Wednesday, September 9, 2009

கெட்டிதட்டிப் போய்விட்டது பா.ஜ.க.

ஒரு கட்சிக்காரர், எதிர்த்தரப்பினர் ஒருவரைப் பாராட்டினார் என்பதற்காக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி நடுநிலையிலிருந்து பார்க்கிற யார் யாருக்கும் செரிக்க முடியாத ஒன்றாகும்!

அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானைத் தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று சொல்லிவிட்டாரென்றும், வல்லபாய் பட்டேலை பிரிவினையோடு தன்னுடைய நூலில் தொடர்புபடுத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டிக் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர்.

இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறு வேறு; அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தும் வேறு வேறு; அவர்கள் கடைப்பிடிக்கின்ற சட்டங்கள் வேறு வேறு என்றெல்லாம் நாட்டை உடைத்து, அதன் காரணமாக இரு தரப்பாரின் ரத்தமும் ஆறாகப் பெருகி ஓடக் காரணமாகி, கடைசியில் மத அடிப்படையிலான பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டு போன ஜின்னா, எப்படி மதச் சார்பற்றவராக இருக்க முடியும் என்னும் கேள்வியே ஜஸ்வந்த் சிங்கின் "கல்தா'வுக்குக் காரணம்!

பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முதன்மைக் காரணம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நேருவும், வல்லபாய் பட்டேலும் துணைக் காரணங்கள் அல்லவா! ஜின்னாவைத் தலைமுழுகி விட்டு மீதமுள்ள இந்தியாவை எல்லா அதிகாரங்களோடும் நிம்மதியாக ஆளலாம் என்று ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கருதியது வரலாற்று உண்மைதானே!

பெருவாரியான இந்துக்களும் சிறுபான்மை இஸ்லாமியர்களும் சமநிலையில் சேர்ந்து வாழ்வதற்கு ஜனநாயகம் இடங்கொடுக்காது என்று ஜின்னா அஞ்சினார். ஜனநாயகம் என்பது எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஆகவே எண்ணிக்கையில் குறைந்தவர்கள் அஞ்சுவது இயல்புதானே!

நேருவும், ஜின்னாவும் ஒரே தரத்திலுள்ள அறிஞர்கள்தாம். ஆனால் தலைமையமைச்சராக வர நேருவால்தானே முடியும். காந்தி தலைமையமைச்சர் நாற்காலியை ஜின்னாவுக்கு வழங்கிப் பிரிவினையைத் தடுக்க முயன்றார்.

காந்தியின் வார்த்தை கல்வெட்டு; வார்த்தைப் பிறழ்ச்சி என்பதை வாழ்க்கை முழுவதிலும் அறியாதவர் காந்தி. இந்தியா அந்த மகாத்மாவின் காலடியில் சொக்கிக் கிடந்தது எல்லா வகையிலும் நியாயமே. காந்திக்கு மேல் சிறந்த தலைவன் ஒரே ஒருவன்தான் உண்டு; அவன் காந்தியைப் படைத்தவன்.

சமயச் சார்பற்ற இந்தியா என்று என்னதான் டமாரங்கள் முழங்கினாலும் இங்கே அதிகாரமில்லாத அலங்காரப் பதவிகளைத்தானே அப்துல் கலாம்கள் வகிக்க முடியும்.

காந்தியின் உறுதிமொழி ஒருபுறமிருக்கட்டும். இப்போதுள்ள பிரச்னை ஜின்னா அதிகார நாற்காலியில் உட்காருவது குறித்ததன்று. முஸ்லிம்கள் நிலையாக அதிகாரத்தை அடைவது குறித்தது.

சிக்கல் தெளிவாகப் புரிந்துவிட்ட நிலையில், இந்தியா உடையாமல் இருக்கப் புதிய வழிகளுக்கான முயற்சிகள் நடந்தன.

சிறுபான்மை என்னும் அச்சம் அகற்றப்பட 1946-ல் இந்தியாவுக்கு வந்த வெள்ளை அரசாங்கத்தின் காபினெட் தூதுக் குழு ஒரு நிகரற்ற யோசனையை முன்வைத்தது.

அந்தந்த மாநிலங்களுக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கிவிட்டு, மூன்று அதிகாரங்களை மட்டும் மத்திய அரசில் வைத்துக் கொள்வது என்பதுதான் அந்த யோசனை. இந்த யோசனைக்கு காந்தி இசைவாகத்தான் இருந்தார். ஜின்னாவும் சிறு சிறு திருத்தங்களுடன் அந்த யோசனையை - ஏற்கத் தயாராகிவிட்டார்.

காபினெட் தூதுக் குழுவின் யோசனைப்படி முஸ்லிம் மாநிலங்களான கிழங்கு வங்கம், கிழக்குப் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய முஸ்லிம் மாநிலங்களை முஸ்லிம்களே ஆண்டுகொள்வார்கள். மத்தியப் பிரதேசத்தையும், உத்தரப் பிரதேசத்தையும் இன்ன பிற மாநிலங்களையும் இந்துக்களும், இன்பத் தமிழ்நாட்டைத் "திராவிடக் குடும்பங்களும்' ஆளும்.

அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்படாத அதிகாரங்களும் மாநிலங்களையே சாரும் என்பதால், மத்திய அரசு ராணுவம், அயல்நாட்டு விவகாரம் என்று நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு போன்றவற்றில் மட்டுமே கருத்துச் செலுத்த முடியும்.

மாநிலங்கள் முற்றான தன்னாட்சியுடனும், மத்திய அரசு ஓர் இணைப்பு அரசாகவும் திகழும் என்பதுதான் காபினெட் தூதுக் குழுவின் பரிந்துரை. இதில் யாருடைய ஆதிக்கமும் யாரின் மீதும் படராது.

இதிலே மிகப்பெரிய விந்தை என்னவென்றால் எந்த வெள்ளைக்கார அரசு 1907-ல் வங்கத்தை இந்து வங்கம் என்றும் முஸ்லிம் வங்கம் என்றும் பிரித்து வகுப்பு வாதத்துக்கு வித்திட்டு வெறுப்பை வளர்த்துக் குளிர் காய்ந்ததோ, அதே வெள்ளைக்கார அரசு காபினெட் தூதுக் குழுவை 1946-ல் அனுப்பி, அதே வங்கப் பிரிவினை மாநிலப் பிரிவினையாகவே இருக்கட்டும், நாட்டுப் பிரிவினையாகிவிட வேண்டாம் என்பதற்குக் கடும் முயற்சி செய்தது.

1907-ல் தலைமை ஆளுநராக இருந்து வங்கத்தை மத அடிப்படையில் பிரித்தவர் கர்சன் என்னும் வெள்ளைக்காரர். கர்சனைக் "குரங்கு' என்று வாயார வைகிறான் பாரதி. ""கர்சன் என்னும் குரங்கு கவர்ந்திடுமோ'' என்பது பாரதியின் புகழ்பெற்ற பாடல் வரி.

கர்சனின் வங்கப் பிரிவினைதான் பெரிய அளவுக்கு விடுதலைப் போராட்டத்தை முடுக்கிவிட்ட வரலாற்று நிகழ்ச்சி.

1907-ல் வங்கத்தை மதரீதியாகப் பிரிப்பதற்கு நீ யார் என்று கேட்டவர்கள், காபினெட் தூதுக்குழுவின் பரிந்துரையைப் புறக்கணித்து 1947-ல் வங்கத்தை மட்டுமன்று, பஞ்சாபையும் பிளந்து முஸ்லிம் பாகிஸ்தான் ஏற்பட இசைந்து நின்றது காலத்தின் கேலிதானே!

காபினெட் தூதுக்குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டிருந்தால் இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட்டிருக்கும். ஆர்.எஸ்.எஸ். விரும்பியவண்ணம் "அகண்ட பாரதம்' நிலைபெற்றிருக்கும். ஆசியாவில் மட்டுமென்ன; அகிலத்திற்கே இந்தியாதான் பெரிய நாடாக இருந்திருக்கும். சீனா வாலைச் சுருட்டிக் கொண்டு நமக்குச் "சலாம்' சொல்லாதா?

இவையெல்லாம் நடக்க முடியாமல் போனதற்கு யார் காரணம்? உறுதியாகக் காந்தியும் ஜின்னாவும் காரணமில்லை. காபினெட் தூதுக் குழுவின் பரிந்துரைகளை, 1946 ஜூலையில் நடந்த மும்பை அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு, ஒதுக்கித் தள்ளியதோடன்றி அவற்றுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய நேருவே காரணம். அதன் விளைவாக, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது; ஜின்னா மீண்டும் பாகிஸ்தான் பல்லவிக்குப் போய்விட்டார்.

ஜஸ்வந்த் சிங் என்ன பிழையாகச் சொல்லிவிட்டார்? அவர்மீது பாய்ந்து பிறாண்டுகிறார்களே... ஜின்னா சமயச் சார்பற்ற கொள்கையுடையவர் இல்லையா?

உலக முஸ்லிம்களின் தலைவர் கலீபா. அவர் அந்தப் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டபோது, முஸ்லிம் அல்லாத காந்தி கவலை கொண்டார். அலி சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டு கிலாபத் இயக்கம் நடத்தினார். ஆனால் முஸ்லிமான ஜின்னா, கலீபாக்கள் தேவையில்லை என்றார். காங்கிரஸின் வேலை கலீபாக்களைக் காப்பாற்றுவது அல்ல என்றும் சொன்னார். ஜின்னா சமயச் சார்பற்ற கொள்கையினர்தானே! அவர் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் இந்துக்களின் நாடு சமயச் சார்பற்றதுபோல், முஸ்லிம்களின் நாடும் சமயச் சார்பற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு குஜராத் முதலமைச்சர் மோடி தடை விதித்திருக்கிறார். ஜின்னாவைப் புகழ்ந்ததும் குற்றமாம்; பட்டேலையும் நேருவையும் இடித்துரைத்ததும் குற்றமாம்.

கொக்கோகமும், காமசூத்திரமும் வெளியிடப்பட அனுமதி உள்ள நாட்டில், ஒரு சாதாரண அரசியல் கருத்துக்காக ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்தைத் தடை செய்த மோடி அரசின் செயல், நாடே வெட்கித் தலைகுனிய வேண்டிய அநாகரிகமான செயலாகும்.

நெருக்கடிநிலை காலத்தில் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டபோது, கொதித்தெழுந்த பாரதிய ஜனதா கட்சி, அதே செயலை அவர்களுடைய கட்சி முதலமைச்சர் செய்யும்போது வாளா இருப்பது ஏன்? ஒரு தலைமையமைச்சர் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்ட அத்வானி செயலற்றுப் போய்விட்டதைத்தானே இது காட்டுகிறது?

ஜஸ்வந்த் சிங், ஜின்னாவைப் பாராட்டியதற்குக் கொடுத்த விலை கட்சி நீக்கம். இதே வேலையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அத்வானி செய்தார். அவர் பாகிஸ்தானுக்கே போய் ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று பாராட்டி விட்டு வந்தார். வந்தவுடன் அவருடைய தலைப்பாகையைப் பிடுங்கி ராஜ்நாத் சிங்குக்குச் சூட்டி விட்டார்கள். தலைவர் பதவி மாற்றம் என்பது தலைப்பாகை மாற்றம் போல் அவ்வளவு சாதாரணமாக இருக்கிறது.

இவ்வளவுக்கும் அத்வானி சாதாரணத் தலைவரில்லை. பாபர் மசூதி இடிப்பின்போது உடனிருந்தவர்; அதற்குத் தூண்டு விசையாக இருந்தவர் என்று அவரைக் குற்றம் சொல்வார்கள். அப்படிப்பட்டவர் பாகிஸ்தானுக்கே சென்று ஜின்னா சமயச் சார்பற்றவர் என்று இதுவரை பாரதிய ஜனதா முகாமில் யாரும் சொல்லி அறியாத ஓர் உண்மையைச் சொன்னார் என்றால், அது அரசியல் குறிப்புடையது மட்டுமன்று; அரசியல் திருப்பத்திற்கு இடப்பட்ட வித்துமாகும்!

அத்வானி, ஜின்னாவைப் புகழ்ந்துவிட்ட காரணத்தால், புளகாங்கிதம் அடைந்து அவர் சமாதிக்குள் புரண்டு படுக்கப் போவதில்லை. பாராட்டையும், பழிப்பையும் இறந்தவர்கள் அறிய மாட்டார்கள்.

பாகிஸ்தானின் பிரிவினையை எதிர்த்துக் கொதித்துக் கிளம்பிய ஒரு கட்சியில், ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நாற்றுப் பிடுங்கி நடப்பட்டவரான அத்வானி, பாகிஸ்தானுக்கே போய் அந்தப் பிரிவினையின் காரண கர்த்தாவைப் பாராட்டிவிட்டு வந்தது, பூமியே ஆடியது போன்ற அதிர்ச்சியைத் தந்தது பழைய கட்சிக்காரர்களுக்கு.

ஒரு கட்சி தில்லி செங்கோட்டையில் அமர வேண்டுமானால் எல்லாத் தரப்பிலிருந்தும் பிரதிநிதித்துவம் வேண்டும். நாட்டின் பத்து விழுக்காடு மக்கள் ஒட்டுமொத்தமாகவும், முழுவீச்சாகவும் ஓர் அமைப்பை எதிர்ப்பார்களேயானால், அது அந்தக் கட்சியின் ஆட்சிப் பயணத்திற்கு மிகப்பெரிய தடையாகும்.

தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் இவர்கள் 500-லிருந்து 1000 வாக்குகள்தாம் பெற முடிகிறது. இது நகராட்சி உறுப்பினராவதற்கே போதுமானதில்லை.

ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள முதன்மைக் கட்சிகள் இவர்களோடு கூட்டுச் சேர இவர்கள் வைத்திருக்கின்ற வாக்கு வங்கி மோசமானதாக இருக்கிறது. போனால் போகட்டும்; நிரம்பக் கெஞ்சுகிறார்களே என்று யாராவது சேர வந்தால், கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த கதையாக ஆகி விடுகிறது. பாரதிய ஜனதாவுக்குத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சொந்தமாக வாக்கு வங்கி இல்லாவிட்டாலும், எதிர்ப்பு வாக்கு வங்கி எப்போதும் மாறாமல் இருக்கிறது. அந்த எதிர்ப்பு வாக்கு வங்கி சேர வந்தவர்களையும் சேர்த்துச் சீரழித்து விடுகிறது.

அதனால்தான் தெலுங்கு தேசம், திமுக மற்றும் அஇஅதிமுக, ஒரிசாவின் பட்நாயக் கட்சி, முன்பு இணைந்திருந்த உத்தரப் பிரதேசத்து மாயாவதி, இன்றோ நாளையோ அறுத்துக் கொள்ள நேரம் பார்க்கும் பிகாரின் நிதீஷ் குமார் என்று பல மாநிலக் கட்சிகள் பாரதிய ஜனதாவைப் பற்றிக் கொண்ட நோய், நம்மையும் தொற்றிக்கொண்டுவிடக் கூடாது என்று பயந்து ஓடுகிறார்கள்; அப்புறம் அத்வானி எப்படிச் செங்கோட்டையில் கொடி ஏற்ற முடியும்?

ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதாவின் அடிமட்ட அமைப்பாக இருக்கலாம். ஆனால் அடிமட்ட அமைப்புகளுக்கு வாக்காளர்களின் மனநிலை புரியாது. வீர சவர்க்கார் காலத்திலேயே அவர்கள் இருப்பார்கள். வீர சவர்க்காருக்குப் பிறகு கங்கையிலே ஏராளமான வெள்ளம் ஓடி வடிந்தும் விட்டதே!

சிறுபான்மை மக்கள் எப்போதும் பாதுகாப்புக் குறித்த அச்சத்தின் காரணமாக இறுக்கமாக ஒன்றுசேர்ந்து விடுவார்கள்! பெரும்பான்மை மக்களுக்கு அத்தகைய நெருக்கடி எதுவும் கிடையாது.

பாபர் மசூதி இடிப்பு இந்திய முஸ்லிம்களைப் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இணைத்தது இயற்கையே. நம்முடைய ஊர்ப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்னும் எண்ணம் அவர்களை அச்சுறுத்திக் கெட்டிப்படுத்திவிடும்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்விக்கு அத்வானியே காரணம் என்று அவர் தலையை இப்போது உருட்டுகிறார்கள்.

கூட்டணி வலிமையே தேர்தல் வலிமை என்று ஆகிவிட்ட காலத்தில், பாரதிய ஜனதாவின் மதவாதக் கொள்கையே பிற கட்சிகளெல்லாம் இதனோடு சேரத் தடை என்று உண்மை நடப்பை இனங் கண்டு கொள்ளாமல், பழைய தலைவர்களெல்லாம் வெளியேற வேண்டும் என்று பேசுவதால் இழப்பு யாருக்கு? கட்சிக்குத்தானே!

அடிப்படை உண்மை புரியாமல் மொட்டையாக இளைஞர்களை அழையுங்கள் என்றால் இதென்ன ஓட்டப்பந்தயமா? 80 வயது அத்வானியின் அறிவும், அனுபவமும், முடிவெடுக்கும் திறனும் முப்பது வயது இளைஞருக்கு இருக்க முடியுமா? தந்தையின்கீழ் பயிற்சி பெற்றுத் தகுதி பெறும் மகனைப்போல், இளைஞர்களும் பயிற்சி பெற்றுப் படிப்படியாகத்தான் வர வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியைப் புதிய தடத்தில் வழிநடத்தப் பாகிஸ்தானில் முடிவெடுத்த அத்வானி, நெருக்கடி காரணமாக அந்த முடிவில் பின்தங்கியதுதான் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம்.

சோஷலிசம் பேசிய காங்கிரஸ், முதலாளித்துவத்துக்கு அடிவருடுகின்ற கொள்கையை அரங்கேற்றவில்லையா? இது தலைகீழ் பல்டி ஆகாதா? திராவிடக் கருணாநிதி தேச பக்தர்கள் எல்லாம் கிடுகிடுக்கும் அளவுக்கு அதிதீவிர தேசியவாதி ஆகவில்லையா? இது தலைகீழ் பல்டி ஆகாதா? அதுபோல் அத்வானி தன்னுடைய மனதில் பாகிஸ்தானில் பூத்த சமயச் சார்பின்மைக் கொள்கைக்கு மாறுவது காலத்துக்கேற்ற மாற்றம்தானே? சிறந்ததைச் சிந்தித்தும் செயல்படுத்த முடியாத தலைமையும் குற்றமுடையது என்பான் வள்ளுவன்.

வயிற்றுப் பசியோடு தூங்கச் செல்கிறவன் இந்துவானால் என்ன? முஸ்லிமானால் என்ன? பசிக்கு என்ன மதவேறுபாடு? பசித் தீயை அணைப்பதற்குத்தானே அரசியல்!

ஜாதியைத் திருமணங்களோடு நிறுத்திக்கொண்டு, மதத்தை வழிபாட்டுத் தலங்களோடு நிறுத்திக்கொண்டு, பசியை முன்னிறுத்தி நடத்துவதுதானே முறையான அரசியல்! அதற்கு மட்டும்தானே அரசியல் கட்சிகள் வேண்டும். அதற்கு வெளியே உள்ள காரணங்களுக்காகப் பிறந்த அரசியல் கட்சிகளெல்லாம், மழைக்காலக் காளான்கள்போல, மறுமறு பொழுதுகளில் அழிந்து விடாவோ?

பழைய அமைப்புகள் காலத்திற்கேற்றவாறு தம்மைப் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே காலத்தோடு போராடி வளர முடியும்!

காலத்தோடு பொருந்த மறுப்பவை அல்லது இயலாதவை அழியும்! இது இயற்கை நியதி. சரித்திரம் கற்றுக் கொடுத்த பாடம்!

கட்டுரையாளர் : பழ. கருப்பையா
நன்றி : தினமணி

1 comment:

Syed Kadhar said...

Excellent....I don't have words to appreciate you....thaks for this wonderful post