Tuesday, November 18, 2008

52,000 ஊழியர்களை குறைக்கிறது சிட்டி குரூப்

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாகவும், அமெரிக்க வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் கடும் நிதி நெருக்கடி காரணமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிட்டி குரூப், உலக அளவிலான அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 52,000 பேரை ( 14 சதவீதம் ) குறைக்கிறது. இதன் மூலம் அதற்கு ஏற்படும் செலவில் 20 சதவீதத்தை குறைக்கலாம் என்று அது கணக்கிட்டுள்ளது. சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இந்தியரான விக்ரம் பண்டிட், ஏற்கனவே கொஞ்சம் பேரை வேலையில் இருந்து நீக்கியது மற்றும் சிட்டி பேங்க்கின் சில துறைகளை மற்றவர்களுக்கு விற்றதன் மூலம் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 23,000 பேரை குறைத்திருந்தார். செப்டம்பரில் இவர்களை குறைத்ததற்குப்பின் அதன் ஊழியர்கள் எண்ணிக்கை 3,52,000 ஆக இருந்தது. இப்போது அதிலிருந்தும் 52,000 பேரை குறைப்பதால் இனிமேல் அதன் உலக அளவிலான ஊழியர்கள் எண்ணிக்கை 3,00,000 ஆக குறைந்து விடும். இந்த நடவடிக்கைகள் குறித்து விரைவில் விக்ரம் பண்டிட் அதன் ஊழியர்களுக்கு அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு மூலம் 2009 ம் ஆண்டு, அதன் செலவில் 12 பில்லியன் டாலர்களை குறைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். கடந்த நான்கு காலாண்டுகளில் சிட்டி குரூப்பிற்கு ஆன மொத்த செலவு 62 பில்லியன் டாலர்கள். கடந்த வாரத்தில் மட்டும் நியுயார்க் பங்கு சந்தையில் சிட்டி குரூப்பின் பங்கு மதிப்பு 19 சதவீதம் குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: