தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம், தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் செய்கிறது. தமிழகம் முழுவதும், ஏழு லட்சத்துக்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் உள்ளனர். தினமும் 48 லட்சம் லிட்டர் முதல் 50 லட்சம் லிட்டர் வரை, பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும், அதைச் சார்ந்த விவசாயம் செய்து வருகின்றனர். அன்றாடம் மாடுகளுக்கு தேவையான தீவனம், பருத்திக் கொட்டை, தவிடு போன்ற அனைத்து பொருட்களும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், பால் உற்பத்தி செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு 29 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், பாலுக்கான கொள்முதல் விலை, குறைவாக உள்ளதால், கறவை மாடுகள் வளர்ப்பதை விவசாயிகள் கைவிடும் நிலையில் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் அம்மாநிலங்களில் பால் வளத்தை பெருக்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால், தமிழக அரசு பால் உற்பத்தியை பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஆவின் நிறுவனத்தில் நடக்கும் குளறுபடியால், பெரும்பாலான கொள்முதல் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்படுவதில்லை.
தமிழ்நாடு பால் உற்பாத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் கூறியதாவது: அரசு செப்டம்பர் மாதம் பால் கொள்முதல் விலையை உயர்த்தியது. இதன்படி, எருமை பால் ஒரு லிட்டருக்கு 18 ரூபாயிலிருந்து 23 ரூபாயாக உயர்த்தியது. பசும்பால் ஒரு லிட்டருக்கு 13.64 ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய் மட்டும் அதிகரித்து 15.64 ரூபாயாக அறிவித்துள்ளது. பசும்பாலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வழங்க வலியுறுத்தினோம். இடைத்தேர்தல் வந்ததால், தேர்தல் முடிந்து அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். தற்போது திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிந்ததும், பொங்கலுக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அறிவித்தனர். அரசு பால் விலையை உயர்த்தாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில், பால் கொள்முதல் விலை தவிர, ஊழியர்கள் பணிநிரந்தரம் குறித்து பேசினோம். பத்து நாளில் செய்வதாக கூறப்பட்டது. இரண்டரை ஆண்டாக பணிநிரந்தரம் செய்யாமல் உள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா அரசுகள், பால் உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில்லை. கூட்டுறவு ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பாக்கி வைக்கப்படுகிறது. தர்மபுரியில் இரண்டு மாதமும், விழுப்புரத்தில் 40 நாட்களுக்கும், பணம் வழங்காமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கறவை மாடுகளை கணக்கு பார்க்காமல் வளர்க்கின்றனர். முறையாக கணக்கு பார்த்தால், லிட்டருக்கு 29 ரூபாய் வரை வழங்க வேண்டும். விலை உயர்த்துவதாக கூறி நான்கு மாதங்களான போதும், இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், பால் உற்பத்தி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment