Monday, November 30, 2009

துபையில் தேள் கொட்டினால்...

கடந்த ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் இப்போதுதான் சற்று குறைந்து, உலக நாடுகள் தட்டுத் தடுமாறி மீண்டும் தங்களைச் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், துபை அரசாங்கத்தின் பல்வேறு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களையும், வியாபாரம் மற்றும் கட்டுமானத் தொழில்களையும் நிர்வகிக்கும் "துபை வொர்ல்ட்' அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம்வரை தான் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுவது போலவும், தனது நிதி நிலைமை சீரும் சிறப்புமாக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்த "துபை வொர்ல்ட்' கடனில் மூழ்கித் தத்தளிக்கும் உண்மை திடுக்கிட வைத்திருக்கிறது.

அடுத்த ஆறு மாத காலத்துக்குத் தான் திருப்பிச் செலுத்த வேண்டிய தவணைகள், வட்டிகள் என்று அனைத்தையும் முடக்கி இருப்பதாக "துபை வொர்ல்ட்' அறிவித்திருக்கிறது. இந்த அரசு நிறுவனத்தின் மொத்தக் கடன் சுமார் 520 கோடி டாலர் என்று கூறப்படுகிறது. இந்த 520 கோடி டாலர் உள்பட துபை அரசு செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் 800 கோடி டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழில், சிறப்புப் பொருளாதார மண்டலம், கப்பல் மற்றும் துறைமுகக் கட்டுமானத் துறை என்று எதையுமே விட்டு வைக்காமல் உலகம் முழுவதும் முதலீடு செய்து வந்தது "துபை வொர்ல்ட்' நிறுவனம். கடந்த வாரம் வரை 200 கோடி டாலர்கள் கையிருப்பு இருப்பதாகவும், அபுதாபி 100 கோடி டாலர்கள் தர இருப்பதாகவும் கூறிவந்தது இந்த நிறுவனம்.

உலக நிதி நிறுவனங்களின் பயமெல்லாம் "துபை வொர்ல்ட்' போல ஏனைய துபை நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்குமோ என்பதுதான். இந்தப் பிரச்னைக்கு எல்லாம் மூல காரணம், துபை என்கிற குட்டி நாட்டின் அதிபரான ஷேக் முகம்மது பின் ராஷித்-அல்-மக்கோடம்தான். வானளாவிய கட்டடங்கள், வியாபார நிறுவனங்கள், மால்கள் என்று துரித கதியில் துபையை சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் போட்டியாக உருவாக்கிக் காட்டுவது என்று திட்டமிட்டதுடன் நில்லாமல், தனது வெற்றியைப் பற்றிய அதீதக் கற்பனையில் உலகளாவிய முதலீடுகளிலும் கால் வைக்க முற்பட்டார் அவர்.

துபையின் திடீர் நிதிநிலைச் சரிவுக்குக் காரணம் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் எனலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பீப்பாய் 140 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது பாதிக்குப் பாதியாகக் குறைந்து 75 முதல் 78 டாலர்களாக இருக்கிறது. இப்போது துபையில் பாதி கட்டப்பட்ட நிலையில் நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், மால்களும், விற்பனை வளாகங்களும் ஏராளம். துபையில் முதலீடு செய்து வந்தவர்கள் உலகப் பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு முதலீடு என்பதை நிறுத்தி விட்டது இன்னொரு காரணம்.

"துபை வொர்ல்ட்' மற்றும் துபை அரசின் நிதி நெருக்கடியால் இந்தியாவுக்கு நேரிட இருக்கும் உடனடிப் பிரச்னைகள் மூன்று. வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் அனுப்பப்படும் சுமார் 250 கோடி டாலரில் ஏறத்தாழ பாதிக்குப் பாதி வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்படுபவைதான். அந்த வரவு கணிசமாகக் குறையக் கூடும். இரண்டாவதாக, துபையுடன் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும், துபையில் முதலீடு செய்திருக்கும் இந்திய நிறுவனங்களின் முதலீடு அல்லது வர வேண்டிய பணம் தடைபடுவதால், பல நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். இந்தியாவில் துபை செய்திருக்கும் முதலீடுகள் திரும்பப் பெறப்படும் அபாயம் மூன்றாவது.

"துபை வொர்ல்ட்' மற்றும் அரசின் பொருளாதாரப் பின்னடைவு இந்திய வங்கிகளையும் பாதிக்கக்கூடும். இந்திய வங்கிகள் சுமார் ரூ. 6,500 கோடி வரை வளைகுடா நாடுகளில், குறிப்பாக, ஐக்கிய அரபுக் கூட்டாட்சியில் பற்று வரவு நடத்தி வருகிறது.

சிக்கனம் சார்ந்த பொருளாதாரம் கைவிடப்பட்டு செலவழிப்பதும், கடன் வாங்குவது ஊக்குவிக்கப்படுவதும், வரைமுறையற்ற வளர்ச்சி வரவேற்கப்படுவதும், உலகப் பொருளாதாரப் பின்னடைவு அல்லது துபையில் ஏற்பட்டிருப்பதுபோலப் பொருளாதாரத் தகர்வு ஏற்பட்டால் நம்மை நிலைகுலைய வைத்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

முந்தைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டியும், தற்போதைய கவர்னர் சுப்பாராவும் மிகுந்த எச்சரிக்கையுடனும், பலத்த கட்டுப்பாடுகளுடனும் இந்தியாவில் நிதி நிர்வாகத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஓரளவுக்கு நம்மைக் காப்பாற்றி வருகிறது. துபையைத் தாக்கியிருக்கும் நிதி நெருக்கடி சுனாமி, நம்மை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமா என்று கேட்பவர்கள், உலகமயத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள்!
நன்றி : தினமணி

ஹைபிரிட் நானோ காரை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டம்

ஹைபிரிட் நானோ காரை அறிமுகப் படுத்த டாடா குரூப் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டாடா மோட்டார் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த “நானோ” என்ற கார்களை தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த கார்கள் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வருகின்றன. மிக குறைந்த விலை என்பதால் இந்த கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், விற்கப் பட்ட நானோ கார்களில் சில தீப்பிடிப்பதாக தகவல்களும் வெளியாகியது.
இந்நிலையில், தென்கொரிய செய்தி நிறுவனத்திடம் போட்டியளித்துள்ள டாடா நிறுவன தலைமை அதிகாரி, விரைவில் உலகிலேயே குறைந்த விலை கொண்ட காரை அறிமுகப் படுத்த உள்ளதாகவும், இந்த கார் நானோ வகையை சேர்ந்ததாக இருக்கும் என்றும் இது நானோ காரை விட தொழில்நுட்பம் கொண்டதாக ஹைபிரிட் வெர்ஷனாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கார் எளிய விதத்தில் பயன்படுத்த கூடியதாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


துபாய் பொருளாதார நெருக்கடி: அதிகளவு பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கருத்து

துபாய் பொருளாதார நெருக்கடியால் அதிகளவு பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டதன் காரணமாக துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரெலியாக இந்திய பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இந்நிலையில், துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தகவல் தெரிவித்தனர் . இதன் காரணமாக இன்றைய பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் தொடங்கியது. நேற்று ஐக்கிய அரபு குடியரசின் ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை, நிதி சந்தை, வங்கிகள் ஆகியவற்றின் பணப்புழக்கம் பாதிக்காத வகையில் அந்நாட்டு நாணயமான தினாரை வங்கித் துறையில் புழக்கத்திற்கு விடுவதாக அறிவித்தது. இந்நிலையில் எடில்விஸ் இன்ஸ்டிசனல் ஈக்விட்டிஸ் என்ற முதலீடு நிறுவனத்தின் துணை தலைவர் விகாஸ் கிமானி இதுகுறித்து கூறும் போது, இந்திய பொருளாதாரத்திற்கு துபாயில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்பு குறைந்த அளவே இருக்கும். துபாய் நிறுவன கடன் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த கடனை திருப்பி செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். துபாய் வேர்ல்ட் நிறுவனத்தை பாதுகாக்க துபாய் அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு குடியரசு, நெருக்கடியில் உள்ள நிறுவனத்திற்கு உதவும் வகையில் உதவிக்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பு நிலவுவதாக மற்றொரு நிபுணர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


2வது காலாண்டுக்கான ஜி.டி.பி., 7.9 சதவீதமாக அதிகரிப்பு

இரண்டாவது காலாண்டு நிதியாண்டிற்கான நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி., ) 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தையிலும் ஏறுமுகம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே பருவத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக தான் இருந்தது. முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.2 ஆக இருந்தது. தற்போது யாரும் எதிர்பாராத நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி மற்றும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதத்தை எட்டியுள்ளது. சுரங்கத்துறை 9.5 சதவீத வளர்ச்சியும் , உற்பத்தித் துறை 9.2 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. முன்னதாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக தான் இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
நன்றி ; தினமலர்


Sunday, November 29, 2009

இந்தியப் பெருங்கடல் யாருக்காக?

இந்தியா புவியியல் அடிப்படையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பெரிய தீபகற்ப நாடாகும். இமயமலையை ஓர் எல்லையாகவும் மற்ற மூன்று பக்கங்களும் கடல்களே எல்லைகளாகவும் இருப்பது இயற்கையின் கொடை.

உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலும், பரப்பளவில் ஏழாவது இடத்திலும் இருக்கிறது. இதன் அழகிய கடற்கரை 6,100 கி.மீ. நீளமானது.

இந்த நீண்ட கடற்கரை எல்லையாக மட்டும் இல்லாமல் உணவுத் தேவையை நிறைவு செய்யும் மீன்வளம் நிறைந்தது. கடல்வாழ் உயிரினங்களும், கனிம வளங்களும், நிலத்தடி நீரும், கண்கொள்ளாக் காட்சிகளும் கொண்டவை. இந்தக் கடல்வளம் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.

உலகமயம் மற்றும் தனியார்மயம் என்கிற பெயரால் இந்தியாவின் கடல் எல்லைகளை அந்நிய நாட்டு வணிகக் கப்பல்களுக்குத் திறந்து விடுவதற்கே மத்திய அரசு துடிக்கிறது.

சொந்த நாட்டு மீனவ மக்களைத் துரத்தியடிக்கிறது. இதற்கு ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நிர்பந்தம் என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது.

இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல்களின் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில், வெளிநாட்டுக் கப்பல்களை மீன்பிடிக்க இந்திய அரசு அனுமதித்திருப்பது, சுதந்திரமான ஆட்சியுரிமைக்கே அறைகூவல் இல்லையா?

அயல்நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் தேசிய மீன் இறக்குமதிக் கொள்கையும் இந்திய மீன்பிடித் தொழிலை முடக்கிப்போடும் முக்கிய நடவடிக்கைகளாகும்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1980-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி மாநில முதலமைச்சர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதன்படி கடற்கரையில் 500 மீட்டர் வரை மீனவர் பயன்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது 21 முறை திருத்தம் செய்யப்பட்டு 1991-ல் கடற்கரை மேலாண்மைச் சட்டமானது.

இது மேலும் திருத்தப்பட்டு இந்திய நாட்டுக்குள் ஓர் அந்நியப் பிரதேசமாக உருவெடுத்துவரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இந்திய நாட்டுக் கடற்கரையை ஒழுங்குபடுத்தி உரியவர்களுக்கு அளித்திடவே 2009 சட்டம் வருகிறது. இதன் முன்வடிவு இதுவரை மீனவர்களுக்குத் தரப்படவில்லை.

ஈழத் தமிழரைப் போலவே இந்தியத் தமிழ் மீனவர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. அவர்களைப் பற்றிய செய்திகள் இல்லாமல் பொழுது விடிவதில்லை.

இலங்கை கடற்படைத் தாக்குதல், சிறைப்பிடிப்பு, மீனவர்களைக் காணோம், மீனவர்கள் காயம், மீனவர்கள் சாவு, மீனவர்களின் படகுகளும் மீன்களும் வலைகளும் பறிமுதல் என இது விரியும்.

மீனவர்களின் வாழ்க்கையே அபாயகரமானதுதான். தொன்றுதொட்டு அவர்கள் செய்துவரும் தொழில் எதிர்பாராத முடிவுகளைக் கொண்டதுதான். அவர்கள் அந்த அலைகடலைக் கண்டு அச்சம் கொண்டதில்லை. அந்தக் கடல்தாய் காப்பாற்றுவாள் என்கிற அசையாத நம்பிக்கை அவர்களுக்குண்டு.

ஆனால், அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் மேல் பழியைப் போட்டு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வரும் போக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஆதரவு தரும் துணிவுதான்.

இப்போது சீன - சிங்கள கூட்டுக் கடற்படைகள் செய்யும் ஆதிக்கம் அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதுபற்றி தமிழக அரசு பொறுமையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்போது மீன்பிடிக்கும் தொழிலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

கடலில் 12 கடல் மைல் தாண்டி மீன் பிடித்தால் ரூ. 9 லட்சம் வரை அபராதம்; 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்; அத்துடன் உரிமத்தை ரத்து செய்யலாம்; சோதனை செய்யும் அதிகாரிகளைத் தடுத்தால் 10 லட்சம் அபராதம்; ஓராண்டுச் சிறை; கைதாகும் மீனவர்கள் ஜாமீனில் வெளிவர வேண்டுமானால் படகு உள்ளிட்ட உபகரணத்தின் மதிப்பில் பாதியை ஜாமீன் தொகையாகச் செலுத்த வேண்டும்.

ஆனால் வெளிநாட்டுக் கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் நமது எல்லைக்குள் வருவதற்குத் தடையேதும் இல்லை; அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது~இவ்வாறு மத்திய அரசின் புதிய சட்டம் கூறுகிறது.

கடல் மீன்தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மைச் சட்டம் 2009 என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இந்தப் புதிய மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல மீனவ மக்களிடையே வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மசோதா உள்நாட்டு மக்களுக்கு வழியை அடைத்துவிட்டு, அயல்நாட்டு வணிகர்களுக்கு வசதி செய்து கொடுக்கிறது.

வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில்கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்கவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது எனத் தெரிகிறது.

இறையாண்மையைப் பற்றி வாய்கிழியப் பேசும் இந்திய அரசு, இப்படியொரு சட்டம் கொண்டுவர வேண்டிய தேவை என்ன? கச்சத்தீவை இலங்கைக்கு எடுத்துக் கொடுத்ததுபோல் இப்போது இந்தியப் பெருங்கடலும் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொடுக்கப்படுகிறதா?

இந்திய முதலாளிகளிடம் பணத்தையும், ஏழை மக்களிடம் வாக்குகளையும் வாங்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்த இவர்கள், யாருக்காகச் சேவை செய்யப் போகிறார்கள்? உள்நாட்டு மக்களுக்கா? உலக வர்த்தகத் திமிங்கிலங்களுக்கா? இதற்கான விடையை இந்தப் புதிய மசோதா கூறாமல் கூறுகிறது.

காலமெல்லாம் கடலோடு போராடிக் கொண்டிருக்கும் மீனவ மக்கள் இனிமேல் இந்திய அரசோடும், இலங்கை அரசோடும் போராட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசு இன்னமும் ஒரு பார்வையாளராகவே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியா இயற்கை வளங்கள் நிறைந்தது. இந்தியக் கடற்கரைகள் உலகின் மிகச்சிறந்த சூழலியல் வளங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன.

இதில் தமிழகக் கடற்கரை குமரியிலிருந்து சென்னை வரை 1026 கி.மீ. நீளமானது. இங்கு 12 ஆயிரம் விசைப்படகு மீனவர்களும், ஒன்றேகால் லட்சம் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நம்பி 10 லட்சம் பேர்.

தலைமுறை தலைமுறையாக இந்தக் கடற்கரைகளையே தங்களது தாய்மடிகளாகக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் கடன்பட்டுக் கடன்பட்டு கண்ணீரிலேயே மூழ்கிக் கொண்டிருப்பவர்கள்; துன்பப்பட்டுத் துயரப்பட்டு மனமும், உடம்பும் மரத்துப் போனவர்கள்.

இனிமேல் இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்கள். செத்த பாம்பை எத்தனை முறை அடிப்பது?

அவர்கள் இந்தக் கடல் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தவிர கண்ட சுகமென்ன? அந்த மக்களுக்குக் கல்வியில்லை; வேலைவாய்ப்பு இல்லை; இருப்பதற்கு இடமில்லை; உடுப்பதற்குத் துணியில்லை; கவலைகளைத் தவிர சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நேரமே இல்லை.

கடல் தோன்றியபோதே தோன்றிய மீனவர்கள் சமுதாயம் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இன்னும் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

நாடு விடுதலை பெற்று இத்தனை காலமாகியும் இந்தத் தேர் நகரவே இல்லை. இழுப்பதற்கான முயற்சிகளில் இதன் கயிறுகள் இற்று இற்று அறுந்து விழுகின்றன.

மண்டல் குழு பரிந்துரையின் மையக் கருத்தாக, ""ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான தேவைகள் அரசியல் சட்டத்துக்கு உள்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய இயலும்'' எனக் கூறப்படுகிறது. ஆனால் இதன் பரிந்துரைகள் கவனிக்கப்படவில்லை.

மண்டல் குழு மற்றும் மண்டைக்காடு கலவரத்தை விசாரித்த வேணுகோபால் குழு பரிந்துரைத்தபடி மீனவர் சமுதாயத்துக்குத் தனித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுபற்றி மத்திய - மாநில அரசுகள் ஏதும் செய்யவில்லை; மௌனமாகவே இருக்கின்றன. மீனவர்களின் அரசியல் பங்கேற்புக்கான கோரிக்கை இது.

அரசியல் பிரவேசம் அவர்களுக்கு ஒரு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்று நம்புகின்றனர்.

இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் ஏறுகிறவர்களுக்கு ஏணியாகவே இருக்க முடியும்? நாங்களும் ஏறிப் பார்க்க வேண்டாமா? என்று கேட்கின்றனர்.

""2020-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல, இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குங்கூட அல்ல, ஒரு பணி இலக்கு...'' என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

அந்த வளர்ந்த இந்தியா இந்நாட்டு குடிமக்களுக்கான இந்தியாவாக இருக்க வேண்டாமா? புதிய கடற்கரை மேலாண்மைச் சட்டம் இந்தியப் பெருங்கடல் யாருக்காக என்ற பெரிய கேள்வியை எழுப்புகிறது.
கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி

துபாயில் கடலுக்கடியில் நகரமாம்: இந்திய பங்குச்சந்தைக்கோ துயரம்

கடந்த இரண்டு வாரங்களாகவே எச்சரித்து தான் வந்திருந்தோம். சந்தை மிகவும் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆதலால், லாபம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்; சந்தையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் திடீரென காணாமல் போய்விடும் என்று வியாழனும், வெள்ளியும் சந்தையை மிகவும் குறைத்துச் சென்றது. காரணம் துபாய்; பலரின் கனவுப் பிரதேசம்.

துபாயில் என்ன நடந்தது?: துபாய் அரசிற்கு சொந்தமான, 'துபாய் வேர்ல்ட்' என்று ஒரு சிட்டி கடலுக்குள் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இதற்கான செலவுகள் பல்லாயிரம் கோடி ரூபாய். அதற் காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த (அதாவது 80 பில்லியன் டாலர்கள், ஒரு பில்லியன் டாலர் என்பது 4,600 கோடி ரூபாய்). உள்ள தவணையை ஆறு மாதத் திற்கு தள்ளி வைக்கும்படி கடன் கொடுத்தவர்களை கேட்டுக் கொண்டதால், உலகம் பயப்பட ஆரம்பித்தது. அதாவது, அரசு வாங்கிய கடனைக் கொடுக்க முடியாத சூழ்நிலையா என்று? நிலைமை என்னவென்று முழுவதுமாக புரிந்து கொள்வதற்குள், சந்தைகளின் இறக்கம், கொளுத்தி போட்ட சரவெடி போல உலகின் பல இடங்களிலும் தொடர ஆரம்பித்தது. இது நடந்தது வியாழனன்று. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளின் சந்தையை பாதிக்கவில்லை. மற்ற ஆசிய சந்தைகளைப் பாதித்தாலும் பாதிப்பு, இந்தியா அளவு பெரிதாக பாதிக்கவில்லை.


ஏன் இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு?: இந்தியாவில் இருந்து பல லட்சக்கணக்காண நபர்கள் அங்கு வேலை செய்து வருகின்றனர். மேலும், பல இந்திய கம்பெனிகள் அங்கு தனது நிறுவனங்களை வைத்து வியாபாரங்கள் செய்து வருகின்றன. துபாய்க்கு பாதிப்பு என்றால் அது நிச்சயம் இந்தியாவிற்கும் ஓரளவு பாதிப்பு தான். ஆதலால், இந்திய சந்தைகள் சடசடவென 500 புள்ளிகளுக்கும் மேலாக விழ ஆரம்பித்தன.


விழுந்த சந்தை எப்படி திரும்பி சிறிது மேலே வந்தது?: ஐநூறுக்கும் அதிகமான புள்ளிகள் கீழே விழுந்து பின், சந்தை எப்படி மேலே வந்தது என்றால், அது இந்தியாவிற்கு பிறகு துவங் கிய ஐரோப்பிய சந்தைகளில் சிறிது ரெகவரி இருந்ததால், அது இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது. ஆதலால், சந்தை இழந்த புள்ளிகளில் 300 வரை திரும்பப் பெற்றது.


என்ன ஆகும்?: இன்னும் சரியான நிலவரம் தெரியவில்லை. அரபு நாடுகள் ஒருவருக்கொருவர் உதவி கொள் வதில் தயக்கம் காட்டமாட் டார்கள். மேலும் துபாய், உலகின் பல நாடுகளின் கம்பெனிகளுக் கும் ஒரு பொதுவான இடமாக இருக்கிறது. ஆகையால், பெரிய பாதிப்புகளுக்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும், முழு நிலவரம் தெரியும் வரை முதலீட் டாளர்களுக்கு ஒரு கிலி இருக்கத் தான் செய்யும். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 222 புள்ளிகள் குறைந்து 16,632 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 82 புள்ளிகள் குறைந்து 4,923 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வியாழனும், வெள்ளியும் மட்டும் 566 புள்ளிகள் குறைந்துள்ளன.


வலுவடைந்த அமெரிக்க டாலர்: இந்த சூழ்நிலையில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது. அதாவது ரூபாய்க்கு எதிராக 45 பைசா வலுவடைந்தது. டாலர் வலுவடைந்ததால் சுத்த தங்கம் 10 கிராமிற்கு 477 ரூபாய் குறைந்தது. உணவுப்பொருட்களின் பணவீக்கம்: உணவுப்பொருட்களின் பணவீக்கம் தொடர்ந்து ஏறுவது ஒரு கவலைக்குரிய விஷயம் தான். என்ன செய்வது என்று அரசு முழிக்க வேண்டி வந்து விடும்.


உருகிய மெட்டல் பங்குகள்: கமாடிட்டி டிரேடிங்கில் துபாய் உலகளவில் ஒரு முக்கிய மார்க் கெட்டாக இருக்கிறது. துபாயில் பிரச்னை என்றவுடன் மெட்டல் பங்குகள் தான் அதிகம் உருகியது என்று கூறலாம்.


வரும் வாரம் எப்படி இருக்கும்?: உலகளவில் சந்தைகளில் பெரிய பிரச்னைகள் இல்லை. இந்திய சந்தைகளுக்கு தான் பாதிப்பு அதிகம். இப்போதுள்ள நிலையில், சந்தை ஏறத் துவங்கினால், லாபத்திற்கு குறிவைப்பதும், இறங்கும் நிலை வரும் போது, பொறுமை காத்து வாங்குவதற்கு பணத்தை தயாராக வைப்பதுதான் சிறந்தது. துறைகள் என்று பார்த்தால் பொங்கல் வரை கட்டுமானம், ரியல் எஸ்டேட் பக்கம் போவதை தவிர்க்கலாம். போனவாரமே நாம் சொல்லியிருந் தோம், 'நிப்டி 5ஆயிரத்து 50 மேலே போகும்போது வாங்குவதை குறைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதே சிறந்தது' என்று கோடிட்டு இருந்தோம். வேடிக்கை பார்த்தவர்கள், வெள்ளிக் கிழமை இறங்கி ஏறிய சந்தையை பார்த்து நல்ல பாடம் கற்றுஇருப்பவர். சந்தை வெகுவாக இறங்கும் போது, சிறுமுதலீட்டாளர்கள் முதலீடு செய்ய பணம் இல்லாமல் தத்தளிக்கின்றனர். இதிலிருந்து, விடுபட்டாலே வெற்றியை பெற்றுவிடலாம். சந்தை 17,000 புள்ளிகளில் நிலை பெற்று அதற்கு மேலேயும் சந்தை சென்றது, யாரும் பெரிதாக எதிர் பார்க்காதது. அதாவது, டிசம்பர் நெருங்க நெருங்க சந்தை சிறிது கீழே தான் செல்லும் என்று எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால், சந்தை 17,000 புள்ளிகளையும் தாண்டி மேலே சென்றிருந்தது. ஆதலால், ஏற்பட்டுள்ளது லாபத்தில் நஷ்டம் தான். அமெரிக்க சந்தைகளில் பாதிப்பு தெரிந் தால், அது உலகிலுள்ள சந்தைகளையும் பாதிக்கும். உலக நடப்புகள், அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளை வழி நடத்திச் செல்லும். நிப்டி 4 ஆயிரத்து 860க்கு மேல் சப்போர்ட் எடுத்துள்ளதுபோல் தெரிகிறது. இது தொடரவேண்டும். இது நிஜமானால்5 ஆயிரத்து 250க்கு நிப்டி தொடலாம்!
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்


Saturday, November 28, 2009

நம்பிக்கைத் துரோகம்...!

கடந்த மாதம் காவல்துறை சென்னையில் கடத்தல்காரர்களிடமிருந்து ஒரு மரகத லிங்கத்தைக் கைப்பற்றிய பிறகுதான், இதுபோல நமது ஆலயங்களிலிருந்து வேறு என்னவெல்லாம் களவு போயிருக்கிறதோ என்கிற கேள்வி அதிர்ச்சி அலையாகக் கிளம்பி இருக்கிறது. திருக்காரவாசல் கோயிலிலிருந்து களவாடப்பட்ட மரகத லிங்கம் என்னவாயிற்று என்று இன்றுவரை தகவல் இல்லை.

மரகத லிங்கங்கள் மட்டுமல்ல, பல அரசர்களும், தன வணிகர்களும் இந்தக் கோயில்களுக்கு அளித்திருக்கும் நகைகள் கணக்கிலடங்காதது. தங்களது நம்பிக்கையாலும், பக்தியாலும் இந்தக் கோயில்களின் பராமரிப்புக்காக காணிக்கையாக வழங்கப்பட்ட நிலபுலங்களின் அளவு கொஞ்சநஞ்சமல்ல.

நாளைய தலைமுறையினர், பக்தி அடிப்படையிலான நம்பிக்கையை மதிக்காமல், இந்த ஆலயங்களையும் பராமரிப்பின்றி பாழ்படுத்துவதுடன், பக்தர்கள் காணிக்கையாகத் தந்த நகைகளையும், நிலபுலங்களையும் அபகரித்துவிடக் கூடாது என்பதால்தானோ என்னவோ "சிவன் சொத்து குல நாசம்' என்று எச்சரிக்கை செய்தனர் நமது முன்னோர்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே, பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இல்லாத அளவுக்கு, நம்மவர்கள் ஆட்சியில் கோயில் சொத்துகள் கபளீகரம் செய்யப்பட்டது என்பதுதான் உண்மை.

ஒரு நாகரிகத்தின் அடிச்சுவடாக, அடிப்படை ஆதாரமாகத் திகழ்பவை இலக்கியமும், கட்டடக் கலையும்தான். காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்பது, நிற்கப் போவது இறை உணர்வு மட்டுமே என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்திருந்த காரணத்தினால்தான் இலக்கியமும், கட்டடக் கலையும் தமிழகத்தில் சமயம் சார்ந்ததாகவே இருக்கிறது. சமய இலக்கியங்கள் தோன்றாமல் போயிருந்தால், தமிழ் என்கிற மொழியே களப்பிரர்கள் காலத்துடன் அழிந்திருக்கக் கூடும்.

அதேபோல, தமிழனின் பொறியியல் வல்லமை, சிற்பக் கலை மேன்மை மற்றும் கட்டட அமைப்புத் திறமை போன்றவை நிலைத்து நின்றதற்குக் காரணம் அவை சமயம் சார்ந்ததாக, ஆலயங்களாக எழுப்பப்பட்டதால்தான். சேர, சோழ, பாண்டியர் காலத்து மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், அரண்மனைகளும் மண்ணோடு மண்ணாகிவிட்ட நிலையில், பண்டைத் தமிழனின் நிலைமையைப் பறைசாற்றி நிற்பது வானுயர்ந்த கோபுரங்களுடனான நமது ஆலயங்கள் மட்டும்தான்.

இறை மறுப்பு என்கிற பெயரில் சமய இலக்கியங்களையும், ஆலயங்களையும் புறக்கணிக்க முற்பட்டதன் விளைவுதான் இப்போது தமிழ் பேசக்கூடத் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் நமது கல்விச்சாலைகள் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே பொறுக்கி எடுக்கும் விதத்தில் தமிழ் சொற்களைப் பயன்படுத்த சில இறைமறுப்புக் கொள்கையாளர்களின் தொலைக்காட்சி ஊடகங்கள் தலைப்பட்டிருக்கின்றன.

கோயில் நிலங்களை அபகரித்து வைத்திருப்பவர்களுக்கும், கோயிலிலிருந்து மரகத லிங்கத்தைக் களவாடிச் செல்பவருக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகக் கருத முடியாது. இறை நம்பிக்கையின் அடிப்படையில், ஓர் ஆலயத்தை நல்ல முறையில் பாதுகாக்க ஏதோ ஒரு பக்தரோ, அரசரோ, தனவணிகரோ காணிக்கையாகத் தந்த நிலத்தை, சம்பந்தமே இல்லாதவர்கள் அனுபவப் பாத்தியதை கொள்வது எந்தவிதத்தில் நியாயம்? திருட்டுப்போன நகைகளையும், சிலைகளையும் மீட்டுத் தரும் கடமை அரசுக்கு உள்ளது போலவே, கோயில் சொத்துகளையும் மீட்டெடுத்து, அந்தந்தக் கோயிலின் பராமரிப்பை மேம்படுத்தும் பொறுப்பும் அரசுக்கு இருப்பதுதானே நியாயம்?

இந்து அறநிலையத் துறையின் நேரடி மேற்பார்வையில் மட்டும் 38,465 கோயில்கள் உள்ளன. தனியார் மடங்களின் மேற்பார்வையில் மேலும் சில ஆயிரம் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களைப் பற்றிய முறையான முழுமையான தகவல்கள் அறநிலையத் துறையிடம் இருக்கிறதா என்றால் சந்தேகமே.

மேலைநாடுகளில் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் சரித்திரமுடைய மாதா கோயில்களுக்குக்கூட அவைகளின் கட்டடக் கலை பற்றியும், சிறப்புகள் பற்றியும் பளபளப்பான தகவல் குறிப்புகளும், புகைப்படங்களுடன்கூடிய புத்தகங்களும் வெளியிடுகிறார்கள். ஆனால், பல நூற்றாண்டுச் சரித்திரமுடைய நமது ஆலயங்களைப் பற்றிக் கேட்டால் தல புராணம் தவிர, கோயிலின் சிற்பக்கலை, கட்டடக்கலை, சிறப்பம்சங்கள், எந்த ஆண்டு எந்தெந்த அரசர்களால் என்னென்ன கட்டப்பட்டது என்கிற சரித்திரம் எதுவுமே கிடையாது, தரப்படுவதில்லை.

தெருவுக்குத் தெரு புதுக் கோயில்கள் கட்டுவது முதலில் தடை செய்யப்பட வேண்டும். கோயில் சொத்துகள் அனைத்தும் சட்டம் போடப்பட்டு அந்தந்தக் கோயிலின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கோயிலின் நகைகள், சிலைகள் என்று ஒன்றுவிடாமல் முறையாகக் கணக்கெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதில், எவையெல்லாம் இப்போது போலிகள் என்பது கண்டறியப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்.

கோயில்கள் மதச் சின்னங்கள் மட்டுமல்ல, தமிழரின் பண்பாட்டுப் பெட்டகங்கள். தமிழ் நாகரிகத்தின் சரித்திரச் சான்றுகள். கலாசாரக் கருவூலங்கள். நமது கோயில்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டும்தான் தமிழையும், தமிழ் நாகரிகத்தையும், தமிழ்ச் சாதியையும் நாம் கட்டிக் காக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது!
நன்றி : தினமணி

ஐடி துறையில் 2.5 லட்சம் வேலை வாய்ப்பு :இன்போசிஸ்

ஐடி துறையில் அடுத்த ஆண்டுக்குள் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஐடி துறையின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போசிஸ் தெரிவி்த்துள்ளது. மேலும் 20,000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் மோகன்தாஸ் பை கூறுகையில், ஐடி துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் இது குறைந்து வந்தது. இப்போது மீண்டும் உயர துவங்கி உள்ளது. அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம் என அவர் தெரிவித்துள்ளார்
நன்றி : தினமலர்


ஆச்சரியம்...!ஆனால் உண்மை : ரூ.1 மாத சம்பளம் பெறும் மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ஒருவர் மாத சம்பளமாக ரூ.1 பெற்று வருகிறார். வேறு எங்கும் அல்ல; நம் இந்தியாவில் தான். அவர் இந்தியாவின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணைமைச்சர் பிரபுல் படேல் தான். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான ஊதிய விவரங்கள் குறித்து தகவல் தருமாறு பொள்ளாச்சியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு நாடாளுமன்ற செயலகம் உள்பட பல்வேறு துறைகள் தனித்தனியாக பதில் அளித்துள்ளன. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் பொது தகவல் அதிகாரி கௌரிசங்கர் அளித்துள்ள பதிலில், இணையமைச்சர் பிரபுல் படேல் தன்னுடைய மாத ஊதியமாக ரூ.1 மட்டுமே பெறுவதாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டதால் அவருக்கான மாத ஊதியம் ஒரு ரூபாயாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ திட்டத்தின் கீழ் அவருக்கான தொகை ரூ.500 ஐயும் சேர்த்து பிரபுல் படேலின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.501 மட்டுமே அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Friday, November 27, 2009

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது: ஆனந்த் சர்மா

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டுள்ளது. இது நேற்று பங்குச் சந்தை, கடன் சந்தை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இன்று துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. துபாய் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, இந்திய பங்குச்சந்தையில் எதிரெலித்து கடும் சரிவினை கண்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, துபாய் பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, ரியல் எஸ்டேட் தொழிலுகோ எந்த வித பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார். மேலும் , இந்திய பொருளாதாரம் பரந்த அளவிலானது. துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இங்கும் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை நன்கு செயல்பட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


லிபரான் அறிக்கை: அத்வானிக்கு புது வாழ்வு?

பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சிப் பூசலும், ராஜ்நாத் சிங்குக்குப் பிறகு புதிய தலைவர் யார் என்கிற சர்ச்சையும் ஓய்ந்துள்ள நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கை முன்கூட்டியே வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இக் கமிஷன் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி கடந்த ஜூன் 30-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில் நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வெளியானது. பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ஏ.பி.வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 பேர் மீது கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாஜகவின் புதிய தலைவர் நிதின் கட்காரி என்று முடிவு செய்யப்பட்டு, அவர் இந்த ஆண்டு கடைசியில் பதவியேற்க உள்ளார். இதேபோல மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைவராக அருண் ஜேட்லி தொடர்ந்து நீடிப்பார் என்பதும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எல்.கே.அத்வானி ராஜிநாமா செய்த பிறகு, அந்தப் பதவியை சுஷ்மா சுவராஜ் வகிக்க இருக்கிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.

கட்சிக்குப் புதிய தலைவரும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அத்வானி தனது நண்பர்களிடம் கூறிவருகிறார். புதிய தலைமை செயல்படும்போது ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் அதற்குத் தம்மை யாரும் பொறுப்பாக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு முக்கிய காரணம்.

முரளி மனோகர் ஜோஷிதான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவதின் விருப்பம். ஆனால், இதற்கு அத்வானி உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சங்கப்பரிவாரத் தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நீடித்துவந்த நிலையில், நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என்று தெரிகிறது.

லிபரான் அறிக்கை தாக்கல், அத்வானியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும் என்பது பலரது கருத்தாகும். அதாவது இந்த அறிக்கை மீதான நடவடிக்கையாக அத்வானி சிறைக்குச் சென்றால் அது கட்சிக்கு வலுசேர்க்கும் என்றும் பலர் கருதுகின்றனர். எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த அறிக்கையின்பேரில் அத்வானியின் மீது நடவடிக்கை எடுத்து அவருக்குப் புதுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் விரும்பாது. ஆனால், அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று கூறிவரும் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரீய லோகதளம் தலைவர் லாலு பிரசாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை வலியுறுத்தக்கூடும்.

மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. அதாவது கரும்புக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அறிவிக்கும். மாநில அரசு இதற்கு மேல் விலை நிர்ணயம் செய்தால் அதைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் ஏற்க வேண்டும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. இந்த அவசரச் சட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு, அதைத் திசைதிருப்பும் முயற்சியில் லிபரான் கமிஷன் அறிக்கையைக் கசிய விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபரான் கமிஷன் அறிக்கை இந்தக் கூட்டத்தொடரின் கடைசியில்தான் தாக்கல் செய்யப்பட இருந்தது.

கரும்பு கொள்முதல் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். மிகவும் முக்கியமான விஷயத்தில் சரத் பவார் முன்யோசனையுடன் செயல்படாதது ஏன் என்று காங்கிரஸôர் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மைத் தேர்தல்களில் வெற்றிபெற்றபோதிலும் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்னையைக் கையிலெடுத்துக் கொண்டு தங்களை முற்றுகையிடக்கூடும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. மக்களவையில் அது திமுகவின் ஆதரவையே பெரிதும் நம்பியுள்ளது. "ஸ்பெக்டரம்' ஊழல் விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அக்கட்சி ஏற்கெனவே காங்கிரஸýக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐ-க்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். இது காங்கிரஸýக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை, தொலைத் தொடர்புத்துறையில் ஊழல், மதுகோடா விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிடாமல் இருக்க காங்கிரஸ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவை அடக்கிவைக்கும் பொருட்டு லிபரான் கமிஷன் அறிக்கையை கையிலெடுத்துக் கொண்டுள்ளது.

அயோத்தி விவகாரத்தை மக்கள் மறந்துவிட்ட நிலையில், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முடியாது என்பதை பாஜகவும் உணர்ந்துவிட்ட நிலையில் லிபரான் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் அயோத்தி பேச்சு எழுந்துள்ளது.

17 தொகுப்புகளைக் கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி வேண்டும் என்றே பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பாபர் மசூதி செயல் கமிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காங்கிரûஸ ஆதரிக்காத முஸ்லிம்கள் இதுகுறித்து மௌனமாக இருந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது பிரதமர் பதவி வகித்த பி.வி.நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கமிஷன் கூறியுள்ளது.

பாஜக தலைவர் அத்வானி சரிவரச் செயல்படவில்லை என்று கடந்த சில மாதங்களாக சங்கப் பரிவாரங்கள் அவரைக் குறைகூறி வந்தன.

மேலும் அத்வானி ஆதரவாளர்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறிவந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பின்னர் அத்வானியை அனுசரித்துச் செல்ல முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

பாஜகவின் அடுத்த தலைவராக நிதின் கட்காரியை அத்வானிதான் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. நரேந்திர மோடியை கட்சித் தலைவராக்கிவிட வேண்டும் என்று அத்வானி விரும்பினார். அதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் கட்சித் தலைவர் பதவியை ஏற்க மோடி தயாராக இல்லை.

புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள நிதின் கட்காரி சரிவரச் செயல்படத் தவறும்பட்சத்தில் அல்லது அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

லிபரான் கமிஷன் அறிக்கை வெளியீடும், அதன் தொடர் நிகழ்வுகளும் அத்வானி எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர வழிவகுக்கலாம். அதை பாஜக தலைமையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். அத்வானி எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கிறாரோ இல்லையோ நிச்சயம் இது அவரது கரத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

3ஜி மொபைல் பேன்சி எண்கள் ஏலம்

பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வர்த்தக ரீதியாக வெளியிட்ட '3ஜி' மொபைல் இணைப்பின் 'பேன்சி எண்' விரும்புவோர் ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. அதிகப்படியான தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு விரும்பிய எண் வழங்கப்படுகிறது.

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,தற்போது இரண்டாம் தலைமுறை '2ஜி' சேவையில் இருந்து முன்னேறி வீடியோ கால் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 3ஜி சேவைக்கு மாறியுள்ளது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் இந்த சேவை வர்த்தக ரீதியாக வெளிவந்துள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி சமீபத்தில் '3ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன்பே, இச்சேவையை பெற விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று சென்னை தொலைபேசி அறிவித்திருந்தது.
தற்போது '2ஜி' சேவை வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், 3ஜி சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிம்கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர,' 2ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி '3ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியையும் சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. சிம் கார்டை மாற்ற வேண்டியதில்லை என்றாலும், கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு 59 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது '3ஜி 'மொபைல் இணைப்பு எண்களில் 'பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய '3ஜி' இணைப்புகள் அனைத்தும் '94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை பேன்சி எண்களாக குறிக்கப்படுகின்றன.

சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கென குறைந்த பட்ச தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் ஆயிரம் ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், கடைசி 5 எண்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகை குறைந்த பட்ச இருப்பு தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள் இந்த தொகையை தொடர்ந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது.

இந்தவகையில், சென்னையில் '3ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள் பேன்சி எண்களாக பிரிக்கப்பட்டு, அவற்றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான கட்டணம் ரூ. 1.50 மட்டுமே. பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரீபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை 300 வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி வரையில் ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் '2ஜி' சேவைக்கான மொபைல் எண்கள் ஏலம் முடிந்தது. அதில், 250 பேன்சி எண்கள் ஏலம் விடப்பட்டன.இந்த ஏலத்தில் தான் விரும்பிய மொபைல்போன் எண்ணிற்காக ஒருவர் அதிகபட்சமாக ' 55 ஆயிரம்' ரூபாய் செலுத்தி எடுத்துள்ளார். தொடர்ந்து தற்போது '3ஜி' சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதில் 293 எண்கள் ஏலத்தில் விடப்படுகிறது. '2ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் சென்னை தொலைபேசிக்கு 4.5 லட்சம் ரூபாய் வரையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. சென்னை தொலைபேசி தவிர தமிழ்நாடு தெலைதொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலைபேசி எண்கள் ஏலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு எண்கள் ஏலம் விடப்படும் நிலையில், பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கும் அதிகளவில் வருமானம் கிடைக்கும். தற்போது நடந்துவரும் 3 ஜி மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மக்களிடமும் விழிப்புணர்ச்சி அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற ஏலம் நடத்தப்படுவது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித் தருவதாக அமைகின்றது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' 2 ஜி மொபைல் எண்கள் ஏலத்தை விட இதில் அதிக தொகை நிறுவனத்திற்கு கிடைக்கும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால் அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அதே நேரத்தில் அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால் 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள் திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால் அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.

நன்றி : தினமலர்

இந்திய ஐ.டி., துறையில் அதிகரிக்கிறது வேலைவாய்ப்பு

இந்தியாவில் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அனைத்து நாடுகளும் மீண்டு வருகின்றன. அனைத்து நாடுகளிலும் இயல்புநிலை ஏற்படத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) நிறுவனங்களுக்கு உள்நாட்டிலும் வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. இதனையடுத்து, இவ்வாண்டில், இத்துறையில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று நாட்டின் சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குனர் (மனிதவள மேம்பாடு) மோகன்தாஸ் பை தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது, ஐ.டி., துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் நிலைமை இத்தனை மோசம். இப்போது மீண்டும் மறு எழுச்சிக்கான காலம். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம் என்று தெரிவித்தார். மேலும் 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியில் தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


தகிக்கிறது தங்கம் : சவரன் ரூ.13,464

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 13,464 ரூபாயை எட்டியது. தங்கத்தின் விலை நேற்று மாலை சற்று குறைந்து 13,368 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை எப்போதுமில்லாத வகையில் தற்போது 13 ஆயிரத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,655 ரூபாயாகவும், ஒரு சவரன் 13,240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது.
ஒரு கிராம் 1,675 ரூபாயாகி, ஒரு சவரன் 13,400 ரூபாயை எட்டிப்பிடித்தது. மாலை கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 1,671, சவரன் 13,368 ரூயாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1683 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ஆயிரத்து 464 ரூபாயாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 18 ஆயிரத்து 100 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 31.80 ரூபாயாக உள்ளது. பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 715 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் விலை நாளுக்குள் நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், சில நாட்களில் சவரன் 14 ஆயிரம் ரூபாயை எட்டிப்பிடிக்கும் என தெரிகிறது.
நன்றி : தினமலர்


Thursday, November 26, 2009

வேலை வாய்ப்புக்கு உறுதி அளிக்கும் கல்வி முறை

ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வியைக் கல்லூரிகளில் நிறைவு செய்த பின்பு சில ஆயிரம் இளைஞர்கள் அரசுத் துறைகளிலும், தனியார்துறைகளிலும், சிலர் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். அதேவேளையில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலையும் நிலையும் உள்ளது.

ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் தமிழகப் பல்கலைக்கழகங்களிலிருந்து குறைந்தது 10 லட்சம் இளைஞர்கள் உயர்கல்வியை முடித்து வேலை தேடும் படலத்துக்குத் தயாராகவுள்ளனர். இதில் 10 சதவீத இளைஞர்களே வேலை வாய்ப்பைப் பெற முடிகிறது. ஆள்பலம், பணபலம் மற்றும் பின்புலம் உள்ளவர்களே இத்தகைய பணியைப் பெற முடிகிறது. வேலை வாய்ப்பைத் தேடி அலையும் இளைஞர் பட்டாளத்தின் தொகை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் உள்ள, 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 50 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகத் தங்களின் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலை வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் வேலை வேட்டையை மிகுந்த வேட்கையுடன் நடத்தி ஓய்ந்து விடுவதையும், சிலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இதற்கு அரசே முழுப்பொறுப்பு என்று, அரசியல் கட்சிகள் போன்றே அரசின் மீது பழியைச் சுமத்திவிட்டுத் தப்பிக்காமல், சமூக அக்கறையுள்ள சமூகவியலாளர்கள் இப்பிரச்னையின்பால், தங்கள் கவனத்தைத் திருப்பினால் ஓரளவுக்கு இப்பிரச்னைக்கு விடியலை ஏற்படுத்த முடியும்.

பல துறைகளில் வளர்ந்து விட்ட சூழலிலும் நாம் இன்னும் எதற்கெடுத்தாலும் ஜப்பானையும், ரஷியாவையும் மேற்கோளாகக் காட்டிக் கொண்டு நம்மிடம் இருக்கும் அடையாளங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறோம். அவ்விதம் நம்மிடம் உள்ள அடையாளங்கள் என்ன? வாய்ப்புகள் என்ன? என்பதை அறிந்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. அவ்வாறு அடையாளம் கண்ட பின்பு அதை நடைமுறை சாத்தியமாக்கி நம் இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் கொள்ளச் செய்தல் வேண்டும். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் வேண்டும் என்ற கோஷம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காணவும், கேட்கவும் இயலுகிறது. குறிப்பாக நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட பிறகு, தங்கள் நிறுவனங்களில் பயிலும் மாணவர்க்கு, வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் பணியைச் சில தனியார் கல்லூரி நிறுவனங்கள் மேற்கொண்டு வேலை வாய்ப்புப் பிரிவை ஏற்படுத்தின. அதன் உள்நோக்கம் புதிதாகக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களைத் தங்கள் நிறுவனங்களில் சேருவதற்கான ஓர் ஈர்ப்பு முறையாக எண்ணியதே ஆகும்.

இதனால் தனியார் கல்வி நிலையங்களில் பயின்ற மாணவர்களில் சிலர் தனியார் ஐ.டி. தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர் என்பதும் உண்மை. ஆனால் இம் முறையினால் உயர்கல்வி பெறும் அனைவரும் வேலை வாய்ப்பைப் பெற முடிகிறதா என்றால் இல்லை என்ற விடையே நமக்குக் கிடைக்கும். ஆனால் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்தவுடன் தங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் அல்லது வேலை கிடைத்துவிடும் என்ற மேலோங்கிய உணர்வோடுதான் உள்ளனர். இது தவறு என்று கொள்ள முடியாது. காரணம் இதுதான் இன்றைய சமூகத் தேவை.

அதற்குண்டான முதல் பணி நம் கல்வி முறையில் சிலமாற்றங்களைக் கொண்டு வருவது அவசியத் தேவையாகும். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய ஓராண்டு சான்றிதழ் படிப்புகளை வழங்கத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை வாயிலாகத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 62 கலை அறிவியல் கல்லூரிகள், 53 பாலிடெக்னிக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டு, அலுவலக மின்னாட்சி (ஆபீஸ் ஆட்டோமேஷன்) மற்றும் வலைத்தள வடிவமைப்பு (வெப்டிசைன்) உள்ளிட்ட துறைகளில் பயிற்சி அளிக்கப்படும் கல்வி முறை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்று ஆண்டு பட்டப்படிப்புகள் காலத்தேவை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுவது அவசியம் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி. திருவாசகம் வெளியிட்டுள்ள கருத்தும், மாணவர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலுகின்ற போதே வேலைவாய்ப்புக் கல்வியையும் கற்று, கல்லூரியை விட்டு வெளியே வருகின்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும் அறிவிப்புகளாகும்.

இத்தகைய அறிவிப்புகளின் தொடர்ச்சியாக ஒரு கருத்தை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு பயிலுகின்ற போதே தொழில் முனைவோர் என்ற பாடத்திட்டத்தை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறச் செய்து இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக்கி, மாணவர்கள் அவர்கள் விரும்பும் தொழில் குறித்த தொழிற் பாடங்களைக் கற்கும் வகையில் பாடத்திட்டங்களும், அதற்குரிய வசதியும், வாய்ப்பும் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய பாடத்திட்டங்களை உருவாக்குவதால் மட்டும் வேலை வாய்ப்புக் கிடைத்துவிடுமா என்ற கேள்வி எழக் கூடும்.

தொழில் முனைவோர் பயிற்சியின் வாயிலாக ஒரு மாணவர் உற்பத்திப் பொருள், உற்பத்தித்திறன், வணிகம், வணிகம் செய்வதற்கான களம், சந்தைப் பொருளாதாரம், திட்டம் உருவாக்கல், திட்டஅறிக்கை உருவாக்குதல், பொருள்களைத் தேர்வுசெய்தல், புதிய பொருள்களின் தேவையும் அதன் உற்பத்தியும், தொழில் நுட்பத் திறனைத் தேர்வு செய்வது, தொழிற்சாலை வசதிகள், தொழில் முனைவதற்கான நிதி ஆதாரம் வங்கிகள் மூலமும், வர்த்தக நிறுவனங்கள் மூலமும் கடன் பெறுவதற்கான வழிவகைகளை அறிவது, பெற்ற நிதி ஒழுங்காகச் செலவிடப்படுகிறதா என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளுதல், நிதி அளவீடுகள், லாபத்தை அறிதல், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தும் முறை, தொழிலாளர் நிர்வாகம், தரநிர்ணயம், விற்பனை நிர்வாகம், இடைத்தரகர்களின் சூழ்ச்சியை எதிர்கொள்ளுதல், சந்தை வணிக யுக்திகள், விலையை நிர்ணயிக்கும் திறன், விற்பனை வரி, சுங்கவரி, மன அழுத்தம், ஆளுமைத்திறன் ஆகியவை குறித்து தெளிவான முறையிலும், விரிவான வகையிலும் பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு அளிக்கப்படும் பயிற்சிகள் நேர்முறைப்பாடமாகவும், செயல்முறை விளக்கமாகவும், கருத்தரங்குகளாகவும் வரையறுக்கப்படவேண்டும். செயல்முறை விளக்கமும், கருத்தரங்குகளும் மாணவர், தான் என்ன தொழில் குறித்து தொழில் முனைவோர் பயிற்சியைப் பெற விரும்புகிறாரோ அது பற்றி விரிவான வகையில் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவும்.

அவர் சுய தொழிலைத் தொடங்குவதற்கான அடிப்படையான பொருள் குறித்தும், அதன் உற்பத்தி பற்றியும், பொருள் ஈட்டும் வழிவகைகள் குறித்தும் அறிந்து கொள்ள இத்தகைய செயல்முறைப் பயிற்சிகள் துணைநிற்கும். பயிற்சி முடியும் தருவாயில் பயிற்சியாளர்கள் நன்கு பயிற்சி பெற்ற தொழில் முனைவோர்களாகவும், விற்பனை உத்தி, விற்பனைத் தந்திரங்களை அறிந்து தங்களை ஒரு தொழில் முனைவோராய் உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

மேலும் அவர்கள் வேலைத் தேடி அலையும் அவலத்திலிருந்து விடுபட்டு ஒரு சிறந்த தொழில் முனைவோராய் தன் உயர்கல்வியை முடித்து வெளியேறும் வாய்ப்பைப் பெறுவர். விரும்பி ஏற்கும் தொழிற்கல்வியின் மூலம், தாங்கள் ஏற்கப்போகும் தொழில் குறித்தும், அதன் மூலம் பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அதில் வரும் இடையூறுகளை ஆராய்ந்து, நீக்கவல்ல திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் பயிற்சி, அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

இந்த வகையில் மாணவர்களைத் தயார்படுத்த சிறந்த ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் இனம் காணப்படவேண்டும். அவர்கள் சிறந்த முறையில் பாடத் திட்டங்களையும், பயிற்சி முறைகளையும் உருவாக்கித் தரவேண்டும். சிந்தனையின் வெளிப்பாடுதான் செயல்திட்டங்கள் என்ற வகையில் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், அனுபவமிக்க தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் இது குறித்த சிந்தனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்து அவர்களது பரிந்துரையின்படி பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். பட்டப்படிப்பின் இறுதி ஆண்டின் முடிவில் பட்டத்துடன் வெளியே வருவதுடன் ஒரு தொழில் முனைவோராகவும், கல்லூரியை விட்டு வெளியே வரும் போது தன் வாழ்வில் தன்னம்பிக்கை கொண்ட மனிதனாய் வெளியேறுகிறோம் என்ற உணர்வையும், நிலையையும் உண்டாக்க வேண்டும். இந்த உணர்வே அவரை ஒரு தொழில் முனைவோராய் நிலைநிறுத்தும்.

புதிய தொழில் முனைவோரால் தொழில்கள் தொடங்கப்பட்டால் அந்தந்தப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற தொழில்கள் மேலும் நன்கு செழித்து வளர்கின்ற நிலை ஏற்படும். இதன் மூலம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை ஓரளவுக்குக் குறைவதற்கான வழிவகைகள் உண்டாகும் என்று நம்பலாம்.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், அனைவருக்கும் வேலை உண்டென்று சொல்லும் நிலை வரவேண்டும் என்ற சூழலை வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு உருவாக்கித் தரவேண்டியது இன்றைய அவசியத் தேவை. சமுதாயத்தின் இன்றைய இன்றியமையாத் தேவையை அறிந்து அதைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது மட்டுமன்று, அது காலத்தின் கட்டாயம். அதுவே சமூகத் தேடலை நிறைவு செய்யும் உண்மையான கல்வி முறையின் அடையாளம்.
(கட்டுரையாளர்: வி. சீ. கமலக்கண்ணன், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர்)
நன்றி : தினமணி

பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 344 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது

இந்திய பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் 344 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.64 புள்ளிகள் குறைந்து 17,141.31 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 28.95 புள்ளிகள் குறைந்து 5,079.20 புள்ளிகளோடு தொடங்கியது.
பெல் நிறுவன பங்குகள் 0.28 சதவீதமும், ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் 0.45 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., பங்குகள் 0.57 சதவீதமும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 0.39 சதவீதமும், ஐ.டி.சி., லிமிடெட் பங்குகள் 0.89 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 0.89 சதவீதமும், மகேந்திரா அன்ட் மகேந்திரா பங்குகள் 0.83 சதவீதமும் சரிவினை கண்டுள்ளன.
தொடர்ந்து சரிவினை கண்டு வந்த இந்திய பங்குச்சந்தை, யுரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட வீழ்ச்சி காரணமாக மேலும் சரிவினை காண தொடங்கியது. இன்று ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது.
இந்திய பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.02 புள்ளிகள் சரிந்து 16,854.93 புள்ளிகள் சரிவுடன் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 102.60 புள்ளிகள் சரிந்து 5005.55 புள்ளிகள் சரிவுடன் நிலைபெற்றது.
நன்றி : தினமலர்


பணவீக்கம்(உணவு) 15.58%ஆக உயர்வு


நவம்பர் இரண்டாம் வாரத்‌தில், உணவுப் பொருட்கள் அடிப்படையில் கணக்கிடப் படும் நாட்டின் பணவீக்கம் 15.58 சதவீதமாக உயர்ந்துள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் நாட்டின் பணவீக்கம் 14.55ஆக இருந்தது. பருப்பு மற்றும் உருளைக்கிழங்கின் விலை அதிகரித்து இருப்பதே பணவீக்க அதிகரிப்பிற்கு காரணம் என குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆண்டு கணக்கெடுப்பின் படி, உருளைக்கிழங்கின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அவரை, மொச்சை போன்ற தானிய வகைகளின் விலையும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த வாரத்தில், சிக்கன் மற்றும் யுராத் போன்றவற்றின் விலை 15 சதவீதமும், முட்டை விலை 8 சதவீதமும், பாசிபருப்பின் விலை 6 சதவீதமும், துவரம்பருப்பின் விலை 5 சதவீதமும், பழங்கள் மற்றும் காய்கறி விலை 3 சதவீதமும் அதிகரித்துள்ளது.
உணவு அல்லாத நிலக்கடலை விதை விலை 2 சதவீதமும், பட்டு மூலப்பொருள் விலை 3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

நன்றி : தினமலர்


டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுகம்


டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய வகை பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. புதிய பைக் மற்​றும் ஸ்கூட்​டரின் தனித்துவம் என்னவென்றால், கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் கியர்​கள் கொண்டு இருப்பதே ஆகும்.
டிவி​எஸ் ஜைவ் மோட்​டார் சைக்​கிள் கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் வகை​யில் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. பைக் எந்த கிய​ரில் சென்று கொண்​டி​ருந்​தா​லும் உட​ன​டி​யாக நியூட்​ர​லுக்​குக் கொண்டு வர முடி​யும். கியரை படிப்​ப​டி​யா​கக் குறைத்து நியூட்​ர​லுக்கு வர வேண்​டிய அவ​சி​யம் இல்லை. பைக்கை எந்த கிய​ரில் நிறுத்​தி​னா​லும்,​ அதே கிய​ரில் வண்​டியை தொடர்ந்து இயக்க முடி​யும். ​ 110 சிசி என்​ஜின்,​ 12 லிட்​டர் கொள்​ள​ளவு உள்ள பெட்​ரோல் டேங்க் ஆகி​ய​வற்​று​டன் கூடு​த​லாக பைக் இருக்​கை​யின் அடி​யில் பொருள்​களை வைத்​துக் கொள்ள இட வசதி உள்​ளது. இதன் விலை ரூ. 41 ஆயி​ர​மா​கும்.
டி.வி.​எஸ் வீகோ 110 சிசி என்​ஜின்,​​ 12 அங்​குல அள​வுள்ள அலாய் வீல்​கள் பொருத்​தப்​பட்​டுள்ள இந்த ஸ்கூட்​டர் குடும்​பத்​தில் உள்ள அனை​வ​ரும் எளி​தில் ஓட்​டக் கூடிய விதத்​தில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்கூட்​ட​ரின் பின்​பு​றத்​தில் பெட்​ரோல் டேங்க் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஐந்து லிட்​டர் கொள்​ள​ளவு பெட்​ரோல் டேங்க்,​செல்​போனை சார்ஜ் செய்​யும் வசதி உள்​ளிட்​டவை இதில் உள்​ளன. கருப்பு,​ கரு​நீ​லம்,​ கேப்​பச்​சீனோ ப்ரெüன்,​ சில்​வர் உள்​ளிட்ட ஐந்து நிறங்​கள் கொண்ட இதன் விலை ரூ. 42 ஆயி​ரம் ஆகும்.

நன்றி : தினமலர்


சிமென்ட் ஆலைகள் அதிகரிப்பு: விலை மூட்டைக்கு ரூ. 45 குறைவு


தமிழகத்தில், சிமென்ட் உற்பத்தி, ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், சிமென்ட் விலை மூட்டைக்கு 45 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பால், 200 ரூபாய்க்கு விற்ற அரசு சிமென்ட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில், ஒன்றரை ஆண்டுக்கு முன் சிமென்ட் விலை மூட்டை 280 ரூபாய் வரை உயர்ந்தது. இரண்டு மாதத்துக்கு முன், ராம்கோ, செட்டிநாடு, டால்மியா, பிர்லா, அல்ட்ராடெக் நிறுவனங்களின் சிமென்ட் விலை, மூட்டை 260 ரூபாய்க்கும், ஆந்திராவிலிருந்து வரும் மகா, பிரியா, பென்னா ஆகிய நிறுவனங்களின் சிமென்ட் மூட்டை 230 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
கடுமையான விலை உயர்வால் கட்டடப் பணிகள் பாதிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதி, 'வெளிநாடுகளிலிருந்து சிமென்ட் இறக்குமதி செய்து, ஒரு மூட்டை 200 ரூபாய்க்கு அரசே விற்பனை செய்யும்' என, அறிவித்தார். இதையடுத்து, தமிழக சிமென்ட் ஆலை உரிமையாளர்கள், அரசுக்கு குறிப்பிட்ட அளவு சிமென்ட் மூட்டை வழங்க சம்மதித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம், சிமென்ட் கொள்முதல் செய்து, தாலுகா வாரியாக நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில், 200 ரூபாய்க்கு சிமென்ட் விற்பனையை அரசு துவக்கியது. கட்டட வரைபடம், ரேஷன்கார்டு நகல் ஆகியவை வழங்கினால்தான், சிமென்ட் வழங்குவதாக அரசு முதலில் அறிவித்தது. 'சிமென்ட்டுக்கான தொகையை டி.டி.,யாக மட்டுமே செலுத்த வேண்டும். அதுவும் 200 மூட்டைகள் தான் வழங்கப்படும்' என, நிபந்தனை விதித்தது.

இந்த நிபந்தனைகளால், சிமென்ட் விற்பனை துவக்கத்தில் மந்தமாகவே இருந்தது. இதையடுத்து, விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. 'ரேஷன் கார்டு நகல் மட்டும் இருந்தால் போதும், 25 மூட்டை, 50 மூட்டை என, தவணை முறையில் பெறலாம்' என, அரசு அறிவித்தது. இதையடுத்து, அரசு சிமென்ட் விற்பனை சூடுபிடித்தது. நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களின் முறைகேடுகளால், மக்கள் பதிவு செய்து இரண்டு மாதம் வரை சிமென்டுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. குறைந்த விலையில் சிமென்ட் கிடைத்தும், அதை பயன்படுத்த முடியாமல், மக்கள் கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் வாங்கும் நிலை ஏற்பட்டது.

இதனிடையே, புதிய சிமென்ட் ஆலைகள் தமிழகத்தில் உற்பத்தியை துவக்கியுள்ளன. 'ராம்கோ' சிமென்ட் நிறுவனம், ஐந்து மாதத்துக்கு முன் அரியலூரிலும், இரண்டு மாதங்களுக்கு முன் வாழப்பாடியிலும் புதிய ஆலையை துவக்கியுள்ளது. 'டால்மியா' மற்றும் 'செட்டிநாடு' சிமென்ட் நிறுவனங்கள் அரியலூரில் தலா ஒரு யூனிட்டை துவக்கியுள்ளன. இதன் விளைவாக, சிமென்ட் உற்பத்தி அதிகரித்து, சிமென்ட் விலை மூட்டைக்கு 45 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், சராசரியாக மாதம் 40 முதல் 45 ஆயிரம் டன் சிமென்ட் விற்பனையாகும். அரசின் சிமென்ட் விற்பனையால், 15 ஆயிரம் டன் வரை விற்பனை குறைந்தது. தற்போது, தனியாரிடம் விலை குறைந்ததால், அரசின் சிமென்ட் விற்பனை குறைந்து விட்டது. தனியார் கடைகளில் மீண்டும் விற்பனை அதிகரித்து, சென்ற மாதம் 45 ஆயிரம் டன் சிமென்ட் விற்பனையானது.

ஈரோடு மொத்த விற்பனையாளர் பரிமளம் வேல்முருகன் கூறுகையில், 'அரசின் நேரடி விற்பனையால், தனியார் சிமென்ட் விற்பனை பாதித்தது. தற்போது, சிமென்ட் நிறுவனங்கள் கூடுதலாக ஆலைகளை துவக்கியுள்ளன. சிமென்ட் உற்பத்தி அதிகரிப்பால், சென்ற மாதம் முதல் மூட்டைக்கு 45 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. தமிழக ஆலைகளின் சிமென்ட் மூட்டை 215 ரூபாய்க்கும், ஆந்திரா ஆலைகளின் சிமென்ட் மூட்டை 185 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது' என்றார்.


Wednesday, November 25, 2009

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.

இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.

தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.

அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.

2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.

இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.

நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.

தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.

திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.

மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.

திறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.

நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.

கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.

இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.

இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.

நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.

(கட்டுரையாளர்: எம். பாண்டியன், மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).
நன்றி : தினமணி

குனியக் குனிய...

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?

இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!

உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?

சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.

அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.

கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.

சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?

அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!

குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
நன்றி : தினமணி

சத்யம் மோசடி ரூ.14,000 கோடி: சிபிஐ அறிவிப்பு


சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மோசடி இத்தனை நாள் சொல்லப்பட்டது போல் ரூ.7800 இல்லை எனவும் உண்மையான தொகை ரூ.14000 கோடி என்கிறது சிபிஐ. நேற்று தாக்கல் செய்யப்பட்ட சத்யம் மோசடி குறித்த குற்றப் பத்திரிகையில் இதற்கான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு.
சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தை மகிந்திரா நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் உண்மையில் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடி எத்தனை கோடி ரூபாய் என்ற விவரத்தை தனது குற்றப்பத்திரிகையில் வெளியிட்டுள்ளது சிபிஐ.
200 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப் பத்திரிகையில் சத்யம் நிறுவன நிதி எவ்வாறு மோசடியாக உயர்த்திக் காட்டப்பட்டதென்றும், போலியான வாடிக்கையாளர்கள் உருவாக்கப்பட்டதையும் அம்பலமாக்கியுள்ளது. மேலும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் சொத்துக்களையும் கண்டுபிடித்துள்ளது சிபிஐ. 1065 இடங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 6,000 ஏக்கர் நிலம், 40,000 ஸ்கொயர் யார்டு வீட்டு மனைகள், 90,000 சதுர அடி கட்டடங்கள் போன்றவை அடங்கும்.

நன்றி : தினமலர்


கோவையில் ரூ.50 கோடி முதலீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி


யுபிஎஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நியூமரிக் பவர் சிஸ்டம்ஸ், சூரிய ஒளியில் 1.5 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.25 கோடியை நியூமரிக் பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது. எல்இடி தெருவிளக்குகளை தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளது. தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பான எரிசக்தி கருவிகளை தயாரிக்கவும், காற்றாலை மின் உற்பத்திக் கருவிகள் தயாரிக்கவும் நியூமரிக் முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.50 கோடி முதலீட்டில் கோவையில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட உள்ளது.

நன்றி : தினமலர்


Tuesday, November 24, 2009

என்றும் பதினாறு-மதுரப் பதினேழு!

தனது 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் டெஸ்ட் வரிசையில் டான் பிராட்மனுக்கு இரண்டாவது. ஒரு தினப் போட்டியில் விவியன் ரிச்சர்டுக்கு இரண்டாவது என்று கிரிக்கெட் பஞ்சாங்கமான "விஸ்டன்' ஆரூடம் கணித்தது. ஆனால் சாதனைகள் என்று வரும்போது அவர்தான் இன்று "நம்பர்-ஒன்' இதைச் சொல்ல எந்த விஸ்டனும் தேவை இல்லை.

இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால் சச்சின் அதன் கடவுள் என்று பாரி ரிச்சர்டு சொன்னார். இப்போது 439 ரன்கள் எடுத்து உலகச் சாதனை படைத்துள்ள பள்ளி மாணவன் சர்ஃப்ராஸ் கானும் அதைத்தான் சொல்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 12,877 ரன்கள். ஒருதினப் போட்டியில் 17,178 ரன்கள். முதல்தர ஆட்டத்தில் 21,662. 20-20 போட்டியில் ஒரே ஓர் ஆட்டத்தில்தான் ஆடி இருக்கிறார். அதில் வெறும் பத்து ரன்கள்.

டெஸ்டில் 43 சதங்கள் 53 அரைச் சதங்கள். ஒருதினப் போட்டியில் 45 சதங்கள் 91 அரைச்சதங்கள். அதிகபட்ச "ஸ்கோர்' டெஸ்டில் 248; ஒருதினப் போட்டியில் 186. அதிகமான ஆட்ட - தொடர் நாயகன் விருதுகள்.

டெஸ்டில் அதிக சதங்கள் என்று வந்தபோது கவாஸ்கர், டெஸ்டில் அதிக ரன்கள் என்றபோது பிரையன் லாரா, அதிக அரைச் சதங்கள் என்று வந்தபோது ஆலன் பார்டர் ஆகியோரது சாதனைகள் தகர்ந்தன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் பத்துச் சதங்கள் என்பது எழுபது ஆண்டுகள் நிலை நின்றிருந்த ஜேக் ஜொப்சையே முறியடித்த சாதனை.

பொது வாழ்க்கையில் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், விளையாட்டில் உயர் வகை விருதான அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்ன இவர் கையடக்கியவை. இனி "பாரத ரத்னா'தான் பாக்கி. அது விரைவில் வீடு வந்துசேரும் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. "விஸ்டன்' ஓராண்டு இவரை அந்த ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அறிவித்தது. பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் ஒரு படி மேலே போய், சம்பிரதாயங்களைப் பற்றிக் கவலைப்படாது பிரிட்டனின் உயரிய விருதான ""சர்'' பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அமெரிக்க "டைம்' சஞ்சிகை, ""அவர் தேர்ந்தெடுத்த துறையில் இன்று உயிர் வாழும் மிக உன்னதமான பிறவி'' என்று வர்ணித்தது.

"லிட்டில் சாம்பியன்' லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் ப்ளாஸ்டர், டெண்டியா என்பவை இவரது நண்பர்களும் அபிமானிகளும் இவருக்கு வைத்துள்ள செல்லப் பெயர்கள்.

மராத்திய எழுத்தாளர் ரமேஷ் டெண்டுல்கர் தன் செல்லப் பிள்ளைக்கு சூட்டிய பெயர் தன் அபிமானத்துக்குரிய இசைக் கலைஞரான சச்சின் தேவ் பர்மனுடைய பெயர்.

வேகப் பந்து வீச்சில் பயிற்சி பெற டென்னிஸ் லில்லியை இவர் அணுக, ""தம்பி இதற்கு நீ சரிவர மாட்டாய் வேறு வேலை இருந்தால் பார்'' என்று திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் இவருடைய துரோணாச்சாரியார் ராம்காந்த் அச்ரேகர். இவர் உள்ளில் உறையும் அர்ஜுனனை அடையாளம் கண்டு கொண்டார்.

1988-ல் இவர் தனது பள்ளிக்காக ஆடிய எல்லாப் போட்டிகளிலும் சதம் பெற்றதோடு, வினோத் காம்பிளியுடன் இணைந்து 664 ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார். அதில் சச்சினின் பங்கு மட்டும் 326 ரன்கள். 2006-ம் ஆண்டு வரை, ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முறியடிக்கும் வரை அது உலகச் சாதனையாக இருந்தது.

இவரது 14-வது வயதில் கவாஸ்கர் தன்னுடைய மெல்லிய கால் காப்புகளை இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அது நடந்து இருபது ஆண்டுகள் கழித்து அதே கவாஸ்கருடைய 34 சதங்கள் என்ற மகத்தான சாதனையை சச்சின் முறியடித்தார்.

15-வது வயதில் குஜராத்துக்கு எதிராக மும்பைக்காக ஆடிய கன்னி ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்தார். அதன் மூலம் முதல்தர ஆட்டத்தில் இத்தகைய சாதனை புரிந்த மிக இளைய ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். ரஞ்சி, தியோதார், துலீப், ஈரானி ஆகிய அத்தனை விருதுகள் போட்டியிலும் சதம் பெற்றவர் சச்சின். இந்த விஷயத்தில் வேறு யாரும் இவர் அருகில் கூட வர முடியாது.

1998-ல் ஆஸி. அணிக்கு எதிராக மும்பை ஆடியபோது பிரேபோன் மைதானத்தில் இவர் பெற்ற இரட்டைச் சதம் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. காரணம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அது எளிதான காரியமல்ல.

இங்கிலாந்தில் யோர்க்ஷயர் அணி வெளிநாட்டவர் எவரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரே வெளிநாட்டவர் சச்சின்தான். அந்த சீசனில் அவர் 16 போட்டிகளில் 1070 ரன்கள் எடுத்தார். சராசரி 46.52.

1989-ல் தனது 15-வது வயதில் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் பிரவேசம். இந்த டெஸ்டில்தான் வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுசும் தன் டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு போட்டியில் அப்துல் காதருக்கு எதிராக ஓர் ஓவரில் சச்சின் 28 ரன்கள் எடுத்ததை மறக்க முடியாது என்கிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

1990-ல் இங்கிலாந்தில் தான் இவரது கன்னிச் சதம் வந்தது. 91-92-ல் சச்சினின் ஆட்டத்தைப் பார்த்த மெர்வ் ஹியூஸ் ஆலன் பார்டரிடம் ""பார், இந்தப் பொடியன் உன் சாதனையை முறியடிக்கப் போகிறான்'' என்றார். அது நடந்தது.

கிரிக்கெட்டில் அவர் சாதனை படைக்க முடியாமல் போனது ஒரே ஒரு விஷயத்தில்தான். இரண்டு முறை கேப்டனாக இருந்தும் அந்தப் பதவியில் அவர் சோபிக்கவில்லை.

வாழ்நாளில் ஒருமுறைதான் சச்சின் போன்ற ஓர் ஆட்டக்காரரைச் சந்திக்க முடியும் என்றார் வாசிம் அக்ரம், 99.9 சதவீத பரிபூரண ஆட்டக்காரர் சச்சின் என்றார் விவியன் ரிச்சர்ட். சச்சினை ஒரு ஜீனியஸ் என்றார் சர் ரிச்சர்ட் ஹாட்லீ. இப்படி பல்வேறு சொற்றொடர்களால் ஆலன் பார்டர், பிரையன் லாரா ஆகியோர் புகழ்ந்திருக்கிறார்கள்.

சச்சினை மகிமைப்படுத்தும் இன்னொரு விஷயம் சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர்கள் என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் இல்லை. சச்சினுக்குப் பிறகு அதிக ரன்கள் பெற்றுள்ள சனத் ஜயசூர்யா 4,000 ரன்கள் பின்னால் நிற்கிறார். அவரது ஆட்ட நாள்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. சதங்களில் அவரைத் தொடக்கூடும் என்று நம்பப்பட்ட ரிக்கி பாண்டிங்கும் அப்படியே. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனையிலும் அவரை மிஞ்ச யாரும் இருப்பதுபோல் தோன்றவில்லை.

விளம்பர வருவாயில் மாத்திரம் ஒருவர் அவரை முந்தி இருக்கிறார். அவர் தோனி. மற்றபடி வேறு எந்தச் சாதனையிலும் சச்சினை மிஞ்ச எவரும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

அவருடைய சமூகப் பிரக்ஞைக்கும், மனித நேயத்துக்கும் ஒரு சான்று. அவரது மாமியார் நடத்தி வரும் ""அப்னாலயா'' மூலம் அவர் 200 குழந்தைகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

சென்னையில் ஓர் ஆட்டத்தில் அவர் சதம் பெற்றார். ஆனால் இந்தியா தோற்றுப் போய்விட்டது. நான் வர்ணனை நடக்கும் மாடியில் நிற்கிறேன். சச்சின் தலை குனிந்த வண்ணம் பஸ் ஏறப் போகிறார். அவரது சகா அவரை ஆதரவாக அணைத்தவண்ணம் வழிநடத்தி வருகிறார். உற்றுப் பார்த்தபோது சச்சினின் கண்களின் கண்ணீர்.

சென்ற ஆட்டத்தில்கூட 175 ரன்கள். 17,000 ரன்கள் என்ற மந்திர இலக்கைக் கடந்த அற்புதச் சாதனை.

ஆட்ட நாயகன் விருது, என்றாலும் சச்சினின் கண்களில் நீர்கோர்ப்பு. தொண்டை கம்மி இருந்தது. தனக்கு இத்தனை புகழ் வந்தென்ன; நாடு தோற்றுவிட்டதே என்கிற சோகம். சோகத்தால் அவர் தலை குனிந்தது. ஆனால் அவரது அப்பழுக்கற்ற தேச பக்தியை எண்ணி - அவரது சாதனைகளை நினைந்து ஒவ்வோர் இந்தியரும் பெருமையுடன் தலைநிமிர்ந்தார். நம் தேசம் நம் சச்சின்.

(கட்டுரையாளர்: அப்துல் ஜப்பார், வானொலி கிரிக்கெட் வர்ணனையாளர்).
நன்றி : தினமணி

ஃபாஸ்ட்புட்டை பின்னுக்கு தள்ள வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தமிழக இட்லி

தமிழர்களுக்கு இட்லி இப்போது இந்திய அளவில் பிரபலமாகி விட்டது. ஆனால் உலகஅளவில் இட்லிக்கு எந்த மவுசும் ஏற்படவில்லை. வெளி நாட்டுக்காரர்கள் இந்தியா வரும் போதும் இட்லியை சாப்பிட்டு விட்டு அதன் ருசியை பாராட்டுவது உண்டு. இருப்பினும் நாம் இன்னும் வெளிநாடுகளில் இட்லியை அறிமுகப்படுத்தாததால் அவை இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழ்நாட்டுக்குள் முடங்கி கிடக்கின்றன.
சீனாவில் பிறந்த “நூடுல்ஸ்”, வெள்ளைக்காரர்களில் கண்டுபிடிப்பான “பர்க்கர்” போன்றவை இன்று உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்து விட்டன. இப்போது இந்த இடத்துக்கு இட்லியையும் கொண்டு வரும் திட்டத்தை தஞ்சாவூரில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப மையம் உருவாக்கியுள்ளது. இட்லியை பதப்படுத்தி அனுப்புவதுதான் பெரிய பிரச்சினை அதை மட்டும் கண்டுபிடித்து விட்டால் இட்லியையும் உலக அளவில் சந்தைப்படுத்தி விடலாம். அதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்த மையம் முயற்சித்து வருகிறது. இது பற்றி இந்த மைய இயக்குனர் அழகு சுந்தரம் கூறியதாவது: இட்லியை உற்பத்தி செய்து, பதப்படுத்தி வெளிநாட்டு விற்பனைக்கு அனுப்ப 3 வருட ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். பர்க்கர் போன்ற உணவுகளை விட இட்லியில் அதிக சத்தும், ருசியும் இருக்கிறது. இருந்தாலும் ஏன் இதை உலக அளவில் பிரபலப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுந்தது. இட்லி மிகவும் சத்தான உணவு. விலை மலிவான உணவு. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம்.
எனவே இதை தொழில் உற்பத்தி பொருளாக்கி சந்தை படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். இதன் முதல் கட்ட ஆராய்ச்சிக்காக இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் ரூ.2 கோடியே 60 லட்சம் வழங்கி உள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஒரு பகுதியாக குடும்ப பெண்கள் பங்கேற்கும் “இட்லி மேளா” என்ற விழாவை டிசம்பர் 3ந் தேதி தஞ்சாவூரில் நடத்த உள்ளோம். அப்போது குடும்ப பெண்கள் ஒவ்வொரு வரும் இட்லியை தயாரித்து கொடுக்கலாம். அதில் எந்த இட்லி ருசியாக இருக்கிறது. எப்படி தயாரிப்பதால் இந்த ருசி வருகிறது? என்று ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


காட்பரி நிறுவனத்தை வாங்க கடும் போட்டி

பிரிட்டிஷின் புகழ்பெற்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான காட்பரி விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்க சர்வதேச நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. காட்பரி நிறுவனத்துக்கு 16.5 பில்லியன் டாலர் வரை தர க்ராப்ட் புட்ஸ் முன்வந்துள்ளது. ஆனால் இப்போது அமெரிக்காவின் ஹெர்ஷே நிறுவனமும் களத்தில் குதித்துள்ளதால், போட்டி கடுமையாகியுள்ளது. க்ராப்ட் புட்ஸ் நிறுவனத்தைவிட 0.5 பில்லியன் டாலர் அதிகம் தர ஹெர்ஷே முன் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இன்னும் வாய்திறக்காமல் உள்ளது காட்பரி. இந்நிலையில் காட்பரியை வாங்க தங்களுக்கும் விருப்பமுள்ளது என்று அறிவித்துள்ளது புகழ்பெற்ற நெஸ்லே நிறுவனம். காட்பரி நிறுவனத்தை வாங்க நெஸ்லே, 18 பில்லியன் டாலர் வரை தரவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


பயன்படுத்தாத பழைய நகைக்கு வட்டி : எஸ்பிஐ அறிவிப்பு

பயன்படுத்தாத பழைய தங்க நகைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால் அவற்றை ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்து, வட்டியும் பெறலாம். மதிப்பு மீது கடனும் பெறலாம். கோல்டு டெபாசிட் திட்டத்தை நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அடிக்கடி பயன்படுத்தாத பழைய தங்க நகைகள், டெபாசிட்டாக ஏற்கப்படும். இத்திட்டத்தில் பெறப்படும் நகைகள் மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சடிப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு நகைகள் உருக்கப்பட்டு, கழிவுகள் நீக்கப்படும். சுத்தத் தங்கமாக்கி (999 சுத்தம்) பிஸ்கெட்டுகளாக மாற்றப்படும்.
அதன் மதிப்பை நிர்ணயம் செய்து, வாடிக்கையாளருக்கு அந்த தொகைக்கு தங்க டெபாசிட் சான்றிதழ் அளிக்கப்படும். தங்க டெபாசிட் தொகை மீது 1.5 சதவீதம் வரை வட்டியை வங்கி அளிக்கும். இந்த திட்டத்தின்கீழ் டெபாசிட் செய்ய குறைந்தபட்சம் 500 கிராம் (62.5 பவுன்) நகை தேவை. குறைந்தது 3 ஆண்டு கால டெபாசிட்டாக ஏற்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


கனடா செல்ல ஒரே நாளில் விசா பெறலாம்

கனடா வரவிரும்பும் இந்தியருக்கு, எக்ஸ்பிரஸ் விசா சேவையின் கீழ் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வருகையை அனுமதிக்கும் விசா வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. கனடா குடியேற்றத் துறை அமைச்சர் ஜாஸன்கீனே டொரான்டோவில் நடைபெற்ற, இந்திய-கனடா வர்த்தக சபை கூட்டத்தில் இதனை அறிவித்தார். இந்திய தூதர் பிரீத்தி சரண் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் இந்திய பயணத்தையொட்டி விசா விதிகளை கனடா தளர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Monday, November 23, 2009

நெடுந்தொடர்களா? கொடுந்தொடர்களா?

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில், கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாய், நல்லார்க்கும் பொல்லார்க்கும் நலமளிக்கும் நலமாய், வல்லார்க்கும் அல்லார்க்கும் வரமளிக்கும் வரமாய், எல்லார்க்கும் எளிதாகப் புரிகின்ற கலையாய் விளங்குவதுதான் நாடகத்தமிழ்.

நாட்டு மக்களைக் கவர்ந்த நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றிப் புகழ்பெற்ற டி.கே. சண்முகம் சகோதரர்கள், சங்கரதாஸ் சுவாமிகள் போன்றோர் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள். விருதுபெற்ற சிறந்தபல திரைப்படங்கள், பல நூறுமுறை மேடையில் கோடை மழையாய்க் குளிர்வித்தவைதாம்.

இன்றும் திரைப்படமாக எடுக்கத் தயங்குகிற கல்கியின் “சிவகாமியின் சபதம்’ என்கிற சரித்திர நாவலை டி.கே. சண்முகம் மேடை நாடகமாக்கிக் காண்பவரை வரலாற்றுக் காலத்துக்கே அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தினார். நாடகக்கலைக்கு அது ஒரு பொற்காலம்.

நாடகத்தமிழ் இன்று சின்னத்திரையில் சிறைப்பட்டுப் போயிற்று. நெடுந்தொடர்கள் என்கிற பெயரில் அவை கொண்டுள்ள கோலங்கள் கொஞ்சநஞ்சமல்லை. மக்கள் மனத்தை எளிதாகக் கவர்கின்ற ஊடகமாகச் சின்னத்திரையே சிறந்து விளங்குகிறது. தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சியை, ஒப்பற்ற குறிக்கோள்களை, முன்னேற்றும் தன்னம்பிக்கையை, மனத்தை விரிவாக்கும் புதியபுதிய சிந்தனைகளை, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நெறியை குடும்ப பாசத்தை, உறவுகளை வளர்த்தெடுக்கும் உன்னதத்தை நெஞ்சங்களில் எளிதாகப் பதியவைப்பதற்கு மற்ற நிகழ்ச்சிகளைவிட நெடுந்தொடர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

நூல்கள் இல்லாத இல்லங்கள் உண்டு. ஆனால், தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத இல்லங்கள் இல்லை. உழைத்துக் களைத்து வீட்டுக்கு வருபவரின் அறிவுப் பசிக்குத் தீனிபோடவும், உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தவும் தொடர்களால் இயலும். ரஸ்கின் எழுதிய “கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற ஒரு நூல் காந்தியடிகளின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது என்றால், நெடுந்தொடர்களால் முடியாதா என்ன?

ஆனால், இன்று நெடுந்தொடர்களின் போக்கு அவ்வாறு இல்லையே. வேறு வழியின்றிப் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

தமிழ்த் தொலைக்காட்சி தொடங்கிய புதிதில் வந்த பல தொடர்கள் நெஞ்சை நிறைத்த அருமையுடையவை. இன்று வருபவையோ நஞ்சை விதைப்பவை. பல இல்லங்களில் பிரச்னைகளை உருவாக்குபவையே நெடுந்தொடர்கள் தாம்.

பத்துக்கும் மேற்பட்ட அலைவரிசைகளில் விதவிதமான தொடர்கள். தாய்க்கு ஒரு தொடரைக் காண ஆசை. பிள்ளைகளுக்கோ வேறு ஒரு தொடரைக் காண விருப்பம். பலஇல்லத்தரசிகள் வீட்டுவேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டுத் தொடர்களுக்குள் மூழ்கிப் போகிறார்கள். அடுப்பில் வேகும் உணவு அடிப்பிடித்த பிறகுதான் பலருக்கு நினைவே வருகிறது.

தொடர்களின் மையப் பொருள்கள் பெரும்பாலும் பெண்களே. பெண்ணின் பெருமையை விளக்க அன்று; இயற்கையான அவர்களின் பலவீனங்களைக் கொச்சைப்படுத்திக் காட்டும் காட்சிகள்தாம். பொறாமையின் வடிவமாய்ச் சில பெண்கள்; கொடுமைக்காரிகளாய்ப் பல பெண்கள். பழிவாங்கும் அரக்கிகள் உருவில் பல பெண்கள்; அரிவாளை ஏந்திக் கொலைசெய்யத் துடிக்கும் சிலபெண்கள். ஏற்கெனவே திருமணமானவன் என்று தெரிந்தும் அவனை வளைத்துக்கொள்ள எண்ணும் பெண்கள்; வஞ்சனை, சூது, நம்பிக்கைத் துரோகம் முதலிய வக்கிர எண்ணங்களின் வடிவமாகவே பெண்கள் சித்திரிக்கப்படும் கொடுமைகள் தொடர்கின்றன. இதில் என்ன வேதனையென்றால் பெண்களே இந்தத் தொடர்களை மெய்மறந்து ரசிப்பதுதான்.

மாமியார் மருமகள் என்றால் கீரியும் பாம்புமாகத்தான் இருப்பார்களா? எத்தனையோ இல்லங்களில் மாமியாரைத் தாயாகக் கருதும் மருமகளும், மருமகளைத் தன் பெண்ணாகக் கொண்டாடும் மாமியார்களும் வாழ்கிறார்கள். பழங்கதையை மாற்றக்கூடாதா? “மாற்றம் என்பது மானிடத் தத்துவம்’ என்பார் கவிஞர் கண்ணதாசன்.

“அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ என்பார் பாரதிதாசன். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச்செருக்கு பெண்கட்கு வேண்டும்’ என்று சிந்துக்குத் தந்தை பாரதி பாடுவார். இன்று மகளிர் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகத்திறமை பெற்றுத் தனியே வெளிநாடுசென்று உயர்ந்த லட்சியத்துடன் லட்சங்களையும் தேடி வருகிறார்கள்.

தொடர்களின் கதையம்சம் பற்றிப் பார்த்தால் கதைக்கருவே சிதைந்து போய்க்கிடக்கிறது. கதைப்பஞ்சம் வந்துவிட்டதா என்ன? வாழமுயல்பவனுக்கு மற்றொருவன் தான் தீயவனாக (வில்லன்) வரவேண்டுமா? மழை, வெள்ளம், புயல், இலங்கைவாழ் தமிழர்கள் துயர் போன்ற சூழ்நிலைகள் தடையாக வராதா? அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் அலுப்புத் தட்டாதா?

தொடர்களின் தலைப்புகள், வெளிப்புறக் காட்சிகள், வீடுகளின் தோற்றங்கள், தொழில்நுட்பங்கள், ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஆகியன கண்ணுக்கு விருந்து தருகின்றன. இவையெல்லாம் பாராட்டுக்குரியவை.

தமிழில் ஏராளமான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு நாளைக்கு ஒன்றாகவோ, வாரத்துக்கு ஒன்றைத் தொடராகவோ ஒளிபரப்பலாகாதா? நாட்டில் நடப்பதையும் மக்கள் விரும்புவதையும் தானே தொடர்களில் காட்டுகிறோம்’ என்பார்கள். நேயர்கள் விரும்புவதற்குமேல் தேவை எவையோ மாண்புகள் பெற வேண்டியவை எவையோ அவற்றைக் கருவாக அமைத்தால் தொடர்கள் உருப்படும். சமூகக் கண்ணோட்டத்துடன் பொறுப்புணர்ந்து படைக்காதபோது வெறுப்பும் மறுப்பும் தான் தோன்றும்.

தொடர்களை ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் என்று இழுத்துக் கொண்டு போவதால் மட்டும் அவை வெற்றிப்படைப்புகள் ஆகிவிடுமா? நெடுந்தொடர்கள் கொடுந்தொடர்களாக இருக்கின்றனவே, இதற்கு யார் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்கள்?
கட்டுரையாளர் : சு. சுப்புராமன்
நன்றி :தினமணி

உன் குற்றமா? என் குற்றமா?

நகரத்தின் கடைவீதியில் சைக்கிள் ஓட்டவோ, நடைபாதையில் நடக்கவோ முடியாதபடி கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்போது, அதற்காக ஒரு குடிமகன் எரிச்சலும் மனக்கொதிப்பும் அடைந்தால், அதை நகரத்தின் வளர்ச்சி என்று நினைத்து சமாதானம் அடைய வேண்டிய அவசியம் இல்லை.

அந்த மனக்கொதிப்பு நியாயமானதுதான் என்று நமக்குப் புரிய வைத்திருக்கிறார் கொலம்பியா நாட்டின் பொகோடா நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் என்ரிக் பெனலோசா. ஏனென்றால், "கார்நிறுத்தும் இடம் (பார்க்கிங்) என்பது அந்நாட்டுக் குடிமகனின் அரசியல் சாசனம் வழங்கிய உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை'

சென்னையில் இந்திய தொழிற்துறை சம்மேளனம் (சிஐஐ) நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் இதை அவர் குறிப்பிடும்போது, நடைபாதையில் நடக்கும் சாதாரணக் குடிமகனின் ஆத்திரம் நியாயமடைகிறது.

இவர் இங்கே பேசியது மட்டுமல்ல, அவரது ஊரில் நடைமுறைப்படுத்தியவரும்கூட. சாலைகளில் கார் நிறுத்தங்களுக்குத் தடை விதித்தவர். "ஒரு நகரின் தரத்தை நிர்ணயிப்பது அந்நகரில் உள்ள மேம்பாலங்களோ, நெடுஞ்சாலைகளோ அல்ல. அகலமான நடைபாதைகள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைப் பாருங்கள். நடைபாதைகளுக்கும், சைக்கிளுக்கும் அதிக இடம் தந்திருக்கும்' என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

சென்னை நகரில் தற்போது அமைக்கப்படும் மேம்பாலங்கள்கூட 5 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைத்தான் தரும் என்றும் தீர்க்கமாகக் கூறுகிறார் அவர். "பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்துதான் தேவை. ஒரு பஸ் தடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 40,000 பேர் பயணம் செய்ய முடியும் என்றால், அதேநேரத்தில் ஒரு கார் தடத்தில் 2,000 பேர்தான் பயணம் செய்ய முடியும்' என்பது அவரது கருத்து.

ஏன் இது நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் புரியவில்லை? ஏன் அவர்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்க்காமல், மேம்பாலங்களும், கார் பார்க்கிங் இடங்களையும் விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள்?

சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய கடைவீதிகளின் இருபுறமும் கார் நிறுத்துமிடம் உள்ளது. இதில் நிறுத்த இடமில்லாத கார்கள், குறிப்பாக அரசியல்வாதி அல்லது அதிகாரிக்குச் சொந்தமெனில், போலீஸýக்கு அஞ்சாமல் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக!

தமிழகத்தின் நகரங்களில் உள்ள பல பள்ளிகள் (இங்குதான் அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கிறார்கள்) பெற்றோரின் கார்களை, குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை தங்கள் வளாகத்துக்குள் அனுமதிப்பதே இல்லை. இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் மிக விசாலமான விளையாட்டுத் திடல், கார்நிறுத்த வசதிகள் இருக்கின்றன. இத்தனை வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டு, காலை மாலை இருவேளையும் சுமார் ஒருமணி நேரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதே நிலைமைதான் கல்யாண மண்டபங்களிலும். நகரின் முக்கியப் பகுதியில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபங்கள் உள்ளன. வருபவர் அனைவரும் காரில் வருகிறார்கள். மண்டப வளாகம் கொள்ளாமல் சாலைகளில் நிறுத்தப்படும் கார்கள் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறும் காலதாமதமும் சொல்லிமாளாது.

கார் வைத்திருப்பதாலோ, சாலை வரி கட்டுகிறார் என்பதாலோ ஒருவர் பொதுமக்களுக்குச் சொந்தமான பொதுஇடத்தை-சாலையை-அடைத்துக் கொண்டு பார்க்கிங் வசதி பெற முடியுமா? அதைத் தனது அடிப்படை உரிமையாகக் கோருவது சரியாகுமா?

கார்களை நிறுத்துவதற்கான பலஅடுக்கு மாடிகளைப் பிரத்யேகமாக அமைத்துத் தர வேண்டிய பொறுப்பு கார்களைத் தயாரித்து வீதிகளில் விடும் நிறுவனங்களுக்கும் உண்டு அல்லவா! தங்கள் சொந்தப் பணத்தில், சொந்தமாக இடம்வாங்கி, வசதி செய்து தர வேண்டிய அவர்களது கடமையை நகராட்சி, மாநகராட்சி மீது திணிப்பது சரியல்ல.

சாதாரண நகரத்தைக்கூட கார்கள் படாதபாடு படுத்துகின்றன. அண்மையில் ஒசூரில் 500 நானோ கார்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மொத்தம் 4000 நானோ கார்கள் ஒசூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அங்கு 20,000 கார்கள் உள்ளன. மிகச் சிறிய நகராட்சி இந்தக் கார்களுக்கான நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் சாத்தியம்?

கார் நிறுத்தும் அடுக்குமாடிகளைக் கட்டித்தர வேண்டிய பொறுப்பு, செலவு இரண்டிலும் கார் உற்பத்தி நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டாமா? நகரத்தை கார்களால் நிரப்பும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புதான் என்ன?

இந்த வேளையில்தான் என்ரிக் பெனலோசா சொல்வதை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது: ""கார் பார்க்கிங் என்பது ஒரு குடிமகனின் அரசியல் சாசன உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை''.

கார் வாங்கும் சக்தி ஒரு சிலருக்கு இருக்கிறது என்பதாலேயே பெரும்பாலான குடிமக்களால் நடைபாதையில் நடக்கவே முடியாதென்றால் அது...
நன்றி : தினமணி

இலவசமா, உயர்கல்வியா?

கல்வித்துறையில் அவசரமாகச் சீர்திருத்தம் செய்து முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இந்தியா தனது பொருளாதார முன்னேற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது எனும் உண்மையை நோபல் பரிசுபெற்ற இந்தியா வம்சாவளி அறிஞர் அமார்த்தியா சென் கூறியுள்ளார்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலம் என இருந்த நிலைமை மாறி மிகவும் மோசமான நிலைமைக்கு கல்வித்துறை போய்விட்டது. உயர்கல்வியில் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை முழுமையாக அறிந்தும், எப்படி இந்தத் துறையை முன்னேற்றலாம் என்கிற சிறிய முயற்சிகூட நமது அரசால் செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்பிஏ பாடத்திட்டத்தை வாங்கிப் படித்துப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் எம்பிஏ மாணவர்கள் இரண்டு செமஸ்டர்களில் சுமார் 6 மாதங்களில், படிக்கும் அளவுக்கான பாடங்களை நம்மவர்கள் 2 ஆண்டுகள் கற்கிறார்கள் என்ற கசப்பான உண்மையும் பெருவாரியான பாடங்கள் எண்பதுகளில் அமெரிக்காவில் எம்பிஏ படித்தவர்கள் கற்ற பழமையான பாடத்திட்டம் என்பதும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

மேலும் சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருடன் இதுபற்றி விவாதித்தபோது, ""இது எவ்வளவோ பரவாயில்லை. தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் இதைவிடக் குறைந்த அளவும் தரமும் உடையன'' என்று அவர் குறிப்பிட்டபோது திகைப்பதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

சுமார் 30 மாணவர்கள் அடங்கிய எம்பிஏ வகுப்புக்குச் சென்று அங்கே பயிலும் மாணவர்களின் பட்டப்படிப்பு பற்றிக் கேட்டபோது, அவர்கள் எல்லோருமே தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்துப் பட்டம் பெற்றவர்கள். இப்போது ஆங்கிலப் பயிற்றுமொழியில் எம்பிஏ பாடங்களைக் கற்க வேண்டும். சரியான முறையில் ஆங்கிலம் தெரியாமல் மாணவர்கள் ஆங்கிலச் சொற்பொழிவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். நிச்சயமாக அவர்களால் ஆங்கிலப் பாடப்புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.

எம்பிஏ பட்டப்படிப்பில் ""ஆர்கனைஷேசனல் பிஹேவியர்'' அதாவது, நிறுவனங்களின் நடைமுறைகள் என்பது ஒரு பாடம். அதைப்பற்றி விளக்க முயற்சிக்கும்போது, அந்த இரண்டு ஆங்கிலச் சொற்களுக்கும் மாணவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆக, ஆங்கிலம் புரியாத மாணவர்கள் கஷ்டப்பட்டு பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதிப் பட்டம் பெற்று வேலையிலும் சேர்ந்துவிடுகிறார்கள். இவர்களால் எப்படித் தங்கள் வேலையைத் திறமையுடன் செய்ய முடியும்? உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழி ஆனதன் பலன்தான் இது!

சமீபகாலத்தில் "நாஸ்காம்' எனும் அகில இந்திய கம்ப்யூட்டர் கட்டமைப்பு, மெக்கின்ஸி என்னும் சர்வதேச அமைப்புடன் சேர்ந்து நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் எம்.ஏ., எம்.எஸ்சி., பட்டம் பெற்றவர்களில் பத்தில் ஒரு மாணவரும், பொறியியல் பட்டம் பெற்ற நான்கில் ஒரு மாணவரும் தான் வேலை செய்யத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களது படிப்புக்கு ஏற்ற வேலையில் திறம்படப் பணியாற்றும் சக்தியற்றவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் உயர்கல்வி தரம்தாழ்ந்துள்ள நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மேலும் பல சிக்கல்களை உருவாக்கலாம். இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் சராசரியாக பத்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் பாடத்திட்டங்களை பரிசீலனை செய்து, அதிகாரத்துடன் கூடிய புதிய பாடத்திட்டங்களை உருவாக்குகின்றன என தேசிய உயர்கல்விக்குழு தெரிவிக்கிறது. அவர்களின் கருத்தாய்வின்படி நம்நாட்டின் 90 சதவீதக் கல்லூரிகளில், 70 சதவீதப் பல்கலைக்கழகங்களும் மிக மோசமான தரத்தில் கல்வியைப் போதிக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் முந்தைய மத்திய அரசின் ஊழல் மிகுந்த கல்வி நிர்வாகம், லஞ்ச லாவண்யங்களில் திளைத்து, தகுதியில்லாத வகையில் நிறைய தனியார் கல்லூரிகளுக்கு சுயாட்சிப் பல்கலைக்கழகங்கள் எனும் தகுதியை வழங்கிவிட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின் 50 ஆண்டுகளில் 44 தனியார் சுயாட்சிப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக அர்ஜுன் சிங் பதவிவகித்த 5 ஆண்டுகளில் 49 தனியார் கல்வி நிலையங்கள் சுயாட்சித் தகுதி பெற்றன.

சுயாட்சி வழங்குமுன்னர் மத்திய அரசின் அங்கீகரிப்புத்துறை அதிகாரிகள் தனியார் கல்லூரிகளை தணிக்கைக்காகப் பார்வையிட வரும்போது கையூட்டுப்பெற்றுக் கொள்வதும் பின் தலைநகர் தில்லியில் நிறைய இடைத்தரகர்கள் அமைச்சர் வரை சிபாரிசு செய்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டும்தான் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. வியாபார நோக்கில் நடத்தப்படும் தனியார் சுயாட்சி பல்கலைக்கழகங்களால் இதுபோல் அதிகமான பணத்தைச் செலவுசெய்து கல்லூரியை அமைக்க நிலங்கள், பெரிய கட்டடங்கள் மற்றைய தளவாடச் சாமான்கள் ஆகியவற்றுக்குச் செலவும் செய்துவிட்டு தாங்கள் போட்ட பணத்துக்கு ஏற்ப வருமானத்தைப் பெற முடிவதில்லை.

விளைவு, மிக அதிகமான கல்விக்கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட தொகைக்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாநில அரசின் கெடுபிடி. வேறு வழியில்லாமல், கட்டணம் என்கிற பெயரில் ரசீது போட்டு வசூலிக்கும் சரியான தொகை ஒருபுறம் இருக்க, அதற்குமேல் கணக்கில் காட்டப்படாமல் பல்வேறு இனங்களில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான கல்விக் கட்டணத்தை இதுபோன்ற சுயாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைமுகமாக வசூல் செய்கின்றன. நடவடிக்கை எடுக்காமல் இருக்க மாநில அரசின் உயர்கல்வித் துறைக்கும் கப்பம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும் கப்பம். கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கவனிக்கப்பட்டு விடுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும்விட மிகவும் வேதனைதரும் விஷயம் உயர்கல்வி எதிர்கொள்ளும் ஆசிரியர் பற்றாக்குறை. ஆசிரியர்கள் அதிகம் தேவை என்பதால் அவர்கள் கேட்கும் சம்பளம் அதிகமாகிறது.

புதிதாக ஒரு தனியார் பொறியியற் கல்லூரி அல்லது உயர்கல்விக் கல்லூரி தொடங்கப்படும் வேளையில் மத்திய அரசின் யுசிஜி அனுமதி கிடைக்க குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர்கல்விப் பட்டங்கள் உடைய அனுபவமிக்க ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு பொறியியல் கல்லூரி தொடங்க அதன் முதல்வர் வேலைக்கு பி.ஹெச்டி. பட்டம் பெற்ற கல்லூரி முதல்வர் பணியமர்த்தப்பட வேண்டும்.

இதுபோன்ற பட்டம் பெற்று உயர்கல்வி ஆசிரியர்களின் அனுபவம் உள்ளவர்கள் நிறையப்பேர் இல்லையென்பதால் மத்திய யுசிஜி அனுப்பும் தணிக்கைக்குழு புதிய கல்லூரியைப் பார்வையிட வரும்போது, ஏற்கெனவே ஒரு கல்லூரியில் முதல்வராக வேலையில் இருக்கும் ஒருவரை, தணிக்கை செய்யப்பட இருக்கும் கல்லூரியின் முதல்வராக வேலை செய்வதாகப் போலி தாக்கீதுகளை உருவாக்கி அவரையும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து தணிக்கை நாளில் தொடங்கப்பட இருக்கும் கல்லூரி வளாகத்தில் இருக்கச் செய்து தணிக்கையை வெற்றிகரமாகப் பல கல்லூரிகள் நடத்தி முடித்து விடுகின்றன.

அனுமதி பெற்றபின் முன் அனுபவம் இல்லாத புதுப் பட்டதாரிகளையும் அல்லது பணியில் இருந்து ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்களையும் கல்லூரியில் விரிவுரையாளர்களாக அமர்த்தி இதுபோன்ற கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. எனவே, தரமான கல்வி என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது.

ஆரம்ப காலங்களில் அரசுக் கல்லூரிகளை அதிகம் தொடங்கி நடத்த பட்ஜெட்டில் பணம் இல்லை என்பதால், கல்வியை தனியார் மயமாக்க வேண்டிய கட்டாயம் நம்நாட்டில் உருவானது. பின் வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் இக் கல்லூரிகள் லஞ்ச லாவண்ய சூழ்நிலைகளால் சரியானபடி கல்வி போதனையில் கவனம் செலுத்தச் செய்ய முடியாத சூழ்நிலை.

தரமற்ற கல்வியைப் பெறும் அதிக மாணவர்கள் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து வருபவர்களே! வசதி படைத்தவர்கள் நம் நாட்டில் கல்வி நிலையங்களிலோ அல்லது வெளிநாட்டின் பல்கலைக்கழகங்களிலோ சேர்ந்து பட்டம் பெற்று விடுகிறார்கள். வெளிநாட்டில் சென்று பட்டம் பெறும் இந்திய மாணவர்கள் ஆண்டுக்குச் செய்யும் செலவு மட்டும் ரூ. 35,000 கோடி என ரிசர்வ் வங்கியின் கணக்கு கூறுகிறது. இவர்கள் நிச்சயமாக அடித்தட்டு மாணவர்களாக இருக்க வழியில்லை.

பள்ளிக் கல்வியின் தரம்தாழ்ந்த நிலையில் நம் பொருளாதாரத்துக்குத் தேவையான தொழிலாளர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதும், உயர்கல்வித்தரம் பாதிக்கப்பட்டால் ""அறிவார்ந்த சமூகம்'' உருவாகாது என்பதும் ஆராச்சியாளர்களின் சித்தாந்தம். அதாவது பள்ளிக்கல்வி, ஐடிஐ எனப்படும் தொழிற்கல்வி, பி.ஏ., பி.காம்., போன்ற பட்டப்படிப்புகளில் தேறியவர்களே நமது பொருளாதார உற்பத்தி அங்கமான தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பல தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைக்குச் சேர்ந்து உற்பத்தியைப் பெருக்க முடியும். கல்வி வளர்ச்சியில் முன்னேறாத பல நாடுகளுக்குக் கேரளத்திலிருந்து வேலைக்குச் செல்பவர்களை நினைவில் கொள்க.

அதுபோல, தரமான உயர்கல்வியில் உருவாகும் பட்டதாரிகள் தான் அரசு மற்றும் தனியார் நிறுவன உயரதிகார வேலையில் சேர முடியும். இவர்கள்தான் உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களாகப் பணியாற்றப் போகிறவர்கள்.

இதுபோன்றவர்கள் உருவாக்கும் அறிவார்ந்த சமூகம் இனி வரும் காலங்களில் ஒரு நாடு முன்னேறுமா இல்லையா என்பதை முடிவு செய்யும். ""இனி உலக அரங்கில் ஏழை பணக்கார நாடுகள்' என்பதைவிட அறிவாற்றல்மிக்க, அறிவற்ற நாடுகள் என்கிற பாகுபாடுதான் செய்யப்படும். அதாவது பெரிய அளவில் தொழிற்சாலைகள் வியாபாரங்கள் உள்ளநாடு என்பதைவிட நிறைய அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடுகள்தான் பணக்கார நாடாக அமையும்'' என்றார் பீட்டர் ட்ரக்கர் என்னும் மேதை.

தரமான உயர்கல்விதான் ஆராய்ச்சிக்கு அடிப்படை. இதுபோன்ற ஆராய்ச்சியில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் விற்பனை செய்யப்பட்டு வெளிநாட்டுப் பணம் தரமான அறிவுசார்ந்த சமூக அமைப்புடைய நாடுகளுக்குச் சென்றுவிடும் என்ற அடிப்படையில் இந்தியா தற்காலத்தில் பின்னேறி வருகிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை.

நம்நாட்டின் இளைஞர்களில் 11 சதவீதத்தினர்தான் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடிகிறது. அமெரிக்காவில் 83 சதவீதம் இளைஞர்கள் கல்லூரிப் படிப்பில் சேர்கிறார்கள்.

2012-ம் ஆண்டு 11 சதவீதம் இந்திய இளைஞர்கள் கல்லூரியில் சேருவதை 15 சதவீதமாக அதிகரிக்க நம்நாட்டில் மேலும் 1500 பல்கலைக்கழகங்கள் தோன்ற வேண்டும். இன்றைய கணக்குப்படி நம்நாட்டில் 300 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்ப்பது என்பது வேறு. அவ்வாறு சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வியை அளிப்பது என்பது முற்றிலும் வேறு.

தற்போதைய 11 சதவீதம் 2012-ம் ஆண்டு 15 சதவீதமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கையாக உயர ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 410 கோடி தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் 11-வது வளர்ச்சித் திட்டத்தில் உயர்கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.77 ஆயிரத்து 933 கோடி மட்டுமே.

இலவசங்களைவிட மிக முக்கியமானது உயர்கல்வி என்பது திண்ணம். விழித்துக் கொள்ளுமா மத்திய, மாநில அரசுகள்?
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி