'நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் 8 சதவீதத்தை நெருங்கும்' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தாண்டு 7.7 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆலோசனை கவுன்சில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. என்னை பொருத்தமட்டில் உறுதியாக சொல்வேன் கண்டிப்பாக 8 சதவீதத்தை நெருங்கும். பொதுத்துறை நிறுவனங்களில் மிதமிஞ்சி நிதியில் 60 சதவீதத்தை பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யும்படி வலியுறுத்த வேண்டும் என, பொதுத் துறை நிறுவனங்களை நிர்வாகிக்கும் துறையிடம் வலியுறுத்தினேன். உற்பத்தி துறைகளுக்கு தேவையான கடன்களை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என வங்கிகளை கேட்டு கொண்டுள்ளேன். நிதி கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் தனிநபர் கடனில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ரயில் எஸ்டேட் துறையில் கடன் வழங்குவதில் தான் சில கட்டுப்பாடுகளை வங்கிகள் விதித்துள்ளன. இருப்பினும் இத்துறையில் கடன் கோருவோர் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான வங்கிகள் தங்களின் பிரதான கடனுக்கு வட்டியை 0.75 சதவீதத்திலிருந்து 1 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இருப்பினும் வீட்டு கடனுக்கு தற்போதுள்ள நிலையே நீடிக்கிறது. புதிதாக வீட்டுக்கடன் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment