துபாய் சோதனைகளால் சந்தை கடந்த வியாழனும், வெள்ளியும் சரிந்தது. பின் எப்படி திங்களன்று ஜம்மென்று மேலே சென்றது என்று பலருக்கு வியப்பாக இருக்கலாம். திங்களன்று இந்தியாவின் மொத்த வளர்ச்சி சதவீதம் பற்றிய தகவல்கள் வெளியாயின. அது, எதிர்பார்ப்புக்கு மேல் நன்றாக இருந்ததால், சந்தைகள் மேலே சென்றன.
செப்., மாத காலாண்டு முடிவில் இந்தியாவின் மொத்த வளர்ச்சி 7.9 சதவீதமானதால், எட்டாவது அதிசயம் என்ற அளவிற்கு பேசப்பட்டது. அது, துபாயின் புயலையும் தாண்டி சந்தையை தூக்கி நிறுத்தியது.
முதல் காலாண்டில் 5.8 சதவீதம், இரண்டாவது காலாண்டில் 6.1 சதவீதம், மூன்றாவது காலாண்டில் 7.9 சதவீதம் என்று சென்று கொண்டிருப்பதால் இந்த ஆண்டு முடிவில் சராசரியாக 7 சதவீதத்தை தொடமுடியும் என்று, மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். திங்களைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் சந்தை முன்னேற்றத்திலேயே தான் இருந்தது. ரிசர்வ் வங்கி, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த சி.ஆர்.ஆர்., சதவீதத்தை கூட்டலாம் (வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய பண சதவீதத்தை) அல்லது வட்டி விகிதங்களைக் கூட்டலாம். இது, வங்கிகளிடம் உள்ள உபரிப்பணத்தை குறைக்க உதவும். வங்கி டிபாசிட் பணத்திற்கு, வரும் காலத்தில் சிறிது வட்டி கூடலாம். நேற்று முன்தினம் மும்பை பங்குச் சந்தை 272 புள்ளிகள் மேல் சென்றது.
நேற்றும் சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமாகத்தான் இருந்தது. ஆனால், மதியத்திற்கு மேல், லாபம் அனைத்தையும் இழந்து முடிந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 28 புள்ளிகள் குறைந்து 17,169 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 5,123 புள்ளிகளுடனும் முடிந்தது.
அக்டோபர் ஏற்றுமதி: அக்டோபர் ஏற்றுமதி கடந்தாண்டு இதே சமயம் ஏற்றுமதியை விட 6.6 சதவீதம் குறைவாக உள்ளது. வரும் ஜனவரியிலிருந்து ஏற்றுமதி கூடும் வாய்ப்புகள் உள்ளன. பல கம்பெனிகளுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் வருவது கூடியுள்ளது.
விவசாயத்துறை வளர்ச்சி? மொத்த வளர்ச்சி பல துறைகளிலும் நன்றாக இருந்தாலும், விவசாயத் துறையில் அவ்வளவு சிறப்பாக இல்லாதது ஒரு குறைதான். அது சரிசெய்யப்பட வேண்டும். இல்லையெனில், அது நீண்டகாலத்தில் இந்தியாவைப் பாதிக்கும். மேலும், உணவுப் பொருட்களின் விலை இன்னும் கூடும் அபாயம் உள்ளது. அது எல்லாவற்றையும் பாதிக்கும், சந்தைகள் உட்பட. பல வெளிநாட்டு கம்பெனிகள், அடுத்த காலாண்டு எப்படி இருக்கும் என்று பார்த்து விட்டு முதலீடு செய்யலாம் என்று தான் நினைக்கின்றன.
'துபாய் வேர்ல்ட்': 'துபாய் வேர்ல்ட்' அரசு கம்பெனியல்ல. தனிக் கம்பெனி என்று துபாய் அரசு அறிக்கை விடுத்துள்ளது. இது எந்த அளவு அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியவில்லை.
பக்ரீத் விடுமுறை இன்னும் தொடர்வதால், அடுத்த வாரத் துவக்கத்தில் தான் தெளிவான ஒரு நிலை கிடைக்கும்.
துபாய் பங்குச் சந்தைகள்: அனைவருக்கும் மிகுந்த ஆர்வம் இருக்கும் துபாயில் சந்தை எப்படி பரிணமித்தது என்று. செய்திகள் கேட்ட பிறகு சந்தை ஆரம்பித்த முதல் நாளில் துபாய் சந்தை 7 சதவீதமும், அபுதாபி சந்தை 8 சதவீதமும் குறைந்தன. நக்கீல் பாண்ட்கள் தனது மதிப்பில் 50 சதவீதத்திற்கும் மேலாக சமீபத்தில் இழந்திருக்கின்றன. அதாவது, 100 டாலர்களுக்கு அந்த பாண்டை வாங்கியிருந்தால் அதன் விலை தற்போது 50 டாலர்கள் தான் கிடைக்கும். அவ்வளவு குறைந்திருக்கிறது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? துபாய் சோதனைகளையும் தாண்டி சந்தை சாதனை படைத்து வருகிறது. இப்படி சாதனைகள் படைக்க மொத்த வளர்ச்சி தான் முக்கியக் காரணம். துபாயில் இன்னும் பெரிய அளவு சோதனைகள் இல்லாவிடில் சந்தைகள் இதே நிலையிலேயே இருக்கும். பெரிய ஏற்ற, இறக்கங்கள் இருக்காது.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment