Tuesday, November 18, 2008

ஏர்லைன்ஸ், ரியல் எஸ்டேட்ஸ், வாகன தயாரிப்பாளர்கள் விலையை குறையுங்கள் : சிதம்பரம் வேண்டுகோள்

வாகன தயாரிப்பாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் விமான கம்பெனிகள் கட்டணத்தை குறைக்குமாறு நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வேண்டுகோள் விடுத்தார். உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை தொடர்ந்து, கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் துறையினருக்கு எக்சைஸ் டூட்டியை குறைப்பதாகவும் அவர் உறுதியளித்தார். ஹோட்டல்கள் கண்டிப்பாக கட்டணத்தை குறைக்க வேண்டும். ஏர்லைன்ஸ்கள் கண்டிப்பாக கட்டணத்தை குறைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபர்கள், அவர்கள் விற்பனை செய்யும் வீடுகள் மற்றும் அபார்ட்மென்ட்களின் விலையை குறைக்க வேண்டும். கார் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் விலையை குறைக்க வேண்டும் என்று சிதம்பரம் கேட்டுக்கொண்டார். புதுடில்லியில், உலக பொருளாதார அமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார். மக்களிடையே செலவு செய்யும் போக்கை ஊக்கப்படுத்தும் விதமாக அவர் அவ்வாறு பேசினார். தேவைப்பட்டால் எக்சைஸ் டூட்டியை குறைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி திருப்தி அளிக்கக்கூடிய விதமாக இருப்பதாக சொன்ன அவர், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, இந்த நிதி ஆண்டில் 200 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைய தவறிவிடும் என்று தெரிகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் , வளர்ந்த நாடுகளில் டிமாண்ட் குறைந்து விட்டதுதான் இதற்கு காரணம் என்றார்.
நன்றி : தினமலர்


No comments: