Tuesday, July 22, 2008

இனிமேல் கமிஷன் கிடையாது : போராட்டம் நடத்த டிராவல் ஏஜென்டுகள் முடிவு


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட்களை எடுத்து கொடுக்க இந்தியா முழுவதும் ஏராளமான டிராவல் ஏஜென்டுகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆரம்பத்தில் 9 சதவீதம் கமிஷன் கொடுக்கப்பட்டு வந்தது. அது சமீபத்தில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்போது அதற்கும் வேட்டு வருகிறது. ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் , ஏர் - இந்தியா ஆகிய விமான கம்பெனிகள் டிராவல் ஏஜென்டுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து உங்களுக்கு கமிஷன் ஏதும் கொடுக்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். வெளிநாட்டு விமான கம்பெனிகளான லூப்தான்சா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆகியவையும் இதே போன்று கமிஷன் தரமாட்டோம் என்று கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதன் மூலம் அந்த விமான கம்பெனிகளுக்கு ரூ.1,000 கோடி வரை மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. விமானங்களை இயக்குவதற்கு அதிகம் செலவாவதாலும், வளர்ச்சி குறைவாக இருப்பதாலும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாகி விட்டதாக விமான கம்பெனிகள் தெரிவிக்கின்றன. ஆனால் விமான கம்பெனிகளின் இந்த முடிவை எதிர்த்து இந்தியாவில் இருக்கும் டிராவல் ஏஜென்டுகள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து, இந்தியாவில் இருக்கும் சுமார் 4,500 டிராவல் ஏஜென்டுகள் அங்கத்தினர்களாக இருக்கும் மூன்று பெரிய அசொசியேஷன்கள் மும்பையில் கூடி விவாதித்தனர். அதில் ஜூலை 24 ம் தேதி டிராவல் எஜென்ட் அசோசியேஷன் களுக்கும் விமான கம்பெனிகளுக்கும் டில்லியில் நடக்க இருக்கும் கூட்டத்தில் ஒரு சாதகமான முடிவு ஏற்படா விட்டால் இனிமேல் டிக்கெட்டுகளை விற்கப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயண டிக்கெட்டுகளில் 85 சதவீதம் டிராவல் ஏஜென்டுகள் மூலமாகத்தான் விற்கப்படுகிறது. டிராவல் ஏஜென்டுகள் விமான டிக்கெட்டுகளை விற்பதை நிறுத்தி விட்டால் அது விமான பயணிகளை குறிப்பாக வெளிநாடு செல்லும் பயணிகளை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. டிக்கெட் புக் செய்வது கேன்சல் செய்வது போன்றவைகளில் சிரமங்கள் ஏற்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த டிராவல் ஏஜென்டுகள், ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இப்போதும் 9 சதவீத கமிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஆகியவைகள் லாபத்தில் இயங்கும்போதும் கூட ஏன் எங்களுக்கு கமிஷன் கொடுக்க மாட்டோம் என்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள விமான கம்பெனிகளும் சமீபத்தில் ஏஜென்டுகளுக்கு கமிஷன் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டு பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டது.




நன்றி : தினமலர்


No comments: