Thursday, April 2, 2009

தங்கம் இறக்குமதி கணிசமாக குறைவு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு, அதிகரிக்கும் விலை ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்திய சந்தையில் தங்கம் இறக்குமதி செய்யப்படவில்லை. இந்திய தங்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர் வட்டாரங்கள் கூறியதாவது: சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு தயங்குகின்றனர். தற்போது வாங்குவதை விட, இன்னும் சில மாதங்கள் கழித்து தங்கம் வாங்கலாமென மக்கள் நினைக்கின்றனர். இது போன்ற காரணங்களால் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு டன் தங்கம் கூட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வில்லை. கடந்தாண்டின் இதே மாதத்தில் 21 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரியிலும் ஒரு டன் தங்கம் கூட இறக்குமதி செய்யப்படவில்லை. இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், 1.9 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 55 டன் இறக்குமதி செய்யப்பட்டது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச்சில் ஒன்பது டன் தங்க நாணயங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இறக்குமதி செலவை விட, உள்நாட்டில் தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, சில வியாபாரிகள் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தை வாங்கி, அவற்றை நாணயங்களாக மாற்றி ஏற்றுமதி செய்கின்றனர். இருந்தாலும், மார்ச் மாதத்தில் தங்க நாணயங்களின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
மாறாக பழைய தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது. மும்பையில் மட்டும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தலா ஏழு டன்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் அந்த விற்பனையும் குறைந்துள்ளதோடு, உள் நாட்டில் அதன் தேவையும் குறைந்துள்ளது. தற்போது 10 கிராம் 15,000 ரூபாய் என்பதைத் தாண்டி இருப்பதாலும், விலை அதிகரிக்கும் என்ற கருத்திலும் பழைய தங்கத்தை விற்பதில் ஆர்வமும் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தங்கம் வாங்குவதை தள்ளிப் போட்டிருக்கும் மக்களின் மனோபாவம் காரணமாக, இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர் வேலைவாய்ப்பு குறையும் என்றும் கருதப்படுகிறது
நன்றி : தினமலர்


No comments: