Wednesday, September 9, 2009

விலைக்கு வாங்கும் விபரீதம்!

கூட்டணி ஆட்சியால் ஏற்படுகிற ஒரு முக்கியமான நன்மை, ஆளும் கட்சி தன்னிச்சையாக விவாதமோ, எதிர்ப்போ இல்லாமல் எல்லா முடிவுகளையும் எடுத்துவிட முடியாது என்பது. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சரவை நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி இருப்பது. இதற்குக் காரணம் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவியும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜியின் எதிர்ப்பும் பிடிவாதமும்.

மம்தா பானர்ஜியின் எதிர்ப்புக்குக் காரணம் அரசியல்தான் என்றும், தீர்க்கதரிசனமான கண்ணோட்டம் அல்ல என்றும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சித்தாலும், அவரது வாதங்களில் இருக்கும் உண்மையும், நிலம் கையகப்படுத்தப்படும்போது விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும், விவசாயமும் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மை.

வியாபார நோக்கிலும், தொழிற்சாலை அமைப்பதற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் செயலுக்கு அரசு துணை போகக்கூடாது என்கிற மம்தா பானர்ஜியின் கருத்தில் நியாயம் நிறையவே இருக்கிறது. சிங்கூரில் நடந்த போராட்டத்தால் டாடாவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைவிட மேற்கு வங்கத்துக்குத்தான் அதிக நஷ்டம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்குபவர்கள், சிங்கூரில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தனிமனிதர்களைப் பற்றிக் கவலைப்படத் தயாராக இல்லை. அதேபோல, மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகப் பல நூறு ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்படுவது விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், 70 சதவீத நிலத்தைத் தனியார் விலைக்கு வாங்கி இருந்தால், மீதமுள்ள 30 சதவீத நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொடுக்க வழிசெய்யும் மசோதா ஒன்று மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வந்தது. மேலே குறிப்பிட்ட 70 : 30 என்கிற விகிதாசாரம், தொழிலதிபர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துபேசி எடுத்த முடிவே தவிர, விவசாயிகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்டதல்ல என்பது மம்தாவின் வாதம். மேலும், ஒரு போகம் மட்டுமே விளையும் வானம் பார்த்த பூமியும், விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலங்களும் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குக் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மம்தாவின் கருத்து.

எதற்காகக் கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தக் காரணத்துக்காக அல்லாமல் நிலம் வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், அப்படிப் பயன்படுத்தப்பட்டால், நில உரிமையாளருக்கு அந்த நிலம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும்கூட மம்தா பானர்ஜியின் கோரிக்கை. சிறப்புப் பொருளாதார மண்டலம், தொழிற்சாலை என்கிற பெயரில் அதிக அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, பிறகு அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.

அரசின் வளர்ச்சித் திட்டங்களான சாலை அமைப்பது, புதிய குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்துவது, கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை நிறுவுவது ஆகியவற்றுக்காக விவசாய நிலங்கள் தகுந்த நஷ்டஈடு தரப்பட்டுக் கையகப்படுத்தப்படுவதை யாருமே எதிர்க்கவில்லை. ஆனால், விவசாயிகளிடமிருந்து அரசின் உதவியுடன் குறைந்த விலைக்கு நல்ல விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டி ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

விவசாயி தானாக நிலத்தை விற்கவில்லை. அரசின் உதவியுடன் வலுக்கட்டாயமாக நிலம் குறைந்த விலைக்குக் கையகப்படுத்தப்படுகிறது. அப்படியானால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விவசாயிக்குக் கிடைக்க இருக்கும் அதிகரித்த விலை தரப்பட வேண்டியது நியாயம்தானே? விவசாயி தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த தனது வாழ்வாதாரத்தை இழக்கிறார். அவருக்கு மாற்று வேலையும், மாற்று இருப்பிடமும், லாபத்தில் பங்கும் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளில் என்ன தவறு?

விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாறுவதில் இன்னோர் ஆபத்தும் இருக்கிறது. அந்த இடங்கள் மறுபடியும் விவசாயத்துக்குப் பயன்படாத நிலங்களாகி விடுகின்றன. போதிய நீர்ப்பாசன வசதிகள் இல்லை என்கிற காரணம் காட்டி, விவசாயம் லாபகரமாக இல்லை என்கிற சாக்கில் நிலங்களைக் குறைந்த விலைக்குத் தனியாருக்காக அரசே முன்னின்று கையகப்படுத்தும்போது ஒரு விஷயம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஏற்கெனவே விவசாயம் லாபகரமாக இல்லை என்பதாலும், கடின உழைப்புக்கு நாம் தயாராக இல்லாததாலும் கிராமப்புறங்களில் விவசாயம் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வரைமுறையே இல்லாமல் நிலங்களைக் கையகப்படுத்தித் தனியாருக்குத் தாரை வார்ப்பது தற்கொலை முயற்சி அல்லாமல் என்ன?

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. உலகில் உள்ள அத்தனை தட்பவெப்ப நிலைகளையும் உள்ளடக்கிய ஒரே நாடு இந்தியா மட்டுமே. இங்கே விளையாத பொருள்களே கிடையாது. விவசாயத்தை லாபகரமாக்கவும், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் வழி காண்பதை விட்டுவிட்டு, உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று கருதினால், விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்று பொருள். அது பாதுகாப்பு அச்சுறுத்தலாகிவிடும்...

நன்றி : தினமணி

No comments: