ஜூலை 26ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 12.01 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.98 சதவீதமாக இருந்தது. 0.03 சதவீதம் மட்டும் உயர்ந்திருக்கிறது. பருப்பு வகைகள், வாசனை திரவியங்கள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பணவீக்கம் சிறிது உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மத்திய நிதித்துறையின் செய்திக்குறிப்பில், போன வாரத்திற்கும் இந்த வாரத்திற்குமிடையே விலைவாசி அவ்வளவாக உயரவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல பழங்களின் விலை 0.5 சதவீதம் குறைந்திருக்கிறது. முக்கியமான 98 பொருட்களில் 18 பொருட்களின் விலை குறைந்திருப்பதாக சொல்கிறது அந்த அறிக்கை. மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, விலைவாசியை கட்டுப்படுத்தும் விதமாக இன்னும் சில விவசாய பொருட்களின் ஃபியூச்சர் டிரேடிங்கிற்கு தடைவிதிக்கவுள்ளோம் என்றார். இந்த வாரத்தில் இரும்பு மற்றும் ஸ்டீல் விலை உயரவில்லை. ஆனால் சிமென்ட் விலை சிறிது உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.7 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment