Sunday, April 19, 2009

ஓடப்பர் உதையப்பரானால்...

வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாகச் செலவிட வேண்டிய வரம்பு லட்சங்களில் இருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் பல கோடிகள், தெருக்கோடிகளில் புரள்கின்றன என்பது ஊரறிந்த ரகசியம். பதவிக்காக பல நூறு கோடிகளை வாரி இறைத்து ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கும் அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்று, தெருவோரப் பராரிக்காகக் குரல் எழுப்புகிறதா என்று பார்த்தால், அப்படி ஒரு சிந்தனையே எந்தவொரு அரசியல் இயக்கத்துக்கும் இருப்பதாகவே தெரியவில்லை. வாக்குகளைப் பெற பிரியாணி விருந்து தரப்படுவதாக எல்லாம் செய்திகள் வருகின்றன. ஆனால், அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வில் நிரந்தரமாக அவனது பசியைத் தீர்க்க வேண்டாம். அதற்கான திட்டங்களையாவது ஏதாவது ஒரு கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்திருக்கிறதா என்றால் இல்லை. ஓட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் அரசியல்வாதிகள் ஒருபுறம், ஒரு வேளைக் கஞ்சிக்காக ஏங்கித் தவிக்கும் குடிமக்கள் மறுபுறம். இந்திய ஜனநாயகத்தின் விசித்திரமான பரிமாணங்களில் இதுவும் ஒன்று. இத்தனை கோடி ரூபாய்கள் தேர்தல் என்கிற சாக்கில் வாரி இறைக்கப்படும் வேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை ஒன்று வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையைப் படித்தால் திகைப்பும் வியப்பும். இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உலகில், வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு பசியைப் போக்க எத்தனிக்கும் மனிதர்களில் பாதிக்கும் அதிகமானோர் வாழ்வது இந்தியாவில்தான் என்கிறது அந்த அறிக்கை. அதுமட்டுமா? ஆண்டுதோறும் இந்தியாவில் மரணமடையும் சிசுக்களில் 50 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால்தான் மரணமடைவதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள ஆப்பிரிக்க நாடுகளில்கூட ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 28 சதவிகிதம்தான். ஆனால், நமது பொன்னான பாரத பூமியில் உலகில் எங்குமே இல்லாத அளவுக்கு 47 சதவிகிதம். சர்வதேச உணவு ஆராய்ச்சி நிறுவனம் என்று ஓர் அமைப்பு. இந்த அமைப்பு இந்தியப் பசிக் குறியீடு என்று அத்தனை தாலுகாவிலும் புள்ளிவிவரங்களைத் திரட்டி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு ஆகிய இரண்டு விஷயங்களிலும் ஆபத்தான நிலையில் இந்தியா இருக்கிறது என்றும், இதைப் பற்றி ஆட்சியாளர்களும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள இந்தியக் குடிமக்களும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை என்றும் ஆதங்கப்படுகிறது அந்த அறிக்கை. ஆட்சியாளர்களிடம் கேட்டால், பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு அரிசியும் கோதுமையும் கொடுக்கிறோம் என்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டம் நிறைவேற்றப்படுகின்றன என்றும் கூறித் தப்பித்துக் கொள்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடிமக்களை முன்னிறுத்தி செயல்படுத்தப்படுவதாகக் கூறும் பொது விநியோக முறை, குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான் செயல்படுகிறது. இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இன்றும் ரேஷன் கடைகள் அடையாளம் காணப்படவோ, அமைக்கப்படவோ இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மனிதர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களும் சரி, தங்களுக்கென்று ஒரு விலாசம் இருப்பவர்கள் மட்டுமே. விலாசமே இல்லாமல் தெருவோரவாசிகளாக, குடிசைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் வாழ்பவர்களாக அன்றாடம் கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறவர்களாக இருப்பவர்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் இருப்பதைப் பற்றி பொது விநியோகத் துறையோ, அரசோ, ஏன், நாமோ கவலைப்படுகிறோமா? மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் பசி, பட்டினி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் இவையெல்லாம் இருந்தன. ஆனால், பசித்தவனுக்கு உணவு அளிப்பது புண்ணியம் என்று அறிவுறுத்தப்பட்டது. அன்னதான சத்திரங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு, வேலை இல்லாதவனும், வறுமையில் வாடுபவனும் பசியாற வழிகோலப்பட்டது. புண்ணியம் தேடுவது போய் பணம் சேர்ப்பது மட்டுமே குறியாகிவிட்டதன் விளைவுதான், பாரதத்தின் பட்டினிப் பட்டாள எண்ணிக்கை உலக சாதனையாக மாறியிருக்கிறது. அதிகரித்து வரும் பசித்திருப்போர், பட்டினி கிடப்போர் எண்ணிக்கை மக்களாட்சிக்கு மட்டுமல்ல, சட்ட ஒழுங்குக்கே சவாலாக மாறும் சாத்தியங்கள் ஏராளம். இந்த முக்கியமான பிரச்னையை முன்னிறுத்தாமல் உலகமயம் பற்றியும், கறுப்புப் பணம் பற்றியும் பேசிக் கொண்டு, பணத்தை இறைத்து வெற்றிபெற விழையும் அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. அது - ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால்...
நன்றி : தினமணி

No comments: