Tuesday, July 14, 2009

பருப்பு, அரிசி விலை: ஓட்டல்களில் விலை உயர்வு

உணவு தயாரிப்பு மூலப் பொருட்களான பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை தமிழகத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால், ஓட்டல்களில் சாப்பாடு, டிபன் வகைகளின் விலையை ஆகஸ்ட் 15 முதல் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஓட்டல் உரிமையாளர்கள், நஷ்டத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், கடந்த மாதமே அரசு சாப்பாடு தவிர, மற்ற சாப்பாடு வகைகளில் 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலை ஏற்றத்தை சப்தம் இன்றி அரங்கேற்றி உள்ளனர். தற்போது துவரம் பருப்பு கிலோ 100 ரூபாயை தாண்டும் நிலையில், உளுந்தம் பருப்பு கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாளை முதல் வெளிநாடுகளுக்கான அரிசி ஏற்றுமதி தடை நீக்கப்படும் என்ற தகவல் பரவி வருவதால், அரிசி விலை மீண்டும் உயரும் நிலை உருவாகி உள்ளது. அரிசி, துவரம் பருப்பு விலையில் உயர்வு ஏற்படும் என்ற தகவல் ஓட்டல் உரிமையாளர்களுக்கு முன்னரே தெரிய வந்ததால், தங்களின் இரண்டு மாத தேவைக்கான மூலப்பொருட்களை இருப்பு வைத்துள்ளனர். இந்த விலை உயர்வு மேலும் தொடரும் பட்சத்தில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல், உணவு பண்டங்களின் விலையை பல மடங்கு அதிகரிக்க வேண்டிய நிலைக்கு ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து நடுத்தர நகர ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: பருப்பு வகை, மளிகை சாமான்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வில் இருந்து எங்கள் தொழிலை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அளவு சாப்பாடு 28 ரூபாய்க்கும், ஸ்பெஷல் சாப்பாடு 35 ரூபாய்க்கும், டிபன் வகைகளில் இரண்டு இட்லி 10 ரூபாய், ப்ளைன் தோசை 12 ரூபாய், வடை 7 ரூபாய், பொங்கல் 18 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் முதல் தேதிக்குள் மூலப்பொருட்களின் விலையில் சரிவு ஏற்படாத பட்சத்தில், டிபன் வகைகளின் விலையில், வகைகளுக்கு தக்கபடி 2 முதல் 7 ரூபாய் வரையும், சாப்பாடு விலை 5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
நன்றி : தினமலர்


No comments: