Saturday, July 26, 2008

ஸ்பெயினுக்கு நேரிடையாக 100 டாலர் விலையில் கச்சா எண்ணெய் விற்கிறது வெனிசுலா


ஓபக் அமைப்பில் ஒரு உறுப்பு நாடாக இருக்கும் வெனிசுலா, நேரடியாக ஸ்பெயினுக்கு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் சப்ளை செய்ய ஒத்துக்கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை பேரல் ஒன்றுக்கு 100 டாலர் என்ற விலையில் கொடுக்க வெனிசுலா ஒத்துக்கொண்டிருக்கிறது.இதற்கு பதிலாக ஸ்பெயினில் இருந்து மருந்து உபகரணங்கள் மற்றும் பொருட்களை வெனிசுலா வாங்கிக்கொள்ளும் என்று வெனிசுலா அதிபர் ஹூகோ ஷிவாஸ் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் 400 மில்லியன் டாலர்கள் மேட்ரிட் நகரில் இருக்கும் ஒரு வங்கியில் முதலீடு செய்யப்படும். பின்னர் அது ஸபெயினில் இருந்து வெனிசுலா இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுக்கப்பட்டுவிடும் என்று ஸ்பெயின் டெலிவிஷன் டி வி இ., க்கு அளித்த பேட்டியில் ஷிவாஸ் தெரிவித்தார். இதுவரை சந்தை மூலமாக விலை நிர்ணயிக்கப்பட்டு, சப்ளை செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய், இப்போது முதல் முறையாக வெனிசுலாவால் நேரடியாக விற்கப்படுவது ஒரு புது ஆரம்பம் என்று சொல்லப்படுகிறது. எங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்து உபகரணங்கள், தொழில்நுட்பம், காற்றாலைக்கான தொழில்நுட்பம் போன்றவைகளை இதன் மூலம் எளிதாக நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் ஷிவாஸ். மேட்ரிட்டில் ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிகஸை நேற்று வெனிசுலா அதிபர் ஷிவாஸ் சந்தித்து பேசியபோது இருவருக்குமிடையே இது சம்பந்தமான ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்போது பேரல் ஒன்றுக்கு 125 டாலர் வரை விலையில் இருக்கும் கச்சா எண்ணெய், ஸ்பெயினுக்கு 100 டாலருக்கு கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே வெனிசுலா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வருகிறது.

நன்றி : தினமலர்


No comments: