Thursday, January 21, 2010

கசக்கும் உண்மைகள்

வரப்போகும் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தயாரிக்கும் வேலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகத்துறையினர் ஆகியோருடனான ஆலோசனைகள் முடிந்துவிட்டன. ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட நிதித்துறை நிர்வாகிகளுடன் இப்போது ஆலோசனை நடந்து கொண்டி ருக்கிறது.

பணவீக்க விகிதமும் பட்ஜெட் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த இரண்டும்தான் முகர்ஜி இப்போது உடனே கவனித்தாக வேண்டிய முக்கிய பிரச்னைகள்.

பணவீக்க விகிதம் இப்படியே அதிகரித்துக் கொண்டே போனால் அது மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடுகளை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும். அரசியல் ரீதியாகவும் ஆளும் கூட்டணிக்குத் தேர்தலில் பெருத்த தோல்வியை வழங்கும். பட்ஜெட் பற்றாக்குறையை இப்படியே வளரவிட்டால் அது நிதி நெருக்கடியில் போய் முடியும். பணவீக்க விகிதம் என்பதை பாமர மக்கள் மொழியில் சொல்வதென்றால் விலைவாசி உயர்வுதான்.

விலைவாசி உயர்வு பற்றி ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு உள்ள கவலையும் மத்திய அரசுக்கு உள்ள கவலையும் ஒன்றல்ல. விலைவாசி உயர்வால் வாங்கும் சக்தி குறைகிறதே, சத்துள்ள காய்கறிகளையும் நல்ல உணவுப்பொருள்களையும் நிறைய வாங்க முடியவில்லையே, எவ்வளவு சம்பாதித்தாலும் சாப்பாட்டுக்கே போகிறதே என்பதுதான் ஏழை, நடுத்தர மக்களின் கவலை.

மத்திய அரசின் கவலை பொருளாதார ரீதியிலானது. பணவீக்க விகிதம் இப்படி அதிகரித்துக் கொண்டே போனால் பட்ஜெட் பற்றாக்குறை அளவு அதிகரித்துவிடுமே, வரிவிதிப்பையும் அதிகப்படுத்த முடியாதே, தொழில் - வர்த்தகத்துறைகளுக்குத் தரும் வரிச் சலுகைகளையும் இதர பணச் சலுகைகளையும் குறைக்க முடியாமல், பொருளாதார நிர்வாகம் ஆட்டம் கண்டுவிடுமே என்பதுதான்.

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் குறைவது குறித்து மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை என்று கூறிவிட முடியாது, அதே சமயம் அவர்களுடைய கவலை பட்ஜெட் பற்றாக்குறையும் இதர பொருளாதாரக் காரணிகளும்தான் என்பதை மறுக்க முடியாது. சில வேளைகளில் பணவீக்க விகிதம் அதிகரித்தால்தான் தொழில்துறையில் உற்பத்தியே சூடு பிடிக்கும் என்பதால் ஆட்சியாளர்கள் அதை வரவேற்பதும் உண்டு.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நம்முடைய நிதி அமைச்சர்கள் மக்களுடைய பிரச்னைகளை அவர்களுடைய கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் கூறும் ஆலோசனைகளைக் கேட்பதையும், தொழிலதிபர்கள் - வியாபாரிகள் கேட்கும் சலுகைகளை வழங்குவதையுமே மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இதற்கு உதாரணம் தேடி எங்கும் அலைய வேண்டாம். நாடு முழுக்க உணவு தானியங்களையும் காய்கறி, பழங்களையும் சேமித்து வைக்க போதிய உலர் கிடங்குகளும் குளிர்பதனக் கிடங்குகளும் இல்லை என்று கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் உரத்துக் கூறி வருகின்றன. ஆனால் அந்தத் திசையில் ஒரு அடியைக்கூட மத்திய அரசும் மாநில அரசுகளும் எடுத்துவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைப்பது பற்றியது. நாடு முழுக்க உள்ள ஏழைகள், பழங்குடிகள், மலைவாசி மக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள் போன்றவற்றில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் கிடைப்பதற்காகப் பொது விநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிக்கு வருகிறவர்கள் ஆமோதிக்கிறார்கள், ஆனால் அதற்காக அலட்டிக் கொள்வதே இல்லை. விலைவாசி உயர்வு குறித்து வலியுறுத்திக் கேட்டால், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் கடமை என்று தட்டிக் கழிக்கிறார்கள்.

அத்தியாவசியப் பண்டங்களில் ஊக வியாபாரத்தையும், முன்பேர வர்த்தகத்தையும் அனுமதித்துவிட்டு விலைவாசியைக் குறைப்போம் என்று கூறுவது வெறும் உதட்டளவு உறுதிமொழியாகத்தானே இருக்கிறது? அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சிறு தானியங்கள், சர்க்கரை போன்றவற்றின் விலை பல மடங்கு அதிகரித்தாலும் சாகுபடியாளர்களான விவசாயிகளுக்குக் கிடைப்பதோ அதில் நாலில் ஒரு பகுதிதான். இடைத்தரகர்களும் ஊக வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும்தான் பெரும் பங்கை விழுங்குகிறார்கள். அவர்களுடைய செல்வாக்கு காரணமாகவே அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

கரும்பு சாகுபடி செய்தால் கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. கரும்பாலைகள் தொடங்கி அரசு அமைப்புகள் வரை அனைவராலும் அலைக்கழிக்கப்படுவதே மிச்சம் என்ற விரக்தி காரணமாகவே கரும்பு சாகுபடியே இனி வேண்டாம் என்று ஏராளமான மாநிலங்களில் விவசாயிகள் அதிலிருந்து விலகி வருகின்றனர். உள்நாட்டில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைவதற்கும் இதுவே காரணம்.

கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாக முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் அரசு, கரும்புச் சாகுபடியாளர்களுக்கோ, சர்க்கரை நுகர்வோருக்கோ ஆதரவாக வலுவான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதே உண்மை. பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த போதிய நிதி இல்லை என்ற பல்லவியையே மத்திய, மாநில அரசுகள் பாடிவருகின்றன. அதே வேளையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அந்த நிதியை பொது விநியோகத் திட்டத்துக்குப் பயன்படுத்தினால்தான் என்ன?

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற தானியங்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைக்க உலர் கிடங்குகளையும் பழங்கள், காய்கறிகளைப் பதமாக வைத்திருக்க குளிர்பதனக் கிடங்குகளையும் அவரவர் தொகுதிகளில் இந்த நிதியைக் கொண்டு அமைத்துக் கொள்ளுங்கள் என்று 3 ஆண்டுகளுக்கு நிதியைத் திருப்பிவிட்டால் என்ன?

தனியார் சூப்பர் மார்க்கெட்டுகள் சங்கிலித் தொடராகக் கடைகளைத் திறப்பது சாத்தியம் என்றால் ஆயிரம் கரங்களைக் கொண்ட மத்திய, மாநில அரசுகளால் பொது விநியோகச் சங்கிலியை அமைக்க முடியாதா?

மக்களால் மக்களே மக்களை ஆளும் அரசாக இருந்தால் இது சாத்தியம்; ஊக வியாபாரிகளுக்காக ஊக வியாபாரிகளால் ஊக வியாபாரிகளே நடத்தும் அரசாக இருக்கும்போது அசாத்தியம்!
நன்றி : தினமணி

No comments: