Thursday, July 31, 2008

வட்டி உயர்வால் பாதிக்கப்படும் இந்திய சிறிய கார் தொழில்


கடந்த செவ்வாய் அன்று, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியதை அடுத்து எல்லா வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சிறிய கார் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கார் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கார் சந்தை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. இப்போது வங்கிகள் வட்டியை உயர்த்தி விட்டால் அது மேலும் மோசமாகும். குறிப்பாக சிறிய கார் சந்தை பாதிக்கப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் வைஸ் பிரசிடென்ட் ( கார்பரேட் விவகாரம் ) பாலேந்திரன் தெரிவித்தார். இந்தியாவை பொறுத்தவரை சிறிய கார் சந்தையில் தான் நாம் வளர்ச்சியை காண முடியும். வங்கிகள் வட்டியை உயர்த்தி விட்டால் அதிலும் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் கம்பெனியான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்) அர்விந்த் சேக்ஸானா இது பற்றி கூறுகையில், வங்கிகள் வட்டியை உயர்த்தினால், கடந்த நிதி ஆண்டில் டபுள் டிஜிட்டில் இருந்த இந்திய ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி வளர்ச்சி, இந்த நிதி ஆண்டில் சிங்கிள் டிஜிட் ஆகி விடும் என்றார். செவ்வாய் அன்று வங்கிகளுக்கான குறைந்த கால கடனுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதமும், சி.ஆர்.ஆர்.எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.25 சதவீதமும் உயர்த்தி இருக்கிறது. இதனால் வங்கிகளும் அவர்களிடம் கடன் வாங்குபவர்களுக்கு ( குறிப்பாக கார் லோன் வாங்குபவர்களுக்கு ) வட்டியை ஒரு சதவீதம் வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி : தினமலர்


அதிகம் மாற்றமின்றி முடிந்த இன்றைய பங்கு சந்தை


இந்திய பங்கு சந்தை இன்று லேசான மாற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 68.54 புள்ளிகள் ( 0.48 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,355.75 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 19.40 புள்ளிகள் ( 0.45 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,332.95 புள்ளிகளில் முடிந்துள்ளது. மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் வாங்கப்பட்டன.பார்மா, டெக்னாலஜி, பேங்கிங், டெலிகாம் பங்குகள் விற்கப்ட்டன.


நன்றி : தினமலர்


ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் ? ராகேஷ் மோகனா, அலுவாலியாவா

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்கின் கவர்னராக இருக்கும் ஓய்.வி.ரெட்டியின் ஐந்து வருட பதவிக்காலம் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடைகிறது. அவர் தனது பதவிக்காலத்தின் கடைசி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை கடந்த செவ்வாய் அன்று வெளியிட்டார். ஒரு வேளை அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படாவிட்டால் அவருக்கு பதிலாக கவர்னராக வர இருப்பவர் யார் என்ற பேச்சு இப்போதே டில்லியில் அடிபடத்துவங்கி விட்டது. அவருக்கு பதிலாக இப்போது ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னராக இருக்கும் ராகேஷ் மோகன் அல்லது திட்ட கமிஷன் துணை தலைவராக இருக்கும் மான்டேக் சிங் அலுவாலியா வரலாம் என்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.ராகேஷ் மோகன் பிரின்ஸ்டன் மற்றும் யேல் பல்கலைக் கழகங்களில் படித்தவர். மத்திய நிதித்துறையில் பணியாற்றிய பின் ரிசர்வ் வங்கிக்கு வந்தவர். எனவே இவருக்கு நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கியில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஆக்ஸ்போர்டில் படித்த அலுவாலியாவை அடுத்த கவர்னராக நியமித்தால் அதை எதிர்கட்சிகள் விரும்பாது என்கிறார்கள். இவரது நியமனம் பிரச்னைக்குள்ளாகும் என்கிறார்கள். எனவே ஆசியாவில் இரண்டாவதாக மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவின் மத்திய வங்கிக்கு யார் தலைவராக வருவார் என்பது இப்போதைக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

நன்றி : தினமலர்

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலராக உயர்ந்தது


சர்வதேச சந்தையில் பேரலுக்கு 122 டாலருக்கும் கீழே போயிருந்த கச்சா எண்ணெய் விலை இன்று 126 டாலருக்கு மேல் உயர்ந்து விட்டது. யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 4.58 டாலர் உயர்ந்து பேரலுக்கு 126.77 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 4.39 டாலர் உயர்ந்து 127.10 டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் கிடைத்து வந்த கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துள்ளதாக அமெரிக்க எனர்ஜி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாக சொல்கிறார்கள். கடந்த வாரத்தில் அமெரிக்க கச்சா எண்ணெய் சப்ளை 81,000 பேரல்கள் குறைந்து 295.2 மில்லியன் பேரல்களாகி விட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து விலை உயர்ந்து விட்டது. ஜூலை 11ம் தேதி 147 டாலருக்கும் மேல் சென்ற கச்சா எண்ணெய் விலை நேற்று 122 டாலருக்கும் குறைவாக போனது. அதற்கு டாலரின் மதிப்பு சிறிது அதிகரித்திருப்பதும், அமெரிக்காவில் பெட்ரோலுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்து போனதும் தான் காரணம் என்று சொன்னார்கள்.

நன்றி : தினமலர்


மறுபடியும் தள்ளாடுகிறது பங்குச் சந்தை



சந்தை மறுபடியும் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. இந்த முறை தள்ளாட்டம், ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர்., ஆகிய விகிதங்களை கூட்டியதால் வந்தது. திங்களன்றும், நேற்றும் கூடிய புள்ளிகளை வைத்துப் பார்க்கும் போது நேற்று முன்தினம் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறது எனக் கூறலாம். சென்ற வாரம் முடிவடைந்த புள்ளிகளை, பங்குச் சந்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம் உடனடியாகக் குறையாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் விடுத்த அறிவிப்பே, அடுத்த நாளில் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர்., சதவீதம் கூடலாம் என்று பலரும் யூகிக்க ஆரம்பித்து விட்டனர். எதிர்பார்த்தபடியே ரெப்போ ரேட் 50 புள்ளிகளும், சி.ஆர்.ஆர்., 25 புள்ளிகளும் கூட்டப்பட்டது. தற்போது, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 9 சதவீதமாக உள்ளது. இது, ஒன்பது ஆண்டுகளில் தற்போது தான் இவ்வளவு அதிகமாக உள்ளது. மேலும், சி.ஆர்.ஆர்., 9 சதவீதமாகவும் கூடியுள்ளது.
வங்கிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா?: வங்கிகளிடைய முக்கியமான தொழிலே டிபாசிட்கள் வாங்குவது, கடன்கள் வழங்குவது தான். உதாரணமாக ஒரு வங்கி ரூபாய் 100 ஐ ஒரு வாடிக்கையாளரிடமிருந்து டிபாசிட் வாங்குகிறது என்றால், தற்போது அதில் 9 ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் வட்டியில்லாமல் டிபாசிட்டாக வைக்க வேண்டும். மேலும் ரூபாய் 25யை பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது வாங்கிய டிபாசிட் ரூபாய் 100ல் அந்த வங்கியிடம் ரூபாய் 66 தான் கடன் வழங்க உள்ளது. இதனால், கடன்கள் வழங்க வங்கிகளிடம் இருக்கும் பணம் குறைவாக இருக்கும். ஆதலால், கொடுக்கும் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் கூடும். வட்டி விகிதங்கள் கூடினால் கம்பெனிகள், வங்கிகளிடம் தாங்கள் வாங்கும் கடன்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். ஆதலால், அவர்களின் லாபங்கள் குறையும். இதனால் தான் வட்டி விகிதங்கள் கூட்டப்படும் போதும், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய கையிருப்பு பணம் (சி.ஆர்.ஆர்.,) கூட்டப்படும் போதும் பங்குச் சந்தை படுத்து விடுகிறது. வங்கிகள் வட்டி விகிதங்களை கூட்டக் கூடும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 1 சதவீதம் உடனடியாக கூட்டியுள்ளது. மற்ற வங்கிகளும் இது போல வட்டி விகிதங்கள் கூட்டுவது உறுதியான ஒன்றாகும்.
அப்படியெனில் நாம் வங்கிகளிடம் வைக்கும் டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடுமா?: நீங்கள் யூகிப்பது சரி தான். வங்கிகள் தாங்கள் வாங்கும் டிபாசிட்களுக்கு அதிக வட்டி கொடுக்கலாம். தற்போதே அதிக போட்டி இருக்கிறது. நீண்ட கால வட்டி விகிதங்கள் தற்போது 9 முதல் 10 சதவீதம் வரை உள்ளது. நேற்று முன்தினம் வங்கிப் பங்குகள் எல்லாம் ஒரேயடியாக கீழே சரிந்தன. பாங்க் ஆப் இந்தியா 12.5 சதவீதமும், ஆக்சிஸ் பாங்க் 11 சதவீதமும், கோட்டக் மகேந்திரா பாங்க் 10 சதவீதமும், பாங்க் ஆப் பரோடா 9.5 சதவீதமும், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் 9.5 சதவீதமும் குறைந்தன. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 558 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.
நேற்று முன்தினம் குறைந்த சந்தை, நேற்று ஏன் ஏறியது?: நேற்று முன்தினம் நமக்கு பிறகு துவங்கிய அமெரிக்க சந்தைகள் நன்றாக மேலே சென்றன. அங்கு நுகர் பொருட்கள் விற்பனை கூடியிருப்பதாக வந்த செய்திகளை அடுத்து அங்கு சந்தைகள் 2 சதவீதத்திற்கு மேலாக கூடியது. அதன் பிரதிபலிப்பு, இந்திய சந்தைகளிலும் நேற்று இருந்தது. சமீபத்தில் வெளியான இந்துஸ்தான் லீவர், கோத்ரேஜ் ஆகிய கம்பெனிகளின் விற்பனைகளும் கூடுதலாக இருந்தது இந்தியாவிலும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை கூடிவருவதைக் காட்டுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள் நேற்று மேலே சென்றது சந்தைக்கு வலுவூட்டியது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 495 புள்ளிகள் கூடி 14,287 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 124 புள்ளிகள் கூடி 4,313 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
காலாண்டு முடிவுகள்: சில கம்பெனிகளுக்கு இந்த காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கின்றன. சில கம்பெனிகளுக்கு பாதகமாகவும் இருக் கின்றன. வங்கிகளின் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்த்தால், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு சாதகமாக இல்லை. அதே சமயம் எச்.டி.எப்.சி., பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன. மேலும், கெய்ர்ன் இந்தியா, யுனிடெக், அஜந்தா பார்மா, திஷ்மன் பார்மா ஆகிய கம்பெனிகளும் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன.
மகேந்திரா அண்டு மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி., ஆகிய கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் நன்றாக இல்லாததால் சந்தையில் அந்தக் கம்பெனிகளின் பங்குகள் கீழே விழுந்தன.
-சேதுராமன் சாத்தப்பன்-


நன்றி : தினமலர்


கிரெடிட் கார்டு புகாரா? : ரிசர்வ் வங்கி விசாரிக்கிறது



''வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த குறைகள் அல்லது புகார்களை ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கி தீர்வாணையம் (பேங்கிங் ஆம்புட்ஸ்மன்) பிரிவில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்,'' என ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் ஜோசப் தெரிவித்தார்.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குனர் ஜோசப் கூறியதாவது:
வங்கிகள், 'கிரெடிட் கார்டு' தொடர்பான விவரங்களை வட்டார மொழிகளிலும் கண்டிப்பாக வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் அனைத்து வங்கிகளுக்கும் தெரிவித்திருக்கிறோம்.
வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் பிரதிநிதிகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் செயல்பாடு குறித்த தங்களது புகார்களை தெரிவிக்க, ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், வங்கி தீர்வாணையம் இயங்கி வருகிறது. வங்கிக் கணக்கு செயல்படுவதில் உள்ள குறைகள், வங்கி கணக்கு ஆரம்பிப்பது/முடிப்பதில் தாமதம், வங்கி சேவைகளை வழங்குவதில் உள்ள குறைகள், காசோலை, 'டிடி' பரிசீலனையில் தாமதம், சேவைகளுக்கு முன் அறிவிப்பின்றி கட்டணம் வசூலித்தல், ஏ.டி.எம்., டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாதது, குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அல்லது நாணயங்களை பெற மறுப்பது, டிபாசிட்டிற்கான வட்டி விகிதம் தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறையை பின்பற்றாதது, கடன் வழங்குவதில் தாமதம், உரிய காரணங்கள் இன்றி கடன் வழங்க மறுப்பது ஆகியவை குறித்து பொதுமக்கள் இங்கு புகார் தெரிவிக்கலாம். வங்கிகளின் செயல்பாடு குறித்த தங்களது குறைகள்/புகார்களை பொதுமக்கள், ' 'The Banking Ombudsman, c/o Reserve Bank of India, Fort Glacis, 16, Rajaji Salai, Chennai 600001' என்ற முகவரியில் தெரிவிக்கலாம். மேலும் 044-25399174 என்ற தொலைபேசி எண், 044-25395488 என்ற பேக்ஸ் எண் மற்றும் 'bochennai@rbi.org.in' என்ற இ-மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு ஜோசப் கூறினார்.


நன்றி : தினமலர்


Wednesday, July 30, 2008

இந்தியா - சீனா இணைந்து போராடியும் உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது


ஜெனிவா உலக வர்த்தக அமைப்பில் கடந்த 9 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கடந்த பல நாட்களாக கடுமையாக உழைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.விவசாய பொருட்கள் இறக்குமதி சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்திற்கு இந்தியா மற்றும் சீனா இணைந்து மறுப்பு தெரிவித்ததால் கடந்த 9 நாட்களாக நடந்த பலதரப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியை கொண்டுவந்துள்ளது. இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே உள்ள பிரச்னை அல்ல. சீனா உள்பட சுமார் 100 நாடுகளுக்கு பிரதிநிதியாகத்தான் இந்தியா, அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தை முறிந்தது குறித்து, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், இது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார். இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் அவரவர்கள் நாட்டு விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என்றார்.


நன்றி : தினமலர்


சப் - பிரைம் கடன் பிரச்னையிலும் உலக பொருளாதாரம் வளர்ந்துதான் இருக்கிறது : ஐ.நா.அறிக்கை


கடந்த வருடத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட சப் - பிரைம் மார்ட்கேஜ் லோன் பிரச்னையால் பல முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் உலக அளவில் 2007 - 08 ல் பொருளாதாரம் வளர்ந்துதான் இருக்கிறது என்கிறது ஐ.நா.,வின் அறிக்கை. உலக அளவில் பொருட்களின் ஏற்றுமதி 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சர்வீஸ் துறையில் 18 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சி இருந்திருக்கிறது. இருந்தாலும் உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியை கொண்டிருக்கும் ஏழை நாடுகள், பணக்கார நாடுகளுடன் பொருளாதாரத்தில் போட்டி போட முடியாமல் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டுள்ள யுனைடட் நேஷன்ஸ் கான்பரன்ஸ் ஆன் டிரேட் அண்ட் டெவலப்மென்ட் வெளியிட்ட 2008 க்கான புள்ளிவிபர அறிக்கையில் இந்த விபரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உலக மக்கள் தொகையில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்தே உலக மொத்த உற்பத்தியில் ( ஜி.டி.பி. ) 70 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி பொருட்களின் மதிப்பு மற்றும் சர்வீஸ் துறையின் மதிப்பு ஆகியவைதான் ஜி.டி.பி.,யாக கணக்கிடப் படுகிறது. அதுதான் ஒரு நாட்டின் வளத்தை குறிக்கும். உலக அளவில் நடக்கும் ஏற்றுமதியில் பெரும்பகுதி தொழில்வளமிக்க நாடுகளில் இருந்துதான் நடக்கிறது. அங்கிருந்துதான் 60 சதவீதம் பொருட்களும் 70 சதவீதம் சர்வீஸூம் ஏற்றுமதியாகின்றன. முன்னேறும் நாடுகளில் இருந்தும் 2007ல் பொருட்கள் மற்றும் சர்வீஸ் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்று அந்த அறிக்கை சொல்கிறது.


நன்றி : தினமலர்


மீண்டும் உயர்ந்தது பங்கு சந்தை : பேங்கிங் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்தது


பங்கு சந்தை, நேற்று இழந்திருந்த 557 புள்ளிகளை இன்று அனேகமாக மீட்டு விட்டது எனலாம். நேற்று ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை அதிரடியாக உயர்த்தி இருந்திருந்ததால் மதிப்பை இழந்திருந்த பேங்கிங் பங்குகள் இன்று மீண்டும் பெற்றன. இன்றைய வர்த்தகத்தில் பேங்கிங் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்திருந்தது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 71 புள்ளிகளும் உயர்ந்தது. பின்னர் அது மேலும் முன்னேறி, மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 495.67 புள்ளிகள் ( 3.59 சதவீதம் ) உயர்ந்து 14,287.21 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 123.70 புள்ளிகள் ( 2.95 சதவீதம் ) உயர்ந்து 4,313.55 புள்ளிகளில் முடிந்தது.நேற்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி இருந்ததால், குறைந்த விலையில் கிடைத்த ரியால்டி, பேங்க், மெட்டல், ஐ.டி., பவர், ஆயில் அண்ட் கேஸ்,கேப்பிடல் குட்ஸ் மற்றும் ஆட்டோ நிறுவன பங்குகளை வாங்க மக்கள் முண்டியடித்தனர். பி எஸ் சி.,யில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஒவ்வொன்றும் 1.5 சதவீதம் வளர்ந்திருந்தன. இன்றைய பங்கு சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி., 6.29 சதவீதம், எஸ்.பி.ஐ., 5.26 சதவீதம், டாடா கம்யூனிகேஷன்ஸ் 9.43 சதவீதம், டாடா ஸ்டீல் 7.82 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 4.91 சதவீதம் 4.91 சதவீதம், டாடா பவர் 7.03 சதவீதம் உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தையில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 121.83 டாலருக்கு வந்து விட்டதால் அமெரிக்க பங்கு சந்தைகளான டௌ ஜோன்ஸ் 2.39 சதவீதம் உயர்ந்திருந்தது. நாஸ்டாக் 2.45 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆசிய பங்கு சந்தையிலும் இன்று நல்ல வளர்ச்சி காணப்பட்டது.


நன்றி: தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது


கொஞ்சம் காலத்திற்கு முன்புவரை உயர்ந்துகொண்டே இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது குறைய துவங்கி இருக்கிறது. இந்த வருடத்தில் மிக குறைந்த அளவாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 122 டாலருக்கும் கீழே சென்றுவிட்டது. யு எஸ் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 36 சென்ட் குறைந்து 121.83 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 21 சென்ட் குறைந்து 122.50 டாலராக இருக்கிறது. ஜூலை 11ம் தேதி பேரலுக்கு 147.27 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 17 சதவீதம் குறைந்திருக்கிறது. பொதுவாக கச்சா எண்ணெயின் விலை அதிகமாக இருப்பதாலும், பொருளாதாரத்தில் மந்த நிலை இருப்பதாலும் உலகில் அதிகம் பெட்ரோலை பயன்படுத்தும் அமெரிக்கா இப்போது தேவையை ( டிமாண்ட் ) குறைந்துக்கொண்டது. மேலும் அமெரிக்காவில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவும் அதிகரித்துள்ளதாக வந்த தகவலாலும் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்கிறார்கள்.


நன்றி : தினமலர்


இந்திய, ஆசிய பங்கு சந்தைகளில் மீண்டும் வளர்ச்சி


நேற்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 557 புள்ளிகள் குறைந்து போன நிலையில், இன்று ஆரம்பம் முதலே உயர்ந்திருக்கிறது. காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 71 புள்ளிகளும் உயர்ந்தது. பின்னர் அது மேலும் முன்னேறி, பகல் 11.21க்கு சென்செக்ஸ் 327.77 புள்ளிகளும் நிப்டி 76.70 புள்ளிகளும் உயர்ந்திருந்தது. ஆசிய பங்கு சந்தையிலும் இன்று நல்ல வளர்ச்சி காணப்பட்டது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கி 156 புள்ளிகள் உயர்ந்து 13,316 புள்ளிகளாக இருந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங் 413 புள்ளிகள் உயர்ந்து 22,671 புள்ளிகளாக இருந்தது. தைவானின் வெயிட்டட் இன்டக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்து 7,093 புள்ளிகளாக இருந்தது. சிங்கப்பூரின் ஸ்டெரிட்ஸ் டைம்ஸ் இன்டக்ஸ் 33 புள்ளிகள் உயர்ந்து 2,919 புள்ளிகளாக இருந்தது. சியோலின் காம்போசைட் இன்டக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 1,581 புள்ளிகளாக இருந்தது. ஷாங்கை காம்போசைட் இன்டக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து 2,860 புள்ளிகளாக இருந்தது.
நன்றி : தினமலர்


வட்டி விகிதம் அதிகரிப்பால் வீட்டுக் கடன் இனி பெரும் சுமையாகும்: பணவீக்கத்தை தடுக்க ரிசர்வ் வங்கி கடிவாளம்


அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு கடிவாளமிடும் வகையில், மத்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையை கடுமையாக்கி உள்ளது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.25 சதவீதத்தை உயர்த்தி உள்ளது. இதையடுத்து, வீட்டுக் கடன், தனி நபர் மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
மத்தியில் ஐ.மு., கூட்டணி அரசின் பதவிக் காலம் அடுத்தாண்டு முடிவடைகிறது. ஆனால், அதற்குள்ளாக பல்வேறு இக்கட்டான நிலைகளை அரசு சந்தித்துள்ளது.
முக்கியமாக பணவீக்கம், விலைவாசி உயர்வு தான் ஆட்சியையே ஆட்டம் காண செய்துவிட்டது. இதை காப்பாற்றும் விதமாக அணுசக்தி ஒப்பந்தத்தை கையில் எடுத்து கொண்டு அரசு நம்பிக்கைஓட்டெடுப்பில் தப்பித்தது. இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி இந்த நிதியாண்டுக்கான முதல் காலாண்டு ஆய்வு அறிக்கையை நேற்று அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'உலகிலேயே அதிக வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
அதே சமயம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது இந்த நேரத்திற்கு அவசியம். பல்வேறு நிதி தொடர்பான நெருக்கடிகள் நிர்வாக அளவில் பூர்த்தி செய்வதில் சிரமமாக இருக்கிறது' என்றும் தெரிவித்தார்.
முக்கியமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், பணப் புழக்கத்தை சீராக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய சி.ஆர்.ஆர்., (ரொக்க கையிருப்பு விகிதம்) 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் 30ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். இதன் காரணமாக வங்கிகள் புழக்கத்தில் இருந்து ரூ.8000 கோடி உறிஞ்சப்படும். இம்மாதிரியான நடவடிக்கையால் இதுவரை ரூ.50 ஆயிரம் கோடி உறிஞ்சப்பட்டிருக்கிறது.
* வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்கள் மீதான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வங்கிகளுக்கான 'ரிசர்வ் ரெப்போ ரேட்' தொடர்ந்து 6 சதவீதமாக இருக்கும்.
* இந்த நடவடிக்கைகளால் தற்போது 11.89 சதவீதமாக உள்ள பணவீக்கம், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 7 சதவீதமாக குறையும்.
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கு 8 சதவீதமாக இருக்கும். இது ஏற்கனவே மதிப்பிட்டதைவிட அரை சதவீதம் குறைவு.
* சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், அதிக மானியம், கடன் தள்ளுபடி, அதிகரித்து வரும் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் நிதிச்சுமை போன்றவற்றால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சுமை: வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதன் மூலம், பல்வேறு வங்கிகளும், வீட்டுக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டி விகிதத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
வீட்டுக்கடன், கார் கடன் ஆகியவை நிச்சயம் தற்போது உள்ளதை விட 1 சதவீதம் அதிகரிக்கும்.
வங்கிகள் கருத்து: ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் வங்கிகளின் லாபம் பாதிக்கப்படும் என வங்கிகளின் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
யுனைடெட் பாங்க் தலைவர் பி.கே.குப்தா கூறுகையில், 'ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்கும் பணத்திற்கு எவ்வித வட்டியும் இல்லை. அப்படியிருக்கும் போது, ரொக்க கையிருப்பு விகிதத்தை உயர்த்துவதன் மூலம் வங்கிகளின் லாபம் தான் குறையும்' என்றார்.
ஏ.பி.என். ஆம்ரோ வங்கி தலைவர் மீரா சன்யால் கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது' என்றார். 'வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாவது அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே சமயம் வாடிக்கையாளர்களின் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்காது' என்று பெரும்பாலான வங்கிகளின் தலைவர்கள் கூறினர்.
நிதியமைச்சர் கருத்து: 'ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவுகளின் மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்' என, மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பங்குச் சந்தையில் பாதிப்பு: ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை அறிவிப்பை யொட்டி நேற்று பங்குச்சந்தை 200 புள்ளிகள் சரிவுடன் தான் ஆரம்பித்தது. முடிவில் 500 புள்ளிகளுக்கு மேல் இழந்தது.


நன்றி :தினமலர்


பி.ஓ.பி., ஆந்திரா வங்கியுடன் இணைந்து மலேஷியாவில் பேங்க் துவங்குகிறது ஐ.ஓ.பி




இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ( ஐ.ஓ.பி., ), பேங்க் ஆப் பரோடா மற்றும் ஆந்திரா வங்கியுடன் இணைந்து மலேஷியாவில் ஒரு வங்கியை துவக்குகிறது. ஐ.ஓ.பி.,யின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் எஸ்.ஏ.பாத் இதனை தெரிவித்தார். இந்த புதிய வங்கியை மலேஷியாவில் அமைப்பதற்கு 100 மில்லியன் டாலர்கள் ( சுமார் 400 கோடி ரூபாய் ) முதலீடு தெவைப்படுகிறது. இதில் 30 சதவீதத்தை ஐ.ஓ.பி.,கொடுக்கும். மீதி தொகையை மற்ற இரு வங்கிகளும் பகிர்ந்து கொள்ளும் என்றார் அவர். இந்த புது வங்கி, இந்த நிதி ஆண்டின் கடைசியில் அங்கு துவங்கப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றார் அவர். மேலும் சிட்னியிலும் ( ஆஸ்திரேலியா ) ஹூஸ்டனிலும் ( அமெரிக்கா ) ஐ.ஓ.பி., அதன் கிளையை துவங்க உள்ளது. துபாயில் ஐ.ஓ.பி.,யின் பிரதிநிதி அலுவலகம் ஒன்றும் துவங்கப்பட இருக்கிறது. ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஐ.ஓ.பி., ரூ.1,48,420 கோடிக்கு வர்த்தகம் செய்திருக்கிறது. இது கடந்த வருடம் முதல் காலாண்டில் செய்ய வர்த்தகத்தை விட 24.9 சதவீதம் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.








நன்றி : தினமலர்


Tuesday, July 29, 2008

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : பேங்க் பங்குகள் 8 சதவீதம் வீழ்ந்தது


ரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கையின் முதல் காலாண்டு மதிப்பீடு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதமும், சி ஆர் ஆர் எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு பண விகிதத்தை 0.25 சதவீதமும் உயர்த்தியதை அடுத்து இன்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக வங்கிகளின் பங்குகள் சராசரியாக 8 சதவீதம் சரிந்தன. மாலை 3 மணி அளவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 546.58 புள்ளிகள் குறைந்து 13,802.53 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 140.05 புள்ளிகள் குறைந்து 4,192.05 புள்ளிகளாக இருந்தது. ஐ சி ஐ சி ஐ. 8.19 சதவீதம், ஹெச் டி எஃப் சி. 9.27 சதவீதம், பேங்க் ஆஃப் இந்தியா 12.70 சதவீதம், இந்தியன் பேங்க் 13.80 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 11.53 சதவீதம் குறைந்திருந்தது.


நன்றி : தினமலர்


ரெபோ ரேட், சி ஆர் ஆர்., உயர்த்தப்பட்டது : ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை


வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதம் உயர்த்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி. அதே போல் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பையும் ( சி ஆர் ஆர் ) 0.25 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. நிதி கொள்கை குறித்து ரிசர்வ் வங்கி இன்று கூட்டிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரெட்டி தெரிவித்தார். பணவீக்கத்தை குறைக்கவே நாங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதற்காகத்தான் ரெபோ ரேட் மற்றும் சி ஆர் ஆர் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார் ரெட்டி. சி ஆர் ஆர்., ஆகஸ்ட் 30ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. பணவீக்கம் விரைவில் 5 சதவீதத்திற்கு குறைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை காரணமாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் சரிந்தன. 14 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போனது. பொதுவாக வங்கிகளின் பங்குகள் அதிகம் சரிந்து விட்டன. பகல் 12.04க்கு சென்செக்ஸ் 431.11 புள்ளிகள் குறைந்து 13,918.00 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 114.90 புள்ளிகள் குறைந்து 4,217.20 புள்ளிகளாக இருந்தது.

நன்றி : தினமலர்


2008ல் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க ஹூண்டாய் இந்தியா முடிவு


ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2008ம் ஆண்டில் அதன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க திட்டமிட்டிருக்கிறது. 2007ல் 1.26 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்திருந்த அந்த நிறுவனம் 2008ல் 2.4 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறது. மேலும் 2013ல் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை இங்கு முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. ஹூண்டாய் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் கம்பெனியாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் 45 சதவீதம் ஏற்றுமதி மூலம் நடக்கிறது. இது 2007ம் ஆண்டு 38 சதவீதமாகத்தான் இருந்தது. 2012 - 13ல் நாங்கள் இங்கு 250 அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம். இதன் மூலம் எங்களின் மொத்த முதலீடு ஒரு பில்லியன் டாலரை தாண்டிவிடும் என்று ஹூண்டாய் நிறுவன செய்தி தொடர்பாளர் ராஜிவ் மித்ரா தெரிவித்தார். ஏற்கனவே நாங்கள் இங்கு 733 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்திருக்கிறோம் என்றார் அவர். இந்த வருடத்தில் நாங்கள் 2.4 லட்சம் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதில் சுமார் 1.5 லட்சம் கார்கள் சான்ட்ரோ மற்றும் ஐ10 கார்களாக இருக்கும் என்றும் மற்றவை கெட்ஸ் மற்றும் ஆக்ஸன்ட் மாடல்களாக இருக்கும் என்றும் மித்ரா தெரிவித்தார். ஏற்கனவே எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ஐ10 கார்களுக்கு ஆர்டர் இருக்கிறது என்று சொன்ன மித்ரா, நாங்கள் இங்கிருந்து சுமார் 95 நாடுகளுக்கு எங்களது கார்களை ஏற்றுமதி செய்கிறோம் என்றார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக சேர்த்து இந்த வருடத்தில் நாங்கள் 5.3 லட்சம் கார்களை விற்க திட்டமிட்டிருக்கிறோம். இது 2007 விற்பனையான 3.37 லட்சம் கார்களை விட 60 சதவீதம் அதிகம் என்றும் மித்ரா தெரிவித்தார்.

நன்றி : தினமலர்


Monday, July 28, 2008

பங்கு சந்தையில் லேசான முன்னேற்றம்


ரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கைக்கான கூட்டத்தை நாளை கூட்டியுள்ளதை அடுத்து இன்று பங்கு சந்தை நிதானமாகவே நடந்தது எனலாம். பெரும்பாலான பங்கு வர்த்தகர்கள், நாளை ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான பெபோ ரேட்டை உயர்த்தும் என்று எதிர்பார்த்தார்கள். எனவே காலை மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே அவ்வளவாக உயராமலும் அவ்வளவாக குறையாமலும் இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 74.17 புள்ளிகள் மட்டும் ( 0.52 சதவீதம் ) உயர்ந்து 14,349.11 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 20.25 புள்ளிகள் ( 0.47 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,332.10 புள்ளிகளில் முடிந்தது. கேபிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ், ரியாலிடி, பார்மா துறை பங்குகள் வாங்கப்பட்டன. பி எஸ் இ மிட்கேப் 1 சதவீதமும் ஸ்மால் கேப் 2 சதவீதமும் உயர்ந்திருந்தது.

நன்றி : தினமலர்


எல் அண்ட் டி., யின் நிகர லாபம் 33 சதவீதம் உயர்வு


இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனமாக எல் அண்ட் டி.,யின் இந்த ஆண்டு முதல் காலாண்டில் பெற்ற நிகர லாபம் 502 கோடி ரூபாய். இது கடந்த வருடம் முதல் காலாண்டில் இது பெற்றிருந்த லாபம் ரூ.377 கோடியை விட 33 சதவீதம் அதிகம். ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எதிர்பார்ப்பான 405 கோடியையும் மீறி இப்போது ரூ.502 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. அதன் இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டிரக்ஷன் பிரிவில் ஏற்பட்ட அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாக இந்த லாபத்தை அது அடைந்திருக்கிறது. இந்தியாவில் இப்போது விமான நிலையங்கள், ரோடுகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக அளவில் கட்டப்படுவதால் எல் அண்ட் டி., யின் இஞ்சினியரிங் மற்றும் கட்டுமான தொழில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 18 பில்லியன் டாலர் ( சுமார் 76,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள எல் அண்ட் டி.,யின் பங்கு இப்போது 4.4 சதவீதம் உயர்ந்து ரூ.2,739.95 க்கு விற்பனை ஆகிறது. இருந்தாலும் இந்த காலாண்டில் பங்கு சந்தையில் சென்செக்ஸ் 14 சதவீதம் குறைந்திருந்தாலும் எல் அண்ட் டி.,யின் பங்கு மதிப்பு 28 சதவீதம் குறைந்திருக்கிறது.

நன்றி : தினமலர்


நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதால் அரசுக்கு லாபம் ரூ.64,000 கோடி


கடந்த 22ம் தேதி பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதால் பங்கு வர்த்தகம் மூலம் அது ரூ.86,600 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது.ஜூலை 9ம் தேதி ரூ.7.42 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு மதிப்பு, இப்போது ரூ.8.29 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் ரூ.63,900 கோடி அரசுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. மத்திய அரசுக்கு 87 முதல் 98 சதவீதம் பங்குகள் இருக்கும் நேஷனல் அலுமினியம், ஐ டி ஐ, ஹெச் எம் டி, போன்ற நிறுவன பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது. இது தவிர என் டி பி சி, ஓ என் ஜி சி, என் எம் டி சி, ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் கடந்த ஜூலை 9ம் தேதிக்குப்பின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த பங்குகள் 11.9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த காலத்தில் சென்செக்ஸ் மொத்தத்தில் 2.2 சதவீத புள்ளிகளே உயர்ந்திருந்தது.

நன்றி : தினமலர்


பணவீக்கத்தால் 32 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் பாதிப்பு


இந்தியாவில் பணவீக்கத்தால், விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து, சாதாரண மக்கள் வாழ்க்கை மட்டுமல்ல, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கன்சல்டன்சி நிறுவனம், ஆன்-லைன் மூலம் இது தொடர்பான தகவல்களை திரட்டி, ஆய்வு செய்துள்ளது. அது வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுப்பொருட்கள் முதல், பல பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகள் போட்ட திட்டங்கள் எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திட்டங்களில் மதிப்பீட்டு செலவு அதிகரித்து விட்டது; சில திட்டங்கள் தாமதப்படுகின்றன. இன்னும் சில திட்டங்கள் இப்போதைக்கு கைவிடப்பட்டுள்ளன. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், பணவீக்கம் கண்டிப்பாக குறைந்து, நிலைமை சீராகும் என்று நிதி ஆலோசகர்கள் திடமாக நம்புகின்றனர். ஆனாலும், இப்போதுள்ள நிலையில் பல முக்கிய திட்டங்கள் தாமதப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள திட்டங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு பக்கம் உற்பத்தி குறைகிறது; இன்னொரு பக்கம் வாங்கும் சக்தி குறைகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை. முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் உள்ளதால், மொத்த உற்பத்தி விகிதம் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் உள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள திட்டங்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 400. பணவீக்கத்தால் இந்த திட்டங்ளின் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் 11 ஆயிரம் திட்டங்கள் மொத்த மதிப்பு, 15 லட்சம் கோடி ரூபாய். திட்ட அமலாக்க விகிதம் 45 சதவீதமாக இருந்தது, பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து விட்டதால், திட்டப்பணிகள் வேகம் 42 சதவீதமாக குறைந்து விட்டது. இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் கூறுகையில், 'பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக விலைவாசி அதிகரித்து வருகிறது. இதனால், திட்டச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
அரசு திட்டங்களில் முக்கியமானவற்றை முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிட்டாலும், தனியாரை பொறுத்தவரை, அவசர திட்டங்கள் தவிர, மற்றவற்றை தாமதம் செய்யவே நினைக்கின்றனர்; இதனால், இழப்பு குறையும் என்பதும் அவர்கள் கணிப்பு' என்று தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 1,750 திட்டங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. இந்த திட்டங்களில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்


ஏர்-இந்தியா எக்ஸ்பிரசின் 'லேடீஸ் ஸ்பெஷல்' பிளைட்


முழுவதும் பெண்களே பணியாற்றும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இயக்கப்பட்டது. இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 'ஏர்-இந்தியா' நிறுவனத்தின் 'ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ்' முழுவதும் பெண்களே பணியாற்றும் விமான சேவை ஒன்று நேற்று இயக்கப்பட்டது. இந்த விமானத்தின் முதல் பெண் பைலட்டாக சாமிலி குரோட்டப் பள்ளியும், இணை பைலட்டாக அம்ரித் நம்தாரியும், பணிப் பெண்களாக பானு, பூட்டியா, திவ்யா, பினல்வேலன்ட் ஆகியோரும் செயல்பட்டனர். 183 பயணிகளுடன் நேற்று மதியம் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இந்த விமானம் புறப்பட்டு சென்றது. ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு மொத்தம் 76 பைலட்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர் பெண் பைலட்கள்.


Sunday, July 27, 2008

வருண பகவான் கருணை காட்டினால் பங்குச் சந்தை ஒளிரும்


காளைகள் சிறிது ஓய்வெடுத் துள்ளன. அதனால், கரடிகள் மறுபடி எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டன. சந்தையில் இந்த வியாழன், வெள்ளி இறக்கங்கள் எதிர் பார்த்தது தான். அதாவது, சென்ற வாரம் வியாழன் முதல் இந்த வாரம் புதன் வரை சந்தை ஏறிக்கொண்டே சென்றது.
இரண்டு காரணங்கள்: ஒன்று, லாப நோக்கில் பலரும் விற்க ஆரம் பித்தது. இரண்டாவது, சந்தையில் ஜாம்பவான்களின் காலாண்டு முடிவுகள், சந்தை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் காலாண்டு முடிவுகள், சந்தையை வியாழனன்று கீழே இறக்கியது.
ஐ.சி.ஐ.சி.ஐ., முடிவுகள் வரும் சனியன்று வெளிவருகிறது. ஆனால், வெள்ளியன்றே சந்தையில் அதன் பங்குகள் 8 சதவீதம் குறைந்தன. சந்தையில் அந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் சாதகமாக இருக்காது. வாரக்கடன்கள் கூடும், லாபங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பது தான் காரணம்.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடியதால் (கிட்டத்தட்ட 70 முதல் 80 பைசா வரை), ஏற்றுமதியாளர்கள் மறுபடி கையை பிசையும் நிலை. சந்தையில் இந்த உயர்வு, குறிப்பாக சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகளைப் பாதித்தன.
இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம் ஆகிய கம்பெனிகளின் பங்குகள் மிகவும் கீழே தள்ளப்பட்டன. அது வியாழனன்று சந்தையை வெகுவாக பாதித்தது. வியாழனன்று சந்தை 165 புள்ளிகளை இழந்தன.
வெள்ளியன்று இறக்கத்திற்கு காரணம், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிசின் காலாண்டு முடிவுகள் தான். நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 13 சதவீதம் கூடியிருந்தது. சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகள் 4 சதவீதம் கீழே இறங்கியது. அது சந்தையை வெகுவாக பாதித்தது.
ஆசிய அளவில் லாப நோக்கில் பங்குகள் விற்கப்பட்டதால், பல சந்தைகள் கீழே இறங்கியிருந்தன. அதுவும் சந்தை இறங்கியதற்கு ஒரு காரணம். இறுதியாக மும்பை பங்குச் சந்தை 502 புள்ளிகள் குறைந்து 14,274 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 121 புள்ளிகள் குறைந்து 4,311 புள்ளிகளுடனும் முடிவடைந்தன.
பணவீக்கம் எங்குள்ளது?: இந்த வாரம் 11.89 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமான 11.91 சதவீதத்தை தாண்டாது ஒரு ஆறுதல். அதே சமயம் சென்ற ஆண்டு இதே சமயத்தில் பணவீக்கம் 4.76 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், இன்னும் பணவீக்கம் குறைய நிறைய வாய்ப்புள்ளது. மத்தியில் ஓட்டெடுப்பில் காங்கிரஸ ஜெயித்தவுடன், அனில் அம்பானியின் கம்பெனிகளின் பங்குகள் தொடர்ந்து மேலே சென்றன,
தங்கம் ஏன் இறங்குகிறது?: கச்சா எண்ணெய் கூடினால் பணவீக்கம் கூடும், முதலீட்டாளர்கள் தங்கத்தை தேடி ஓடுவர். தங்கம் விலை கூடும். ஆனால், தற்போது கச்சா எண்ணெய் மிக அதிகபட்ச விலையிலிருந்து 23 டாலர் வரை பேரலுக்கு குறைந்திருக்கிறது. இதனால், உலகளவில் தங்கத்தின் விலை டாலர் மதிப்பில் குறைந் துள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் அவுன்சுக்கு 50 டாலர் வரை குறைந் துள்ளது. மேலும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடி வருகிறது. ஆதலால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூபாய் 800 வரை 10 கிராமுக்கு குறைந்துள்ளது. வரப்போகும் மாதங்கள் பண்டிகை மாதங்களாகையால் டிமாண்ட் கூடும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: சந்தை இந்த வாரம் 15,000ஐ தாண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த மேஜிக் நம்பரை முத்தமிட முயற்சி செய்து தோற்றது. அதிலிருந்து இரண்டு நாட்களும் இறக்கம் தான். மாதக்கடைசியில் ரிசர்வ் வங்கியின் பாலிசி அறிவிப்பு வரவிருக்கிறது. பணவீக்கம் இன்னும் இரட்டை இலக்கத்திலேயே இருப் பதால், மறுபடி இன்னும் ஒரு வட்டி கூடுதலாக இருக்கலாம் என்று, அப்படி இருக்குமானால் அது சந்தையைப் பாதிக்கும். குறிப் பாக, வங்கி பங்குகளைப் பாதிக் கும். வானிலை ஆராய்ச்சி மையம், இந்த ஆண்டு நல்ல மழை இருக் கும் என்று கணித்திருந்தது. துவக் கத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால், கடந்த 15 நாட்களாக மழை இல்லாத ஒரு சூழ்நிலை,
ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள் ளது. குறிப்பாக குஜராத், மகாரஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மழையை எதிர்பார்த்தது போல இல்லை என வரும் அறிக் கைகள், சிறிது பயத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்ந்தால், அது சந்தையைப் பாதிக்கும். சந்தை மேலே செல்ல இதுவரை கச்சா எண்ணெய் பகவானை வேண்டிக் கொண்டிருந்தோம். தற்போது, வருண பகவானையும் வேண்டுவோம்.
-சேதுராமன் சாத்தப்பன்-


நன்றி : தினமலர்


வருமான வரி சிறப்பு கவுன்ட்டர் திறப்பு : ரூ. 23,861 கோடி வசூலிக்க இலக்கு


''இந்த நிதியாண்டில் ரூ. 23 ஆயிரத்து 861 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என வருமான வரித்துறை முதன்மைக் கமிஷனர் முத்துராமகிருஷ்ணன் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள வருமான வரி செலுத்துவோர் 2007-08ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய, வரும் 31ம் தேதி இறுதி நாளாகும். வருமான வரி கணக்குகளை பொதுமக்கள் எளிதாக தாக்கல் செய்யும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் 42 சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புக் கவுன்ட்டர்களை மத்திய வருவாய்த் துறைச் செயலர் பிடே நேற்று துவக்கி வைத்தார். இந்த சிறப்புக் கவுன்ட்டர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட, வரும் 31ம் தேதி வரை செயல்படும். காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்புக் கவுன்ட்டர்களில் பொதுமக்கள் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கணக்குளைச் செலுத்துவதற்காகவும், ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கும் சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்குப் படிவங்களை தீதீதீ.டிணஞிணிட்ஞுtச்துடிணஞீடிச்.ஞ்ணிதி.டிண என்ற இணைய தளத்திலிருந்து, 'டவுண்லோடு' செய்து கொள்ளலாம். சிறப்புக் கவுன்ட்டர்கள் குறித்து வருமான வரித்துறை முதன்மைக் கமிஷனர் முத்துராம கிருஷ்ணன் கூறியதாவது: சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் வருமான வரிக் கணக்குகளைச் செலுத்த சிறப்புக் கவுன்ட்டர்களை அமைத்துள்ளோம். கடந்த ஆண்டு சிறப்புக் கவுன்ட்டர்கள் மூலம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் கணக்குகளைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். கடந்த ஆண்டு தமிழகத்தில் மொத்தம் மூன்று லட்சம் பேர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு இது மூன்றரை லட்சமாக உயரும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த நிதியாண்டில் ரூ. 23 ஆயிரத்து 861 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை ரூ. நான்காயிரத்து 261 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முத்துராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


நன்றி : தினமலர்


Saturday, July 26, 2008

கச்சா எண்ணெய் விலை கடந்த 7 வாரத்தில் இல்லாத அளவு குறைந்தது


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவாக குறைந்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக அங்கு பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்து போனதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்கிறார்கள். ஜூலை மாத துவக்கத்தில் பேரல் ஒன்றுக்கு 147.27 டாலர் வரை இருந்த யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை, இப்போது 20 டாலருக்கு மேல் குறைந்து 123.26 டாலருக்கு வந்திருக்கிறது. லண்டன் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 124.52 டாலராக இருக்கிறது. இப்போது டிமாண்டுக்கு தக்கபடி எண்ணெய் சப்ளை இருப்பதாக வர்த்தகர்களிடையே கருத்து நிலவுவதால் விலை குறைந்திருக்கிறது என்றும், அது இன்னும் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. 2009 முதல் காலாண்டில் எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் குறைவாக வந்து விடும் என்று லேமன் பிரதர்ஸ் நிறுவன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : தினமலர்


ஸ்பெயினுக்கு நேரிடையாக 100 டாலர் விலையில் கச்சா எண்ணெய் விற்கிறது வெனிசுலா


ஓபக் அமைப்பில் ஒரு உறுப்பு நாடாக இருக்கும் வெனிசுலா, நேரடியாக ஸ்பெயினுக்கு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் சப்ளை செய்ய ஒத்துக்கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை பேரல் ஒன்றுக்கு 100 டாலர் என்ற விலையில் கொடுக்க வெனிசுலா ஒத்துக்கொண்டிருக்கிறது.இதற்கு பதிலாக ஸ்பெயினில் இருந்து மருந்து உபகரணங்கள் மற்றும் பொருட்களை வெனிசுலா வாங்கிக்கொள்ளும் என்று வெனிசுலா அதிபர் ஹூகோ ஷிவாஸ் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் 400 மில்லியன் டாலர்கள் மேட்ரிட் நகரில் இருக்கும் ஒரு வங்கியில் முதலீடு செய்யப்படும். பின்னர் அது ஸபெயினில் இருந்து வெனிசுலா இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுக்கப்பட்டுவிடும் என்று ஸ்பெயின் டெலிவிஷன் டி வி இ., க்கு அளித்த பேட்டியில் ஷிவாஸ் தெரிவித்தார். இதுவரை சந்தை மூலமாக விலை நிர்ணயிக்கப்பட்டு, சப்ளை செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய், இப்போது முதல் முறையாக வெனிசுலாவால் நேரடியாக விற்கப்படுவது ஒரு புது ஆரம்பம் என்று சொல்லப்படுகிறது. எங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்து உபகரணங்கள், தொழில்நுட்பம், காற்றாலைக்கான தொழில்நுட்பம் போன்றவைகளை இதன் மூலம் எளிதாக நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் ஷிவாஸ். மேட்ரிட்டில் ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிகஸை நேற்று வெனிசுலா அதிபர் ஷிவாஸ் சந்தித்து பேசியபோது இருவருக்குமிடையே இது சம்பந்தமான ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்போது பேரல் ஒன்றுக்கு 125 டாலர் வரை விலையில் இருக்கும் கச்சா எண்ணெய், ஸ்பெயினுக்கு 100 டாலருக்கு கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே வெனிசுலா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வருகிறது.

நன்றி : தினமலர்


இன்டர்நெட் உபயோகிப்பதில் அமெரிக்காவை விஞ்சியது சீனா


சீனாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்காவை விஞ்சி விட்டது. ஜூன் முடிய எடுத்த கணக்கெடுப்பில் சீனாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடியே 30 லட்சமாகி விட்டது. ஆனால் அமெரிக்காவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 23 கோடியாகத்தான் இருக்கும் என்று சீனா இன்டர்நெட் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டர் ( சி என் என் ஐ சி ) என்ற அமைப்பு தெரிவிக்கிறது. சீனாவில் கடந்த வருடம் 16 கோடியே 20 லட்சமாக இருந்த இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கை இந்த வருடம் 25 கோடியே 30லட்சமாகி இருக்கிறது. இது 56.2 சதவீதம் அதிகம். அமெரிக்காவில் டிசம்பர் 2007 முடிய உள்ள காலத்தில் 21 கோடியே 80 லட்சமாக இருந்த இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்த ஜூன் முடிய உள்ள காலத்தில் 23 கோடியாகத்தான் உயர்ந்திருக்கும் என்று சொல்கிறார்கள். மேலும் சீனாவில் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் 21 கோடியே 40 லட்சமாகி விட்டது என்கிறது அந்த அமைப்பு. இது அந்நாட்டில் மொத்த இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கையில் 80 சதவீதத்திற்கும் அதிகம்.

நன்றி : தினமலர்


Friday, July 25, 2008

பங்கு சந்தையில் மீண்டும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது


பங்கு சந்தையில் இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயராமல் இருந்தபோதும், பணவீக்கம் சிறிது குறைந்திருந்த போதும் அது பங்கு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தாதது சர்வதேச அளவில் பங்கு சந்தையில் இருந்த சரிவு நிலைதான் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து இரண்டு நாட்களாக சந்தை சரிவில் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாரத்தில் மொத்தமாக சென்செக்ஸ் 4.5 சதவீதமும், நிப்டி 5.5 சதவீதமும் குறைந்து இருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 502.07 புள்ளிகள் ( 3.40 சதவீதம் ) குறைந்து 14,274.94 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ், அதிக பட்சமாக 14,484.39 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. குறைந்ததாக 14,210.63 புள்ளிகள் வரை சென்றது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 121.70 புள்ளிகள் ( 2.74 சதவீதம் ) குறைந்து 4,311.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிப்டி அதிக பட்சமாக 4,440.85 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 4,297.15 புள்ளிகள் வரையிலும் சென்றது. இன்றைக்கு அதிகம் நஷ்டமடைந்த நிறுவனங்கள் ஐ சி ஐ சி ஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ரிலையன்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேஷன் மற்றும் ஓ என் ஜி சி. இருந்தாலும் ரான்பாக்ஸி லேப்ஸ், ஏ சி சி, ஹெச் யு எல், கிராஸிம் பங்குகள் உயர்ந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று அதிகம் பாதித்தது பேங்கிங் துறைதான். 5.75 சதவீதம் குறைந்திருந்தது. ஐ சி ஐ சி ஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கனரா பேங்க், கர்நாடகா பேங்க், யெஸ் பேங்க், கோடக் மஹேந்திரா பங்குகள் 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை குறைந்திருந்தது.


நன்றி : தினமலர்


வருமான வரி கட்டும் முறை மேலும் எளிமையாகிறது


வரி கட்டுபவர்கள், இனிமேல் எந்த ஒரு நபரின் எந்த பேங்க் அக்கவுன்ட் மூலமாகவும் வரியை கட்டலாம் என்று சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ் ( சி பி டி டி ) தெரிவித்திருக்கிறது. இப்போதைய பணம் செலுத்தும் முறையில் பல சிக்கல்கள் இருப்பதாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் வரி செலுத்துபவர்கள் சொல்லி வந்ததை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சி பி டி டி தெரிவித்திருக்கிறது. டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலமாகவும் இனிமேல் வரி கட்டலாம். இந்த வருடம் ஏப்ரலில் இருந்து தான் நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்கள் எலக்ட்ரானிக் முறையில் வரி கட்டலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இனிமேல் வரி கட்டுபவர்கள் யாருடைய அக்கவுன்டில் இருந்தும் எலக்ட்ரானிக் முறையில் பணம் கட்டலாம். ஆனால் அதற்கான செலானில் மட்டும் வரி கட்டுபவரது பான் நம்பரை தவராமல் குறிப்பிட வேண்டும் என்று சி பி டி டி தெரிவித்திருக்கிறது. அவரவர்கள் பேங்க் அக்கவுன்டில் இருந்துதான் பணம் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை.

நன்றி : தினமலர்


பணவீக்கம் சிறிது குறைந்தது


மே மாதத்திற்குப்பின் முதன் முறையாக இப்போது பணவீக்கம் 0.02 சதவீதம் குறைந்து 11.89 சதவீதமாகி இருக்கிறது. சில உணவுப்பொருட்கள், மீன், டீ, சமையல் எண்ணெய் போன்றவைகளின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் சிறிது குறைந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஜூலை 12ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், பணவீக்கம் 11.89 சதவீதம் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 11.91 சதவீதமாகவும், கடந்த வருடத்தில் இதே காலத்தில் 4.76 சதவீதமாகவும் இருந்திருக்கிறது. நிதி அமைச்சகத்தில் தகவலின்படி, மொத்தமுள்ள 98 முக்கிய பொருட்களில் 10 பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. 54 பொருட்களின் விலை உயரவில்லை என்கிறது. சில உணவுப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் சில பொருட்களின் விலை அதிகரித்துதான் இருந்தது. காபி, பழங்கள் மற்றும் காய்கறிகள், மட்டன், பாசிப்பயிறு, துவரம்பருப்பு போன்றவைகளின் விலை உயர்ந்துதான் இருந்தது.


நன்றி :தினமலர்


இலக்கு ரூ.28 ஆயிரம் கோடி கே.வி.பி., சேர்மன் அறிவிப்பு


''கரூர் வைஸ்யா வங்கியின் நடப்பாண்டு வணிக இலக்கு, ரூ.28 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது,'' என்று மகா சபை கூட்டத்தில் சேர்மன் குப்புசாமி அறிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கி 89வது மகா சபை கூட்டம், கரூர் தலைமை அலுவலகத்தில் நடந்தது. வங்கி சேர்மன் குப்புசாமி பேசியதாவது: கடந்த நிதியாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் ரூ.22 ஆயிரத்து 118.83 கோடி எட்டியதுடன், மொத்த வணிக வளர்ச்சியில் 33.77 சதவீதத்தை எட்டியுள்ளது.
வங்கியின் மொத்த வருமானம் 30.69 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. ஆயிரத்து 289.33 கோடியை எட்டியது. வங்கியின் நிகர லாபம் ரூ.160.01 கோடியில் இருந்து 30.2 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.208.33 கோடியை எட்டியது. நடப்பு நிதியாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.28 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டை, 'இளைய சமுதாயத்தினர்' ஆண்டாக கடைப்பிடிக்கிறது. 'யுவசக்தி' என்ற புதிய சேமிப்பு கணக்கு திட்டத்தை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விமானம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய டெபிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஆன்-லைன் பில் பேமன்ட்,' 'ஆன்-லைன் ஷாப்பிங்,' 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம், 'டிராவல் கார்டு' மற்றும் 'கிப்ட் கார்டு' வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.இவ்வாறு சேர்மன் குப்புசாமி பேசினார்.


நன்றி :தினமலர்


கிரெடிட் கார்டு நடைமுறையில் வங்கிகள் கெடுபிடி : தடுக்க ரிசர்வ் வங்கி புது உத்தரவு


கிரெடிட் கார்டுகளுக்கு அதிக கட்டணம் மற்றும் பயனீட்டாளர்களை பாதிக்கும் வங்கி கெடுபிடி நடவடிக்கைகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை, வழிகாட்டிக் குறிப்புகளை வகுத்துள்ளது.
கிரெடிட் கார்டு பாதிப்பு குறித்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி அடிப்படையில் எழுப்பப்படும் பிரச்னைகளைக் குறைக்க வழிகண்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டிக் குறிப்பில் கூறப்பட்டிருக்கும் தகவல்: தேவைப்படாதவர்களுக்கு வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்குவதோ, அப்படி வழங்கப்படும்போது, அதை பெறுபவரின் கணக்கை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து அதற்கான விசேஷ கட்டணம் வசூலிக்கக் கூடாது.
அவ்வாறு கட்டணம் வசூலித்தால், அதை திரும்ப பயனீட்டாளருக்கு அளிப்பதோடு, அவர் பெற்ற மன உளைச்சலுக்காக அபராதத் தொகையாக வங்கிகள், இரண்டு மடங்கு திருப்பி அளிக்க வேண்டும். கார்டு தேவையில்லை என்பவருக்கு அனுப்பி, அதனால் வரும் பிரச்னைக்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும்.
அத்துடன், யார் பெயரில் கிரெடிட் கார்டு அனுப்பப்பட்டதோ, அவர் வங்கி ஓம்பட்ஸ்மேனை அணுகலாம். அங்கு, எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும்.
இதற்கு ஏற்படும் செலவு, துண் புறுத்தல்கள், மன அமைதி கெடுதல் போன்றவற்றுக்கு ஏற்ப, இழப்பீடு தொகை வரையறுக்கப்படும். கிரெடிட் கார்டு வழங்கப்படும் போது, சில வங்கிகள் அவற்றுக்கு காப்பீடு பாலிசிகளையும் அளிக் கின்றன. இதற்காக, வேறு சில காப்பீடு நிறுவனங்களுடன் உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
அப்படிப்பட்ட நிலையில், கிரெடிட் கார்டு தாரர் விபத்தின் போது, இறந்து பேனாலோ, நிரந்தர ஊனமடைந் தாலோ, அதற்கான பயன்கள் யாரைச் சென்றடைய வேண்டும் என்ற நியமனதார் பெயருடன் விண்ணப்பத்தை நிரப்பி வாங்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கிரெடிட் கார்டு தாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு தவறாக பயன்படுத் துவதை தவிர்க்க, புகைப்படம், கையெழுத்துடன் லேமினேட் செய்யப்பட்ட கார்டுகளை வழங்கலாம். மாதம் தோறும் கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு பரிவர்த்தனைகள் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தெரியப்படுத்தும் நடைமுறை உருவாக்க வேண்டும். கிரெடிட் கார்டு கணக்கு பாக்கி விபரம் முன்கூட்டியே தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்டவர் அத்தொகையைச் செலுத்த கால அவகாசம் குறைந்தது 15 நாட்களாவது இருக்க வேண்டும். அதற்குப் பின் தான் கட்டாத தொகைக்கு வட்டி வசூலிக்கலாம்.
இவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறைகளை வங்கிகள் உடனடியாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நன்றி :தினமலர்


Thursday, July 24, 2008

இந்தியாவில் 17 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது இன்டெல்

கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பாளரான இன்டெல் கார்பரேஷனின் ஒரு அங்கமாக இன்டெல் கேப்பிடல், மூன்று இந்திய கம்பெனிகளில் 17 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது என்று, இன்டெல் கார்பரேஷனில் எக்ஸிகூடிவ் வைஸ் பிரசிடென்ட் ஆகவும் இன்டெல் கேப்பிட்டலின் தலைவராகவும் இருக்கும் அர்விந்த் சோதானி தெரிவித்தார். இரண்டு இன்டர்நெட் நிறுவனங்களிலும் ஒரு விளம்பர நிறுவனத்திலும் இந்த பணம் முதலீடு செய்யப்படும் என்று அவர் புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆன்லைன் டிராவல் நிறுவனமான யாத்ரா டாட் காம், நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனமான பஷ்ஷின் டவுன் டாட் காம், மற்றும் எம்னெட் சம்சாரா மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் இந்த தொகை முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் 1998ல் துவங்கப்பட்ட இன்டெல் கேப்பிடல் நிறுவனம், இதுவரை எட்டு நகரங்களில் சுமார் 50 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. டிசம்பர் 2005ல் 250 மில்லியன் டாலர் முதலீட்டில் துவங்கப்பட்ட இன்டெல் கேப்பிடல் இந்தியா டெக்னாலஜி ஃபண்ட்டிலிருந்து இந்த தொகை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


கீழே இறங்கிய இன்றைய பங்கு சந்தை


கடந்த ஐந்து நாட்களாக ஏறி இருந்த பங்கு சந்தை இன்று கீழே இறங்கி விட்டது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 2,300 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் இன்று இறக்கத்தில் முடிந்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்ட சரிவு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. 11.91 சதவீதமாக இருக்கும் பணவீக்கம் 12 சதவீதத்தை தாண்டி விடும் என்ற எதிர்பாõர்ப்பு இருந்ததும் பங்கு சந்தை சரிவுக்கு காரணம் என்கிறார்கள். மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 165.27 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) குறைந்து 14,777.01 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 43.25 புள்ளிகள் ( 0.97 சதவீதம் ) குறைந்து 4,433.55 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது டி சி எஸ், டாடா ஸ்டீல், ஏ சி சி, டாடா பவர் நிறுவனங்கள்தான். இந்நிலையிலும் நால்கோ, ஜீ என்டெர்டெய்ன், ஓ என் ஜி சி, டி எல் எஃப், ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்திருந்தன.

நன்றி :தினமலர்

ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயரத்தும் ?


பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தலாம் என்று ராய்ட்டர் செய்தி நிறுவன கணிப்பு தெரிவிக்கிறது. தற்போது 12 சதவீதத்தை ஒட்டி இருக்கும் பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை சீரமைப்பு கூட்டத்தில் ரெபோ ரேட் 0.25 முதல் 0.5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் டபுள் டிஜிட்டுக்கு சென்றதை அடுத்து ரிசர்வ் வங்கி சமீபத்தில்தான் ரெபோ ரேட்டை உயர்த்தியது. சமீபத்தில் பணவீக்கம் உயர்ந்ததற்கு பெரிதும் காரணமாக இருந்தது, உற்பத்தி துறையில் ஏற்பட்ட பணவீக்க உயர்வுதான் என்கிறார் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் பொருளாதார நிபுணர் சோனல் வர்மா. உற்பத்தியாளர்கள் அவர்களுக்கு ஏற்படும் உற்பத்தி செலவை நுகர்வோரிடம் திணிப்பதாலும், ஊழியர்கள் அதிகம் சம்பளம் கேட்பதும் பணவீக்க உயர்வுக்கு காரணம் என்கிறார் அவர். பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் அடுத்த வாரத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை உயர்த்தும் என்றும், இன்னும் ஒரு 0.5 சதவீத ரேட்டை இந்த வருட இறுதிக்குள் உயர்த்தும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது. பேரலுக்கு 124 டாலர்


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து வருகிறது. நேற்று நியுயார்க் சந்தையில் லைட் ஸ்வீட் குரூட் விலை பேரல் ஒன்றுக்கு 3.98 டாலர் குறைந்து 124.44 டாலராக இருந்தது. ஜூலை 11ம் தேதி 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 124 டாலருக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் கல்ஃப் ஆப் மெக்ஸிகோவில் மையம் கொண்டிருக்கும் டாலி என்ற சூறாவளியால் அங்கிருக்கும் எண்ணெய் கிணறுகள் சேதமாகி அதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் என்ற பயம் முதலில் இருந்தது இப்போது அந்த பயம் நீங்கி இருப்பதால் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 4.26 டாலர் குறைந்து 125.29 டாலராக இருந்தது. அமெரிக்க எரிசக்தி துறை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு காரணம் என்கிறார்கள்.


நன்றி :தினமலர்


பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது அரசுக்கு கிடைத்த வெற்றி


வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போஸ்டர் அடிக்கும் அளவிற்கு தொடர்ந்து மேலேயே சென்று கொண்டிருக்கிறது பங்குச் சந்தை. கடந்த வியாழன் முதல் நேற்று வரை 2,300 புள்ளிகளுக்கு மேல் கூடி முதலீட்டாளர்களை மறுபடியும் சந்தை பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பங்குச் சந்தை, அரசியலில் ஜெயித்து பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் மட்டும் ஒதுங்கி இருக்கிறோமே, நாமும் கலந்து கொள்ளலாமே என்று கச்சா எண்ணெயும் விலை குறைந்து பங்குச் சந்தை பார்ட்டியில் கலந்து கொண்டது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலர் வரை குறைந்தது. சமீபத்திய அதிகபட்ச விலையான பேரலுக்கு 147 டாலரிலிருந்து, 126 டாலர் வரை வந்துள்ளது. இது, 14 சதவீதம் குறைவு. திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று தினங்களுமே அரசியலால் பங்குகளின் விலை ஏறியது என்று தான் கூறவேண்டும். அரசியலில் எம்.பி.,க்களின் விலை ஏறியது போல, பங்குச் சந்தையிலும் ஒரு ஏற்றம் இருந்தது ஒரு ஆறுதல் தான். சமீபகாலமாக ஏற்பட்ட பங்குச் சந்தை புண்களுக்கு இந்த ஏற்றம் ஒரு மருந்தானது. சிறிய, நடுத்தர, பெரிய கம்பெனி ஆகிய அனைத்து பங்குகளும் மேலே சென்றன. நேற்று பல பங்குகள் 10 சதவீதத்திற்கு மேலே கூடிச் சென்றது. குறிப்பாக ஆர்.என்.ஆர்.எல். (அனில் அம்பானியின் கம்பெனி) 24 சதவீதம் மேலே சென்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு விலைகள் கூடின. அதே சமயம் ஆயில் தயாரிக்கும் கம்பெனியான கெய்ர்ன் இந்தியாவின் விலை குறைந்தது. கடந்த 15 தினங்களாக இந்தக் கம்பெனியின் பங்கு விலை குறைந்து வருவது குறிப்பிடத் தக்கது. அணு உலைகள் அமைப்பதிலும், அதற்கான இயந்திரங்களை வடிவமைப்பதிலும், செய்வதிலும் முன்பே அனுபவம் வாய்ந்த கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றது. குறிப்பாக லார்சன் அண்டு டர்போ, என்.டி.பி.சி., பி.எச். இ.எல்., அல்ஸ்டம் புராஜெக்ட்ஸ், டாடா பவர், வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ், அரிவா, ஏ.பி.பி., ரோல்டா இந்தியா ஆகியவை. வங்கித்துறை, கட்டுமானத்துறை, மின்சாரத்துறை பங்குகள் மேலே சென்றன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 838 புள்ளிகள் கூடி 14,942 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 236 புள்ளிகள் கூடி 4,476 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. என்ன நடக்கலாம்? : இன்சூரன்ஸ் சீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம். இது, இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகளில் இன்னும் போட்டிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் கொண்டு வரும். வெளிநாட்டு வங்கிகள், இந்திய வங்கிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டலாம். உலகளவில் இந்திய வங்கிகளின் மதிப்பை உயர்த்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு பற்றி மறுபடி பேசப்படலாம். பொறுமை காத்தவர்களுக்கும், சரிவில் வாங்கியவர்களுக்கும் பங்குச் சந்தை சிறிது லாபத்தை கடந்த ஐந்து நாட்களில் கொடுத்திருக்கும். வரும் நாட்களிலும் சந்தையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம். அதே சமயம் சந்தையில் கையை பெரிதாகச் சுட்டுக் கொண்டு அதிலிருந்து வெளிவரத் துடித்து கொண்டு இருப்பவர்கள் பலர். அவர்கள் எல்லா ஏற்றத்திலும் விற்று வெளியே வரவேண்டும் என்று நினைப்பதால் சந்தை அதையும் தாங்கி மேலே செல்ல வேண்டும். சந்தைக்கு சிறிய முதலீட்டாளர்கள் வந்தால் தான் சந்தை பரிணமிக்கும். அதே சமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இனி சிறிது திரும்பிப் பார்ப்பர். அந்தப் பணம் உள்ளே வந்தால் பங்குச் சந்தை ஏறும். அதே சமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்புள்ளது.
- சேதுராமன் சாத்தப்பன்

நன்றி :தினமலர்


Wednesday, July 23, 2008

பங்கு சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் : பேங்கிங் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்தன


இந்திய பங்கு சந்தையில் இன்று ஒரு மகத்தான் நாளாக இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் ( ஆதரவு - 275, எதிர்ப்பு - 256 ) வெற்றி பெற்றதை அடுத்து, இன்று பங்கு சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. 2008 மார்ச் 25ம் தேதிக்குப்பின் இன்றுதான் ஒரே நாளில் சென்செக்ஸ் இவ்வளவு அதிகம் புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. ஜூலை 16,2008ல் 12,576 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் எல்லா பங்குகளுமே ஏறி இருந்தது. பெரும்பாலானவர்கள் பேங்கிங், ரியல் எஸ்டேட், உற்பத்தி பொருட்கள், பவர், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் துறை சார்ந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காண்பித்தனர். இவைகள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் மிட் கேப் 5 சதவீதமும், ஸ்மால் கேப் 4 சதவீதமும் உயர்ந்திருந்தது. கடந்த சில காலமாகவே இந்திய அரசியல் ஏற்பட்ட குழப்பம், கச்சா எண்ணெய்யின் கடுமையான விலை உயர்வு, பணவீக்க உயர்வு, ரூபாயின் மதிப்பு மாற்றத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவைகளால் இந்திய சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இப்போது இந்திய அரசியலில் நீடித்த குழப்பம் தீர்ந்து போனது. கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. எனவே இனிமேல் பங்கு சந்தையில் நல்ல ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். இன்றைய பங்கு சந்தையின் வர்த்தக முடிவில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 838.08 புள்ளிகள் ( 5.94 சதவீதம் ) உயர்ந்து 14,942.28 புள்ளிகளில் முடிந்துள்ளது.( 15 ஆயிரம் புள்ளிகளை எட்ட இன்னும் கொஞ்சம் புள்ளிகளே இருக்கின்றன ). தேசிய பங்கு சந்தையில் நிப்டி 236.70 புள்ளிகள் ( 5.58 சதவீதம் ) உயர்ந்து 4,476.80 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஹெச் டி எஃப் சி வங்கி, டி எல் எஃப், செய்ல், பி என் பி ஆகியவை நல்ல லாபம் பார்த்தன.

நன்றி : தினமலர்


சிமென்ட் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா சிமென்ட்ஸ் ரூ.2,100 கோடி முதலீடு


இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட், அதன் சிமென்ட் உற்பத்தியை வருடத்திற்கு 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்த ரூ.2,100 கோடி முதலீடு செய்கிறது. இதனை அதன் இணை தலைவர் - மார்க்கெட்டிங், ராகேஷ் சிங் தெரிவித்தார். இப்போது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திராவில் 4 தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் 3 தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இதன் மூலம் வருடத்திற்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்த திட்டமிட்டு ரூ.2,100 கோடி முதலீடு செய்கிறார்கள். இப்போது அவர்களுக்கு தென் இந்தியா மற்றும் மகாராஷ்டிராவில் 8,000 ஸ்டாக்கிஸ்டுகள் இருக்கிறார்கள். இதில் 30 லிருந்து 35 சதவீதத்தினர் சங்கர் மற்றும் கோரமண்டல் சிமென்ட்டின் பிரத்யேக ஸ்டாக்கிஸ்ட்டாக இருக்கிறார்கள். இந்தியா சிமென்ட்டின் விற்பனையில் ஆறு முதல் ஏழு சதவீதம் வரை, மொத்தமாக வாங்கிக்கொள்பவர்களுக்கும் பெரிய பில்டர்ஸ்களுக்குமே விற்கப்படுகிறது. இவைகள் பெரிய சைஸ் டேங்கர்கள் மூலமாக சப்ளை செய்யப்பட்டு விடுகிறது. மீதிதான் 50 கிலோ கொண்ட பைகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.


நன்றி : தினமலர்


நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு வெற்றி : பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்


யு.பி.ஏ., அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு வெற்றி பெற்றது ( ஆதரவு - 275, எதிர்ப்பு - 256 ), அமெரிக்க பங்கு சந்தையில் நிலவும் ஏற்ற நிலை, கச்சா எண்ணெய் விலை குறைந்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே சென்செக்ஸ் 651.48 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தையில் நிப்டி 196.75 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. பேங்கிங், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ், பவர் போன்ற துறைகளின் பங்குகள் உயர்ந்திருந்தன. அதிகம் பயன் அடைந்தது ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, யுனிடெக் மற்றும் டி எல் எஃப் நிறுவனங்கள் தான். ஆசிய சந்தைகளான ஹேங்செங், நிக்கி, ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ், கோஸ்பி, தைவான் வெயிட்டட் போன்றவைகள் 1.5 - 3.5 சதவீதம் உயர்ந்திருந்தன. அமெரிக்க சந்தைகளான டௌஜோன்ஸ், நாஸ்டாக் போன்றவையும் உயர்ந்திருந்தது.


நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் கல்ஃப் ஆப் மெக்ஸிகோ பகுதியை டோல்பி என்ற சூறாவளி தாக்கக்கூடும் என்றும், அதனால் அங்கு இருக்கும் எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் என்றும் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயப்படும் அளவுக்கு ஒன்றும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்ற தகவல் இப்போது வந்துள்ளதால், இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரல் ஒன்றுக்கு 23 சென்ட் குறைந்து 128.19 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 25 சென்ட் குறைந்து 129.30 டாலராக இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் கல்ஃப் ஆப் மெக்ஸிகோ பகுதியில் தான் அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் கால்பங்கு கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. 15 சதவீத இயற்கை எரிவாயுவும் அங்கிருந்துதான் அமெரிக்காவுக்கு கிடைக்கிறது.

நன்றி : தினமலர்


டாலர் மதிப்பு உயர்ந்தும் இழப்பு அதிகரிப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் திணறல்

டாலர் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, கடந்த ஆண்டு பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. தற்போது, டாலர் மதிப்பு உயர்ந்தும், மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், மீண்டும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆயிரத்து 500க்கும் அதிகமான நிறுவனங்கள் ஏற்றுமதிக்கான பனியன் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டு, 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிறுவனங்களால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு சர்வதேச ஜவுளி வர்த்தக சந்தையில், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 46 ரூபாயில் இருந்து 39ஆக குறைந்தது. இதனால், ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட் டது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் உள்ள பனியன் ஏற்றுமதி யாளர்களுடன் போட்டியிட முடியாமல், புதிய 'ஆர்டர்'களை தவிர்க்கும் நிலை அதிகரித்தது. இத னால், ஏற்றுமதி நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், தொழிலாளர் களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டது. கடந்த 2007ம் ஆண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே ஏற்றுமதி செய்யப்பட்டுள் ளது.இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே, டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளதால், வெளிநாடுகளில் புதிய 'ஆர்டர்'களை ஒப்பந்தம் செய்வதில், திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள் அதிக ஆர்வம் காட்ட துவங்கினர். டாலர் மதிப்பு 39 ரூபாயிலிருந்து 44 வரை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்த்தக இழப்பை சரிகட்டுவதுடன், கூடுதல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால், மூலப்பொருளான நூல் விலை 100 கிலோ கொண்ட கேஸ் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.மின் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு தேவையான உபரி பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, 'பேப்ரிகேஷன்' நிறுவனங்கள் துணி உற்பத்தி கட்டணத்தை 25 சதவீதம் அதிகரித்துள்ளன. இதேபோல், ஸ்கிரீன் பிரின்டிங், காம்பாக்டிங், எம்பிராய்டரிங், ஸ்டீம் காலண்டரிங், அட்டை பெட்டி தயாரிப்பு, சாய ஆலை போன்ற அனைத்து நிறுவனங்களும் 20 முதல் 30 சதவீதம் வரை கூலியை அதிகரித்துள்ளன. ஏற்கனவே, 'ஆர்டர்'களை ஒப்பந்தம் செய்துள்ளதால், நூல் விலை , உபதொழில் கட்டண உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆடை விலையை அதிகரிக்க முடியாது. இதனால், டாலர் மதிப்பு அதிகரித்தும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்


இன்சூரன்ஸ் பிரிமியம் மொபைலில் கட்டலாம் - தனியார் போட்டி அதிகரிப்பு



இன்சூரன்ஸ் பாலிசியின் பிரிமியத் தொகையை, மொபைல் போன் மூலம் கட்டும் வசதி இப்போது அமலுக்கு வந்துள்ளது; இதனால், தாமதமாக கட்டுவோர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்சூரன்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் போட்டா போட்டி அதிகரித்துள்ளதால், வர்த்தகத்தை பெருக்க வாடிக்கையாளர்களுக்கு பல வசதியை ஏற்படுத்த, நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.இந்த வகையில், வாடிக்கையாளர்கள், தங்கள் பாலிசியின் பிரிமியத்தை கடைசி தேதிக்குள் கட்டுவதற்கு வசதியாக புதிய வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ருடென்ஷியல் உட்பட சில நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. அது தான், மொபைல் போன் மூலம் பணத்தை செலுத்தும் வசதி.இன்சூரன்ஸ் துறையில் அதிக வர்த்தகத்தை கொண்டுள்ள நிறுவனம் அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி., தான். தனியார் நிறுவனங்கள் போட்டா போட்டி அதி கரித்து வந்தாலும், எல்.ஐ.சி., அளவுக்கு இன்னும் வர்த்தகம் அதிகரிக்க வில்லை. ஆனால், எல்.ஐ.சி., உட்பட அரசு நிறுவனங்களை விட, பல மடங்கு வசதிகளை வாடிக்கை யாளர் களுக்கு தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மொபைல் போன் மூலம் செலுத்தும் வசதியை சமீபத்தில் ஆரம்பித்த ஐ.சி.ஐ.சி.ஐ., துணைத் தலைவர் அனிதா பால் கூறுகையில், 'வாடிக்கை யாளர்களுக்கு பிரிமியம் செலுத்த எல்லா வகையிலும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அப்போது தான் தாமதம் குறையும். அதனால், மொபைல் போன் மூலம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். விரைவில் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்' என்றார்.மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ள இன்னொரு தனியார் நிறுவனம் மாக்ஸ் நியூயார்க் லைப் இன்சூரன்ஸ். கார்ப்பரேஷன் வங்கி டெபிட் கார்டு மூலம் இந்நிறுவன இன்சூரன்ஸ் தொகையை கட்டலாம். அதற்கான வசதி, மொபைல் போனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பஜாஜ் அலியன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம், மொபைல் போன் மூலம் செலுத் தும் வசதியை ஏற்படுத்த பரிசீலித்து வருகிறது. பணம், செக் மூலம் மட்டுமின்றி, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியை இந்த நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. இதன் தலைமை அதிகாரி மெஹ்ரோத்ரா கூறுகையில்,' எல்.ஐ.சி., போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஆண்டுதோறும் 10 சதவீதம் அளவுக்கு தான் புதிய வர்த்தகம் செய்கின்றன. 90 சதவீத வர்த்தகம் ஏற்கனவே உள்ள பாலிசிக்களின் புதுப்பித்தலால் நடக்கிறது. அதனால், சிறிய நிறுவனங்கள், வர்த்தகத்தை பெருக்க, வாடிக்கையாளர்களை பல வகையில் ஈர்க்க வேண்டியுள்ளது' என்றார்.டாடா ஏ.ஐ.ஜி., ஆயுள் காப்பீட்டு நிறுவனம், மத்திய அரசின் தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 5,000 தபால் நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் பிரிமியத்தை செலுத்தலாம். இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி எடுத்தவர்களில் தாமதமாக பணம் செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு க்கு 25 சதவீதமாக உள்ளது. இதைக் குறைத்தால் தான் வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று நம்பு வதால் மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் வசதியை பல நிறுவனங்கள் ஏற்படுத்தி வரு கின்றன.மொபைல் போனில் இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டும் தான் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்பதால், இப்போதைக்கு இதற்கு வரவேற்பு சுமாராகத்தான் உள்ளது.




நன்றி : தினமலர்


Tuesday, July 22, 2008

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் - காங்கிரஸ் வெற்றி

ஆதரவு = 275
எதிர்ப்பு = 256

நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் முடியவில்லை

TRUST VOTE - FOR: 253, AGAINST: 232, PENDING: 54

தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் பங்கு சந்தை


மத்திய அரசின் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு இன்று நடக்க இருப்பது எல்லாம் பங்கு சந்தையை பாதித்ததாக தெரியவில்லை. பெரும்பாலான முதலீட்டாளர்கள் யு.பி.ஏ., அரசு ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பியதால், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே உயர துவங்கிய சென்செக்ஸ் மாலை வரை தொடர்ந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 254.16 புள்ளிகள் ( 1.84 சதவீதம் ) உயர்ந்து 14,104.20 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 80.60 புள்ளிகள் ( 1.94 சதவீதம் ) உயர்ந்து 4,240.10 புள்ளிகளில் முடிந்தது. சி.என்.பி.சி.- டி.வி.18 எடுத்த கணிப்பின்படி, யு.பி.ஏ., அரசுக்கு ஆதரவாக 268 ஓட்டுகளும் எதிராக 267 ஓட்டுகளும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் பெரிதும் பயன் அடைந்தது செய்ல், பெல், ஐடிசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், விப்ரோ, ஸ்டேட் பேங்க் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள்.

நன்றி : தினமலர்


இந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி 7 - 8 சதவீதமாக இருக்கும் : சிதம்பரம்


இந்த நிதி ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சிக்கலான ஆண்டாக இருந்தாலும் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தாõர். மத்திய அரசின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது பேசிய சிதம்பரம், என்.டி.ஏ., அரசு பதவியில் இருந்தபோது 5 முதல் 6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது 7 முதல் 8 சதவீதமாக இருக்கும் என்றார். 2007 - 08ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வருட பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, இதுவரை சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன் ரூ.50,254 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர இன்னும் ரூ.16,233 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு மொத்தம் ரூ.66,477 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார் சிதம்பரம். இதனால் 3.64 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார். மேலும் கடந்த வருடம் ரூ.2,50,000 கோடி கடன்கொடுத்திருந்த நிலையில் இந்த வருடம் அது ரூ.2,80,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார்.

நன்றி : தினமலர்


ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்தது


ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்திருக்கிறது. இன்று காலை வர்த்தகத்தில், லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 57 சென்ட் குறைந்து 130.47 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 56 சென்ட் குறைந்து 132.05 டாலராக இருந்தது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் இருக்கும் ஆயில் கிணறு பகுதியை டோல்பி என்ற சூறாவளி லேசாக தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு வேலையில் இருக்கும் பல தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எக்ஸான் மொபில் கார்பரேஷன், செவ்ரான் கார்பரேஷன், ராயல் டச் ஷெல் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் அவர்களது தொழிலாளர்கள் பலரை அங்கிருந்து வெளியேற்றி இருக்கிறது. இருந்தாலும் இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்


இனிமேல் கமிஷன் கிடையாது : போராட்டம் நடத்த டிராவல் ஏஜென்டுகள் முடிவு


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட்களை எடுத்து கொடுக்க இந்தியா முழுவதும் ஏராளமான டிராவல் ஏஜென்டுகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆரம்பத்தில் 9 சதவீதம் கமிஷன் கொடுக்கப்பட்டு வந்தது. அது சமீபத்தில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்போது அதற்கும் வேட்டு வருகிறது. ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் , ஏர் - இந்தியா ஆகிய விமான கம்பெனிகள் டிராவல் ஏஜென்டுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து உங்களுக்கு கமிஷன் ஏதும் கொடுக்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். வெளிநாட்டு விமான கம்பெனிகளான லூப்தான்சா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆகியவையும் இதே போன்று கமிஷன் தரமாட்டோம் என்று கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதன் மூலம் அந்த விமான கம்பெனிகளுக்கு ரூ.1,000 கோடி வரை மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. விமானங்களை இயக்குவதற்கு அதிகம் செலவாவதாலும், வளர்ச்சி குறைவாக இருப்பதாலும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாகி விட்டதாக விமான கம்பெனிகள் தெரிவிக்கின்றன. ஆனால் விமான கம்பெனிகளின் இந்த முடிவை எதிர்த்து இந்தியாவில் இருக்கும் டிராவல் ஏஜென்டுகள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து, இந்தியாவில் இருக்கும் சுமார் 4,500 டிராவல் ஏஜென்டுகள் அங்கத்தினர்களாக இருக்கும் மூன்று பெரிய அசொசியேஷன்கள் மும்பையில் கூடி விவாதித்தனர். அதில் ஜூலை 24 ம் தேதி டிராவல் எஜென்ட் அசோசியேஷன் களுக்கும் விமான கம்பெனிகளுக்கும் டில்லியில் நடக்க இருக்கும் கூட்டத்தில் ஒரு சாதகமான முடிவு ஏற்படா விட்டால் இனிமேல் டிக்கெட்டுகளை விற்கப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயண டிக்கெட்டுகளில் 85 சதவீதம் டிராவல் ஏஜென்டுகள் மூலமாகத்தான் விற்கப்படுகிறது. டிராவல் ஏஜென்டுகள் விமான டிக்கெட்டுகளை விற்பதை நிறுத்தி விட்டால் அது விமான பயணிகளை குறிப்பாக வெளிநாடு செல்லும் பயணிகளை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. டிக்கெட் புக் செய்வது கேன்சல் செய்வது போன்றவைகளில் சிரமங்கள் ஏற்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த டிராவல் ஏஜென்டுகள், ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இப்போதும் 9 சதவீத கமிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஆகியவைகள் லாபத்தில் இயங்கும்போதும் கூட ஏன் எங்களுக்கு கமிஷன் கொடுக்க மாட்டோம் என்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள விமான கம்பெனிகளும் சமீபத்தில் ஏஜென்டுகளுக்கு கமிஷன் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டு பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டது.




நன்றி : தினமலர்


Monday, July 21, 2008

யு.பி.ஏ.அரசு நீடிக்கவே பெரும்பாலான இந்திய சி.இ.ஓ.,க்கள் விரும்புகிறார்கள் : சர்வே


மும்பை : இப்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ., அரசு நீடிக்கவே இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் ( சி.இ.ஓ.,) விரும்புகிறார்கள் என்று, இன்று எடுத்த ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியை இதுவரை ஆதரித்து வந்த இடதுசாரி கட்சிகள், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதை அடுத்து, அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடக்கிறது. இந்நிலையில் அசோசியேட்டட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இன்டஸ்டிரீஸ் ( அசோசெம் ) என்ற அமைப்பு இன்று திங்கட்கிழமை, இந்திய தொழில் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் சி.இ.ஓ.,க்களிடம் நடத்திய ஒரு சர்வேயில், இப்போது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ., அரசுதான் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தது தெரிய வந்துள்ளது. 400 சி.இ.ஓ.,க்களிடம் எடுத்த கருத்து கணிப்பில் 72 சதவீதத்தினர் காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் நீடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, அவர்கள் ( காங்கிரஸ் ), பென்சன், இன்சூரன்ஸ், சிவில் ஏவியேஷன், தொழிலாளர் முன்னேற்றம் போன்ற துறைகளில் இன்னும் வேகமான முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இன்னும் 15 வருடங்களில் அணுசக்தி துறை சம்பந்தமான தொழில்களில் சுமார் 40 பில்லியன் டாலர் ( சுமார் 1,70,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள முதலீடு இந்தியாவுக்கு வரும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் அது சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடம் நடத்தி வைத்திருக்கின்றன என்றனர்.

நன்றி : தினமலர்

இன்றும் ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை


மும்பை : நாளை மத்திய அரசு மீது நம்பிக்கை வோட்டு எடுக்க இருக்கும் நிலையில், இன்றைய பங்கு சந்தை கீழே இறங்கி விடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மதியம் வரை இந்த எதிர்பார்ப்பு இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் காலை வர்த்தக ஆரம்பத்தில் இருந்தே ஏறி இருந்த சென்செக்ஸ் மதியத்திற்கு மேல் வேகமாக உயர ஆரம்பித்தது. பேங்கிங், ரியல் எஸ்டேட், பார்மா, ஆட்டோ, பவர், எண்ணெய் நிறுவனம் ஆகிய பங்குகள் வேகமாக உயர துவங்கியது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 214.64 புள்ளிகள் ( 1.57 சதவீதம் ) உயர்ந்து 13,850.04 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 67.25 புள்ளிகள் ( 1.64 சதவீதம் ) உயர்ந்து 4,159.50 புள்ளிகளில் முடிந்தது. ஆசிய பங்கு சந்தைகளிலும் இன்று உயர்வு நிலைதான் இருந்தது. ஷாங்கை, ஹேங் ஷெங், ஜகர்தா காம்போஸைட், ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ், கோஸ்பி, மற்றும் தைவான் வெயிட்டட் போன்றவைகள் 2.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தைகளிலும் இன்று ஏற்ற நிலையே இருந்தது.


நன்றி : தினமலர்


வெளிநாடுகளில் இந்தியர்களின் முதலீடு 53.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது


புதுடில்லி : வெளிநாட்டினர் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதுபோல இந்தியர்களும் வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அது வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ ( ஜாயின்ட்வெஞ்சர் ) அல்லது வெளிநாட்டு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வாங்கிக்கொள்வதன் மூலமாகவோ ( ஹோல்லி - ஓன்ட் சப்சியடரிஸ் ) இந்தியர்களின் முதலீடு இருக்கிறது. இந்த முதலீடு 2007 நிதி ஆண்டை விட 2008 நிதி ஆண்டில் 53.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2007ல் 15.6 பில்லியன் டாலராக இருந்த இந்தியர்களின் முதலீடு 2008 நிதி ஆண்டில் 23.071 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. 2007 ல் 1,817 வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த இந்தியர்கள் 2008ல் 2,261 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது 24.4 சதவீதம் அதிகம். இந்தியர்களில் முதலீட்டில் பெரும்பகுதி சைப்ரஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, ஐக்கிய அரபு குடியரசு, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், மொரீசியஸ் போன்ற நாடுகளில் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாடுகள் தான் வெளிநாட்டினர் எளிதில் முதலீடு செய்யும் வகையில் திட்டங்களை வைத்திருக்கின்றன.


நன்றி : தினமலர்


ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்தது


சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் இன்று காலை கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்திருக்கிறது. அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி ஈரானை கேட்டுக்கொள்ள, வியன்னாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள். இன்று காலை வர்த்தகத்தில் நியுயார்க் சந்தையின் முக்கிய பொருளான லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 82 சென்ட் உயர்ந்து 129.70 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) ஒரு சென்ட் உயர்ந்து 130.20 டாலராக இருந்தது. ஈரானை அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் ஈரான், அமெரிக்காவுடன் ஒத்துப்போனால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒத்துப்போகவில்லை என்றால் அது மற்ற நாடுகளில் இருந்து தனிமை படுத்தப்படும் என்று எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளது


நன்றி : தினமலர்