பங்கு சந்தையில் இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயராமல் இருந்தபோதும், பணவீக்கம் சிறிது குறைந்திருந்த போதும் அது பங்கு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தாதது சர்வதேச அளவில் பங்கு சந்தையில் இருந்த சரிவு நிலைதான் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து இரண்டு நாட்களாக சந்தை சரிவில் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாரத்தில் மொத்தமாக சென்செக்ஸ் 4.5 சதவீதமும், நிப்டி 5.5 சதவீதமும் குறைந்து இருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 502.07 புள்ளிகள் ( 3.40 சதவீதம் ) குறைந்து 14,274.94 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ், அதிக பட்சமாக 14,484.39 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. குறைந்ததாக 14,210.63 புள்ளிகள் வரை சென்றது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 121.70 புள்ளிகள் ( 2.74 சதவீதம் ) குறைந்து 4,311.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிப்டி அதிக பட்சமாக 4,440.85 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 4,297.15 புள்ளிகள் வரையிலும் சென்றது. இன்றைக்கு அதிகம் நஷ்டமடைந்த நிறுவனங்கள் ஐ சி ஐ சி ஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ரிலையன்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேஷன் மற்றும் ஓ என் ஜி சி. இருந்தாலும் ரான்பாக்ஸி லேப்ஸ், ஏ சி சி, ஹெச் யு எல், கிராஸிம் பங்குகள் உயர்ந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று அதிகம் பாதித்தது பேங்கிங் துறைதான். 5.75 சதவீதம் குறைந்திருந்தது. ஐ சி ஐ சி ஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கனரா பேங்க், கர்நாடகா பேங்க், யெஸ் பேங்க், கோடக் மஹேந்திரா பங்குகள் 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை குறைந்திருந்தது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment