Thursday, July 17, 2008

தீப்பெட்டி விலை உயர்வதற்கு காரணம் என்ன?


மூலப்பொருள் விலை உயர்வு, சென்வாட் வரி, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நசிவடைந்து வருகிறது.
தென் தமிழகத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர், கோவில் பட்டி நகரங்களில், தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஒரு காலத்தில், மூன்றாயிரம் கோடி மதிப்பிலான, இந்திய தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில், 75 சதவீதம் இந்த மூன்று நகரங்களிலேயே நடந்தது. ஆனால், தற்போது, 50 சதவீதமாகக் குறைந்து விட்டதாக, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மத்திய மதிப்பு கூட்டு வரியான சென்வாட், மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்றவை தான் தொழில் நசிவுக்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது.
தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவைப்படும் சிவப்பு பாஸ்பேட், ஒரு கிலோ ரூ. 300லிருந்து ரூ. 650 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, ஒரு டன் பொட்டாசியம் குளோரைடு, ஐந்தாயிரத்தில் இருந்து ஆறாயிரமாக உயர்ந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, மெழுகு விலை, வரலாறு காணாத அளவில் 140 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது என்று உற்பத்தியாளர்கள் புலம்புகின்றனர். இயந்திரங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் சென்வாட் வரி விதிக்கப்படுகிறது. குடிசை தொழிலாக தீப்பெட்டி உற்பத்தி செய்பவர்களுக்குச் சென்வாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடிசைத் தொழில் என்று பலர் வரி ஏய்ப்பு செய்வதால், அவர்களுடன் போட்டிப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைப்பு ரீதியிலான தொழிற்சாலை அதிபர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், சிவகாசி நகரில் மட்டும் தீப்பெட்டி தொழிலை சார்ந்து ஒரு லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 20 ஆயிரம் பேர் மட்டுமே ஈடுபட்டிருப்பதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துவிட்ட நிலையில், தீப்பெட்டி விலை மட்டும் 14 ஆண்டுகளாக 50 பைசாவாகவே இருந்தது. இந்நிலையில், மூலப்பொருள் விலை உயர்வால், தீப்பெட்டி விலையை உயர்த்த, உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 1ம் தேதி முதல், 50 முதல் 70 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியின் விலை ஒரு ரூபாயாக இருக்கும்.


நன்றி : தினமலர்


No comments: