Thursday, August 20, 2009

நிர்வாகத்தில் கலந்துவிட்ட ஊழல்

இந்தியாவின் உயர் தொழில்நுட்பக் கல்வியை நிர்வகிக்கும் ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. சில வாரங்களுக்கு முன்பு சிபிஐ மற்றும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு இந்தப் புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் நடந்து முடிந்த சில நாள்களில் ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சிபிஐ பிடியில் சிக்கினார். கடந்த சில காலமாகவே செய்தித்தாள்களைப் புரட்டினால், ஊழல் புகாரில் சிக்கிக் கொண்ட பெருந் தலைகள் பற்றிய செய்திகள்தான் அதிகமாகத் தென்படுகின்றன.

தேசத்தின் வளத்தை ஒருகூட்டம் இப்படிச் சுரண்டிக் கொண்டிருக்கும்போது, சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்கவில்லை என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிப் பேருக்குத்தான் முறையான, தரமான நோய்த்தடுப்பு வசதிகள் கிடைக்கின்றன என ஓர் ஆய்வு கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் இந்தியா வந்த பில்கேட்ஸ், "உலகின் மிகவும் தரமற்ற மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று' என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். அவர் இப்படிக் கூறும்போது பிரதமரும் உடன் இருந்தார்.

இது போதாதென்று, அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சேற்றைவாரி வீசிக்கொள்ளும் நகைச்சுவைச் செய்திகளும் பத்திரிகைகளில் பக்கம் தவறாமல் இடம்பிடிக்கின்றன. மழை பெய்யாமல் வறட்சி ஏற்படும் என்கிற கவலையைப் போக்கும் வகையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நல்ல சேதிதான். ஆனால், இந்த மழையால் வீடுகள் நீரில் மூழ்குவதையும், போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லையே. மழை பெய்யாவிட்டால் பிரச்னை; பெய்தால் பெரிய பிரச்னை. இதுபோன்ற செய்திகள் மட்டும் செய்தித்தாள்களை ஆக்கிரமித்திருப்பது, நல்ல விஷயங்களே நாட்டில் நடக்கவில்லையா என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஊழல்வாதிகள் பிடிபடுவதற்கும், மழைநீரில் வீடுகள் மூழ்குவதற்கும், மருத்துவ வசதிகள் தரமற்றுப் போனதற்கும் தொடர்பில்லை என்று நினைத்தால் அது தவறு. இந்த மாதிரியான செய்திகள் ஒன்றைத் தெளிவாக்குகின்றன. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் நாட்டின் புதிய விதிமுறைகளாக மாறிவிட்டன என்பதுதான் இந்தச் செய்திகள் நமக்குச் சொல்லும் சேதி.

ஏஐசிடிஇ தலைவரின் ஊழல் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். 1987-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு ஏஐசிடிஇ. தொழில்நுட்பக் கல்வியை நாடு முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அமைப்பின் மரியாதை கட்டெறும்பு ஊர்ந்த சுவராகத் தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துகளை வாரி வழங்கியிருக்கும் லட்சணத்தைப் பார்த்தாலே இந்த அமைப்பு எவ்வளவு "நேர்மையாக' நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும்.

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என்று கூறுவதுதான் லேட்டஸ்ட் ஜோக். அரசியல்வாதிகளும் பெரிய பதவியில் இருப்போரும் பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் நடத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். நன்கொடை வசூலிக்கக் கூடாது என இவர்களுக்கு யார் உத்தரவு போடுவது? இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பும் ஊழலின் கூடாரமாகிப் போய்விட்டால் குறைகளை யாரிடம்தான் போய்க் கூறுவது?

அடுத்தது பூட்டா சிங் கேஸ். எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவர் இவர். ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக இவரது மகன் பிடிபட்டார். இதற்காகப் பூட்டா சிங் கொஞ்சமும் பதறவில்லை. தம்மீது ஊழல் பழி சுமத்துவது இது முதல்முறையல்ல என்றார். இது தமக்குக் கிடைத்த பெரிய மரியாதை என்றும் கூறினார். இன்னும் எத்தனை ஊழல் புகார்களில் சிக்கினாலும் இதையேதான் இவர் திரும்பத் திரும்பக் கூறப்போகிறார்.

அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது ஊழல். எல்லாக் காலகட்டத்திலும் இது தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது. முகலாயர் காலத்திலேயேகூட கடைநிலை நிர்வாகத்தில் ஊழல் இருந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் ஊழல் இருந்தது. ஆனால், அப்போதெல்லாம் ஊழல் என்பது ஒரு விதியாக இருக்கவில்லை. இப்போது எல்லா நிலையிலும் ஊழல் ஓர் எழுதப்படாத சட்டமாகவே மாறியிருக்கிறது. இது தெரியாத அல்லது மதித்து நடக்காத அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முட்டாள்களாகவே கருதப்படுகின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு சில ஆண்டுகள்வரை நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்பது சமூகத்தின் மிக அடிப்படையான தேவை. மிக மோசமான ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகள்கூட நோய்த் தடுப்பு மருந்துத் திட்டங்களை நூறு சதவீதம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலோ வெறும் 50 சதவீதம் பேருக்குத்தான் நோய்த்தடுப்பு மருந்துகள் சென்றடைகின்றன.

60 ஆண்டு கால இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் தோல்வி இது. இந்த விஷயத்துக்கு ஊடகங்கள் பெரிய முக்கியத்துவம் தராமல் போனது அதைவிட வேதனை. பில்கேட்ஸ் இதைச் சொன்னார் என்பதால்தான் இந்த அளவுக்காவது இந்த விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது.

கல்வி கற்கும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பவைதான் இதன் முக்கிய நோக்கங்கள்.

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் "கடுமையான நடவடிக்கைகள்' போல இந்தச் சட்டமும் அமலாக்கப்பட்டால், நோக்கங்கள் எதுவும் நிறைவேறாது.

உண்மையில், விடுதலையடைந்த புதிதில் உலக அளவில் கல்வி கற்கும் உரிமையைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியதே இந்தியாதான். சொந்த நாட்டுக்குள் அதைக் கொண்டுவருவதற்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

நாடு முன்னேற வேண்டுமானால், கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊழல், நிர்வாகச் சீர்கேடு, வளர்ச்சியில் தேக்கம், வருவாய் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் நெருக்கமான தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுச் சுகாதாரம், தொடக்கக் கல்வி, ஊழல் ஒழிப்பு, கட்டமைப்பு போன்றவற்றில் கவனத்தைத் திருப்ப வேண்டும். விடுதலையடைந்தபோதே இவற்றுக்குத்தான் அரசுகள் முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். ஏனோ அது நடக்கவில்லை. இப்போதாவது தொடங்க வேண்டும். பெரிய தாமதமில்லை.

கட்டுரையாளர் : டி . எஸ் . ஆர் . சுப்பிரமணியன்
நன்றி : தினமணி

2 comments:

butterfly Surya said...

அருமையான பகிர்விற்கு நன்றி நண்பா...

blogpaandi said...

இந்த ஏஐசிடிஇ நாதாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் பல பொறியியல் கலூரிகளுக்கு முறையற்ற வகையில் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். அந்த கல்லூரிகளில் கட்டட வசதி, ஆசிரியர் வசதி போன்ற வசதிகள் எதுவும் கிடையாது. இப்படி நாட்டின் உயர் கல்வி துறையையே கெடுத்து குட்டி சுவராக்கி இருக்கிறார்கள்.