Thursday, August 7, 2008

கச்சா எண்ணெய் விலை குறைவதால் பங்குச் சந்தையில் திருப்பம்


முதலீட்டாளர்களின் பிரார்த்தனை பலித்துவிட்டது. கச்சா எண்ணெய் 'பகவான்' இந்த வாரம் கருணைக் கண்ணை திறந்து விட்டார். விளைவு, சந்தையில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான நேரம். இந்த வாரம் சந்தை கூடியதற்கு முக்கிய காரணங்கள்: கச்சா எண்ணெய் விலை குறைந்தது; அமெரிக்கா பெட் வட்டி விகிதங்களை கூட்டாமல் அதே 2 சதவீதத்திலேயே வைத்திருந்தது. கச்சா எண்ணெய், பேரலுக்கு 147 டாலர் அளவு சென்றிருந்த போது, இன்னும் ஒரு மாதத்திற்குள் 120 டாலருக்கு கீழே வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டர். ஆனால், தற்போது, 120 டாலருக்கும் கீழே வந்து எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திங்களன்று சந்தை ஒரு மந்த நிலையிலேயே இருந்தது. நேற்று முன்தினம், அமெரிக்கா பெட் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் செய்யுமா, செய்யாதா என்று குழப்பத்திலேயே பலரும் இருந்ததால், ஒரு கவனமான பாதையிலேயே முதலீட்டாளர்கள் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆதலால், சந்தை அன்றைய தினம் 79 புள்ளிகள் கீழேயே முடிவடைந்தது.
நேற்று முன்தினம் துவக்கம் 15 புள்ளிகள் குறைவிலேயே ஆரம்பித்தது. ஆனால், உலகின் மற்ற பகுதியின் நிலவரங்களை வைத்து சந்தை ஏற ஆரம்பித்தது. அதாவது, கச்சா எண்ணெய் விலை எதிர்பார்த்திருந்த 120 டாலருக்கும் கீழே குறந்ததால், சந்தையில் மறுபடியும் வாங்குபவர்கள் நிறைய இருந்தனர். ஆதலால், இங்கும் சந்தைகள் ஜிவ்வென ஏறின. முடிவாக மும்பை பங்குச் சந்தை 383 புள்ளிகள் கூடி முடிவடைந்திருந்தது. நேற்றும் துவக்கம் மேலேயே இருந்தது. நடுவில் ஒரு சமயத்தில் சந்தை 400 புள்ளிகளுக்கு மேலாக ஏறிச்சென்றிருந்தது. காரணம் என்ன? : அமெரிக்கா பெட் வட்டி விகிதங்களை எதுவும் கூட்டாமல் அதே 2 சதவீதத்திலேயே வைத்திருந்தது. இதனால், நேற்று முன்தினம் நமக்கு பிறகு தொடங்கிய அமெரிக் காவின் பங்குச் சந்தைகள் 3 சதவீதம் வரை மேலே சென்றது. இது போல மேலே ஏறிச் செல்லும் சந்தையில் லாபம் பார்ப்பவர்கள் இருக்கத்தானே செய்வார்கள். அப்படியே இருந்தது சந்தையிலும். ஆதலால், சந்தை 300க்கும் அதிகமான புள்ளிகளை இழந்து முடிவாக 112 புள்ளிகள் மட்டும் லாபத்தில் இருந்தது. எலிகான், ஆர்.என்.ஆர்.எல்., திரிவேணி இண்டஸ்ட்ரீஸ், மாருதி, பஜாஜ் இந்துஸ்தான் ஆகிய கம்பெனிகள் நல்ல முன்னேற்றம் கண்டன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 112 புள்ளிகள் கூடி15,073 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை 14 புள்ளிகள் கூடி 4,517 புள்ளிகளிலும் முடிவடைந்தது. 15 ஆயிரம் புள்ளிகளை தாண்டி மும்பை பங்குச் சந்தை முடிந்திருப்பது சென்டிமென்டாக நல்ல ஒரு அறிகுறி. நிலைத்து நிற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பணவீக்கம் குறையுமா?: கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் எல்லாருடைய எதிர்பார்ப்பும் பணவீக்கம் குறையுமா என்பது தான். கட்டாயம் குறைய வேண்டும். வரும் வாரங்களில் இதற்கான அறிகுறிகள் தெரியும். பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பில் வங்கி பங்குகள், கட்டுமானத்துறை பங்குகள் மேலே சென்றன. குறிப்பாக வங்கிப் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் நல்ல ஏற்றங்களை கண்டுள்ளன.
புதிய வெளியீடுகள்: பல கம்பெனிகள் தங்களது புதிய வெளியீடுகளை தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றாலும், நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன், பி.எஸ்.என்.எல்., கம்பெனிகள் தங்களது வெளியீடுகளை கொண்டு வர தங்களது போர்டிடம் அனுமதி பெற்றுள்ளன. பி.எஸ்.என்.எல்., வெளியீடு 42,000 கோடி ரூபாய் அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க கம்பெனிகளின் வெளியீடுகள் இன்னும் ஆறு மாதத்திற்குள் பல வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வங்கிகள், தங்களது மூலதனத்தை கூட்டுவதற்காக புதிய வெளியீடுகளைக் கொண்டு வரலாம். வரும் நாட்களில் எந்த பெரிய தாழ்வுகளுக்கும் வழியில்லை. ஏற்றங்கள் பெரிதாக இல்லாவிடினும் சந்தை 15 ஆயிரம் புள்ளிகளில் நிலைத்து நிற்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


No comments: