Thursday, March 19, 2009

உலக அளவில் இந்தியாவை ஒரு மருந்து தயாரிப்பு மையமாக்க தீவிர முயற்சி

2020ல் இந்தியாவை, உலக அளவிலான மருந்து தயாரிப்பு மையமாக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையை அடைவதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி ரூபாய் ( 2 பில்லியன் டாலர் ) வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்காக பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர்ஷிப் திட்டம் தேவைப்படுகிறது என்று மத்திய அரசின் மருந்து துறை செயலாளர் அசோக்குமார் தெரிவித்தார். மும்பையில் நடந்த ' பார்மாசூட்டிக்கல்ஸ் 2014 ' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையால், குறைந்த விலையில் மருந்துகளை தயாரிக்க இந்திய மருந்து கம்பெனிகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொன்ன அவர், இது நம்மால் முடியக்கூடிய ஒன்றுதான் என்றார். மத்திய அரசு சில மாநிலங்களில் மட்டும் இப்போது அறிமுகப்படுத்திய ' ஜன் ஆஸாதி ' என்ற திட்டத்தின் மூலம் குறைந்த விலையிலேயே தரமான மருந்துக்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது என்று சொன்ன அவர், இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்குள் விரிவுபடுத்தப்படும் என்றார். இது தவிர, இந்தியா ஒரு சர்வதேச கிளினிக்கல் சோதனை மையமாகவும் இப்போது திகழ்ந்து வருகிறது. சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் பல மருந்து கம்பெனிகள், அவர்கள் தயாரித்த மருந்துக்களை டெஸ்ட் செய்து பார்க்க இந்தியா கொண்டுவந்து இங்கு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரோச், பிளிட்ஸர், அஸ்ட்ரா ஜெனிக்கா, ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் அவர்களது மருந்துக்களை சோதனை செய்து பார்க்க, டிரக்ஸ் கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா ( டி சி ஜி ஐ ) விடம் அனுமதி பெற்று வைத்திருக்கின்றன. பிரபலமான மருந்து கம்பெனிகள், அவர்கள் தயாரிக்கும் ஒரே மருந்தை உலகின் வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்வது வழக்கம். அவ்வாறு இந்தியர்களிடையே சோதனை செய்து பார்க்க டி.சி.ஜி.ஐ.,யிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கேட்டு 2005 ல் 100 விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருந்தது. ஆனால் அது, 2008 ல் 350 விண்ணப்பங்களாக உயர்ந்து விட்டது.
நன்றி : தினமலர்


No comments: