அண்மைக்காலமாக புற்றீசல்களாக பெருகி வருவது "சங்கிலித் தொடர்' விற்பனை முறையான எம்.எல்.எம். (பன்முகச் சந்தைப்படுத்தல்). இதில் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நட்பாசையில் ஏராளமான மத்தியதரக் குடும்பங்கள் இதில் இறங்குகின்றன.
ஏற்கெனவே இந்தை சந்தைப்படுத்துதலில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சக்கைப்போடு போட்டன. நாளடைவில் மோசடி எனப் பெயர் வாங்கிவிட்டன.
யாரைப் பார்த்தாலும் கையில் ஒரு உப தொழில் இருக்கும். நம்பிக்கையுடன் கையில் பேஸ்ட், சோப்பு, பினாயில் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சகிதமாக வலம் வந்துகொண்டிருந்தனர்.
ஒவ்வொருவரும் ஏராளமான கற்பனையில் படு சுவாரசியமாக இந்த விற்பனையில் ஈடுபட்டனர். விளைவு முதன்முதலில் சேர்ந்தவர்கள் பலர் நல்ல லாபம் ஈட்டினர். ஓரே குடும்பத்தில் பலர் உறுப்பினர் ஆனார்கள். ஆனால் முக்கால்வாசிப் பேர் உள்ளதும் போனதே என நொந்தனர்.
இந்த வர்த்தகத்தில் பல திட்டங்களும், முறைகளும் உள்ளன. அதில் வெற்றிகண்டவர்கள் சிலர் மட்டுமே. சாதாரணமாக, நேரடி வர்த்தகத்தைவிட இந்த வர்த்தகம்தான் எதிர்காலத்தில் நடைமுறையில் இருக்கும் என இத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கூறுவதுண்டு.
இன்று பல்வேறு ஆசை வார்த்தைகளை நம்பி ஏராளமானோர் இத் துறையில் இறங்கிவருகின்றனர். இதில் எத்தனை சதவிகிதம் பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பது கேள்விக்குறியே. குறிப்பாக, இந்த வர்த்தகமுறையில் சங்கிலித் தொடரை சரியாக முடிக்காதவர்கள் தோல்வியைத்தான் சந்திக்கின்றனர்.
ஆரம்பத்தில் வெறும் ரூ.6 ஆயிரம் கட்டினால் போதும். அப்புறம் பாருங்கள் நீங்கள் 24 வது மாதத்தில் அதிகம் லாபம் பெறலாம் என்பார்கள்.
24 மாதங்களுக்குப் பிறகு லாபம் கிடைக்காதவர்கள் கேள்வி கேட்டால், நீங்கள் மாதாமாதம் இத்தனை நபரைச் சேர்க்க வேண்டும், இவ்வளவு பொருள்களை விற்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சலுகை கிடைக்கும் என்பார்கள்.
மாதத்துக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு சோப்பு, பேஸ்ட், பவுடரை வாங்கினால்தான் ரூ. 500 கிடைக்கும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் ஒருவருக்கு 20 சதவிகித லாபம் என்று வைத்துக் கொண்டாலும் ரூ.1000 கிடைக்கும்.
இங்கு அதுவும் கிடைப்பதில்லை. இதற்குப் பதிலாக வெளியில் அதிகமாக விற்பனையாகும் பொருள்களை ஏஜன்சி எடுத்தால் கூட 20 சதவிகித லாபம் போக தவணை முறை, பின் தேதியிட்ட காசோலை வசதி, இன்சென்டிவ், டிஸ்ப்ளே, இதர சலுகைகள் என குறிப்பிட்ட தொகையையும் நிறுவனத்தினரே தருகின்றனர்.
இப்படிப்பட்ட சலுகைகளை எல்லாம் விட்டுவிட்டு எம்எல்எம் முறையில் பொருள்களை வாங்குவது சிரமமானது என, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
இத் துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூச்சம், கெüரவம் இதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
ஒரு நபரை இந்த முறையில் சேர்ப்பதற்கு அவர்கள் வீட்டுக்குச் சென்று, போலியாக முகஸ்துதி செய்து, எப்படியாவது மனதை வசியப்படுத்த வேண்டியிருக்கிறது.
அப்படி தாராள மனசு வைத்து சேரும் நபர்கள் கேட்கும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கும் பதில் கூறுவதற்குள் அப்பாடா...என்ன பிழைப்பு என்ற கேள்வி மனதுக்குள் எழுவதுண்டு.
ஒருவழியாக குறிப்பிட்ட நபர்களை சேர்த்தபிறகு, அதன் பலன் எப்படியிருக்கும் என்றால், விடாமல் மீட்டிங் நடத்த வேண்டும். தேவையற்ற பொய்களைக் கூறியே ஆக வேண்டும்.
இதெல்லாம் தொடர்ந்து செய்தால் மட்டுமே வெற்றி நிச்சயம். ஆனால், எத்தனை பேர் இதைச் செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
இப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்கும் நிலையில், சவாலாக சிலர் இத் தொழிலில் வெற்றிபெற்றும்விடுகின்றனர்.
முழுநேரத் தொழிலாக பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். பகுதி நேரமாக பார்ப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்.
இன்று ஏராளமானோர் பணத்தைக் கட்டி, கடினமான விதிமுறைகளின் காரணமாக போட்ட பணத்தையே திரும்ப வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இப்படி சேர்ந்த பணத்தை அந் நிறுவனங்கள் சுருட்டி வைத்துக் கொள்கின்றன. திரும்பத் தருவதுமில்லை. இப்படி இருந்தால் ஏழைகள் எப்படி இத்தொழிலை தொடரமுடியும் என்பதுதான் நமது கேள்வி.
மொத்தத்தில் இன்று புதிய எம்எல்எம் நிறுவனங்கள் முளைத்து வருவது நல்லதா கெட்டதா என்பதை உடனே கூறிவிட முடியாது. இதற்கும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தால் ஏமாற்றமடையாமல் தடுக்க வழி கிடைக்கும்.
கட்டுரையாளர் : எஸ். ரவீந்திரன்
நன்றி : தினமணி
Saturday, August 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment