
வயதான விவசாயிகளுக்கு பென்ஷன் அளிக்கும் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தை நாட்டிலேயே கேரள அரசு தான் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது என்ற பெருமையையும் பெருகிறது. மலாயள புது வருடம் ஆகஸ்ட் 17ம் தேதி அன்று வருகிறது. அன்றைய தினம் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தால் சமூக பாதுகாப்பு வளையத்துக்குள் வயதான விவசாயிகள் வருகின்றனர் என கேரள வேளாண் துறை அமைச்சர் முல்லக்கரா ரத்னகரன், திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியபோது கூறினார். ஆகஸ்ட் 17ம் தேதியன்று நடக்கும் விழாவின் போது கேரள முதல்வர் அச்சுதானந்தன் திட்டத்தை துவக்கி வைக்கிறார் . அன்றைய தினமே கேரள மாநிலம் மான்கொம்பு என்ற இடத்தில் குட்டநாடு பகுதி அரிசி விளைநிலங்கள் இருக்கும் பகுதியில், நடக்கும் விழாவில் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கே.வி.தாமஸ் முதல் கட்டமாக வயதான விவசாயிகளுக்கு பென்ஷன் காசோலையை வழங்குகிறார். இந்த திட்டத்தால் பயணடைய, 60 வயதுக்கு மேல் இருக்கும் விவசாயியாக இருக்க வேண்டும். மேலும், 10 சென்ட்டில் இருந்து இரண்டு ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலத்தில் விவசாயம் செய்து வருபவராகவும், தனது 50 சதவீத வருமானத்தை விவசாயம் மூலம் பெறுபவராகவும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் உடைய விவசாயிக்கு மாதம் ரூ.300 பென்ஷனாக வழங்கப்படும். மேலும் விவசாயிக்கு பெண் குழந்தை இருந்தால், அவரது திருமணத்தின் போது சுமார் 25,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும் என தெரிகிறது. ஆனால் ஒரு விவசாயிக்கு எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் இந்த சலுகை செல்லும். இந்த ஆண்டில் மட்டும் சுமார் 250 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. விவசாயி மரணமடையம் பட்சத்தில் அவரது பென்ஷனில் பாதி, அவரது மனைவிக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment