Sunday, April 19, 2009

துவங்கியது ஓட்டுப்பதிவு; சரிகிறது பங்குச் சந்தை?

சந்தை வியாழனன்று மிகவும் கீழே இறங்கியதைக் கண்டவுடன் பலரும் பயந்தனர்... மறுபடி இறக்கம் ஆரம்பித்து விட் டதோ என்னவோ என்று. பாய்ந்து செல்லும் எந்த ஒரு சந்தையிலும் நிச்சயம் லாபம் பார்க்கும் முதலீட்டாளர்கள் இருப்பர். இது தான் விற்பதற்கு நல்ல சமயம் என்று காத்துக் கொண்டிருக்கும் அவர்கள் விற்கும் போது சந்தை நிச்சயமாகக் குறையும். அது தான் வியாழனன்று நடந்தது. தொடர்ந்து எட்டு நாட்களாக ஏறி வந்த சந்தை இறக்கத்தைச் சந்தித்தது.
தேர்தல் வாக்களிப்பதும் துவங்கிவிட்டதால் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற அய்யப்பாடுகள் வேறு, சந்தையைப் பயமுறுத்தியது. அதிகம் பாதிக்கப்பட்டது கட்டுமானத்துறை பங்குகள் தாம். சந்தை கிட்டத்தட்ட 337 புள்ளிகள் கீழே சென்றது. கிருஷ்ணா கோதாவரி பேசினில் எரிவாயு உற்பத்தியால் ரிலையன்ஸ் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதம் அளவு மேலே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வார பணவீக்கம் 0.18 சதவீதமாகக் குறைந்துள்ளது, வரலாறு காணாத அளவு எனலாம். இப்படி குறைவதால் ரிசர்வ் வங்கி இன்னும் ரேட் கட் செய்யும் என்ற நம்பிக்கையில் சந்தை மேலே சென்றது. இந்தக் காரணத்திற்காக சந்தை பல முறை சமீப காலங்களில் மேலே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் 21ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்புகள் வரும் வரை சந்தையும் சந்தோஷமாக இருக்கும். அறிவிப்புகள் ஏதும் வராவிடில் அது ஒரு இறக்கத்தைச் சந்திக்க வழி வகுக்கும். இந்தியப் பொருளாதார ரயில் தண்டவாளத்தில் ஏறிவிட்டது. ஆதலால், வருங்காலங்கள் நன்றாக இருக்கும் என்ற் அரசாங்க அறிவிப்புகளும் வந்தது. அதனால், சந்தை சுதாரித்து நேற்று முன்தினம் மறுபடியும் மேலே சென்றது.
நேற்று முன்தினம் இறுதியாக மும்பை பங்குச் சந்தை 75 புள்ளிகள் மேலே சென்று 11 ஆயிரத்து 23 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 14 புள்ளிகள் மேலே சென்று 3,384 புள்ளிகளுடன் முடிவடைந்தது.
அடுத்த வாரம் சந்தை சிறிது சிறிதாக மேலே செல்லும். ஒவ்வொரு பெரிய சரிவிலும் வாங்குபவர்களுக்கு நிச்சயம் நஷ்டம் இருக்காது.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


No comments: