Saturday, August 23, 2008

'நானோ' கார் திட்டத்திலிருந்து வெளியேறுகிறேன்: தொழிலதிபர் டாடா அதிருப்தி


'சிங்கூர் டாடா கார் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டமும், வன்முறையும் தொடர்ந்தால், இங்கு கார் தயாரிக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு, மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறுவோம்' என தொழிலதிபர் ரத்தன் டாடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்கு வங்கம், சிங்கூரில் டாடா நிறுவனத்தின் கார் தொழிற்சாலை உள்ளது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான ஒரு லட்ச ரூபாய் நானோ கார், இங்கு தான் தயாராகிறது. இந்த ஆண்டு அக்டோபரில் நானோ கார் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.சிங்கூரில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், 400 ஏக்கரை சம்பந்தபட்ட விவசாயிகளிடம் திரும்ப அளிக்கவில்லை எனில், இம்மாதம் 24ம் தேதியில் இருந்து தொழிற் சாலை அமைந்துள்ள பகுதியில் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இதனால், ரத்தன் டாடா கோபமடைந்துள்ளார். கோல்கட்டாவில் டாடா நிறுவன பொதுக் குழு கூட் டத்தில் அவரின் கோபம் வெளிப் பட்டது. அவர் பேசியதாவது:சிங்கூர் கார் தொழிற்சாலைக் காக, ஏற்கனவே ரூ.1,500 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. தொடர்ந்து, தொழிற்சாலை மீதும், அங்கு பணிபுரியும் மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தொழிலாளர்களை அடி வாங்குவதற்காக இங்கு அழைத்து வரவில்லை. பணியாற்றுவதற்காக வே அழைத்து வந்துள் ளோம். அசாதாரணமான சூழ்நிலையால் தொழிலாளர்களிடையே பீதி ஏற்பட்டுள் ளது. வன்முறையும், போராட்டங்களும் தொடருமானால், கார் தயாரிப்பை கைவிட்டு மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. இதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். இந்த விஷயத்தில் நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை மேற்கு வங்க மக்கள் தீர்மானிக்க வேண்டும். மேற்கு வங்க மக்களுக்கு நாங்கள் விரும்பத்தகாத நபர்களா என்பதை அவர்களே தெரிவிக்கட்டும்.திட்டமிட்டபடி நானோ கார் குறித்த காலத்தில் விற்பனைக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், சிலர் இதற்கு எதிராக செயல்படுகின்றனர். மேற்கு வங்கத்தின் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. ஒப்பந்த அடிப்படையிலேயே நிலங்களை வாங்கியுள்ளோம். சிங்கூரை விட்டு வெளியேறும் பட்சத்தில், மேற்கு வங்கத்தில் எங்களின் எதிர்கால முதலீடு கேள்விக் குறியாகும். மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்துவது குறித்து டாடா மோட்டார்ஸ் இயக்குனர் ரவிகாந்த் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இவ்வாறு ரத்தன் டாடா பேசினார்.இப்பிரச்னை குறித்து, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கூறுகையில், எனக்கு மே.வங்க விவசாயிகள் மீது மட்டுமே அக்கறை. டாடா நிறுவனத்தினர் எழுதிய கடிதத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இல்லை' என்று கூறியுள்ளார்.டாடா தெரிவித்த கருத்துக்களால், மே.வங்க தொழிலதிபர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
நன்றி : தினமலர்


No comments: