
'நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) நடப்பாண்டில் 7.7 சதவீதமாக இருக்கும்' என, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக உள்ள சி.ரங்கராஜன், ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பதால் தலைவர் பதவியில் இருந்து விலகினார். புதிய தலைவராக, கவுன்சில் உறுப்பினராக இருந்த சுரேஷ் டெண்டுல்கர் பொறுப்பு ஏற்கிறார். பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும், 'பொருளாதார நிலைப்பாட்டு அறிக்கை' நேற்று வெளியிடப்பட்டது. இதை ரங்கராஜனும், சுரேஷ் டெண்டுல்கரும் வெளியிட்டு, இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்கி கூறியதாவது: நடப்பாண்டில்(2008-09) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக இருக்கும். கடந்தாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக இருந்தது. வரும் மார்ச் மாதத்திற்குள் பணவீக்கம் 8 சதவீதம் முதல் 9 சதவீதத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள கடும் நடவடிக்கை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பொருளாதார கொள்கைகளின் மூலம் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இருப்பினும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலையால், இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் சரியான பாதையில் பயணிப்பதற்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகள் அவசியமானதே. கடந்த நான்கு ஆண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து இருந்து வந்தது. கடந்தாண்டில் விவசாய உற்பத்தி 4.5 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில் இது 2 சதவீதத்தை மட்டுமே எட்டும். தொழில் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment