Wednesday, December 30, 2009

தனித்திரு,​​ விழித்திரு...

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன்,​​ ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6-வது முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்.​ பார​​திய ஜனதா கட்சி ஆத​ரவு தெரி​வித்​துள்​ளது.​

மாநிலத்தின் வளத்துக்கு நிலையான ஆட்சி அவசியம் என்பதாலும்,​​ மக்கள் நலன் கருதியும் ​ இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.​ கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்போது இதைத்தானே எல்லா கட்சிகளும் சொல்லி வருகின்றன.​ அதனால் இதிலொன்றும் ஆச்சரியமில்லை.​ ​

சிபுசோரனுக்கும் முதலமைச்சர் பதவிக்கும் ராசியே கிடையாது.​ 2005-ல் முதல்வராகப் பதவியேற்றார்.​ ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பத்து நாளில் பதவியை இழக்க வேண்டியதாயிற்று.​ இரண்டாவது முறையாக 2009-ல் முதலமைச்சரானார்.​ ஆனால் அவரால் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.​ இப்போது 3-வது முறையாக முதலமைச்சராகிறார்.​ அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை,​​ நிரந்தர எதிரியும் இல்லை என்பது தெரிந்திருந்தாலும்,​​ சிபு சோரன் கூடுதலாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய,​​ சொந்த அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்கும் தகவல்-​ முதல்வர் பதவியும் நிரந்தரமில்லை.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை அமைச்சராக சிபுசோரன் பதவி வகித்தபோது,​​ அவர் மீதான கொலை வழக்கு காரணமாக,​​ அவரை அமைச்சர் பதவியிலிருந்து ​ நீக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்றத்தில் நடத்திய அமளி,​​ கூச்சல் அத்தனையும் இப்போதும் கண்முன் நிற்கிறது.​ இப்போது சிபுசோரன் தன் மீது தொடுக்கப்பட்ட இரண்டு கொலை வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார்.​ ஆகையால் அவருக்கு தங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுவதாக பாஜக சொல்லிக்கொள்ள முடியும்.

ஜார்க்கண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட நாள் முதலாக மூன்று முறை பாஜகதான் ஆட்சி அமைத்துள்ளது.​ இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக,​​ தற்போது வேறு வழியின்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.​ இதனை சிபுசோரன் நன்கு அறிவார்.​ பாஜகவின் இந்த பலவீனத்தை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

பாஜக மட்டுமன்றி அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு உள்பட நான்கு அமைப்புகளின் ஆதரவில்தான் சிபுசோரன் ஆட்சி அமையவிருக்கிறது.​ அரசியல் சட்டப்படி இத்தகைய கூட்டணி ஆட்சி சாத்தியமாக இருந்தாலும்,​​ ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் இது எத்தகைய கேடுகளை ​ ஏற்கெனவே விளைவித்திருக்கிறது என்பதற்கு முந்தைய முதலமைச்சர் மது கோடா ஒரு சாட்சி.​ அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பிலிருந்து உருவான மது கோடா,​​ காங்கிரஸ்,​​ ஜேஎம்எம் முரண்களைப் பயன்படுத்திக்கொண்டு முதலமைச்சராகி,​​ ரூ.4000 கோடி பணம் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,​​ இப்போது சிறையில் இருக்கிறார் என்பதே போதும் இந்த மாநிலத்தின் வளத்தையும் ஊழல் வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதற்கு.

ஜார்க்கண்ட் கனிம வளம் நிறைந்த மாநிலம்.​ சுமார் 2 கோடி மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்.​ இன்னமும்கூட இந்த மக்கள் மிகவும் மோசமான வறுமையில் வாழ்க்கை நடத்தும் நிலைமை மாறவில்லை.​ ​ சிபுசோரன் தன் வாழ்க்கையில் முதன்முதலாக கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளானதே,​​ பழங்குடியல்லாத வெளியாட்களே வெளியேபோ என்ற போராட்டத்தின்போது சிருடி என்ற கிராமத்தில் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்தான்.​ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சின்னமே,​​ பழங்குடியினரைக் குறிக்கும் வில்லும் அம்பும்தான்.​ பழங்குடியினருக்கான போராட்டத்தில் உதித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,​​ பழங்குடியினர் முன்னேறவில்லை.

இந்த மாநிலத்தில் உள்ள 32,620 கிராமங்களில் 45 சதவீத கிராமங்கள்தான் மின்இணைப்பு பெற்றுள்ளன.​ இன்னும் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருண்டுதான் கிடக்கின்றன.​ வெறும் 8,484 ​ கிராமங்களுக்கு மட்டுமே அணுகுசாலை இருக்கிறது.​ இந்த நிலையில் அந்த மக்களின் வாழ்க்கை,​​ கல்வி,​​ வேலைவாய்ப்பு குறித்து அதிகமாக புள்ளிவிவரங்களை அடுக்க வேண்டியதில்லை.​ சொல்லாமலே புரியும்.

கனிம வளத்தைக் கொள்ளையடிக்க வரும் பெரும் நிறுவனங்கள் ஆட்சியாளர்களை தன்வயப்படுத்தத் தவறுவதில்லை.​ ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து விலகி ​ விலகிப் போய்,​​ அடுத்த தேர்தலுக்கு மட்டுமே இறங்கி வருகிறார்கள் என்பதுதான் இம்மாநில அரசியல் நிலவரம்.​ ​

நிலைமை இப்படி இருக்கையில்,​​ இந்த மாநிலத்தில் இத்தனை கட்சிகள் ஆதரவுடன் ஒரு கட்சி தனியாக ஆட்சி அமைத்தாலோ அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலோ பல்வேறு சமரசங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது.​ சமரசங்கள் என்றால்,​​ அரசியல் அகராதியில் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?​ ​

தேசியக் கட்சியான பாஜகவுக்கு உண்மையாகவே மாநிலத்தில் நிலையான ஆட்சி மக்கள் நலன் ஆகியவைதான் முக்கியம் என்றால்,​​ ஆட்சியில் பங்கு கொள்ளாமல் அதே நேரத்தில் ஒரு கண்காணிப்பாளரைப் போல செயல்பட வேண்டும்.​ தவறு நேரும் எந்த நிமிடத்திலும் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.​ தான் ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவார்களே என்ற எண்ணத்தில் தவறுகளைச் சகித்துக் கொள்ளுமேயானால்,​​ அந்த மாநிலத்தில் பல "மது கோடா'-க்கள் வளம் பெறுவார்கள்.​ மக்கள் வளம் பெற மாட்டார்கள்.
நன்றி : தினமணி

No comments: