Saturday, April 18, 2009

நானோ காருக்கான இதுவரை வந்த விண்ணப்பம் 5,00,000 : இதனால் டாடா மோட்டார்ஸூக்கு வந்தது ரூ.15 கோடி

உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ 'வை வாங்க விருப்பம் தெரிவித்து இதுவரை 5,00,000 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது என்றும், அதன் மூலம் டாடா மோட்டார்ஸூக்கு ரூ.15 கோடி ( ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.300 ) கிடைத்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்களை விற்க ஆரம்பித்து 15 நாட்களே ஆன நிலையில், இந்தளவுக்கு அதற்கு வரவேற்பு இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நானோ காருக்கான புக்கிங் கடந்த 9 ம் தேதி ஆரம்பமானது. வரும் 25ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது. நானோ காருக்காக கடன் வாங்கினால், வட்டி 10 சதவீதம்தான் ( பொதுவாக வட்டி 11.75 சதவீதம் வசூலிக்கப்படுகிறது ) என்று அறிவித்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டுமே இதுவரை ஒரு லட்சம் விண்ணப்பங்களை விற்றிருக்கிறது. மொத்தம் விற்பனை ஆன விண்ணப்பங்களில் ஐந்தில் ஒரு பங்கை ஸ்டேட் பேங்க்கே விற்பனை செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸின் உயர் அதிகாரி ஒருவர், இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. புக்கிங் 25ம் தேதி வரை இருப்பதால் அதன் பின்னரே மொத்தம் வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு என்பதை சொல்வோம். அதன் பின் அவைகள் எல்லாம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, 60 நாட்களுக்குள் ஒரு லட்சம் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்றார். நாங்கள் ஏற்கனவே சொல்லியிருப்பதை போல, முதலில் ஒரு லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு, வரும் ஜூலை மாதத்தில் நானோ கார் சப்ளை செய்வது ஆரம்பமாகும் என்றார். நானோ காருக்கான விண்ணப்பங்களை ஸ்டேட் பேங்க், 850 க்கும் அதிகமான நகரங்களில் இருக்கும் அதன் 1,350 கிளைகளில் விற்பனை செய்கிறது. டாடா மோட்டார்ஸ் அதன் 30,000 அவுட்லெட்கள் மூலமாக விண்ணப்பங்களை விற்கிறது. இது தவிர நானோ காருக்காக டாடா மோட்டார்ஸூடன் ஒப்பந்தம் செய்திருக்கும் டாடா மோட்டார் பைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க்,மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவையும் விண்ணப்பங்களை விற்கின்றன. பொதுவாக வங்கிகளில், ஐந்து வருடங்களுக்கு மட்டுமே கார் லோன் கொடுக்கப்பட்டாலும், நானோ காருக்காக மட்டும் அது ஏழு வருட லோனாக மாற்றப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: