Sunday, November 29, 2009

இந்தியப் பெருங்கடல் யாருக்காக?

இந்தியா புவியியல் அடிப்படையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பெரிய தீபகற்ப நாடாகும். இமயமலையை ஓர் எல்லையாகவும் மற்ற மூன்று பக்கங்களும் கடல்களே எல்லைகளாகவும் இருப்பது இயற்கையின் கொடை.

உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலும், பரப்பளவில் ஏழாவது இடத்திலும் இருக்கிறது. இதன் அழகிய கடற்கரை 6,100 கி.மீ. நீளமானது.

இந்த நீண்ட கடற்கரை எல்லையாக மட்டும் இல்லாமல் உணவுத் தேவையை நிறைவு செய்யும் மீன்வளம் நிறைந்தது. கடல்வாழ் உயிரினங்களும், கனிம வளங்களும், நிலத்தடி நீரும், கண்கொள்ளாக் காட்சிகளும் கொண்டவை. இந்தக் கடல்வளம் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.

உலகமயம் மற்றும் தனியார்மயம் என்கிற பெயரால் இந்தியாவின் கடல் எல்லைகளை அந்நிய நாட்டு வணிகக் கப்பல்களுக்குத் திறந்து விடுவதற்கே மத்திய அரசு துடிக்கிறது.

சொந்த நாட்டு மீனவ மக்களைத் துரத்தியடிக்கிறது. இதற்கு ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நிர்பந்தம் என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது.

இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல்களின் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில், வெளிநாட்டுக் கப்பல்களை மீன்பிடிக்க இந்திய அரசு அனுமதித்திருப்பது, சுதந்திரமான ஆட்சியுரிமைக்கே அறைகூவல் இல்லையா?

அயல்நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் தேசிய மீன் இறக்குமதிக் கொள்கையும் இந்திய மீன்பிடித் தொழிலை முடக்கிப்போடும் முக்கிய நடவடிக்கைகளாகும்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1980-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி மாநில முதலமைச்சர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதன்படி கடற்கரையில் 500 மீட்டர் வரை மீனவர் பயன்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது 21 முறை திருத்தம் செய்யப்பட்டு 1991-ல் கடற்கரை மேலாண்மைச் சட்டமானது.

இது மேலும் திருத்தப்பட்டு இந்திய நாட்டுக்குள் ஓர் அந்நியப் பிரதேசமாக உருவெடுத்துவரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இந்திய நாட்டுக் கடற்கரையை ஒழுங்குபடுத்தி உரியவர்களுக்கு அளித்திடவே 2009 சட்டம் வருகிறது. இதன் முன்வடிவு இதுவரை மீனவர்களுக்குத் தரப்படவில்லை.

ஈழத் தமிழரைப் போலவே இந்தியத் தமிழ் மீனவர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. அவர்களைப் பற்றிய செய்திகள் இல்லாமல் பொழுது விடிவதில்லை.

இலங்கை கடற்படைத் தாக்குதல், சிறைப்பிடிப்பு, மீனவர்களைக் காணோம், மீனவர்கள் காயம், மீனவர்கள் சாவு, மீனவர்களின் படகுகளும் மீன்களும் வலைகளும் பறிமுதல் என இது விரியும்.

மீனவர்களின் வாழ்க்கையே அபாயகரமானதுதான். தொன்றுதொட்டு அவர்கள் செய்துவரும் தொழில் எதிர்பாராத முடிவுகளைக் கொண்டதுதான். அவர்கள் அந்த அலைகடலைக் கண்டு அச்சம் கொண்டதில்லை. அந்தக் கடல்தாய் காப்பாற்றுவாள் என்கிற அசையாத நம்பிக்கை அவர்களுக்குண்டு.

ஆனால், அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் மேல் பழியைப் போட்டு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வரும் போக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், அவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஆதரவு தரும் துணிவுதான்.

இப்போது சீன - சிங்கள கூட்டுக் கடற்படைகள் செய்யும் ஆதிக்கம் அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதுபற்றி தமிழக அரசு பொறுமையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்போது மீன்பிடிக்கும் தொழிலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

கடலில் 12 கடல் மைல் தாண்டி மீன் பிடித்தால் ரூ. 9 லட்சம் வரை அபராதம்; 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்; அத்துடன் உரிமத்தை ரத்து செய்யலாம்; சோதனை செய்யும் அதிகாரிகளைத் தடுத்தால் 10 லட்சம் அபராதம்; ஓராண்டுச் சிறை; கைதாகும் மீனவர்கள் ஜாமீனில் வெளிவர வேண்டுமானால் படகு உள்ளிட்ட உபகரணத்தின் மதிப்பில் பாதியை ஜாமீன் தொகையாகச் செலுத்த வேண்டும்.

ஆனால் வெளிநாட்டுக் கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் நமது எல்லைக்குள் வருவதற்குத் தடையேதும் இல்லை; அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது~இவ்வாறு மத்திய அரசின் புதிய சட்டம் கூறுகிறது.

கடல் மீன்தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மைச் சட்டம் 2009 என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இந்தப் புதிய மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல மீனவ மக்களிடையே வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மசோதா உள்நாட்டு மக்களுக்கு வழியை அடைத்துவிட்டு, அயல்நாட்டு வணிகர்களுக்கு வசதி செய்து கொடுக்கிறது.

வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில்கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்கவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது எனத் தெரிகிறது.

இறையாண்மையைப் பற்றி வாய்கிழியப் பேசும் இந்திய அரசு, இப்படியொரு சட்டம் கொண்டுவர வேண்டிய தேவை என்ன? கச்சத்தீவை இலங்கைக்கு எடுத்துக் கொடுத்ததுபோல் இப்போது இந்தியப் பெருங்கடலும் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொடுக்கப்படுகிறதா?

இந்திய முதலாளிகளிடம் பணத்தையும், ஏழை மக்களிடம் வாக்குகளையும் வாங்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்த இவர்கள், யாருக்காகச் சேவை செய்யப் போகிறார்கள்? உள்நாட்டு மக்களுக்கா? உலக வர்த்தகத் திமிங்கிலங்களுக்கா? இதற்கான விடையை இந்தப் புதிய மசோதா கூறாமல் கூறுகிறது.

காலமெல்லாம் கடலோடு போராடிக் கொண்டிருக்கும் மீனவ மக்கள் இனிமேல் இந்திய அரசோடும், இலங்கை அரசோடும் போராட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசு இன்னமும் ஒரு பார்வையாளராகவே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியா இயற்கை வளங்கள் நிறைந்தது. இந்தியக் கடற்கரைகள் உலகின் மிகச்சிறந்த சூழலியல் வளங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன.

இதில் தமிழகக் கடற்கரை குமரியிலிருந்து சென்னை வரை 1026 கி.மீ. நீளமானது. இங்கு 12 ஆயிரம் விசைப்படகு மீனவர்களும், ஒன்றேகால் லட்சம் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நம்பி 10 லட்சம் பேர்.

தலைமுறை தலைமுறையாக இந்தக் கடற்கரைகளையே தங்களது தாய்மடிகளாகக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் கடன்பட்டுக் கடன்பட்டு கண்ணீரிலேயே மூழ்கிக் கொண்டிருப்பவர்கள்; துன்பப்பட்டுத் துயரப்பட்டு மனமும், உடம்பும் மரத்துப் போனவர்கள்.

இனிமேல் இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்கள். செத்த பாம்பை எத்தனை முறை அடிப்பது?

அவர்கள் இந்தக் கடல் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தவிர கண்ட சுகமென்ன? அந்த மக்களுக்குக் கல்வியில்லை; வேலைவாய்ப்பு இல்லை; இருப்பதற்கு இடமில்லை; உடுப்பதற்குத் துணியில்லை; கவலைகளைத் தவிர சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நேரமே இல்லை.

கடல் தோன்றியபோதே தோன்றிய மீனவர்கள் சமுதாயம் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இன்னும் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

நாடு விடுதலை பெற்று இத்தனை காலமாகியும் இந்தத் தேர் நகரவே இல்லை. இழுப்பதற்கான முயற்சிகளில் இதன் கயிறுகள் இற்று இற்று அறுந்து விழுகின்றன.

மண்டல் குழு பரிந்துரையின் மையக் கருத்தாக, ""ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான தேவைகள் அரசியல் சட்டத்துக்கு உள்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய இயலும்'' எனக் கூறப்படுகிறது. ஆனால் இதன் பரிந்துரைகள் கவனிக்கப்படவில்லை.

மண்டல் குழு மற்றும் மண்டைக்காடு கலவரத்தை விசாரித்த வேணுகோபால் குழு பரிந்துரைத்தபடி மீனவர் சமுதாயத்துக்குத் தனித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுபற்றி மத்திய - மாநில அரசுகள் ஏதும் செய்யவில்லை; மௌனமாகவே இருக்கின்றன. மீனவர்களின் அரசியல் பங்கேற்புக்கான கோரிக்கை இது.

அரசியல் பிரவேசம் அவர்களுக்கு ஒரு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்று நம்புகின்றனர்.

இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் ஏறுகிறவர்களுக்கு ஏணியாகவே இருக்க முடியும்? நாங்களும் ஏறிப் பார்க்க வேண்டாமா? என்று கேட்கின்றனர்.

""2020-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல, இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குங்கூட அல்ல, ஒரு பணி இலக்கு...'' என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

அந்த வளர்ந்த இந்தியா இந்நாட்டு குடிமக்களுக்கான இந்தியாவாக இருக்க வேண்டாமா? புதிய கடற்கரை மேலாண்மைச் சட்டம் இந்தியப் பெருங்கடல் யாருக்காக என்ற பெரிய கேள்வியை எழுப்புகிறது.
கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி

No comments: