1960-ல் குஜராத் மாநிலம் அங்கலேஸ்வர் நகருக்கு விஜயம் செய்த அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வெண்ணிற ஷெர்வானி முழுவதும் எண்ணெய்க் கறையானது. அந்தக் கறை அவருக்குள் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. பெட்ரோலியப் பொருள்களுக்காக வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. அந்தக் கறை படிந்த ஷெர்வானியுடனே நாடாளுமன்றத்தில் பேசப் போவதாக தன்னுடன் வந்தவர்களிடம் கூறினார். இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதில் அந்த அளவுக்கு அவருக்குள் பெருமித உணர்வு ஏற்பட்டது. அந்த இடத்தில் தோண்டப்பட்ட முதல் பெட்ரோலியக் கிணறுக்கு "வசுந்தரா' என பூமித் தாயின் பெயரை வைத்தார் நேரு.
சொன்னபடியே, இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை முதன் முதலாக நாடாளுமன்றத்தில்தான் நேரு அறிவித்தார். அதன் பிறகே ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொண்டனர். நாடு முழுவதும் உற்சாகம் பொங்கியது. ஆனால், இன்றைய நிலை வேறு. எல்லாம் மாறிவிட்டது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய அளவிலான இயற்கை எரிவாயு வளம் கடந்த 2002-ம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தி முதன் முதலாக பிரதமர் மூலமாகவோ, நாடாளுமன்றம் மூலமாகவோ அறிவிக்கப்படவில்லை.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழுவில் முகேஷ் அம்பானி அறிவித்த பிறகே இந்த விவரத்தை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. தோண்டுமிடமெல்லாம் இயற்கை எரிவாயு கிடைத்தது.
இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்புக்கு அவர்கள் வைத்த பெயர் திருபாய். நாட்டு மக்களுக்குப் பெருமித உணர்வோ மகிழ்ச்சியோ ஏற்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது?
நேரு காலத்தில் எண்ணெய் வளங்களைக் கண்டறியும் விஷயத்தில் இந்திய அரசு எவ்வளவு துணிவுடனும் வெளிப்படையாகவும் நடந்து கொண்டது என்பதற்கு முதல் நிகழ்வு சரியான உதாரணம். நேருவின் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதற்கு இரண்டாவது நிகழ்வே சாட்சி. நேருவின் கொள்கைகள் தெளிவாகவும் திட்டவட்டமானதாகவும் இருந்தன. எண்ணெய் வளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போனால் பொருளாதார வளர்ச்சி தாராளமாக இருக்காது என தேசிய வளங்களுக்கான அப்போதைய அமைச்சர் கே.டி. மாளவியா அறிவித்தார். ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்தக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்துவிட்டன.
எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிவதற்கும் வெளிக்கொண்டு வருவதற்கும் செலவுகள் அதிகமானதால், இந்தத் துறையில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 1997-ம் ஆண்டில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி, 1999-ம் ஆண்டிலிருந்து இதுவரை 7 சுற்று ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான சர்ச்சைக்குக் காரணமான கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை எரிவாயுவும் இதுபோன்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒதுக்கப்பட்டதுதான்.
கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவுக்கும் எண்ணெய்க்கும் பல தரப்பிலிருந்தும் இப்போது உரிமை கோரப்படுகிறது. இங்கு கிடைக்கும் எரிவாயுவில் 10 சதவீதத்தை வழங்கவேண்டும் என அந்த மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தனியார் நலனுக்காக நாட்டு நலனை அடகு வைத்துவிடக்கூடாது என்கிறார் அவர். பொதுமக்களும் ஊடகங்களும் ஆதரிப்பதால் இந்தக் கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.
அதேபோல், காக்கிநாடாவில் இருந்து சென்னைக்கு எரிவாயுக் குழாய் அமைப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் மெத்தனம் காட்டி வருவதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். மும்பை, குஜராத், உத்தரப் பிரதேசம் என வடக்குப் பக்கமே அந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் போராட வேண்டியிருக்கிறது. அம்பானி குடும்பத்துக்குள் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவின் ஒரு பகுதி அனில் அம்பானியின் ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த எரிவாயு சப்ளைக்கு மற்றவர்களுக்குத் தருவதைவிட குறைந்த விலை நிர்ணயிக்க வேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம். இதை எதிர்த்து இந்திய அரசு இப்போது வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், விடை கிடைக்காத பல கேள்விகள் எழுகின்றன. மிகப்பெரிய தேசிய வளத்தை நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கறாராக அமல்படுத்துவதை விட்டுவிட்டு, மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளத்தை, தனியார் நிறுவனம் ஒன்று தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகப் பெற முடியாத நிலையும் இருப்பதாகத் தெரிகிறது.
கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்திருக்கும் முதலீடுகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். கடுமையாக முயன்றும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், அம்பானி சகோதரர்களின் சண்டை வீதிக்கு வந்திருக்கிறது. இந்தச் சண்டையில், முதலீட்டை அதிகரித்துக் காட்டுவது, விலையைக் குறைத்து நிர்ணயிப்பது, குறைந்த உற்பத்தி போன்ற தந்திரங்கள் கிருஷ்ணா-கோதாவரி திட்டத்தில் கையாளப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு உரிய விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
அத்துடன், எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் தற்போதைய கொள்கைகளையும் சட்டங்களையும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.
புதிதாக வகுக்கப்படும் கொள்கைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், திட்டங்களைச் செயல்படுத்தும்போது இடம்பெயரும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வகை செய்வதாகவும் அமைய வேண்டும். இதைச் செய்யும் வரையில் அம்பானிகள் விவகாரத்தால் எழுந்திருக்கும் சர்ச்சை ஓயப்போவதில்லை.
கட்டுரையாளர் : பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி
Friday, August 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment