Friday, June 17, 2011

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.


""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?
 
நன்றி : தினமணி


No comments: