Thursday, April 2, 2009

ஆறு மாதங்களில் இல்லாத அளவு பங்கு சந்தை முன்னேறியது

லண்டனில் இன்று துவங்கியிருக்கும் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ( ஜி 20 ) மாநாட்டில், பொருளாதார விஷயத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் நல்ல முடிவுகள் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருப்பதால், இன்று உலகம் முழுவதும் உள்ள பங்கு சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பாதிப்பு இந்திய பங்கு சந்தையிலும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக பங்கு சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்திருக்கின்றன. பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 10,400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,200 புள்ளிகளுக்கு மேலும் சென்றது. இந்த நிலை இன்று முழுவதும் இருந்தது எனலாம். இந்திய பங்கு சந்தையின் இந்த அபரிவிதமான வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தது அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தான். அவர்கள்தான் இன்று பெருமளவில் பணத்தை சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லார்ஜ்கேப்பிலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஸ்மால் கேப் மற்றும் மிடில் கேப்பிலும் அதிகம் பங்குகளை வாங்கி குவித்தனர். இதன் காரணமாக வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 446.84 புள்ளிகள் ( 4.51 சதவீதம் ) உயர்ந்து 10,348.83 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 150.70 புள்ளிகள் ( 4.92 சதவீதம் ) உயர்ந்து 3,211.05 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

No comments: