Thursday, August 7, 2008

பெட்ரோல், டீசல் விலை குறையாது மத்திய அரசு திட்டவட்டம்


'சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்கும் எண்ணம் ஏதும் இல்லை' என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சமீப நாட்களாக உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்து, உச்சத்திற்குச் சென்ற கச்சா எண்ணெய் விலை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வரத் துவங்கியிருக்கிறது. பேரல் ஒன்றின் விலை 147 அமெரிக்க டாலர் வரை சென்றது. பெட்ரோலிய தேவை அதிகமுள்ள அமெரிக்காவில் பெட்ரோல் தேவை குறைந்துள்ளதால் நிலைமை மாறியுள்ளது. கடந்த சில நாட்களாகப் படிப்படியாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் பேரல் ஒன்றின் விலை 120 அமெரிக்க டாலருக்கும் கீழ் இறங்கியது. நேற்று 117.75 டாலர்கள் வரை சரிந்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்த மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சுந்தரேசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், இங்கு பெட்ரோல், டீசல் விலை உடனடியாகக் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அச்சுறுத்தி வந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த ஜூன் மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் லிட்டருக்கு மூன்று ரூபாயும், வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.50 ம் அதிகரிக்கப்பட்டன. அப்போது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 119 முதல் 120 டாலர்கள் வரை இருந்தது. தற்போது இந்த விலையை தான் தொட்டு இருக்கிறது. இதன் காரணமாக விலை குறைக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமில்லை. கச்சா எண்ணெய் சரிவால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பின் சதவீதம் குறைந்து இருக்கிறது. ஜூன் 5 தேதி விலை ஏற்றப்பட்ட போது, வருவாய் இழப்பு ஓராண்டுக்கு ரூ. இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 600 கோடியாக இருந்தது. விலை உயர்வுக்குப் பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டு மொத்த வருவாய் இழப்பு ரூ. இரண்டு லட்சத்து ஐந்தாயிரத்து 740 கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு சுந்தரேசன் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: