இந்த நவீன யுகத்தின் அனைத்து வகையான போர்த் தந்திரங்களும் பயன்படுத்தப்பட்ட ஒரே இடம் ஈழம்தான். இப்படியொரு மிகச் சிக்கலான போர்க்களத்தை வேறு எந்த நாட்டு ராணுவமும் அறிந்திருக்க முடியாது. அப்பாவி மக்கள் நிறைந்திருந்த இந்தப் போர்க்களத்தை பல்வேறு நாடுகளின் படைகளும் தங்களது பயிற்சிக்களமாகப் பயன்படுத்தின என்னும் குற்றச்சாட்டு பலமுறை எழுந்தது. இப்போது அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கலாமோ என்கிற சந்தேகம் வலுவடைந்திருக்கிறது.
உலகின் மிக வலுவான ஆயுதப் போராளிகளை வீழ்த்திவிட்ட இலங்கை ராணுவம் இப்போது புதிய ராஜீய உறவுகளை வலுப்படுத்துவதற்கும் நிதி திரட்டுவதற்கும் ஈழ மண்ணைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிகிறது.
அதற்காக பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் படைகளுக்கு பயிற்சியளிக்கப் போவதாக இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் செறிந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளில் போர்ப் பயிற்சிக்களங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கருதப்படும் நிலையில், இப்படியொரு செய்தி இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே, வடக்கு இலங்கையின் அம்பாந்தோட்டையில் "வணிகப் பயன்பாட்டுக்கான' துறைமுகத்தை சீனா அமைத்து வருகிறது. இந்தத் துறைமுகத்தை கடற்படைத் தளமாக மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
தொடக்க காலத்தில் இந்தத் துறைமுகத்தை வர்த்தகத்துக்காகப் பயன்படுத்தினாலும், சில வசதிகளை மேம்படுத்தினால் எப்போது வேண்டுமானாலும் கடற்படைத் தளமாக மாற்றிக்கொள்ள முடியும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
சாலைகள், மின் நிலையங்கள் என இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சீனாவின் பங்கு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை இருநாட்டு உறவு தொடர்பான நடவடிக்கைகள் என ஒதுக்கிவிட முடியாது.
இலங்கையில் காலடி வைத்ததன் மூலமாக இந்தியாவைத் "தாக்கும்' தொலைவுக்கு சீனா வந்துவிட்டது என்பதுதான் உண்மை. "தாக்கும்' தொலைவுக்குள் முக்கிய அணுமின்நிலையங்கள் இருக்கின்றன என்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு சீன-இலங்கை உறவு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சூழலில், தலிபான்களுடன் போரிடுவதற்கு பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்கப் போவதாக இலங்கை கூறியிருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு நேரடியான எதிரிகள். இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட்ட ஒரே விஷயம் இலங்கை விவகாரம்தான்.
ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புகளில் இலங்கையைக் காப்பாற்றுவதற்கு மூன்று நாடுகளும் போட்டிபோட்டன. ஆனால், போரில் உதவியும் சர்வதேச அரசியலில் ஆதரவும் அளித்த இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்யப்போகிறது என்றே தோன்றுகிறது.
ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இப்போது, இலங்கை-பாகிஸ்தான், இலங்கை-சீனா இரு தரப்பு உறவுகள் வலுவடைந்தால், இந்தப் பிராந்தியத்தில் இந்த மூன்று நாடுகளின் ஆதிக்கம் மேலோங்கக்கூடும்.
இதனால் பொருளாதார அளவில் இல்லையென்றாலும், பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தியாவிடம் இலங்கை உதவி கேட்டிருக்கும் தற்போதைய நிலைமை மாறி, ஆதரவு கேட்டு இந்தியா இறங்கி வரவேண்டிய நிலைகூட ஏற்படலாம்.
இந்த விஷயத்தில் இலங்கை மிகத் தந்திரமாகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவைவிட பாகிஸ்தானும் சீனாவுமே நம்பகமான நாடுகள்.
அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக எந்த நேரத்திலும் தமக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்கக்கூடும் என்கிற சந்தேகம் இலங்கைக்கு இன்னும் இருக்கிறது.
அதனால், சீனாவை தாஜா செய்வதற்காகவே தைவானை தனிநாடாக அங்கீகரிக்க இலங்கை மறுத்திருக்கிறது.
அதே நேரத்தில், காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேச விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையை எடுக்கத் தயக்கம் காட்டி வருகிறது. இந்தியா மீது சந்தேகப்படாமல் இருந்திருந்தால், இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையையே இலங்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானையும் சீனாவையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற ராஜதந்திரம்தான் இலங்கையை மெüனம் காக்க வைத்திருக்கிறது.
விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இருக்கும்வரை இந்தியாவுக்குப் பிடிக்காத எதையும் வெளிப்படையாகச் செய்ய இலங்கை தயங்கியது.
இனியும் அப்படி இருக்கத் தேவையில்லை எனக் கருதியே, பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்க வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. அதனால், விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு உதவியது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பெரிய சறுக்கலாகவே கருதப்படுகிறது.
முன்பிருந்ததைப் போன்று இலங்கை பலவீனமான நாடல்ல. விடுதலைப் புலிகளுடனான போர் மூலமாக, புதிய போர் உத்திகளைக் கற்றுக் கொண்டிருப்பது இலங்கையின் முதல் பலம்.
இதுதவிர, சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தால்கூட, உலக நாடுகளைச் சமாளிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் புதிய அனுபவங்கள் மூலம் இலங்கை தெரிந்து கொண்டிருக்கிறது.
இப்படி போர்த் தந்திரத்திலும், ராஜதந்திரத்திலும் வலுவடைந்துள்ள இலங்கை, இந்தியாவின் எதிரிகளுடன் கூட்டு இப்போது வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் வெளியுறவு உத்திகளை வகுப்பதில் இந்தியா கொஞ்சம் பிசகினாலும் அது வரலாற்றுத் தவறாக முடிந்துவிடும்.
கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி
Friday, August 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment