Wednesday, July 1, 2009

111 புதிய விமானங்களை வாங்குவதால் தான் ஏர் - இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது : பா.ஜ.க.குற்றச்சாட்டு

111 புதிய விமானங்களை வாங்கும் திட்டம் தான் ஏர் - இந்தியாவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட காரணம் என்றும், அதனை விசாரிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. கேட்டுக்கொண்டிருக்கிறது. கடும் நெருக்கடியில் இருக்கும் தனியார் விமான கம்பெனிகள் எல்லாம் புதிதாக விமானம் வாங்கும் திட்டத்தில் இருந்து விலகி விட்டன. அல்லது அந்த திட்டத்தை தள்ளி வைத்திருக்கின்றன. ஆனால் ஏர் - இந்தியா மட்டும் இவ்வளவு நெருக்கடியிலும் கூட, புது விமானங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவது ஏன் என்று பா.ஜ.க., தலைவர்களில் ஒருவரான கிரிட் சோமையா கேள்வி எழுப்பினார். ஏர் - இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு, ரூ.55,000 கோடிக்கு புதிதாக விமானங்களை வாங்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இப்போது அந்த நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடிக்கு காரணமே இந்த விமானம் வாங்கும் திட்டம்தான் என்றார். வட்டியுடன் சேர்த்தால் அந்த தொகை ரூ.67,000 கோடி வந்து விடும் என்று சொன்ன அவர், தனியார் விமான கம்பெனிகளான ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் ஆகியவை புது விமானங்கள் வாங்கும் திட்டத்தில் இருந்து பின் வாங்கியிருக்கும்போது, ஏர் - இந்தியா மட்டும் ஏன் அதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்றார்.
நன்றி : தினமலர்


No comments: