Wednesday, August 26, 2009

ஒதுங்கி நிற்காதீர்

தமிழ்நாட்டில் இதுவரை 54 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே போதுமான அளவுக்குப் படுக்கைகள் கிடையாது, மருத்துவப் பரிசோதனை வசதிகள் கிடையாது. இந்நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான ஆய்வகம் மற்றும் நோயாளிகளுக்குத் தனிப்பிரிவுகளை அதிகரிப்பது அரசு மருத்துவமனைகள் மட்டுமே செய்யக்கூடியவை அல்ல.

சுனாமி போன்ற தேசிய பேரிடர் காலங்களில் எப்படி எல்லா நிறுவனங்களும் லாபநோக்கு இல்லாமல் களத்தில் இறங்கிப் பணியாற்றினவோ, அதேபோன்று தேசத்தையே பீதிக்குள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சல் விஷயத்திலும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் லாபநோக்கு இல்லாமல் செயல்பட வேண்டும். பல கோடி ரூபாய் வரிச் சலுகை பெறுகிற, லாபம் சம்பாதிக்கிற மருத்துவ நிறுவனங்கள் இன்னமும்கூடக் களத்தில் இறங்கிச் சேவை புரியாமல் ஒதுங்கி நிற்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

பன்றிக் காய்ச்சலைச் சமாளிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் அழைப்பு விடுத்தபோது, ""தங்கள் மருத்துவமனைக்குள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தால், மற்ற நோயாளிகள் பயந்து வெளியேறிவிடுவார்கள்'' என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தன.

பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் பணிக்கு 9 தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இவர்களோ எரிகிற வீட்டில் எடுத்தவரை லாபம் என்பதாகச் செயல்படுகிறார்கள். முதல்கட்ட பரிசோதனைக்கு ரூ.750 கட்டணம் என்றும், அதை மேலும் உறுதிப்படுத்தும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு ரூ. 5,000 கட்டணம் என்றும் அறிவித்திருப்பதைப் பார்த்தால், தமிழக அரசுக்கு இந்த ஆய்வகங்கள் மீது எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்பதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் சென்னையில் கிங் இன்ஸ்ட்டிட்யூட், வேலூர் சிஎம்சி ஆகிய இரு மையங்களில் மட்டுமே பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை நடத்த முடியும் என்ற நிலையில், இந்த ஆய்வை நடத்தும் பொறுப்பைத் தனியார் மருத்துவமனைகள் ஒரு சமுதாயக் கடமையாக, சமூகத்துக்கு செய்யும் பங்களிப்பாகக் கருதித் தாங்களாகவே இலவசமாக நடத்த முன்வந்திருக்க வேண்டும். இந்தப் பரிசோதனைகளை நடத்தத் தேவைப்படும் ரசாயனங்களுக்குச் செலவுகள் அதிகம் ஏற்படும் என்றால், அதை அரசிடம் கேட்டுப் பெற வேண்டுமே தவிர, பொதுமக்களிடம் கட்டணமாக வசூலிப்பதற்கான நேரமும் இதுவல்ல; அப்படியான நோயும் இதுவல்ல.

"எல்லோராலும் அரசு மருத்துவமனைக்கு வர முடியுமா? வசதி படைத்தவர்கள் இந்தச் சிகிச்சையைப் பணம் செலுத்திப் பெறுவதில் என்ன ஆட்சேபணை' என்று மேலெழுந்தவாரியாகச் சிலர் நியாயப்படுத்தலாம். இந்த அபரிமிதமான ஆய்வுக் கட்டணம் என்பது தங்கள் மருத்துவமனைக்குள் எந்த நோயாளியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டுப் போடப்பட்ட பாதுகாப்பு வளையம் மட்டுமே என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய அபரிமிதமான கட்டணம் நிர்ணயிப்பது முறையல்ல. இந்த அபரிமித கட்டணங்களைச் சுட்டிக்காட்டியே, கையூட்டின் அளவை அரசு மருத்துவமனை ஊழியர்களும் நிர்ணயித்தால், ஏழை எங்கே போவான்?

இன்றைய பிரச்னை நோயாளிகளைக் காப்பது மட்டுமல்ல, நோய் பரவாமல் தடுப்பதுதான் மிக முக்கியமான பணி. இதற்கு ரத்தப் பரிசோதனை மிகவும் அவசியம். இதற்கு பன்றிக்காய்ச்சல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தினால்தான் அவர்களைத் தனித்து இருக்கச் செய்து, அல்லது வீட்டிலேயே தங்கச் செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும். பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை மற்றும் சிகிச்சை எல்லா மருத்துவமனைகளிலும் இலவசம் என்ற அறிவிப்பினால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவை ஏற்பட்டால் மூச்சுக் கவசம் இலவசமாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும்கூட அரசுக்கு வலியுறுத்தியது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த அரசும் முயற்சி செய்யவில்லை. தனியார் மருத்துவ நிறுவனங்களும் முன்வரவில்லை. பொதுமக்கள் அதிகம் கூடுகிற பஸ் நிலையம், ரயில்நிலையங்களில் பயணிகளுக்கும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கும் ஏன் இலவசமாக இத்தகைய மூச்சுக்கவசம் வழங்கக்கூடாது?

இப்போதும்கூட தனியார் மருத்துவமனைகளும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தேசத்தின் பிரச்னையில் தங்கள் இணைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே நிற்பார்கள் என்றால், வேறு எப்போதுதான் இவர்கள் தேசத்துக்கு உதவப் போகிறார்கள்! இப்போது செய்யப்படும் ஒவ்வொரு சிறு உதவியும் மிகமிக இன்றியமையாதவை என்பதை அவர்கள் உணர வேண்டும்; இல்லையேல், அரசு உணர்த்த வேண்டும்.

நன்றி : தினமணி

No comments: