இந்தப் பங்கு தான் என்று இல்லை; எல்லா பங்குகளும் கீழ் நோக்கியே சென்றன. வீட்டு உபயோகப்பொருட்கள் துறையைத் தவிர மற்ற எல்லாத் துறைகளும் கீழே விழுந்தன. நேற்று முன்தினம் மார்ச்சின் கடைசி நாள். பங்குச் சந்தை மிகவும் கடுமையான பைனான்சியல் ஆண்டை (கடந்த ஏப்ரல் முதல் இந்த மார்ச் வரை) சந்தித்தது பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் தடவை. மார்ச்சின் கடைசி தினம் சுபமாகவே முடிந்தது. பல காலாண்டுகளுக்குப் பின் பங்குச் சந்தை ஒரு காலாண்டு முடிவில் லாபங்களுடன் முடிந்திருக்கிறது. மார்ச்சில் மட்டும் பங்குச் சந்தை 9.2 சதவீத லாபம் தந்துள்ளது. நேற்று முன்தினம் காலை அல்லாடிய பங்குச் சந்தை முடிவில் 140 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது. மியூச்சுவல் பண்டுகள் தங்களது மதிப்பைக் கூட்டுவதற்காக பங்குகளை சந்தையில் வாங்கியதாலும் சந்தை மேலே சென்றது. சந்தைகள் மேலே சென்றதால் டாலருக்கு எதிராக ரூபாயும் வலுவடைந்தது; 44 பைசாக்கள் வலுவடைந்து 50.73 அளவில் வந்தது.
மார்ச் முழுவதும் டாலர் ரூபாய் விளையாட்டு காட்டிக் கொண்டு தான் இருக்கிறது; மேலே ஏறுவதும், கீழே இறங்குவதுமாக. ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் எப்படி போகும் என்று யோசிக்கும் நிலைமை வந்து விட்டது.
உற்பத்தித் துறை இந்தக் காலாண்டில் சிறிது தெம்பு காட்டியதால் சந்தை நேற்று மேலே சென்றது. வியாபாரங்கள் சரியில்லாததால் கடன்கள் வாங்குவது பெருமளவு குறைந்திருந்தது. ஆனால், கடந்த காலாண்டில் கம்பெனிகள் பாண்ட்கள் மூலம் மட்டுமே 37 ஆயிரத்து 800 கோடி ரூபாய்களை கடனாகத் திரட்டியுள்ளன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 193 புள்ளிகள் கூடி 9,901 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 39 புள்ளிகள் கூடி 3,060 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இந்த நிதி ஆண்டில் தங்கம் தான் மின்னியிருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் 28 சதவீதம் லாபம் கண்டிருப்பர். அதேசமயம், வங்கியில் நிரந்தர வைப்புத் திட்டங்களில் போட்டவர்களுக்கு 8 முதல் 10 சதவீதம் வரை கிடைத்திருக்கும். பங்குச் சந்தை 38 சதவீத நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.
தங்கம் விலை கூடிக்கொண்டே செல்வதால் தேவை குறைந்து வருகிறது. அதனால், இறக்குமதி இல்லை என்றே சொல்லலாம். 2009ம் ஆண்டு ஜனவரியில் 20 டன்னுக்கு மேலேயும், 2007ம் ஆண்டு ஜனவரியில் 65 டன்னுக்கும் மேலாகவும் இறக்குமதி செய்துள்ளோம். 2009ம் ஆண்டு ஜனவரியில் கிட்டதட்ட ஒன்றுமே இறக்குமதி செய்யப்படவில்லை (ஒரு டன் அளவில் தான் இருக்கும்). வரும் மாதங்களில் தேவை கூடும் என்பதால் இறக்குமதி அதிகரிக்கலாம்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment