தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதையடுத்து நாட்டின் பிற பகுதிகளிலும் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. வன்முறை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்திய அரசுக்கு இந்த மொழிதான் புரிகிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து புந்தேல்கண்ட், பஸ்சிமாஞ்சல் (மேற்கு உத்தரப் பிரதேசம்) மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இப்போது உ.பி.யின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலத்தை அமைப்பதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்துமாறு பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்கா தனிமாநிலம் அமைக்க வேண்டுமென்று பாஜகவும், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் கோரிக்கை எழுப்பியுள்ளன. இது 102 ஆண்டுகாலக் கோரிக்கையாம். எல்லைப் பகுதியின் காவலர்களாக இருக்கும் அவர்கள் உணர்வுரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் மேற்குவங்க மாநிலத்தின் மற்ற பகுதியிலிருந்து தனிமைப்பட்டுக் கிடக்கின்றனராம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா தனிமாநிலக் கோரிக்கையும் எழுந்துள்ளது. மகாராஷ்டிர பாஜகவின் இந்தக் கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கிறது. விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை எழுப்புபவர்கள் ஒருங்கிணைந்த மகாராஷ்டிரத்துக்காக உயிர் நீத்த 105 தியாகிகளின் கனவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அது கூறுகிறது.
இதேபோல போடோ மக்கள் முன்னணி உறுப்பினர் பிஸ்வமூர்த்தி, "போடோலேண்ட்' அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே கோரியுள்ளார். அசாம் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
பிகார் மாநிலத்தைப் பிரித்து, "மிதிலாஞ்சல்' மாநிலமும், குஜராத் மாநிலத்தைப் பிரித்து, "சௌராஷ்டிரா' மாநிலமும் அமைக்க வேண்டும்; உ.பி.யின் கிழக்குப் பகுதியையும் பிகாரின் சில பகுதிகளையும் பிரித்து "போஜ்புர்' மாநிலமும் அமைக்க வேண்டும் என இது தொடர்கிறது.
2000-ல் பிகாரிலிருந்து "ஜார்க்கண்ட்' மாநிலமும், உ.பி.யிலிருந்து "உத்தரகண்ட்' மாநிலமும், மத்தியப் பிரதேசத்திலிருந்து "சத்தீஸ்கர்' மாநிலமும் பிரிக்கப்பட்டன. இப்போது தெலங்கானா அமையுமானால் இது இந்தியாவின் 29-வது மாநிலமாகும்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய குரல் கேட்கிறது. தமிழகத்தை இரண்டாகப் பிரித்தால் நல்லது. சிறிய மாநிலமாக இருந்தால் வளர்ச்சியிருக்கும்; நிர்வாகமும் எளிதாக இருக்கும். ஆனால் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது பாமகவின் முன்னுரிமைக் கோரிக்கை அல்ல என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனை வேறு சிலரும் வரவேற்றுள்ளனர்.
ஆனால் தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ""அப்படிப்பட்ட கருத்து திமுகவிலும் இல்லை; தமிழ்நாட்டு மக்களுக்கும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது போன்ற யோசனைகள் மிகவும் ஆபத்தானவை மட்டுமல்ல, அபத்தமானவை. இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தொடங்கும்போதே, "ஏன் இதனை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்றாகப் பிரிக்கக் கூடாதா?' என்ற அடுத்த கேள்வியும் எழும். அத்துடன் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமும் நீர்த்துப் போகும்.
அந்தக் காலத்தில் தமிழகம் பல நாடுகளாக இருந்தது என்பது உண்மைதான். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பவை முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டன. அத்துடன் பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கி.மு. 300 முதல் 600-ம் ஆண்டு வரை அரசாட்சி செய்திருக்கின்றனர். பல்லவர்களை வென்று காஞ்சியைக் கைப்பற்றி சாளுக்கியர்களும் சிலகாலம் ஆட்சி செய்துள்ளனர்.
இதுதவிர, தொண்டை நாடு, கொங்கு நாடுகளும் இருந்தன. மூவேந்தருக்குக் கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் குன்றுதோறும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு பல சிற்றரசர்கள் தனியாகவே ஆண்டுவந்தனர். மேலும் தமிழ்நாட்டில் பல ஊர்களே நாடு என்ற பெயரில் வழங்கின. ஒரத்த நாடு, பாப்பா நாடு, பைங்கா நாடு, வள நாடு எனக் கூறலாம். இந்த ஊர்களே ஒரு நாடாக பல பண்ணையார்களால் ஆளப்பட்டுள்ளன. இன்றும் அவ்வூர்களில் அவர்களின் வம்சாவளியினர் இருக்கின்றனர். இவையெல்லாம் கடந்த கால வரலாறு.
நாடு விடுதலை பெற்றதும், மாநில வரையறை பற்றிய கேள்வி எழுந்தது. பிரதமர் நேருவின் தட்சிணப் பிரதேசத் திட்டம் ஏற்கப்படாததால் மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து அமைப்பதற்காக "மாநிலப் புனரமைப்புக் குழு' நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரை செயல்படுத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணம் என்பது திராவிட நாடாக-பல மொழிகள் பேசும் மாநிலமாக இருந்தது. 1953-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் முதலில் பிரிந்தது. 1956-ல் மலபார் மாவட்டம் பிரிந்து கேரளத்தில் இணைந்தது. தென் கன்னட மாவட்டம் பிரிக்கப்பட்டு கர்நாடகத்துடன் சேர்ந்தது. மீதம் இருந்ததே தமிழ்நாடானது.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கட மலையும், தெற்கு எல்லையாக குமரியாறும், கிழக்கும், மேற்கும் கடலாகவும் இருந்தன என்று தமிழக வரலாறு கூறுகிறது. இதனையே, "வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து' என பண்டைய புலவர்களும் பாடியுள்ளனர்.
ஆனால் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தின் பல பகுதிகள் பறிபோய்விட்டன. தமிழகத்தின் வட எல்லையான வேங்கடம், சித்தூர் முதலிய பகுதிகள் ஆந்திரத்துக்கும், தேவிகுளம், பீர்மேடு முதலிய தமிழ்ப்பகுதிகள் கேரளத்துக்கும், கோலார் தங்கவயல் முதலிய தமிழ்நிலம் கர் நாடகத்துக்கும் எடுத்துத் தரப்பட்டபோது இதுபற்றி இங்கே யாரும் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டில் இருந்த பெரிய கட்சிகள் எல்லாம் கண்டும், காணாமல் இருந்தபோது, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யும், அவர் கட்சியினருமே குரல் கொடுத்தனர். எல்லைப் போராட்டங்களை எடுத்து நடத்தினர். வடஎல்லை பாதுகாப்புக் குழுவின் செயலாளராக இருந்த கே. விநாயகம், சித்தூர் மாவட்டத்தில் வாழ்ந்த 4 லட்சம் தமிழர்களுக்காகப் பாடுபட்ட மங்கலக்கிழார் இவர்களைத் தமிழக வரலாறு மறக்காது.
எனவே இழந்த மண்ணை மீட்காவிட்டாலும், இருக்கும் மண்ணையாவது இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். மாநிலத்தைக் கூறுபோடுவதைவிட அதன் முன்னேற்றத்துக்காக உழைப்பதே பெருமையாகும்.
தமிழ்நாட்டில் நிர்வாகம் எளிதாக இருக்க வேண்டுமானால் அரசுத் துறைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் தலைநகரிலேயே தேக்கி வைப்பது கடந்த காலங்களில் தேவையாக இருக்கலாம்; இனித் தேவை இல்லை. நாட்டின் கடைகோடியில் இருக்கும் ஒருவர் எல்லாவற்றுக்கும் அரசுத்துறையை நாடி சென்னைக்கு மூட்டை கட்டிக் கொண்டு வர வேண்டும் என்பது என்ன நியாயம்?
தொழில் துறையை கோவை அல்லது திருப்பூருக்கும், வேளாண்மைத்துறையை தஞ்சாவூர் அல்லது திருச்சிக்கும் மாற்றவேண்டும். இது தவிர மதுரை, நெல்லை, சேலம் முதலிய புறநகரங்களுக்கும் பிற துறைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிவது ஆபத்தாகும்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் தலைநகர் மாநிலத்தின் மையப்பகுதியாகிய திருச்சியில் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். ஆனால் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ள விடாமல் அதிகாரிகளே தடுத்து விட்டனர் என்று அப்போது கூறப்பட்டது. தலைநகரை மாற்றுவதற்குப் பதிலாகத் துறைகளை மாற்றுவது எளிதாகும்.
இன்றைய அறிவியல் உலகில் அமைச்சர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியும். "விடியோ கான்பரன்ஸ்' முறை இப்போதே செயல்பாட்டில் இருக்கிறது; மனம் வைத்தால் மார்க்கமா இல்லை?
அழகிய தேன்கூட்டைக் கல்வீசிக் கலைப்பதா? அவை கொட்ட வரும்போது எட்டி எட்டி ஓடுவதா? தெலங்கானா பிரச்னையைத் தொட்டுவிட்டு மத்திய அரசு செய்வது அறியாமல் திகைத்து நிற்பது போதாதா? சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுக்க வேண்டாம்.
கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
Saturday, December 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment