஊழியர்கள், தனியார் ஆலை, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. காரணம் இவ்விழா குறித்து போதிய விளம்பரம் இல்லாததால் மின்சார சிக்கன வார விழா குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை.
மின்சார சிக்கன வார விழாவை மின்சார வாரியம் மண்டலம், கோட்ட அளவில்தான் நடத்தியது. இந்த விழாவில் பேசிய மின்வாரிய அதிகாரிகள் மின்சார சிக்கனம் இல்லையெனில் எதிர்காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அபாய நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
சமூக அக்கறையுடன் மின்சார சிக்கனத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். எனவே அரசே மின்சார சிக்கனத்தைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை உள்ளது. மழைநீர் சேமிப்பைக் கட்டாயமாக்கிய அரசு, ஏன் மின்சார சிக்கனத்தைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.
பெரும்பாலான அரசு அலுவலகங்களில் மின்சாரம் சிக்கனமாகச் செலவழிக்கப்படுவதில்லை. ஏன் மின்வாரியப் பராமரிப்பில் உள்ள தெருவிளக்குகள்கூட உரிய நேரத்தில் அணைக்கப்படாததால், பகலில் பல மணி நேரம் மின்விளக்குகள் எரியும் நிலை உள்ளது.
இதனால், பெருமளவில் மின்சாரம் வீணாகச் செலவழிக்கப்படுகிறது என்பது உண்மை. எனவே மின்சார சிக்கனம் என்பது ஒரு சதவீதம்கூட நடைமுறையில் இல்லை என்பதை மறுக்க முடியாது.
மின்சாரம் வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பிட்ட சில மணி நேர மின்தடையைச் சமாளிப்பதற்குக்கூட இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்ற சாதனங்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
வீடுகள், பங்களாக்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் 40 வாட்ஸ் குழல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாற்றாக 13 முதல் 18 வாட்ஸ் சிஎப்எல் (இஞஙடஅஇப ஊகஞமதஉநஇஉசப கஅஙட) பல்புகளைப் பயன்படுத்தினால் குறைந்த மின்சாரச் செலவில் அதிக வெளிச்சம் பெறலாம்.
மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிக்க இதுபோன்ற சிஎப்எல் பல்புகளை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் இதுபோன்ற மின்விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கலாம். அவ்வாறு மின்விளக்குகளை பொருத்தினால்தான் இணைப்பு வழங்க வேண்டும்.
பிரம்மாண்டமான அரசு விழாக்கள், அரசியல் கட்சியினர் நடத்துகின்ற விழாக்களுக்கு தேவையான மின்சாரம் குறிப்பிட்ட இணைப்பில் இருந்து கிடைக்காது என்பதால் உயர் மின்அழுத்த இணைப்பில் இருந்து கொக்கி போட்டு திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் தொலைநோக்கான மின்உற்பத்தித் திட்டங்கள் கொண்டுவரப்படாத காரணத்தால் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.
ஏற்கெனவே மின் இணைப்புகள் பெற்று மின்சாரத்தைப் பயன்படுத்தி வருவோர் இணைப்புகளில் உள்ள பழுதானவயர்கள் மூலம் மின்சாரம் கசிந்து வீணாவதை மின்சார வாரியம் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.
சமூக அக்கறையுடன் அரசும் மக்களும் மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முன்வந்தால் எதிர்காலத்தில் மின்தடையே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்.
கட்டுரையாளர் : சா. ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment