'நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிதமாக, 7.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக இருக்கும்' என்று, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் சேர்மன் சி.ரங்கராஜன் கருத்து தெரிவித்தார். பணவீக்கம் குறைய ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதிகரித்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கு தலைவலியை கொடுத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி அதிரடி முடிவுகளை எடுத்தது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி முதலில் அறிவித்தது. பின்னர், சமீபத்தில் அறிவித்த நிதிக் கொள்கையில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் சேர்மன் சி.ரங்கராஜன், டில்லியில் விழா ஒன்றில் நேற்று பங்கேற்க வந்த போது நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நிலவும் பல காரணங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்குள்ளாக மிதமாக இருக்கும். முடிந்த 2007-2008ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது. தற்போது, 12 சதவீதத்தை நெருங்கியிருக்கும் பணவீக்கம், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக 8லிருந்து 9 சதவீதத்திற்குள் வரும் என எதிர்பார்க்கிறேன். கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 118 டாலருக்கு கீழ் வந்து இருப்பதால், பணவீக்கம் இறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் நல்லதொரு மாற்றம் ஏற்படும். இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment