சமச்சீர் கல்வி அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலாகும் என்று அறிவித்திருக்கும் தமிழக அரசைப் பாராட்டவும், துணிந்து இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதற்கு நன்றி சொல்லவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதனால் மட்டும் கல்வியின் தரம் அதிகரித்துவிடுமா என்று குதர்க்கமாகக் கேள்வி கேட்பவர்கள், இன்றைய குழப்பமான நிலைமை தொடர்வதனால் கல்வியின் தரம் மேம்படுமா என்கிற எதிர்கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
தமிழகத்தில் மட்டும் விநோதமாக மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ - இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் இயங்குகின்றன. போதாக்குறைக்கு சி.பி.எஸ்.இ. முறை என்று தேசிய அளவிலான கல்வித் திட்டம் போதிக்கும் தனியார் பள்ளிகள் வேறு. பள்ளிக் கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்திலானதாக இருந்தால் மட்டும்தான் சமநிலைச் சமுதாயம் உருவாகிறதோ இல்லையோ, அரசு அனைத்துத் தரப்புகளுக்கும் நியாயம் வழங்குவதாக இருக்கும்.
தனது 2006 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சமச்சீர் கல்வி முறை வாக்குறுதியை ஏதோ ஒப்புக்கு நிறைவேற்றாமல், தமிழக அரசால் முறையாக ஒரு குழு அமைக்கப்பட்டு, மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி குறித்து ஆய்வு நடத்தி இப்போது படிப்படியாக நிறைவேற்ற முனைந்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒன்று. இந்த விஷயத்தில் அரசு மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தில் கல்விக்கொள்கை பல தடவை மாற்றப்பட்டது என்பதுடன் தனியார்மயம் அனுமதிக்கப்பட்ட பிறகு ஒருபுறம் தரம் தாழ்ந்த கல்வியும், இன்னொருபுறம் பணக்காரர்களுக்கு மட்டும் தரமான கல்வியும் என்கிற நிலைமை ஏற்பட்டு விட்டிருக்கிறது. ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்டு படித்தால் மட்டுமே வருங்காலம் உண்டு என்பதுபோல ஒரு மாயை உருவாக்கப்பட்டு, அந்த மாயையின் மூலம் கொள்ளை லாபம் அடிக்கும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தனியாரால் தெருவுக்குத் தெரு காளான்களாக உருவாகிவிட்டிருக்கின்றன.
தேசிய அளவிலான உயர்கல்வித் தகுதிகளுக்கு சி.பி.எஸ்.இ. முறையில் படித்தால் மட்டுமே தேர்வு பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளாக அரசு படிப்படியாகக் கல்வித்துறையின் மீது காட்டத் தவறிய கண்டிப்பும், முனைப்பும்தான். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஏதோ படித்தால் படிக்கட்டும் என்று ஆட்சியாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தினர் என்பதை எப்படி மறுக்க இயலும்? நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார் கல்வி நிறுவனம் நடத்தாத அரசியல்வாதிகளே இல்லை என்கிற நிலைமை அல்லவா ஏற்பட்டு விட்டிருக்கிறது!
தமிழில் படிக்காமல் அல்ல, தமிழே தெரியாமல் தமிழகத்தில் படித்து முனைவர் பட்டம் வரை பெற்றுவிட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலக் கல்வி தேவை என்கிற கோஷத்தால், தமிழ் படிப்பதே கேவலம் என்றும், தமிழ் படிக்கவே வேண்டாம் என்றும் ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே, இதை என்ன சொல்ல?
சமச்சீர் கல்வி இதற்கெல்லாம் முடிவு கட்டுமா என்றால் சந்தேகம்தான். ஆனால் சமச்சீர் கல்வி முறை மூலம், தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ.யின் தரத்துக்கு இணையான கல்வித் திட்டத்தை உருவாக்கி, அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ எங்கே படித்தாலும் ஒரே தரத்திலான, தேசிய அளவில் போட்டியிடும் தகுதியிலான கல்வி போதிக்கப்படும் என்கிற உத்தரவாதத்தை ஏற்படுத்த முடியும்.
பல பள்ளிக்கூடங்களில் தரமான ஆசிரியர்கள் இல்லை. வகுப்புக்கு ஓராசிரியர்கூட இல்லாத நிலைமை தொடர்கிறது. பயிற்று மொழியாகத் தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர்வது என்றால் ஆங்கிலம் தான் பாட மொழியாக இருக்கும். தமிழ் பொதுப் பயிற்று மொழி என்று அறிவிக்கப்பட வேண்டும். கிராமப்புற பள்ளிக்கூடங்களிலும்கூட ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
தரமான கல்வியைத் தனியார்தான் தரமுடியும் என்கிற தவறான கண்ணோட்டம் தகர்க்கப்பட வேண்டும். முடிந்தால் பள்ளிக்கல்வி என்பது அரசின் நேரடிக் கண்காணிப்பில், கட்டணம் இல்லாமல் இருப்பதுதான் முறை. உயர்கல்வியில் மட்டும்தான் தகுந்த கண்காணிப்புடன் தனியார் அனுமதிக்கப்பட வேண்டும். இப்படி நாம் சாதித்தாக வேண்டியது எத்தனை எத்தனையோ...
பள்ளிக்கல்வி அமைச்சரின் முனைப்பும் ஆர்வமும் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது ஆகிய இரண்டு விஷயங்களையும் சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த அறிவிப்பு முதற்படிதான். பாடத்திட்டம், ஆசிரியர் தகுதி, கட்டமைப்பு வசதிகள், அரசின் நேரடிக் கட்டுப்பாடு இவைதான் சமச்சீர் கல்வியை வெற்றி அடையச் செய்யும். பள்ளிக்கல்வி முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்தான் சமச்சீர் கல்வி என்பது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பது நமது கருத்து.
சமச்சீர் கல்வி என்பது காலத்தின் கட்டாயம். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறது தமிழக அரசு. இதன் மூலம் அடித்தட்டு மக்களின் ஒட்டுமொத்த வாழ்த்துகளையும் அரசு பெறுவதுடன், வருங்காலச் சந்ததியினரின் நல்வாழ்வுக்கும் வழிகாட்டி இருக்கிறது!
நன்றி : தினமணி
Friday, August 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment