Thursday, August 27, 2009

ஊழலின் உறைவிடம்!

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸôர் திடீர் சோதனை நடத்தி, ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது ரூ.1 லட்சம் வரை கணக்கில் வராத தொகையைக் கைப்பற்றினர். அதாவது ஒரு நாள் சராசரி "மாமூல்' அளவு இது!

அரக்கோணத்தில் ரூ. 1.90 லட்சம் பிடிபட்டதுடன், அந்த அலுவலகத்தின் இணை சார்-பதிவாளர் தன் சொந்தச் செலவில் 7 பேரை தினக்கூலிக்கு பணியமர்த்தியிருக்கிறார் என்றால், கையூட்டு எந்த அளவுக்குக் கிடைக்கிறது என்பது வெளிப்படை.

இப்படி திடீர் சோதனைகளை முடுக்கி விட்ட தமிழக அரசையும், தொடர்புடைய அதிகாரிகளையும் பாராட்டத்தான் வேண்டும். அதேநேரத்தில், இவர்கள் மீது உண்மையாகவே நடவடிக்கை எடுத்து, தண்டிக்கப்பட்டால்தான், இந்த அலுவலகங்களில் லஞ்சம் ஓரளவு கட்டுப்படும். இல்லாவிட்டால் இந்த நடவடிக்கைகள் வெறும் விளம்பரத்துக்காக என்பதாய் பிசுபிசுத்துப் போய்விடும்.

இச்சோதனைகளின் விளைவாக, எல்லா கட்டணங்களையும் வங்கி வரைவோலையாகக் கொண்டு வாருங்கள் என்று, ஏதோ பணத்தை கையால் தொடுவதற்கே கூச்சப்படுவதைப்போல, பத்திரப் பதிவகங்களில் தற்போது சொல்லப்படுகிறது. பிரச்னை, கட்டணங்கள் ரொக்கமா அல்லது வரைவோலையா என்பதல்ல. கையூட்டு வாங்குகிறார்களா இல்லையா என்பதுதான்.

பத்திரப் பதிவகங்களில் இந்த அளவுக்கு ஊழல் நடப்பதற்குக் காரணம், நில விற்பனையைப் பதிவு செய்யவும், நில உரிமையாளர் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கும், நிலத்தின் மதிப்பைக் குறைத்துப் பதிவு செய்து, பத்திரச் செலவைக் குறைக்கவும்தான். இந்திய மொத்த வருவாயில் (ஜிடிபி) தற்போது ரியல் எஸ்டேட் வணிகத்தின் பங்கு 10 சதவீதத்துக்கும் மேல். ஆகவே, பத்திரப் பதிவுகளுக்கு கையூட்டும் ஊழலும் மோசடிகளும் அதிகமாகிவிட்டன. கருப்புப் பணத்தைக் கையில் வைத்திருப்போரின் முதல் வேலை நிலம் வாங்குவதுதான். இருந்தும், நியாயமான ஆவணங்களைப் பதிவு செய்யவும் கையூட்டு இல்லாமல் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு சீர்கேடான நிலைமை பத்திரப் பதிவகங்களில் இருக்கிறது.

2004-ம் ஆண்டு உலக வங்கி ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில்தான் சொத்துப் பதிவுக்கான செலவினங்கள் மிக அதிகம். மேலும், நில ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் லஞ்சம் ஆண்டுதோறும் ரூ.123 கோடி என்ற தகவல் நிலஅதிர்வு போன்றதுதான்.

மேலும், நிலமதிப்பைக் குறைத்துப் பதிவு செய்வதன் மூலம் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு, நாட்டின் மொத்த வருவாயில் 1.3 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 2007-ல் இந்தியாவின் மொத்த உற்பத்தி வருவாய் (ஜிடிபி) 1,21,749 கோடி அமெரிக்க டாலர் என்றால், நிலமதிப்பைக் குறைக்கும் மோசடிகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு 1,582 கோடி அமெரிக்க டாலர்கள்! அரசுக்கு வர வேண்டிய ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வருமானத்தையும் இழந்து, இவர்களுக்குச் சம்பளமும் கொடுத்து, கையூட்டும் மக்கள் கொட்ட வேண்டும் என்றால் இந்த நிலைமையை என்னவென்பது?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலிப் பத்திர ஊழல் பல ஆயிரம் கோடி அளவுக்கு நடந்தது. அதில் சிலர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். நியாயமாக, ஒவ்வொரு சார்-பதிவாளருக்கும் இந்தக் குற்றத்தில் பொறுப்பு உண்டு. ஒரு வங்கியின் காசாளர் ஒரு நூறு ரூபாய் கள்ளநோட்டைத் தெரியாமல் வாங்கி, அது கண்டுபிடிக்கப்பட்டால், அதை வங்கிக் கணக்கில் சேர்க்க முடியாது. அந்த இழப்பை அவர்தான் செலுத்த வேண்டும். ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான போலிப் பத்திர ஊழலில் சார்-பதிவாளர்கள் தொடர்பே இல்லாதது போல, கழற்றிவிடப்பட்டார்கள்.

போலிப் பத்திரம் எந்த அளவுக்கு புழக்கத்தில் சென்றுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய, நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் பத்திரங்களை நேரில் கொண்டுவந்து மறுமுத்திரை பெற்றுச் செல்ல அறிவுறுத்தி, அந்த நேரத்தில் போலிப் பத்திரத்தைக் கண்டறிவதுடன் நில ஆவணங்களை கணினியில் ஒழுங்குபடுத்தலாம் என்ற நல்ல ஆலோசனையை அரசு முன்வைத்தபோது, அதை அப்படியே அமுக்கி, நடைமுறைப்படுத்த முடியாதபடி செய்தவர்களும் பதிவுத்துறை அதிகாரிகள்தான். காலைச் சுற்றிய பாம்பு கடித்துவிடும் என்ற அச்சம்!

பத்திரப்பதிவுக்கு வரும் வீடு அல்லது நிலத்தின் வழிகாட்டி மதிப்புக்கும், சந்தை மதிப்புக்கும் பெருத்த வேறுபாடு நிலவுகிறது. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பத்திரப்பதிவு அதிகாரிகளுக்குத் தரப்பட்டிருக்கிறது. அதனாலும் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் ஆகியவை சொத்தின் மதிப்பில் சுமாராக 7.7 சதவீதம் வருவதும்தான் இந்த ஊழல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். இதைச் சீர்செய்யாதவரை இத்துறையில் ஊழலை ஒழிக்கவே முடியாது.

ஆவணங்களை முழுமையாக கணினிமயமாக்குவதுடன், ஒவ்வொரு ஊரின் பெயர், நிலத்தின் புல எண் குறிப்பிட்டாலே, அது யார் பெயரில் உள்ளது, எந்த ஆண்டு கடைசியாக விற்பனைப் பரிமாற்றம் நடந்தது, தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு என்பதை அனைவரும் பார்க்கும் வெளிப்படைத் தன்மை இருந்தாலே போதுமானது - பதிவுத்துறை ஊழலை 99 சதவீதம் ஒழித்துவிட முடியும்.

நன்றி : தினமணி

No comments: