Tuesday, July 28, 2009

தடுப்பு மருந்துக்கும் தட்டுப்பாடு

"நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு, மருந்து உற்பத்தியைக் குறைத்துள்ளது பற்றி விசாரணை நடத்தப்படும்' என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் உறுதி கூறியுள்ளார்.

இந்தியாவில் 2.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை, கக்குவான், போலியோ, மஞ்சள்காமாலை போன்ற நோய்த் தடுப்பு மருந்துகள் அரசால் இலவசமாகத் தரப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை. காரணம், தடுப்பு மருந்து தயாரிக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது தனியார் மருந்து உற்பத்தியாளர்கள்தான் இந்தத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகின்றனர். இவர்களிடம் இரு மடங்கு விலை கொடுத்து அரசு வாங்குகிறது.

இமாலயப் பிரதேசத்தில் கசெüலி என்ற இடத்தில் உள்ள மத்திய ஆய்வு நிறுவனம், சென்னையில் பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகிய மூன்றும் இந்தியாவுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மருந்துகளில் 80 சதவீதத்தை தயாரித்து வந்தன. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்து உற்பத்திக்கான உரிமம் 2008, ஜனவரி 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதற்குக் காரணமாக, மத்திய சுகாதாரத் துறை மேற்கோள் காட்டிய விஷயம் என்னவெனில், உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வில் இந்த மூன்று நிறுவனங்களும் "தரமான உற்பத்தி முறைகளை (ஜிஎம்பி) கடைப்பிடிக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளது' என்பதுதான்.

உலக சுகாதார நிறுவனம் இந்த விஷயத்தை 2007 ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது என்பது உண்மையே. இருப்பினும், இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் 80 சதவீத தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றன என்ற உண்மை நிலையை மத்திய அரசு உணர்ந்திருக்குமானால், தரமான உற்பத்தி முறைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கும். ஆனால், உரிமத்தை ரத்து செய்துவிட்டு, தனியாரிடம் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கியது மத்திய அரசு. இதனால் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை இரு மடங்காக உயர்த்தின. தடுப்பு மருந்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.140 கோடியைக் கொடுத்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து தேவைப்படும் மருந்தில் பாதி அளவுக்கே வாங்க முடிந்தது; இப்போது தட்டுப்பாடு!

""தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக இவ்வாறு உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று கூற முடியாது'' என்று குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போன்றது.

மூன்று அரசு நிறுவனங்களின் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருள்களை திசை திருப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எஸ்.பி. சுக்லா (முன்னாள் தனிச்செயலர்) உள்பட சில தன்னார்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இதுதான்: தட்டம்மை தடுப்பு மருந்துக்கான மூலப்பொருளை ஹைதராபாதில் உள்ள அரசு நிறுவனமான "இந்தியன் இம்யுனோலாஜிகல் லிமிடெட்' இலவசமாகத் தருகிறது. இருப்பினும்கூட, சென்னையில் உள்ள பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி அவற்றை சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் விலைக்கு வாங்கியது ஏன்? அதேபோன்று, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனமும், தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டு, ரூ.17.8 கோடிக்கு தட்டம்மை மருந்து தயாரிக்கவும், இதன் உரிமத் தொகையில் (ராயல்டி) 70 சதவீதத்தை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கவும் முன்வந்தது ஏன்?

இத்தகைய தவறுகள் எங்கே, ஏன், யாரால் நடந்தது என்பது இன்றைக்கான பிரச்னை அல்ல. ஆனாலும், 2.5 கோடி குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் அரசு நிறுவனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் முன்பாக மாற்று ஏற்பாடுகளைப் பற்றி ஏன் மத்திய அரசு யோசிக்கவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

இதுபற்றி மத்திய அரசுக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பிரச்னை, 2008 தொடக்கத்திலேயே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலும் தரப்பட்டுள்ளது. அதன் பிறகும் இந்தப் பிரச்னைக்கு உரிய கவனம் தரப்படாமல் இப்போது இந்தியா முழுவதற்கும் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்றால், இதற்கு அப்போதும் இப்போதும் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிதானே முழுப்பொறுப்பு?
நன்றி : தினமணி

No comments: