Thursday, December 31, 2009

புதிய முறையில் பணவீக்க விகிதம்

பணவீக்க விகிதம் விலைவாசியைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி என்று சொல்லுவார்கள் . இது எந்த அளவு உண்மை?

கடந்த அக்டோபர் மாதம் முதல், பணவீக்க விகிதத்தைக் கணக்கிடும் முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. அதேபோல், பணவீக்க விகிதத்தை அறிவிக்கும் கால அட்டவணையையும் மாற்றியுள்ளது. இதன்படி, உணவுப் பொருள்களின் விலைகள் அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்கிடும் நடைமுறை இந்தியாவில் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய முறைப்படி, டிசம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க
விகிதம் 18.65 சதவீதமாக இருந்தது. புதிய முறை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், கடந்த பல மாதங்களாக உணவுப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்திருப்பது, பணவீக்க விகிதத்தில் பிரதிபலித்திருக்குமா என்பது சந்தேகமே!

மத்திய அரசு செய்துள்ள மாற்றம் என்ன? எல்லா பொருள்களின் மொத்த விலையின் அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிட்டு, அதை அரசு வாராவாரம் அறிவித்துக் கொண்டிருந்தது. அக்டோபர் மாதம் முதல், பணவீக்க விகிதத்தை மாதம் ஒருமுறை அறிவிக்கிறது. இது ஒரு மாற்றம்.

இரண்டாவது மற்றும் முக்கியமான மாற்றம் என்னவெனில் உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைப் பொருள்களின் மொத்த விலை அடிப்படையில், பணவீக்க விகிதம் வாரம்தோறும் அறிவிக்கப்படுகிறது.

முன்னதாக என்ன நடந்தது என்றால், உணவுப் பொருள்களின் விலை ஏற்றம், தனியாகத் தெரியாமல், அது பல்வேறு பொருள்களின் விலை ஏற்றத்தில் இரண்டறக் கலந்து மூழ்கிப் போனது.

புதிய மாற்றத்தினால், உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் இனி தனியாக, தெளிவாகத் தெரிய வழி பிறந்துள்ளது. அந்தவகையில், புதிய மாற்றம் வரவேற்கப்பட வேண்டும். அதேநேரம், ""மொத்தவிலை அடிப்படையே'' தொடர்கிறது என்பதால் ஏமாற்றம் ஏற்படுகிறது.

உலகில் பெரும்பான்மையான நாடுகள் மொத்த விலையிலிருந்து மாறி சில்லறை விலை அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிடத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் இன்னமும் மொத்த விலை அடிப்படையில்தான் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது.

மக்கள் பொருள்களை வாங்குவது சில்லறை விலையில் தானே? சில்லறை விலையில் எப்போதுமே விலை கூடுதல்தான்! ஆகையால்தான், பணவீக்க விகிதம் குறைந்துள்ள காலங்களில்கூட, சந்தையில் விலைகள் குறையவில்லையே, ஏன்? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இதனால் அரசு சார்ந்த புள்ளிவிவரம் என்றாலே, மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது.

இதுபோதாது என்பதுபோல், இந்தியாவில் வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது. சில்லறை விலையில் கணக்கிடும்போதுகூட, நான்கு வகையில் கணக்கிடப்படுகின்றன.

உதாரணமாக, விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு விதம்; கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேறு விதம் - எனப் பல விதங்களில் கணக்கிடுகிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்களுக்குக் கணக்கிடுகையில், உணவுப் பொருள்களுக்கு 69.2 சதவீத "வெயிட்டேஜ்' தரப்படுகிறது. கிராமப்புறத் தொழிலாளர்களுக்குக் கணக்கிடும்போது, உணவுப் பொருள்களுக்கு 66.8 சதவீத "வெயிட்டேஜ்' தரப்படுகிறது.

அதாவது, 100-ல் 69.2 பங்குகள்; 100-ல் 66.8 பங்குகள் உணவுப் பண்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.

இப்படி பல வகையில் கணக்கிடப்படும் வழிமுறைகளில், மொத்த விலையில் கணக்கிடப்பட்டு வந்த வழிமுறையை மட்டும் தான் தற்போது மேலே கூறிய வகையில் மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

÷இந்த மாற்றத்தின் பயனாக ஓரளவு தெளிவு ஏற்பட்டிருந்தாலும், முழுமையான தெளிவு ஏற்பட வேண்டும் எனில், மேலும் சில மாற்றங்கள் தேவை.

தற்போதைய வழிமுறைகள் 1942-ம் ஆண்டு முதல் ஏறக்குறைய அதே வடிவில் தொடர்கின்றன.

தற்போதைய முதல் தேவை, மொத்த விலையில் அல்லாமல் சில்லறை விலை அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிட வேண்டும்.

உலகில் பல நாடுகளுக்கு இது சாத்தியம் என்றால் இந்தியாவுக்கும் அது சாத்தியமே. பாரத ரிசர்வ் வங்கி இதனை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, பொருள்களை வகைப்படுத்துவதிலும், அவற்றுக்கு வழங்கும் "வெயிட்டேஜ்'லும் சீர்திருத்தம் தேவை. விலைவாசிகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒன்று, அரிசி, கோதுமை, காய்கறி, பால், பழம், எண்ணெய் உள்ளிட்ட 98 உணவுப் பொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 22 சதவீத "வெயிட்டேஜ்' பெறுகின்றன. அதாவது 100-ல் 22 பங்குகள் உணவுப் பண்டங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.

இரண்டாவதாக, பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற 19 எரிபொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 14 சதவீத "வெயிட்டேஜ்' அல்லது பங்குகள் பெறுகின்றன.

மூன்றாவதாக, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் 318 பொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 64 பங்குகள் பெறுகின்றன.

இவ்வாறு மக்களால் பயன்படுத்தப்படும் 435 பொருள்களின் விலைகளைக் கணக்கெடுத்து மொத்த விலைவாசி பற்றிய விவரம் கணக்கிடப்படுகிறது.

இதற்கு அடிப்படை ஆண்டு என 1993-94-ம் ஆண்டு கருதப்படுகிறது. அந்த ஆண்டு என்ன விலைவாசி நிலவரமோ அதை 100 என வைத்துக்கொண்டு, தற்போதைய விலைவாசி ஏற்ற, இறக்கம் கணக்கிடப்படுகிறது.

ஓராண்டு காலத்தில் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தை அந்த ஆண்டின் பணவீக்கத்தின் அளவுகோலாக வைக்கிறார்கள்.

தற்போது புதிய முறைப்படி, உணவுப் பண்டங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இணைத்து அவற்றின் பணவீக்க விகிதத்தை மொத்த விலை அடிப்படையில் வாராவாரம் அறிவிக்கிறார்கள். தொழிற்கூடங்களில் தயாரிக்கப்படும் பொருள்கள் உள்ளிட்ட பணவீக்கத்தை, மொத்த விலைகளின் அடிப்படையில், மாதாமாதம் அறிவிக்கிறார்கள்.

உணவுப் பண்டங்களுக்கு தற்போது தரப்படும் 22 பங்குகள் (வெயிட்டேஜ்) மிகவும் குறைவு. இது கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைநிலை பிரதிபலிக்கும்.

அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் வேகமாக மாறி உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, தற்போதுள்ள 98 உணவுப் பொருள்களை மறு ஆய்வு செய்து, மாறியு ள்ள சூழலுக்கு ஏற்பத் திருத்தி அமைக்க வேண்டும்.

ஆக, மொத்த விலை அடிப்படையிலிருந்து சில்லறை விலைகள் அடிப்படைக்கு மாறுவது; உணவுப் பொருள்களுக்கு கூடுதல் "வெயிட்டேஜ்' வழங்குவது மற்றும் உணவுப் பொருள்களின் பட்டியலில் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது ஆகிய மூன்று அம்சங்களிலும் ஒரே நேரத்தில் சீர்திருத்தம் மேற்கொண்டால்தான், பணவீக்க விகிதம் விலைவாசியின் நிலைக்கண்ணாடியாக அமையும்; அத்துடன் அரசின் புள்ளிவிவரங்களில் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி


உணவு பணவீக்கம் 19.83%ஆக அதிகரிப்பு

டிசம்பர் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உணவுப் பொருளுக்கான பணவீக்கம் 19.83 சதவீதமாக அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் மற்றும் உருளைகிழக்கின் விலை அதிகரித்து இருப்பதே, பணவீக்க உயர்விற்கு காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில்(கடைசியாக) உணவுப் பொருளுக்கான பணவீக்கம் 18.65 சதவீதமாக இருந்தது.
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் உருளைக்கிழங்கின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது, பருப்பு வகைகளின் விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை 40.75 சதவீதமும், காய்கறிகளின் விலை 46.7 சதவீதமும் அதிகரித்துள்ளன. அரிசி விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

உணவுப் பொருள் அல்லாத ரப்பர் மூலப்பொருள் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
நன்றி : தினமலர்

பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவு பொருட்கள் விலை உயர்வு : பிரபல நிறுவனங்கள் முடிவு

சர்க்கரை, பால் மற்றும் வெண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால், பிரபல நிறுவனங்களின் பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப் பொருட்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்த, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (எப்.எம்.சி.ஜி.,) தயாரிப்பு நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே மற்றும் குஜராத்

கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எப்.,) போன்றவை தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. உணவுப் பொருட்கள் பணவீக்கம் கடந்த பத்தாண்டுகள் இல்லாத அளவாக, தற்போது 20 சதவீதத்தை அடைந்துள்ளது. எனவே, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்க பிரிட்டானியா நிறுவனம், தங்கள் தயாரிப்பு பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப்பொருட்களின் விலையை, 5 சதவீதம் முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில், பார்லே நிறுவனம், 'பார்லி ஜி' (88 கிராமின்) விலையை 4 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேபோன்று பால் விலை அதிகரிப்பை தொடர்ந்து,

அமுல் நிறுவனம், தயாரிப்புகளின் விலையை பிரிவு வாரியாக 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மற்றொரு பெரிய நிறுவனமாக ஐ.டி.சி., அடுத்த இரண்டு வாரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இத்துறையில் உள்ள பிற பெரிய நிறுவனங்கள், தற்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

இதுகுறித்து, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வினிதா பாலி

கூறுகையில், 'எங்களின் அனைத்து பிராண்டுகளின் விலையையும், 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை, சமீபத்தில் அதிகரித்துள்ளோம். நாங்கள் லாபகரமான வளர்ச்சியையே எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இதுகுறித்து, குஜராத் கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறியதாவது: மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க, தயாரிப்புகளின் விலையை 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளோம். 100 கிராம் வெண்ணெயின் விலையை 23 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளோம். சமீபத்தில், எங்கள் அனைத்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் விலையையும் அதிகரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எனினும், 'தங்கள் தயாரிப்பு பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் தற்போது இல்லை' என, டாபர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் துகால் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


Wednesday, December 30, 2009

ஏன் இன்னும் பாராமுகம்...?

படிப்பனுபவம் வேறெந்த சுகானுபவத்தையும் விடச்சிறந்தது என்பது உய்த்துணர்ந்தவர்களுக்குப் புரியும்.

இசை,​​ நடனம்,​​ நாடகம்,​​ திரைப்படம்,​​ ஓவியம் போன்ற நுண்கலைகளைப் போலவே எழுத்தும் படிப்பும் ஓர் உயரனுபவம் என்பதோடு நில்லாது சிந்தனைக்குச் சாவி கொடுத்துச் செயலாக்கத்துக்கு அடித்தளம் அமைக்கும் அரும்பணி புரிகிறது.​ இந்தியச் சிந்தனை மரபு,​​ பல மொழிகளில் பல வடிவங்களில் வெளிப்பட்டு வந்தது-வருகிறது.

இன்று யந்திர கதியில் கோடுகளிடை ஓடும் சாரமற்ற வாழ்க்கையாக மாறிவரும் பரபரப்புச் சூழலில்,​​ நமது கலாசாரமும் கலைகளும் அருமருந்தாக உள்ளன.​ மக்கள் தொகைப் பெருக்கத்தாலும்,​​ சுய-புறக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் தகுதியற்ற போட்டிகளாலும் மாயமான் வேட்டையாகி வருகிற வாழ்க்கையில் வேரோடிய நமது நேற்றைய சிந்தனைகளும்,​​ சரித்திரமும்,​​ இலக்கியமும் இன்றைக்குப் புறந்தள்ளப்பட்டு விடுகிற அபாயம் தொடர்கிறது.​ இது நாளைய இந்தியாவுக்கு அபாயச் சங்கு ஊதும் தருணமாகி விட்டது.

வெறும் "மதிப்பெண்'தான் இன்றைய கல்வி.​ வெறும் வியாபாரமாகிவிட்ட கல்விச் சந்தையில் அறிவுதரும் கல்வியா கிடைக்கிறது?

"கல்வி அறிவு' என்பது பாமரர்க்கும்,எளியோர்க்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம்.​ ஆனால் கல்விதான் வழங்கப்படுகிறது இன்றிங்கே.​ அறிவு புகட்டப்படுவதில்லை.​ ​ ​ நிதியமைச்சர் அன்பழகன் அடிக்கடி கூறுவதுபோல,''படித்தவரெல்லாம் படிப்பவரல்ல''!

ஆம்.

​ ​ சற்று எளிதாகக் கூற முற்படின் வடிவேலு நகைச்சுவை போல்,​​

''தெரியும்;​ ஆனால் தெரியாது'' என்பது போல்தான் இது!

வெறும் "பாடத்திட்டக் கல்வி' மட்டுமே முட்ட முட்டப் புகட்டப்படுகிறது.​ பொது அறிவும்,​​ பல்துறை தாகம் ஏற்படுத்தும் படைப்பாளுமைத் திறன் வளர் கல்வியறிவும் அறவே ஒதுக்கப்பட்டு நசுக்கப்படுகிறது கல்விக்கூடங்களில்.

அரசு மற்றும் பெரும்பாலான தனியார் கல்விக் கூடங்களில் நூலகமோ,​​ நூல்களோ காணக்கிடைக்காதவையே!​ ஆகவே நூலகரும் கிடையாது.

பள்ளிப் பாடத் திட்டத்தில் "நூலக வகுப்'பை மீண்டும் கொண்டு வந்து அதை முழு ஆர்வத்துடன் செயல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தோம்.​ ஆட்சி மாறுகிறது.​ ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்.​ ஆனால் எக்காரணம் கருதியோ இக்கோரிக்கை உரிய கவனம் பெறுவதே இல்லை.

முன்பு தமிழகக் கல்லூரிகளில் நல்லொழுக்கக் கல்வியும்,​​ உயர்நிலைப் பள்ளிகளில் வாரமொரு வகுப்பு-​ 45 நிமிடம் நூலக வகுப்பு,​​ கைத்தொழில் ஆகியவையும் பாடத்திட்டத்திலேயே நடைமுறையில் இருந்தன.

இதன்மூலம் பள்ளிப் பருவத்திலேயே பாடநூலைத் தாண்டி பொது அறிவுத் தேடல் மாணவரிடம் விதைக்கப்படுகிறது.​ வாழ்நாள் முழுவதும் இந்தப் படிப்பனுபவ சுகம் அவருக்கு ஒளிகாட்டுகிறது.

இதேபோல் கைத்தொழில் வகுப்பில் ஒரு வாரம் தச்சு வேலை,​​ ஒரு வாரம் தையல்,​​ ஒரு வாரம் தோட்ட வேலை,​​ ஒரு வாரம் சுற்றுச்சூழல் தூய்மை,​​ ஒரு வாரம் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தருதல் போன்ற அடிப்படை விஷயங்கள் மூலம் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைச் சொந்த உழைப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளத் தூண்டும் மனவலிவும் உழைப்பின் உயர்வும் ஊட்டப்பட்டு விடுகிறது.

இவையெல்லாம் நான் படித்த பள்ளி நாள்களில் எனக்குக் கிட்டிய அருமையான அஸ்திவாரங்கள்.

ஆனால் இன்று இவை பாடத்திட்டத்தில் இருந்து எங்கே விரட்டப்பட்டன?​ ஏன் விரட்டப்பட்டன?

இன்று பல பள்ளிகளில் விளையாட்டு உடற்பயிற்சி கூட,​​ மாணவர்களின் கவனத்திலிருந்து மறைந்து வருகிறதே என ஓர் ஆசிரியர் கவலையுடன் கூறினார்.

நமது அண்டை மாநிலங்களில் இன்றும் நூலக வகுப்பு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு,​​ தனியார் பள்ளிகளில் நூலகம்,​​ நூல்கள்,​​ நூலகர்,​​ நூலக வகுப்பு எனச் சீராகச் செல்கிறது.​

மாநிலம் முழுவதிலிருந்தும் பதிப்பாளர்களிடம் மாதிரிப் புத்தகங்கள் பெறப்பட்டு வகுப்பு-வயது வாரியான புத்தகங்கள் தேர்வு செய்யப் பெற்று பட்டியலிடப்படுகின்றன.​ இந்நூல்கள்தான் பள்ளி நூலகங்களில் வாங்கி மாணவர்களுக்கு மத்திய வாங்குகைத் திட்டத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பெறும் இம்முறையை ​(தமிழகத்தில் முன்னர் நிகழ்த்தப் பெற்றது)​ நாமும் மீண்டும் தொடர வேண்டும்.

வளரும் இளம் பருவத்திலேயே படிப்பனுபவம் விதைக்கப்பட்டால்தான் அடுத்த தலைமுறையில் மனவளம் நிறைந்த ஆரோக்கியமான தமிழகத்தை வளர்த்தெடுக்க முடியும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

தமிழகம் முழுவதும் மாநகராட்சி,​​ நகராட்சி அமைப்புகள் மூலம் மக்களின் சொத்துவரி விதிப்பில் 10 சதவீதம் ​(முன்பு 5 சதவீதம்)​ நூலக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.​ ஆனால் ஆண்டுதோறும் விரட்டி விரட்டி வசூலிக்கப்படும் இவ் வரித் தொகை உடனுக்குடன் நிதித்துறை வழியாக நூல்கள் வாங்குவதற்கு வந்து சேருவதில்லை.

நூலகத் துறைச் சம்பளம்,​​ வாடகை,​​ நிர்வாகச் செலவுகள் அரசிடமிருந்து நேரடியாகப் பட்டுவாடா செய்யப்படுகிறது.​ ஆனால்,​​ மூலாதாரமான புத்தகங்கள் வாங்கும் தொகை இவற்றுடன் ஒப்பிட்டால் -​ எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டால் -​ ​ வேதனைதான் மிஞ்சும்.

நமது தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நூல்கள் வாங்குவதும்,​​ வாங்காமல் தவிர்க்கப்படுவதும் ஒரு "பெரிய புராணம்'.

அதற்கு மேல் விலை நிர்ணயம் என்பதும் விலை நிர்ணய உத்தரவைச் செயல்படுத்தும் விதமும் மிக மிக விநோதமானது;​ விசித்திரமானது.

நாளுக்கு நாள் உற்பத்திச் செலவு அதிகரித்து வந்தாலும் பொதுவாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படவேண்டிய நிலை கடைப்பிடிக்கப்படுவதில்லை.​ சுமார் நான்கு,​​ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.​ விலை நிர்ணயம் செய்த பின்பும் அதைச் செயல்படுத்தத் தாராளமாக ஆண்டுகளைத் தள்ளிப்போடும் நிர்வாக யந்திரம் தங்களது சம்பளம்,​​ படிகளை எல்லாம் முன்தேதியிட்டுப் பெற்றுக் கொள்கிறது உயர்த்தப்படும்போது.

பதிப்பாளர்களுக்குப் பாராமுகமே காட்டப்படுகிறது.​ "கட்டாத விலை' ​ என்பதால் சமர்ப்பிக்கப்படுவதும் இல்லாமல்,​​ பெறப்பட்ட ஆணைக்கு நூல்கள் வழங்கப்படாமலும் தவிர்க்கப்படுகிறது.

இது இப்படியிருக்க,​​ ''எமது நூல்களுக்கு ஆணை வழங்கப்படவில்லையே?'' என முறையிடச் சென்றால் "ஆணை பற்றிப் பேசக்கூடாது' என்பதுபோல் நோட்டீஸ் ஒட்டிய கதவடைப்பு!

"இவ்வருட அலொக்கேஷன்-​ ஒதுக்கீடு அவ்வளவுதான்.​ நீங்கள் எத்தனை புத்தகங்கள் சமர்ப்பித்தீர்கள்-​ எத்தனை நூலுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று சதவீதம்தான் அளவுகோல்.

என்ன புத்தகம் வாங்கப்பட்டுள்ளது,​​ என்ன புத்தகம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

"நூல் தேர்வு' என்பது மர்மக்குகை இருட்டு ரகசியம்!

நூலகத் துறையால் புறக்கணிக்கப்படும் புத்தகங்கள் மக்களின் நேரடி கவனத்தில் ஈர்க்கப்பட்டு தொடர் பதிப்புகள் காண்கின்றன.​ ஆனால்,​​ பொது நூலகக் கிளை நூலகங்களை நாடும் வாசகருக்கு இக்கருத்துகள்-​ நூல்கள் சென்றடைய வேண்டுமென்கிற எழுத்தாளரின் சார்பில் பதிப்பாளர் முயல்கையில் இந்த சாரமற்ற பதில்களே கிடைக்கின்றன.

இவையெல்லாம் களையப்பட தமிழ்ப் பதிப்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது நூலகத் துறை மூலம் தமிழ் நூல்கள் வாங்குவதற்கென்றே-​ குறிப்பிடப்பட்ட 5 சதவீதம் மட்டுமாவது கல்வி நிதி ஒதுக்கீட்டில் வருடாந்திர நிதியாக வழங்கப்பட வேண்டும்.

நூல் தேர்வில் உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்-தவிர்க்கப்பட்ட -​ ஆணை வழங்கப்படாத நூல்களை -​ முதலில் உரிய அமைச்சரும் அதிகாரியும் ஆண்டுதோறும் கண்காணிக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட நூல்கள் தகுதியுடையவை என அறியப்பட்டால் அவற்றுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும்-மாவட்ட வாரியாக உடனுக்குடன் பதிப்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.​

​ மழை,​​ வெயில் இயற்கைப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாகப் புத்தகக் காட்சி நடத்த ஊருக்குள் கண்காட்சி வளாகம் அமைத்துத்தர வேண்டும்.

தில்லியில் "பிரகதிமைதான்' போல் மாநகராட்சி,​​ நகராட்சிகளில் இக் "கண்காட்சி வளாகம்' கட்டப்பட்டு ஆண்டுதோறும் இருமுறை தலா பதினைந்து நாள்களுக்குப் புத்தகக் காட்சி நடத்த குறைந்த வாடகையில் இடம் தர வேண்டும்.​ மற்ற நாள்களில் ஆண்டு முழுவதும் வகைவகையான கண்காட்சிகள் நடத்தலாம் அங்கே.

மேலே குறிப்பிட்ட,​​ மூன்று கோரிக்கைகளையும் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி தமிழ்ச் சமூகம் மீண்டும் தமது பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பாதையில் பீடு நடையிட்டுப் பயணிக்க தமிழக அரசு கடைக்கண் பார்வையைப் பதிக்க வேண்டும்.​ 33-வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில்,​​ எழுத்தாளர்கள் சார்பிலும்,​​ பதிப்பகங்கள் சார்பிலும்,​​ புத்தகம் படிக்கும் தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் இது.​ புத்தாண்டு நல்ல ஆண்டாகப் புலரும் என்கிற நம்பிக்கையுடன்...
கட்டுரையாளர் :அகிலன் கண்ணன்
நன்றி : தினமணி

தனித்திரு,​​ விழித்திரு...

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன்,​​ ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6-வது முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்.​ பார​​திய ஜனதா கட்சி ஆத​ரவு தெரி​வித்​துள்​ளது.​

மாநிலத்தின் வளத்துக்கு நிலையான ஆட்சி அவசியம் என்பதாலும்,​​ மக்கள் நலன் கருதியும் ​ இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.​ கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்போது இதைத்தானே எல்லா கட்சிகளும் சொல்லி வருகின்றன.​ அதனால் இதிலொன்றும் ஆச்சரியமில்லை.​ ​

சிபுசோரனுக்கும் முதலமைச்சர் பதவிக்கும் ராசியே கிடையாது.​ 2005-ல் முதல்வராகப் பதவியேற்றார்.​ ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பத்து நாளில் பதவியை இழக்க வேண்டியதாயிற்று.​ இரண்டாவது முறையாக 2009-ல் முதலமைச்சரானார்.​ ஆனால் அவரால் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.​ இப்போது 3-வது முறையாக முதலமைச்சராகிறார்.​ அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை,​​ நிரந்தர எதிரியும் இல்லை என்பது தெரிந்திருந்தாலும்,​​ சிபு சோரன் கூடுதலாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய,​​ சொந்த அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்கும் தகவல்-​ முதல்வர் பதவியும் நிரந்தரமில்லை.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை அமைச்சராக சிபுசோரன் பதவி வகித்தபோது,​​ அவர் மீதான கொலை வழக்கு காரணமாக,​​ அவரை அமைச்சர் பதவியிலிருந்து ​ நீக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்றத்தில் நடத்திய அமளி,​​ கூச்சல் அத்தனையும் இப்போதும் கண்முன் நிற்கிறது.​ இப்போது சிபுசோரன் தன் மீது தொடுக்கப்பட்ட இரண்டு கொலை வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார்.​ ஆகையால் அவருக்கு தங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுவதாக பாஜக சொல்லிக்கொள்ள முடியும்.

ஜார்க்கண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட நாள் முதலாக மூன்று முறை பாஜகதான் ஆட்சி அமைத்துள்ளது.​ இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக,​​ தற்போது வேறு வழியின்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.​ இதனை சிபுசோரன் நன்கு அறிவார்.​ பாஜகவின் இந்த பலவீனத்தை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

பாஜக மட்டுமன்றி அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு உள்பட நான்கு அமைப்புகளின் ஆதரவில்தான் சிபுசோரன் ஆட்சி அமையவிருக்கிறது.​ அரசியல் சட்டப்படி இத்தகைய கூட்டணி ஆட்சி சாத்தியமாக இருந்தாலும்,​​ ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் இது எத்தகைய கேடுகளை ​ ஏற்கெனவே விளைவித்திருக்கிறது என்பதற்கு முந்தைய முதலமைச்சர் மது கோடா ஒரு சாட்சி.​ அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பிலிருந்து உருவான மது கோடா,​​ காங்கிரஸ்,​​ ஜேஎம்எம் முரண்களைப் பயன்படுத்திக்கொண்டு முதலமைச்சராகி,​​ ரூ.4000 கோடி பணம் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,​​ இப்போது சிறையில் இருக்கிறார் என்பதே போதும் இந்த மாநிலத்தின் வளத்தையும் ஊழல் வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதற்கு.

ஜார்க்கண்ட் கனிம வளம் நிறைந்த மாநிலம்.​ சுமார் 2 கோடி மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்.​ இன்னமும்கூட இந்த மக்கள் மிகவும் மோசமான வறுமையில் வாழ்க்கை நடத்தும் நிலைமை மாறவில்லை.​ ​ சிபுசோரன் தன் வாழ்க்கையில் முதன்முதலாக கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளானதே,​​ பழங்குடியல்லாத வெளியாட்களே வெளியேபோ என்ற போராட்டத்தின்போது சிருடி என்ற கிராமத்தில் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்தான்.​ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சின்னமே,​​ பழங்குடியினரைக் குறிக்கும் வில்லும் அம்பும்தான்.​ பழங்குடியினருக்கான போராட்டத்தில் உதித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,​​ பழங்குடியினர் முன்னேறவில்லை.

இந்த மாநிலத்தில் உள்ள 32,620 கிராமங்களில் 45 சதவீத கிராமங்கள்தான் மின்இணைப்பு பெற்றுள்ளன.​ இன்னும் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருண்டுதான் கிடக்கின்றன.​ வெறும் 8,484 ​ கிராமங்களுக்கு மட்டுமே அணுகுசாலை இருக்கிறது.​ இந்த நிலையில் அந்த மக்களின் வாழ்க்கை,​​ கல்வி,​​ வேலைவாய்ப்பு குறித்து அதிகமாக புள்ளிவிவரங்களை அடுக்க வேண்டியதில்லை.​ சொல்லாமலே புரியும்.

கனிம வளத்தைக் கொள்ளையடிக்க வரும் பெரும் நிறுவனங்கள் ஆட்சியாளர்களை தன்வயப்படுத்தத் தவறுவதில்லை.​ ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து விலகி ​ விலகிப் போய்,​​ அடுத்த தேர்தலுக்கு மட்டுமே இறங்கி வருகிறார்கள் என்பதுதான் இம்மாநில அரசியல் நிலவரம்.​ ​

நிலைமை இப்படி இருக்கையில்,​​ இந்த மாநிலத்தில் இத்தனை கட்சிகள் ஆதரவுடன் ஒரு கட்சி தனியாக ஆட்சி அமைத்தாலோ அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலோ பல்வேறு சமரசங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது.​ சமரசங்கள் என்றால்,​​ அரசியல் அகராதியில் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?​ ​

தேசியக் கட்சியான பாஜகவுக்கு உண்மையாகவே மாநிலத்தில் நிலையான ஆட்சி மக்கள் நலன் ஆகியவைதான் முக்கியம் என்றால்,​​ ஆட்சியில் பங்கு கொள்ளாமல் அதே நேரத்தில் ஒரு கண்காணிப்பாளரைப் போல செயல்பட வேண்டும்.​ தவறு நேரும் எந்த நிமிடத்திலும் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.​ தான் ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவார்களே என்ற எண்ணத்தில் தவறுகளைச் சகித்துக் கொள்ளுமேயானால்,​​ அந்த மாநிலத்தில் பல "மது கோடா'-க்கள் வளம் பெறுவார்கள்.​ மக்கள் வளம் பெற மாட்டார்கள்.
நன்றி : தினமணி

புதிய கட்டண குறைப்பு: ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் புதிய கட்டண குறைப்பினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எவருடனும் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 60 வினாடிக்கு​ 20 காசு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.​ உள்ளூர் அழைப்புகளுக்கு மாத கட்டணமாக ரூ.​ 27 செலுத்தி நிமிஷத்துக்கு 20 காசு கட்டண வசதியைப் பெறலாம் என்றும் எஸ்டிடி அழைப்பு செய்வோர் ரூ.​ 77 கட்டணத்தை செலுத்தி இந்த வசதியைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ​ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் அதை 30 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.​ பிற நிறுவன மொபைலுடன் தொடர்பு கொண்டு பேசினால் வாடிக்கையாளர் தேர்வு செய்துள்ள திட்ட அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Tuesday, December 29, 2009

வேலியே பயிரை மேய்ந்தால்...

ஹரியாணா மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவியும், டென்னிஸ் வீராங்கனையுமான ருசிகாவை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு சம்பவம் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மாதக் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சமீபத்தில் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வேலியே பயிரை மேய்ந்ததுதான்.

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, அதுவும் மக்களின் காவலனாக இருக்க வேண்டியவர், ஏதும் அறியாத மாணவியை தனது வக்கிர எண்ணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்தது 1990}ம் ஆண்டு. அப்போது ரத்தோர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்ற உயர்ந்த பதவியில் இருந்துள்ளார். விஷயம் வெளியில் தெரிந்தவுடன் அதை மூடிமறைக்க ரத்தோர் கையாண்ட வழி என்ன தெரியுமா? ருசிகாவின் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுதான். ருசிகாவின் சகோதரர் அஷுவின் கைகளைக் கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸôர் துன்புறுத்தியுள்ளனர். வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும், குடும்பத்தையே அழித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

"மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்பதைப்போல குடும்பத்தாரை மிரட்டி, துன்புறுத்தியது கண்டு மனம் வெறுத்த ருசிகா, சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின் 1993}ம் ஆண்டு டிச. 28}ம் தேதி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் உயர் அதிகாரியை மாநில அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கு முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.

குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தால் அவரைப் பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரத்தோருக்கு கூடுதல் டி.ஜி.பி., மாநில டி.ஜி.பி. என பதவி உயர்வு கொடுத்துக் கௌரவித்துள்ளது.

பள்ளி நிர்வாகம் வெளியேற்றிவிட்ட நிலையில் சமுதாயத்தில் இனி நிம்மதியாக வாழ முடியாது என்ற சூழலில், அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகள் இறந்துவிட்டாலும், அதற்குக் காரணமான குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நினைத்த ருசிகாவின் பெற்றோர், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வழக்கைத் துணிச்சலுடன் நடத்தி வந்துள்ளனர்.

நீதிமன்றத் தலையீட்டின் பேரிலேயே ரத்தோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சம்பவம் நடந்து 9 ஆண்டுகளுக்குப் பின்.

இந்த வழக்கில் இப்போது, அதாவது 19 ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 6 மாதம் கடுங்காவல்; ஆயிரம் ரூபாய் அபராதம். சட்டத்தின் பாதுகாவலன் செய்த படுபாதகச் செயலுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை வெறும் கண்துடைப்புதான்.

ஏற்கெனவே பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓய்வுபெற்றும் ராஜவாழ்க்கை வாழ்ந்து வரும் ரத்தோருக்கு இந்தத் தண்டனை ஒன்றும் பெரிதல்ல. இது கீழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புத்தானே! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இருக்கவே இருக்கிறது. ஜாமீன் பெற்றுவிட்டால் சிறைவாசத்தைக் கழிக்காமலே காலத்தை கழித்துவிடலாம் என்ற மனப்பாங்கில்தான் அவர் இருப்பார்.

இப்போது நம்முள் எழும் கேள்வி இதுதான். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான ஓர் அதிகாரி, பதவி உயர்வு பெற்றதுடன் எந்தப் பிரச்னையுமின்றி ஓய்வுபெற்றது எப்படி என்பதுதான்.

கிரிமினல் குற்றவாளிகளுக்கும் போலீஸôருக்கும் தொடர்பு இருப்பதுபோலவே, கிரிமினல் எண்ணம் கொண்ட போலீஸôருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதுதான் இதுபோன்ற செயல்களுக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. மற்றொருபுறம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சட்டத்தின் காவலனே குற்றவாளிக் கூண்டில் நின்றால் தண்டனை கடுமையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால், அதிகார வர்க்கத்தினருக்கு அரசியல்வாதிகளே கேடயமாக இருந்து காப்பாற்றி வருகின்றனர் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மையாகும்.

குற்றச்சாட்டுக்கு ஆளான ரத்தோர் மீது துறை ரீதியில் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததாகவும், ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஓய்வுபெற்ற மற்றொரு போலீஸ் உயர் அதிகாரியான ஆர்.ஆர்.சிங் கூறியுள்ளார். அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறிவரும் அரசியல் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி வருகின்றனர். இதனால் எந்தப் பயனுமில்லை.

ருசிகா வழக்கில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்க 19 ஆண்டுகள் காலதாமதம் ஆகியுள்ளதைக் காணும்போது அவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

போலீஸ் அதிகாரி ரத்தோர், ருசிகாவிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு மட்டும் ஆளாகவில்லை. அவர் தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டியிருக்கிறார்.

எனவே இந்த வழக்கைப் புதிதாகக் கையிலெடுத்து விசாரித்து அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தால் எந்தவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும், அரசியல் செல்வாக்கு இருந்தால் தண்டனையின்றித் தப்பிவிடலாம் என்ற நிலை இருக்குமானால், குற்றங்கள் அதிகரிக்குமே தவிர குறைந்துவிடாது.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டுமானால், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நிலை உருவாக வேண்டும். இதற்கு சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறையிலும் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதுதான் ஒரே வழி.
கட்டுரையாளர் : ஜெ.ராகவன்
நன்றி : தினமணி

வரவேற்கத்தக்க முடிவு

பென்னாகரம் இடைத்தேர்தலைத் தள்ளிவைப்பதும் என்றும், தேர்தலுக்கான மறுதேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பலவற்றின் கோரிக்கையும் பொங்கல் பண்டிகைக் காலத்தில் இத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதுதான்.

மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில், 'இடைத்தேர்தல் தேதியை மாற்றி அமைத்தால், அதுவே தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்த கருத்துக்கு திமுக சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையின்போது வாழ்த்துத் தெரிவிக்காமல், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்துத் தெரிவிப்பவர் முதல்வர் கருணாநிதி. அதிலும் குறிப்பாக தை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தவர். அப்படியிருக்க, தேதியை மாற்ற வேண்டாம் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து ஆச்சரியம்தான். இருப்பினும், பென்னாகரம் தொகுதியில் பாமகவுக்குக் கணிசமான செல்வாக்கு இருப்பதையும், அவர்கள் ஏற்கனவே இத்தொகுதியில் இறங்கிப் பணியாற்றத் தொடங்கிவிட்டனர் என்பதையும் பார்க்கும்போது, இத்தேர்தலைத் தள்ளிவைக்காமல் சீக்கிரம் முடித்துவிட திமுகவின் அரசியல் தந்திரம் தெரிகிறது.

இந்தக்கூட்டம் நடத்தப்படும் முன்பாகவே, தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த கட்சிகள் தெரிவ்த்த சில காரணங்களில் ஒன்று இது- வாக்குகளை விலைக்கு வாங்கும் கட்சியினர் பணப்பட்டுவாடாவை பொங்கள் இனாமாக விநியோகிக்கும்போது இதைப்போலீசார் தடுப்பதோ அல்லது பணத்தைப் பறிமுதல் செய்வதோ இயலாத காரியமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பணம் கொடுக்கும் கட்சிகளை யாரும் தடுத்துவிட முடியாது என்பதைக் கடந்தகால இடைத்தேர்தல்களில் பார்த்தாகிவிட்டதாலும் தேர்தல் இனாம் அல்லது பொங்கல் இநாம் கேட்டும் வாங்கும் அளவுக்கு வாக்காளர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது என்பதாலும் இது ஒரு முக்கிய காரணமாகச் சொல்லும்படியாக இல்லாமல் போனது.

ஜனவரி 6-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்த இடைத்தேர்தலின் வெற்றியில் குரிப்பிடத்தக்க வேறுபாட்டை உருவாக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் வரதராஜன் குறிப்பிட்டுள்ள கருத்து அரசியல் ரீதியில் ஏற்புடையதே.

இந்த விவகாரங்கள் ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகை பொங்கள். அதுவும் மூன்று நாளைக்குக் கொண்டாடப்படுகின்ற திருவிழா. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மக்கள் அனைவரும் வியாபாரம் மற்றும் பண்டிகைக்கான கொள்முதல்களில் பரபரப்பாக ஈடுபடுவது இந்த நேரத்தில்தான். எல்ல வியாபாரிகளும் தங்கள் நிறுவனங்களை இரவு 10 மணிக்கு மேலும் கூட திறந்து வைத்திருந்து வியாபாரம் பார்த்துவிட ஆர்வம் காட்டும் தருணம் இது. பொங்கல் பண்டிகைக் காலத்தில் இடைத்தேர்தல் நடத்தினால்,அத்தனை வியாபாரமும் பாதிக்கும்.

மேலும், தேர்தலுக்காகக் களப்பணி ஆற்ற வேண்டிய தொண்டர்கள் அனைவருமே உள்ளூர் மக்கள். இவர்கள் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள்.

இடைத்தேர்தலில் எல்லா கட்சித் தொண்டர்களும் தங்கள் தொழிலை ஒதுக்கிவிட்டு தேர்தல் கள்த்தில் குதிப்பது ழக்கம்தான் என்றாலும், மற்ற நாள்களைக் காட்டிலும், பண்டிகைக் காலத்தில் இவ்வாறு அனைவரும் தங்கள் தொழிலை ஒதுக்கிவிட்டு தேர்தல் கள்த்தில் குதிப்பது வழக்கம்தான் என்றாலும், மற்ற நாள்களைக் காட்டிலும், பண்டிகைக் காலத்தில் இவ்வாறு அனைவரும் தங்கள் தொழிலை விட்விட்டு அரசியல் களத்தில் குதிப்பதால் மக்களுக்குத்தான் அதிக பாதிப்பு. பென்னாகரம் போன்ற சிறிய ஊரில் அத்தனை தையலர்களும் அவரவர் கட்சிக்காகத் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டால், அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கான புதுத்துணியைத் தைப்பது எங்கே? ஒருவேளை, போட்டியிடும் கட்சிகள் தங்கள் தொழிலாளர் அணியின் தையலர்கள் அனைவரையும் அழைத்துவந்து இலவசத் துணி, இலவசமாகத் தைத்துத் தரும் பணியைச் செய்தால் அதைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தடுக்கும்? இதுபோன்றுதான் எல்லா வேலைகளிலும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பண்டிகை கொண்டாடும் ஆர்வத்துக்குத் தடையாக அமையும். வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆள் கிடைக்காது.

சென்ற ஆண்டு தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு அரிசி, வெல்லம் எல்லாமும் இலவசமாகத் தரப்பட்து. இப்போது இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்தச் சலுகையை அவர்களுக்கு அளிக்க முடியாது. இதற்காகத் தேர்தல் முடிந்த பிறகு பொங்கல் அரிசி,. வெல்லம் கொடுத்து, தனியாக ஒருநாள் பொங்கலிட்டுக் கொண்டாட முடியமா?

இப்பிரச்சனையில் 'தேர்த்ல் தேதியை மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிப்பதில்லை' என்று முதல்வர் கருûணாநித் கூறியிருக்கிறார். ஏன் இத்தகைய நடைமுறை இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மாநிலத்தில் தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் அதற்கான அதிகாரிகள் இருக்கும்போது, ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கான தேதியை மாநில அரசுடன் கலந்து ஆலோசிப்பதில் என்ன தவறு இருக்க முடியம்? தேதியை நிர்ணயிக்கும் உரிமையைத் தேர்தல் ஆணையம் விட்டுக் கொடுக்க வேண்டியதேயில்லை. ஆனால் இரண்டு மூன்று தேதிகளை மட்டும் தெரிவிக்கும்படி மாநில அரசைக் கேட்டாலும் போதுமே! தொகுதி இடம்பெற்றுள்ள ஒரு மாநில அரசு, இந்த அளவுக்குக்கூட கலந்தோசிக்க உரிமை பெற்றிருக்கவில்லை?

இத்தனை கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கருத்துக்களைக் கேட்டிருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவின் நடவடிக்கையும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவும் சரியானதே. இருப்பினும், இடைத்தேர்தல் தேதியைத் தீர்மானிக்கும்போது மாநில அரசின் கருத்துக்களைக் கேடடறிவதை இனியாகிலும் தேர்தல் ஆணையம் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இது புதிய நடைமுறையே என்றாலும், இதை மேற்கொள்வதால் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு எந்த கௌரவக் குறைச்சலும் ஏற்பட்டுவிட்டது.
நன்றி : தினமணி

மொபைல் போனை அறிமுகப்படுத்துகிறது கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் 2010ஆம் ஆண்டில் மொபைல் விற்பனையில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆண்ட்ராய்ட் என்ற மொபைல் போனுக்கான இயங்குதள மென்பொருளுடன் வெளியாகவிருக்கும் இந்த மொபைல் போன்களுக்கு நெக்சஸ் ஒன் என்று பெயரிடப் பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. கூகுள் நிறுவனத்துக்காக மொபைல் போனை தாய்வான் நாட்டை சேர்ந்த எச்.டி.சி., மொபைல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிடவிருக்கிறது என தொழில்நுட்பம் சம்பந்தப்பட் டெக் கிரன்ச் என்ற பிளாக் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Monday, December 28, 2009

சுமக்கிறவனுக்குத்தான் வலி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி பிரச்னைக்காக அவைத் தலைவரின் உள்வட்டத்திற்குள் நுழைந்து கூச்சல் போட்டதற்குக் காரணம்,​​ தேர்ந்தெடுத்த மக்கள் தங்களைப் பார்த்து சங்கடமான கேள்விகளைக் கேட்டுவிடக்கூடாதே என்ற எண்ணத்தினால்தான்.​ பத்திரிகைகளும் ஊடகங்களும் விலைவாசி உயர்வில் இவர்கள் காட்டிய அதீத அக்கறையைக் கண்டு,​​ நல்லெண்ணம் கொண்டுவிடுவார்கள் என்பதால்தான்.​ ​

ஆனாலும்,​​ மத்திய அரசு இதைத் தவறாகப் புரிந்துகொண்டதாலோ அல்லது மிகச் சரியாகவே புரிந்துகொண்டதாலோ என்னவோ, நாடாளுமன்ற உணவுக்கூடத்தில் சப்பாத்தி ஒரு ரூபாய்,​​ டீ ஒரு ரூபாய்,​​ சாப்பாடு ரூ.12.50,​ பிரியாணி ரூ.22 என்று - பாவம் வறுமையில் பரிதவிக்கும் மக்களவை உறுப்பினர்களுக்காக குறைந்த விலையை நிர்ணயம் செய்தது.​ பொதுச் சந்தையில் எந்தவொரு பொருளின் விலையும் ஒரு பைசாகூட குறையவில்லை.

இது போதாதென்று,​​ மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்தப் பாடுபட வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் சொல்ல,​​ மத்திய அரசின் தவறான கொள்கையால்தான் விலையேற்றம்; இதை மாநில அரசின் மீது தள்ளிவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத் பதிலடி கொடுக்க,​​ ஒரு சொற்போர் நடந்துகொண்டிருக்கிறது.​ இதனால் எந்தப் பொருளின் விலையும் ஒரு ரூபாய் கூட குறையப் போவதில்லை.

ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறது மத்திய அரசு.​ விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என்றும் கூறுகிறது.​ ஆனால் பொருள்களின் விலையோ தாறுமாறாக உயர்ந்துகொண்டே போகிறது.​ இந்திய அரசு விலைவாசி உயர்வை மொத்தவிற்பனை விலைப் பட்டியல் ​(ஹோல்சேல் பிரைஸ் இன்டக்ஸ்)​ மூலம் கணக்கிடுகிறது.​ மொத்தவிற்பனை விலைப் பட்டியல் வாரம் தோறும் கணக்கிடப்பட்டாலும்கூட,​​ இதன் மூலம் கிடைக்கும் விலைஉயர்வு சராசரியாக 0.3 சதவீதமாகவே இருக்கிறது. ஏனென்றால்,​​ மொத்தக் கொள்முதல் செய்து அதைப் ​ பதுக்கி,​​ அல்லது சில்லறை வணிகமாக மாற்றப்படும்போதுதான் ஒரு பொருளின் விலை குறைந்தபட்சம் 100 சதவீதத்திலிருந்து 400 சதவீதம் வரை உயர்கிறது.

அரசு வெளியிடும் நுகர்வோர் விலைப் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகத் தெரியும்.​ ஒவ்வொரு மாதமும் வெளியாகும் இந்தப் பட்டியலில் விலைஉயர்வு என்பது 9 முதல் 13 சதவீதம் வரை உள்ளது.

விலைவாசி உயர்வைக் கணக்கிடும்போது குறைந்தபட்சம் 435 வகைப் ​ பொருள்களின் விலையைக் கணக்கிடுகின்றனர்.​ இதில் அதிக முக்கியத்துவம் தரும் பொருள்ககளான-​ மின்சாரம்,​​ பெட்ரோலியப் பொருள் போன்றவைகளின் விலை மாற்றமின்றி இருக்கின்றன.​ ஆனால் கணக்கிடுவதில் குறைந்த முக்கியத்துவம் பெறும் காய்கறிகள்,​​ இறைச்சி போன்ற உணவுப் பொருள்களின் விலை சந்தையில் தாறுமாறாக உயர்ந்து கிடக்கிறது.​ இதனால்தான் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அரசு சொன்னாலும்,​​ நடுத்தரக் குடும்பத் தலைவனின் கையைக் கடிக்கிறது.

சாதாரணமாக இந்தியர்கள் உணவுக்காகத் தங்கள் வருவாயில் 42 சதவீதத்தைச் ​ செலவழிக்கின்றனர்.​ போக்குவரத்துக்கு 9 சதவீதமும்,​​ பொழுதுபோக்குக்கு 8 சதவீதமும் செலவிடுகின்றனர்.​ மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது.​ இதில் உணவுப் பொருள்களின் விலை கூடிக்கொண்டே வந்தால்,​​ அவர்கள் தங்கள் சம்பளத்தில் பெரும்பகுதியை உணவுக்கே கொடுத்துவிட்டால்,​​ மற்ற செலவுகளுக்கு என்ன செய்வார்கள்.​ இவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும்,​​ தங்கள் மருத்துவச் செலவுக்கும்,​​ சேமிப்புக்கும் என்ன செய்வார்கள்?

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் கிலோ ஒரு ரூபாய் அரிசியை அனைத்துக் குடும்பங்களுமே வாங்கி,​​ அதைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை நிஜம் என்றே வைத்துக்கொண்டாலும்,​​ எண்ணெய்,​​ பருப்பு,​​ மிளகாய்,​​ மிளகு,​​ பூண்டு,​​ வெங்காயம் இவற்றின் விலைஉயர்வு சாதாரண குடும்பத்துக்குத் தாளமுடியாத சுமையாக இருக்கிறது.​ தமிழ்நாட்டில் அனைவரும் ஒரு ரூபாய் அரிசிதான் வாங்குகிறார்கள் என்றால்,​​ பொன்னி அரிசியின் விலை வாங்குவார் இல்லாததால் குறைந்திருக்க வேண்டுமல்லவா,​​ 25 கிலோ சிப்பம் விலை ரூ.1000-த்தை நெருங்குகிறதே ஏன்?​ ​

கடந்த ஆறு மாதங்களில் சமையல் எண்ணெய்,​​ பருப்புவகை,​​ அரிசி,​​ கோதுமை,​​ காய்கறிகள் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.​ விலை உயர்வு என்பது,​​ தேவை -​ உற்பத்தி இரண்டுக்கும் இடைவெளி பெருகினால்தான் உண்டாகும் என்ற பொருளாதார வாய்ப்பாடுகள் எல்லாமும் பொய்யாகும் வகையில் இந்த விலை உயர்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விந்தையிலும் விந்தை.

2008-09 சாகுபடி ஆண்டுக்கான விளைச்சல் பட்டியலில் 233 மில்லியன் "ரெக்கார்டு' உற்பத்தி என்று அரசு சொல்கிறது.​ அதாவது அரிசி 99 மில்லியன் டன்,​​ கோதுமை 80 மில்லியன் டன்,​​ 39 டன் தானிய வகைகள்,​​ 15 டன் பருப்பு வகைகள் என்று புள்ளிவிவரம் தரப்படுகிறது.​ இதில் பருப்பு வகைகள் மட்டும் தேவையைவிட 4 மில்லியன் டன் பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,​​ மற்றவர்கள் யாரும் பற்றாக்குறை இருப்பதாகச் ​ சொல்லவில்லை.​ அப்படியானால் ஏன் விலை உயர்கிறது.​ அல்லது யார் விலையை உயர்த்துகிறார்கள்?

ஓட்டல்கள் தங்கள் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்திவிட்டன.​ டீக் கடைகளில் ஒரு கோப்பை தேநீர் விலை கிராமப்புறங்களில் ரூ.4 ஆகவும் நகரங்களில் ரூ.5 ஆகவும் உயர்ந்துவிட்டது.​ மற்ற உணவுப் பண்டங்களின் விலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.​ அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு செய்தி வந்தவுடன் முதலில் உயர்ந்தது வீட்டு வாடகை என்பது,​​ வாடகைக்குக் குடியிருப்போருக்குத் தெரியும்.

இதிலும் ராஜதந்திரிகளாகச் செயல்படும் பெரும் நிறுவனங்கள் தங்கள் நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளின் ​ விலையை உயர்த்தாமல் அதில் உள்ள எடையை மட்டும்,​​ 100 கிராம் என்பதை 80 கிராமாகக் குறைத்து மாயாஜாலம் காட்டுகின்றன.​ முன்பெல்லாம் 250 கிராம் இருந்த பாக்கெட்டுகள் எல்லாமும் இப்போது 200 கிராம் பாக்கெட்டுகளாக மாறி ரொம்ப காலமாகிறது.​ நுகர்வோர்தான் பாவம்,​​ அரை கிலோ பாக்கெட் விலையில் பாதிதான் கால்கிலோ பாக்கெட் விலையும் என்று நினைத்து ஏமாறும் நுகர்வோர் அதில் அச்சிட்டுள்ள எடையைப் பார்த்தால் தெரியும்,​​ ஏமாந்துகொண்டிருப்பது.

​ மாதம் ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஒழிய சராசரி இந்தியன் இன்றைய விலைவாசியில் வாழ வழியே இல்லை போலிருக்கிறதே!
நன்றி : தினமணி

காங்கிரஸின் தந்தை ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் 125-ம் ஆண்டின் தொடக்கவிழா இன்று முதல் (டிச. 28) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமானதொரு கட்டம்.

1885 டிசம்பர் 28-ம் தேதி மும்பை நகரின் கோவாலியா குளக்கரையிலிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது.

பிற்காலத்தில் இந்தியாவை அடக்கி ஆண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களைப் படிப்படியாக நடத்தி, இறுதியில் "வெள்ளையனே வெளியேறு' என்ற மகத்தான போராட்டத்தையும் நடத்திய காங்கிரஸ் கட்சி உருவாக முன் நின்றவர் ஓர் ஆங்கிலேயர்தான். அவர் அப்பொழுது இருந்த ஆங்கிலேயர் ஆட்சியில் (ஐ.சி.எஸ்.) இந்திய நிர்வாகப் பணி அதிகாரியாகப் பணியாற்றி ஆங்கில அதிகாரத்தின்கீழ் நடைபெற்ற பல்வேறு தவறுகளையும், குற்றங்களையும் நேரடியாகக் கண்டு வெறுப்படைந்த நிலையில் தமது பதவியிலிருந்து வெளியேறி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு முழு முயற்சி எடுத்தார்.

1829 ஜூன் 6-ம் தேதி இங்கிலாந்தின் கென்ட் நகரில் ஜோசப் - மரியா தம்பதியின் எட்டாவது குழந்தையாக ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்தார். தந்தை ஜோசப் ஹியூம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆலன் ஓர் ஐ.சி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்று இந்தியாவில் 1850-ல் உத்தரப் பிரதேசத்தில் பணியைத் தொடங்கினார்.

பெரும்பாலான வெள்ளை அதிகாரிகளைப்போலல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கு உண்மையாகப் பாடுபட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்ற முற்பட்டு, எட்டாவா மாவட்டத்தில் பல இலவசத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினார். அந்தப் பள்ளிகளில் இந்தி அல்லது உருது பயிற்று மொழியாக இருந்தது. இதற்கு முன்னதாக, ஆங்கிலக் கல்விமுறையில் முற்போக்கான அறிவியல் பாடங்களை இந்திய மாணவர்களுக்கு வழங்க வலியுறுத்தி வங்காளத்தில் ராஜாராம் மோகன் ராய் கோல்கத்தாவில் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களைத் திறப்பதில் ஈடுபட்டார். ஆங்கில ஆட்சியின் உத்தரவைப் புறக்கணித்து தமது சொந்தச் செலவில் எட்டாவா நகரில் 1856-ல் ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தை ஆலன் தொடங்கினார். ஆலன் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் பிற்காலத்தில் அந்தப்பகுதி "ஹியூம் கஞ்ஜ்' என்று வழங்கப்பட்டு அது மருவி தற்பொழுது "ஹோம் கஞ்ஜ்' என அழைக்கப்படுகிறது.

1857-ல் சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு ஆங்கில மேலதிகாரிகளின் 1859 ஜனவரி சுற்றறிக்கையின்படி இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தச் சுற்றறிக்கைக்குப் பதிலாக 1859 மார்ச் 30-ம் தேதியிட்ட கடிதத்தில் ஆலன் பின்வரும் கருத்தை வலியுறுத்தினார்: ""இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் முயற்சி அதிகமாக வேண்டும் என்று இதற்கு முன் கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் போட்ட உத்தரவு உள்ளது.

அதன்படி தொடர்ந்து கல்வி அறிவைப் பரப்புவது நல்லது. கல்வி அறிவு மூலம் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டால்தான் அது அரசுக்கு நன்மை பயக்கும். அறியாமையில் மக்களை அடக்கி வைப்பதால் கடைசியில் எதற்கும் அடங்காத ஆவேசம் மக்களுக்கு ஏற்பட்டு எதிர்ப்படும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் அவர்கள் உடைத்தெறிந்துவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன.

மக்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டி அவர்களுடைய மதிப்பையும், நம்பிக்கையையும் பெறுவதில்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்''.

சிப்பாய்க் கலகத்தை அடக்கிவிட்ட இறுமாப்பில் ஆலன் தந்த இந்த ஆலோசனையை ஆங்கில மேலதிகாரிகள் அலட்சியப்படுத்திவிட்டனர்.

இவ்வாறு ஆங்கில அரசாங்கம் மேற்கொண்ட பற்பல சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி அதனால் கிடைக்கும் ஏராளமான வருவாயை அரசாங்கம் ஆண்டுதோறும் பெருக்கிக் கொள்வதை ஆலன் கண்டித்தார். அதனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழைகளின் குடும்பங்கள் படும் துன்பங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் தனது வரி வசூலை மட்டும் கவனித்துக் கொண்டிராமல் மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும் என்று 1860 மே மாதத்தில் ஆலன் எழுதிய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

ஆலன் தந்த ஆலோசனைகளையும், முற்போக்கான திட்டங்களையும் அப்பொழுது இருந்த ஆங்கில மேலதிகாரிகள் பலர் புறக்கணித்தாலும், வைஸ்ராய் பதவிக்கு வந்த மேயோ பிரபு, ரிப்பன் பிரபு போன்றோர் ஆலனின் ஆலோசனைகளை வரவேற்றார்கள். விவசாயத் துறையை மேம்படுத்த ஆலன் அளித்த ஆய்வறிக்கைகளைப் பார்த்த மேயோ பிரபு, அவற்றை நிறைவேற்ற ஆலன்தான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து 1870-ல் ஆங்கில அரசின் வைஸ்ராய் தலைமையகத்தில் விவசாயம், வருவாய், வணிகம் உள்ளிட்ட துறையில் செயலாளராக ஆலன் நியமிக்கப்பட்டார்.

1876-ல் வைஸ்ராயாக வந்த லிட்டன் பிரபுவுடன் ஆலனால் பல பிரச்னைகளில் ஒத்துப்போக இயலவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை ஆலன் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1876-78-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு கோடி மக்கள் மாண்டனர். அதற்கான தீர்வு ஆலன் தந்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை லிட்டன் பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. உடனே, ஆலன் செயலாளர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு அப்பொழுது இருந்த வடமேற்கு மாகாணத்தின் (தற்கால உத்தரப்பிரதேசம்) வருவாய்த் துறை வாரியத்தின் இளநிலை உறுப்பினராக அனுப்பப்பட்டார். அப்பொழுது இருந்த பத்திரிகைகள் அனைத்தும் கடுமையான முறையில் ""மிக நேர்மையான ஓர் அதிகாரி ஆட்சியாளர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார்'' என்று கண்டித்தன.

1882 ஜனவரி முதல் நாளில் தமது அரசாங்கப் பதவியை ஆலன் துறந்துவிட்டார். அதன் பிறகு இந்திய மக்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று அவருக்கு இருந்தது. அது, ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்து வரும் அநீதிகளை வெளிப்படுத்தி தக்க முன்னேற்றத்தைத் தர வேண்டும் என்பதை வலியுறுத்த இங்கிலாந்து சென்று, அங்கு இந்தியா பற்றிய ஓர் அமைப்பை உண்டாக்க அவர் திட்டமிட்டார். ஆனால், வில்லியம் வெட்டர்பர்ன் போன்று இருந்த நண்பர்கள் இங்கிலாந்துக்குச் செல்வதைவிட இந்தியாவிலேயே இந்திய மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது நல்லது என்று ஆலோசனை கூறினார்கள்.

இந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும் தக்கதொரு அமைப்பை உருவாக்க ஆலன் எடுத்த முதல் முயற்சி, கோல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளுக்கு 1883, மார்ச் 1-ல் சிறந்ததொரு வெளிப்படையான வேண்டுகோளை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:

""மிகவும் உயர்தரமான கல்வியைப் பெற்றுள்ள உங்களிடம்தான், நேர்மை, மன உறுதி, சமுதாய நீதி, அரசியல் ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றமடைவதற்கான பொறுப்பும், சக்தியும் இருக்கின்றன. தனிப்பட்ட மனிதனாகவோ அல்லது ஒரு நாடாகவோ இருந்தாலும் முன்னேற்றம் என்பது உள்ளிருந்து வெளிப்பட வேண்டுமே தவிர, என்னைப்போன்று நாட்டுக்கு நல்ல நண்பர்களாக உள்ள வெளிநாட்டவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. வெளிநாட்டிலிருந்து உங்களுக்குத் தேவையான உதவிகள், பணம், ஆதரவு கிடைக்கலாம். உங்களுக்காக அவர்கள் தியாகம் செய்யவும், போராட்டங்கள் நடத்தவும் முன்வரலாம். இருந்தாலும், தேசிய உணர்வு என்பது உங்களிடம்தான் உள்ளது. அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. இப்பொழுது உங்களுக்கு மிகவும் இன்றியமையாதவை: ஒற்றுமை, உறுதியான அமைப்பு, தெளிவான செயல்திட்டம்... உங்களில் ஐம்பது பேர் தன்னலமற்ற முறையில் எடுத்த காரியத்தை முடிக்கும் திறனுடன் இவ்வாறான ஓர் அமைப்பை உருவாக்க முன்வந்தால்தான், இந்தியா வளர்ச்சியடைவதற்கான வெற்றிப் பயணம் தொடங்கிவிட்டதாக ஆகும்...''

ஆலன் பற்றி இந்திய மக்களுக்கு மதிப்பும், நம்பிக்கையும் இருந்த காரணத்தினால் அவர் விடுத்த இந்த வேண்டுகோள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் பற்பல நகரங்களிலிருந்தும், மாகாணங்களிலிருந்தும் வந்த ஆதரவின்படி "இந்திய தேசிய சங்கம்' என்னும் பெயரில் ஆலன் முயற்சியின் விளைவாக இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு தேசிய அமைப்பு உருவானது. இதற்கான முன்னேற்பாடுகள் ஓரளவு செய்யப்பட்டபிறகு, 1885 மார்ச் மாதத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த பிரதிநிதிகள் கூட்டத்தில், இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டை புணேயில் 1885 டிசம்பர் 25-31 வரை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆயினும், குறிக்கப்பட்ட மாநாட்டுத் தேதிக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக புணேயில் கடுமையான பிளேக் நோய் பரவிய காரணத்தினால், அந்த மாநாடு மும்பை நகருக்கு மாற்றப்பட்டது. இதற்கான பொறுப்பை மும்பை மாகாண அமைப்பு ஏற்றது. அதன்படி, மும்பையில், கோவாலியா குளத்தின் அருகில் இருந்த கோகுல்தாஸ் பள்ளிக்கூடத்தில் இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாடு கூட்டப்பட்டது.

1885 டிசம்பர் 28-ல் மும்பையில் கூடிய இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டில், மும்பை, வங்காளம், மதராஸ் மாகாணங்களிலிருந்து 72 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சர். வில்லியம் வெட்டர்பர்ன் (ஐ.சி.எஸ். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, ஆலனின் நெருங்கிய நண்பர்), எம்.ஜி. ரானடே (மும்பை சட்டமன்ற மேலவை உறுப்பினர், உயர் நீதிமன்ற நீதிபதி) மற்றும் பல்வேறு துறை விற்பன்னர்கள் கலந்துகொண்டனர்.

ஆலன் ஹியூம் முன்மொழிய, எஸ். சுப்ரமணிய ஐயர் (மதராஸ், பிரபல வழக்கறிஞர், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி). மாநாட்டின் வரவேற்புக் குழுவின் செயலாளர் கே.டி. டெலாங் (மும்பை, பிரபல வழக்கறிஞர், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி) ஆகியோர் வழிமொழிய, 1885, டிசம்பர் 28-ல் இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டுக்குத் தலைவராக டபுள்யு.சி. பானர்ஜி (கோல்கத்தா, பிரபல வழக்கறிஞர்) நியமிக்கப்பட்டார்.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: இந்திய நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியர்களுக்குத் தகுந்த வாய்ப்புத் தருவதற்காகத் தேர்ந்தெடுக்கும் குழு இந்தியாவிலும், இலங்கையிலும் அமைக்கப்பட வேண்டும். இங்கிலாந்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆங்கில அரசின் செயலாளர் குழு நீக்கப்பட வேண்டும். மாகாண சட்டசபைகளுக்கு மக்கள்தொகைக்குத் தக்கவாறு உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி, மாகாணத்தின் நிதிநிலை அறிக்கையைக் கவனித்து மாகாண நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பை சட்டமன்றங்களுக்கு வழங்க வேண்டும்.

இந்திய அலுவல் குழுவின் 1860 தீர்மானப்படி ஐ.சி.எஸ். தேர்வு ஒரேசமயத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடைபெறுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்கள் மேலும் பயிற்சி பெற இங்கிலாந்து அனுப்பப்பட வேண்டும். இந்திய அரசாங்க நிதியிலிருந்து தற்பொழுது ராணுவத்துக்குச் செலவிடப்படும் அதிகமான தொகையைக் குறைப்பதுடன், ஆங்கிலப் பேரரசின் செலவுகளை இந்தியாவின் மீது சுமத்தக்கூடாது. அரசாங்கத்தின் ராணுவச் செலவு அதிகப்படுத்தப்பட வேண்டுமென்றால் சுங்க வரி, வருமான வரியை உயர்மட்ட வகுப்பினருக்கும் விதித்து வருமானத்தை உயர்த்த வேண்டும். வட பர்மா பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருப்பதை இம் மாநாடு கண்டிப்பதுடன், இது மிகவும் தேவையான ஒன்று என்றால், இந்திய நிர்வாகத்திலிருந்து பர்மா முழுவதையும் தனிமைப்படுத்தி ஆங்கில ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொரு மாகாணத்திலுள்ள அரசியல் சங்கங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்தத் தீர்மானங்களின்படி மாகாணங்கள் தத்தம் நிலைமைக்கு ஏற்றவாறு அவற்றை நி றைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இந்திய தேசிய சங்கத்தின் அடுத்த மாநாடு 1886 டிசம்பர் 28-ம் தேதி கோல்கத்தாவில் நடைபெறும்.

மும்பையில் கூடிய இந்த மாநாடுதான் இந்திய தேசிய காங்கிரஸின் தொடக்கம் என்று கூற வேண்டும். அப்பொழுதைய பத்திரிகைகளில் இந்த மாநாடு பற்றி நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டன.

முக்கியமாக, "பம்பாய் கெஸ்ட்' என்ற ஆங்கில ஏடு எழுதியதாவது: ""பம்பாயில் கூடிய மாநாடு இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாதவாறு இந்தியாவிலுள்ள பல்வேறு இன, கலாசார, மத சார்புடையவர்கள் ஓரிடத்தில் கூடி இந்தியா முழுமைக்கும் ஒன்றுபட்ட ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்கி இருப்பது மிகவும் தனித்தன்மையும், நம்பிக்கையும் உடைய சம்பவமாகும்.''

மும்பை மாநாட்டுக்கு முன்னதாக இந்தியாவில் ஆங்காங்கு உள்ள படித்த இந்தியர்கள் சிறுசிறு அமைப்புகளை வைத்திருந்தார்கள். மதராஸில் மகாஜனசபா (1849), கல்கத்தாவில் இந்தியா லீக் (1875), இந்தியன் அசோசியேஷன் (1876), பம்பாயில் பம்பாய் அசோசியேஷன் (1852), புணேயில் சர்வஜனிக் சபா (1867) போன்ற பல அமைப்புகள் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நிகரான வேலைவாய்ப்புகளும், சலுகைகளும் தரப்பட வேண்டுமென்று அவ்வப்பொழுது தீர்மானங்களையும், முறையீடுகளையும் செய்து வந்தன. ஆயினும், ஆலன் தொடங்கிய இந்திய தேசிய சங்கத்தின் மாநாட்டின் மூலம் தனிப்பட்டு இயங்கி வந்த பல சங்கங்களை ஓர் அமைப்பின்கீழ் - அதுவே நாளடைவில் "இந்திய தேசிய காங்கிரஸ்' என்று நிலைபெற்றது.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 1885 முதல் 1906 வரை தொடர்ந்து காங்கிரஸ் அமைப்பின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். ஆண்டுதோறும் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் மற்றவர்கள் தலைவராவதற்கு உறுதுணையாக இருந்தாரே தவிர ஒருபோதும் தாம் தலைவராவதற்கு உடன்படவில்லை. ஐ.சி.எஸ். அதிகாரியாக இந்தியா வந்த ஆலன் உண்மையில் இந்திய மக்களுக்குப் பணிபுரியும் குறிக்கோளுடன் இருந்ததல்லாமல், அவர் பணிபுரிந்த காலத்தில் விஞ்ஞான முறையில் பறவை இனங்களை ஆராய்ச்சி செய்து அவர் வெளியிட்ட பல ஆராய்ச்சி நூல்கள் உலக விஞ்ஞானிகள் கண்டு பாராட்டும் அளவுக்குச் சிறந்து விளங்கின. "இந்தியப் பறவை இயல் தந்தை' என ஆலன் போற்றப்படுகிறார்.

இந்தியாவின் முதுபெரும் தலைவர் தாதாபாய் நௌரோஜி தொடங்கி இந்திய விடுதலைப் போராட்டத்தை முடித்து வைத்த மகாத்மா காந்தி வரை மாபெரும் தலைவர்கள் பலர் இந்திய தேசிய காங்கிரûஸ ஒரு மாபெரும் அமைப்பாக வளர்ச்சியடையச் செய்தார்கள். ஆயினும், ஆலன் ஆக்டேவியன் ஹியூமைத்தான் "இந்திய காங்கிரஸின் தந்தை' என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பாக இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்கு லண்டன் சென்ற மகாத்மா காந்தி, தமது தொடக்க உரையில் பின்வருமாறு கூறினார்:

""நான் மிகப் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். காங்கிரஸ் அமைப்பு என்பது ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஓர் ஆங்கிலேயரின் கருத்தில் உருவான ஒன்று. அதனால் அவர்தான் காங்கிரஸின் தந்தை ஆவார்.''

ஐ.சி.எஸ். அதிகாரிகளாக இந்தியா வந்த ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன் ஆகிய இருவரும் இந்தியக் குடிமக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்கும், பிறகு இந்திய தேசியத்தை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வளர்த்ததற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. இருவரும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்கள். வரலாற்றில் நீண்டகாலமாக இங்கிலாந்தை எதிர்த்து தங்கள் உரிமைகளுக்காக ஸ்காட்லாந்து மக்கள் போராடி இருக்கிறார்கள்.

அந்தப் பாரம்பரிய உணர்வு இன்றளவும் நீடித்து வருகிறது. அந்த வகையில் ஆலன், வெட்டர்பர்ன் இருவரும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் அநீதிகளை எதிர்த்துப் போராடினார்கள்.
கட்டுரையாளர் : இரா. செழியன்
நன்றி : தினமணி

அசைவப் பிரியர்கள் வெறுக்கும் 'கருவாடு': கேரளா, புதுச்சேரியில் ஏறுமுகம்

சுகாதாரத்தைக் காரணம் காட்டி, 'தமிழக புகழ்' கருவாட்டை, அசைவ பிரியர்கள் புறக்கணிப்பது அதிகரித்து வருகிறது. ஆடு, கோழி, மீன், முட்டை என அசைவ உணவுகள் எத்தனை இருந்தாலும், கருவாடுகள் மீது அசைவ பிரியர்களுக்கு தாக்கம் அதிகம். வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கு, தாய்மார்கள் அன்புடன் கருவாடு அனுப்பும் பழக்கம், இன்றும் நடைமுறையில் உள்ளது. கிராமம் முதல் நகர் வரை தமிழகத்தில் கொடி கட்டி பறந்த கருவாடு விற்பனை, சமீபகாலமாக தொய்வடைந்து வருகிறது.

கடலோரப் பகுதிகளில் நிலவும் சுகாதாரக் கேட்டால், கருவாடுகளை வாங்க அசைவ பிரியர்கள் தயங்குகின்றனர். வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், கிடைத்த இடத்தில் மீன்களை கருவாடாக மாற்றும் முயற்சியில் மீனவர்கள இறங்குகின்றனர். மீனுடன் ஒட்டிக் கொள்ளும் கிருமிகள், காய்ந்த பிறகும் அதனுடன் ஒட்டிக்கொள்ளும் என்பதால் தான் இந்த பீதி. தமிழக கடலோர பகுதிகளில் சுகாதாரம், சமீப காலமாக கேள்விக்குறியாக உள்ளது. மர்ம காய்ச்சல்கள் வேறு பரவி வருகின்றன. இதனால், கருவாடு வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நேரத்தில், கேரளாவில் கருவாடு பதப்படுத்த நவீன வசதிகள் உள்ளன. புதுச்சேரியிலும் ஓரளவுக்கு வாய்ப்புகள் இருப்பதால் இங்குள்ள கருவாட்டுக்கு, தமிழகத்தில் நல்ல கிராக்கி உள்ளது. அதே நேரத்தில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலோரப் பகுதிகளில் வரும் கருவாட்டுக்கு, விற்பனை மந்தமாகவே உள்ளது. தமிழக மீனவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தராததும், இந்நிலைக்கு முக்கிய காரணமாகும். இதே நிலை தொடர்ந்தால், நாளடைவில் இங்குள்ள மீன்களையும், அசைய பிரியர்கள் வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.
நன்றி : தினமலர்


Sunday, December 27, 2009

மார்ச் மாதத்திற்குள் 25,000 ஏடிஎம்.,கள் : ஸ்டேட் பேங்க்

வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25,000 ஏடிஎம்களை திறக்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார பொது மேலாளர் விஜி கண்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது இத்தகவலை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது : தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் கடந்த 2 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர ஒவ்வொரு கிளையும் ஆண்டுக்கு இரு குழந்தைகளை தத்தெடுத்து கல்வி செலவை அளித்து வருகின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 25 ஆயிரம் ஏடிஎம்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 1,388 ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பயோ மெட்ரிக் எடிஎம்களை திறக்கவும் வங்கி ஏற்பாடு செய்து வருகிறது. இம்முறையில் வாடிக்கையாளர்கள் தங்கள் கைரேகையை ஏடிஎம்மில் பதிவு செய்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். ஒருவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மற்றவர்கள் பணம் எடுக்க முடியாது. ஏற்கனவே இத்தகைய ஏடிஎம் சென்டர்கள் மதுரை, மேலூர், செய்யாறு ஆகிய இடங்களில் திறக்கப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏடிஎம்மில் பணம் எடுக்க பழகி கொள்ள வேண்டும். மாதத்தின் முதல் வாரத்திலேயே மொத்த பணத்தையும் எடுக்க முயற்சிக்க கூடாது. ஏனெனில் ஒரு மிஷினில் ரூ.32 லட்சம் மட்டுமே வைக்க முடியும் என்றார்.
நன்றி : தினமலர்


Saturday, December 26, 2009

குறைந்து வரும் விவசாய நிலங்கள்

அரிசி இறக்குமதி செய்ய,​​ நீண்டகா​ லத்​திற்​குப் பின்​னர் மத்​திய அரசு சமீ​பத்​தில் அனு​மதி வழங்​கி​யுள்ளது.​ இந்தியாவின் உயிர்நாடித் ​ தொழில் விவசாயம்.​ அதிலும்,​​ அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக உள்ள நிலையில் இத்தகைய இறக்குமதிக்கான அனுமதி நாட்டில் ​ விவசாயம் தேய்ந்து வருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் ​(2009,​ ஜூலை 24-ம் தேதி)​ மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்படி,​​ இந்தியாவின் ​ அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது.​ அதாவது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் ​ பயிரீடு 1 கோடியே 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம்,​​ பிகார்,​​ மேற்கு வங்கம்,​​ சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் ​ பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.​ ​

தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது.​ மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.​ ஆனால்,​​ இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.​ தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.​ ஆம்,​​ காவிரிப் படுகைப் ​ பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன.​ இதனால்,​​ வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் ​ மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.​ ​ ​

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி,​​ மருத்துவமனை,​​ தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் ​ உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.​ இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த ​ வேண்டும்.

2005}06-ம் ஆண்டு தகவல்படி அரிசி உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.​ இம்மாவட்டத்தில் 1,68,435 ஹெக்டேர் ​ நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது என்று தமிழக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.​ ​(நாகை மாவட்டம் இரண்டாமிடத்திலும்,​​ தஞ்சை ​ மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.)​ நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி ​ பெற்று வருகிற நிலையில்,​​ தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம்,​​ காஞ்சிபுரம்,​​ திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.​ ​

செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும்,​​ இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் ​ இருக்கிறது.​ சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.​ இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.

குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம்,​​ கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது.​ ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது.​ 1974-ல் ​ தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன.​ ஆனால்,​​ தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம்.​ இதனால் ஆற்றுப் படுகைகளில் ​ நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன.​ இதனால்,​​ தண்ணீர் இல்லாத நிலையில் -​ வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் -​ விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.​ இதனால் ​ விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.

தமிழகத்தில் 2004}2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61,46,044 டன்கள் ஆகும்.​ ஆனால்,​​ 2005}06-ல் 61,16,145 ​ டன்கள் தான்.​ இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால்,​​ விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும்,​​ தொழிற்சாலைகளாகவும்,​​ சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய ​ காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற வங்கிகள்,​​ விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட,​​ வர்த்தக வங்கிகள் ​ தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.​

இந்நிலை மாறி ​ விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த ​ விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் ​ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய,​​ மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.​ கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த ​ குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.​ அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் ​ நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.​ ​

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.​​
கட்டுரையாளர் : மணிஷ்
நன்றி : தினமணி

ஐந்தில் மகிழாதது...

தமிழ்நாட்டில் செயல்வழிக் கல்வி தொடங்கப்பட்டபோது சில ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டாலும்,​​ "தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தை மாற்றி அமையுங்கள்,​​ வீட்டுப்பாடங்களை ஒழியுங்கள்' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்திய சென் இப்போது கூறியுள்ள கருத்தைப் பார்க்கும்போது,​​ செயல்வழிக் கல்வி நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அமார்த்திய சென் ஏதோ போகிற போக்கில் இந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போகவில்லை.​ அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய கிழக்கு அறக்கட்டளை ​(இந்தியா)​ என்ற அமைப்பு,​​ ​ மேற்கு வங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை 2001-02ம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துகொண்டு தொடர்ச்சியாக கண்காணித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையை வைத்துதான் அவர் கூறியிருக்கிறார்.

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்யும்படி சொல்லும்போது,​​ அக்குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்துக்கு உரித்தான விளையாட்டு,​​ மகிழ்ச்சிகளை இழந்துவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல,​​ சமூகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக,​​ பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சேர்ந்துகொள்கின்றன.​ வசதி படைத்தவர்களும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை தனிவகுப்புகளுக்கு ​(டியூஷன்)​ அனுப்புகின்றனர்.​ இது அவர்களின் கல்வித் தரத்திலும் பிரதிபலிக்கிறது.

இந்த ஆய்வுகளின்படி,​​ தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் சிறார்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 சதவீத குழந்தைகளால் எழுதப் படிக்க முடியவில்லை.​ முஸ்லிம் குழந்தைகளில் 27 சதவீதம் பேரும்,​​ பொதுப் பிரிவில் 8 சதவீத குழந்தைகளாலும் எழுதப் படிக்க முடியவில்லை.​ இதற்கு ​ தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுகளுடன் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்வதும்தான் என்பதே இந்த ஆய்வின் வெளிப்பாடு.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்கும் முறையே வேறாக இருக்கிறது.​ குழந்தைகளுக்கு 5 வயதுவரை வகுப்புகளில்கூட எழுத பணிக்கப்படுவதில்லை.​ உரையாடல்,​​ விளையாடுதல் இவை மட்டுமே அவர்களின் வகுப்பறையாக இருக்கின்றன.​ குழந்தைகள் அங்கே குழந்தைகளாகவே இருக்கின்றனர்.​ 5 வயதுக்குப் பிறகு,​​ தொடக்கப் பள்ளி வகுப்புகளில் அறிவியல்,​​ ​ ​ மொழி ஆகியவற்றின் அடிப்படை,​​ படித்தல்,​​ எழுதுதல்,​​ ஓவியம் போன்ற குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ற நுண்கலை அறிமுகம் என சொல்லித்தரப்படுகிறது.​ பிறகுதான் பாடதிட்டத்தை மிகவும் செறிவானதாக கனமானதாக மாற்றுகின்றனர்.​ ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இல்லை.

நர்சரி பள்ளிகள் அறிமுகமாகாத நிலையில்,​​ இந்தியாவிலும் குழந்தைகள் 5 வயது வரை நன்றாக விளையாடினார்கள்.​ வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டார்கள்.​ பேசினார்கள்,​​ சொல்லிக்கொடுத்த வழிபாட்டு பாடல்களையும் கதைகளையும் திருப்பிச் சொன்னார்கள்.​ பிறகுதான் அவர்கள் முதல் வகுப்பில் நேரிடையாக சேர்ந்து பயின்றார்கள்.​ அப்போதும்கூட முதல் வகுப்பு செல்லும் குழந்தையுடன் ஒரு கரும்பலகையும்,​​ தமிழ் மொழிப் புத்தகம் ஒன்றும் கூட்டல் கழித்தலுக்கான வாய்ப்பாடு புத்தகமும் மட்டுமே கையில் இருந்தது.​ மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில அரிச்சுவடி கற்றுத்தரப்பட்டது.

இப்போதெல்லாம் பிரி-நர்சரி வகுப்புகள்,​​ கிரீச் என குழந்தைகள் வீட்டில் தங்கவே இல்லாத சூழல்களை இந்திய சமுதாயம் வரிந்து உருவாக்கிக் கொண்டுவிட்டது.​ நர்சரி குழந்தைகளை தங்கள் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஆங்கிலத்தை எழுதிப் பழக்குகிறார்கள்.​ எண்களை ஆயிரம் வரை எழுதித் தள்ளுகிறார்கள்.​ வீட்டுப் பாடங்களையும் செய்கிறார்கள்.​ புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்கிறார்கள்.​ தனிவகுப்புகளுக்கும் செல்கிறார்கள்.​ இத்தனைக்குப் பிறகும் அவர்களுக்கு விளையாட,​​ குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எங்கே நேரம் இருக்க முடியும்!

ஆங்கிலேயர் காலத்தில் முதல் பாரம் முடித்தவர்கள்கூட எழுதுவது பேசுவது படிப்பது மூன்றையும் தவறில்லாமல் செய்ய முடிந்தபோது இன்றைய பிளஸ் 2 மாணவர்கூட தவறில்லாமல் தமிழைக்கூட எழுதவும் முடியாத நிலை உருவானதை நினைக்க வேண்டியிருக்கிறது.

தற்போது சமச்சீர் கல்விக்காக பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.​ அந்த பாடத்திட்டங்கள்,​​ அமார்த்திய சென் குறிப்பிடும் வகையில்,​​ எளிமையானதாகவும் வீட்டுப்பாடங்களுக்குத் தேவை இல்லாத வகையிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.​ ஆனால் இப்போது தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக் கல்விக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு மனிதன் வளர்ந்த பிறகு அசைபோட குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாவிட்டால்,​​ அவன் சமூகக் குற்றங்கள் செய்யும் வாய்ப்புகள் நேரிடுவதோடு,​​ உணர்வுபூர்வமான சிக்கல்களிலிருந்து மீள்வதில் பெரும் குழப்பத்தையும்,​​ இயலாமையையும் சந்திக்க நேர்கிறது என்பதுதான் உளவியல் கூறும் உண்மை.

"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல,​​ அவர்கள் உங்கள் கனவின் குழந்தைகள்' என்பதற்காக,​​ நம்முடைய நிறைவேறாத வாழ்க்கை லட்சியங்களை அவர்கள் மீது திணிப்பது நியாயமாகாது.​ ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழியை படிப்புக்காக மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்.​ ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி

தமிழகம் பிரிக்கப்பட வேண்டுமா?

தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதையடுத்து நாட்டின் பிற பகுதிகளிலும் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.​ வன்முறை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.​ இந்திய அரசுக்கு இந்த மொழிதான் புரிகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து புந்தேல்கண்ட்,​​ பஸ்சிமாஞ்சல் ​(மேற்கு உத்தரப் பிரதேசம்)​ மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.​ இப்போது உ.பி.யின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலத்தை அமைப்பதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்துமாறு பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்கா தனிமாநிலம் அமைக்க வேண்டுமென்று பாஜகவும்,​​ கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் கோரிக்கை எழுப்பியுள்ளன.​ இது 102 ஆண்டுகாலக் கோரிக்கையாம்.​ எல்லைப் பகுதியின் காவலர்களாக இருக்கும் அவர்கள் உணர்வுரீதியாகவும்,​​ புவியியல் ரீதியாகவும் மேற்குவங்க மாநிலத்தின் மற்ற பகுதியிலிருந்து தனிமைப்பட்டுக் கிடக்கின்றனராம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா தனிமாநிலக் கோரிக்கையும் எழுந்துள்ளது.​ மகாராஷ்டிர பாஜகவின் இந்தக் கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கிறது.​ விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை எழுப்புபவர்கள் ஒருங்கிணைந்த மகாராஷ்டிரத்துக்காக உயிர் நீத்த 105 தியாகிகளின் கனவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அது கூறுகிறது.

இதேபோல போடோ மக்கள் முன்னணி உறுப்பினர் பிஸ்வமூர்த்தி,​​ "போடோலேண்ட்' அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே கோரியுள்ளார்.​ அசாம் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

பிகார் மாநிலத்தைப் பிரித்து,​​ "மிதிலாஞ்சல்' மாநிலமும்,​​ குஜராத் மாநிலத்தைப் பிரித்து,​​ "சௌராஷ்டிரா' மாநிலமும் அமைக்க வேண்டும்;​ உ.பி.யின் கிழக்குப் பகுதியையும் பிகாரின் சில பகுதிகளையும் பிரித்து "போஜ்புர்' மாநிலமும் அமைக்க வேண்டும் என இது தொடர்கிறது.

2000-ல் பிகாரிலிருந்து "ஜார்க்கண்ட்' மாநிலமும்,​​ உ.பி.யிலிருந்து "உத்தரகண்ட்' மாநிலமும்,​​ மத்தியப் பிரதேசத்திலிருந்து "சத்தீஸ்கர்' மாநிலமும் பிரிக்கப்பட்டன.​ இப்போது தெலங்கானா அமையுமானால் இது இந்தியாவின் 29-வது மாநிலமாகும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய குரல் கேட்கிறது.​ தமிழகத்தை இரண்டாகப் பிரித்தால் நல்லது.​ சிறிய மாநிலமாக இருந்தால் வளர்ச்சியிருக்கும்;​ நிர்வாகமும் எளிதாக இருக்கும்.​ ஆனால் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது பாமகவின் முன்னுரிமைக் கோரிக்கை அல்ல என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.​ இதனை வேறு சிலரும் வரவேற்றுள்ளனர்.

ஆனால் தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.​ ""அப்படிப்பட்ட கருத்து திமுகவிலும் இல்லை;​ தமிழ்நாட்டு மக்களுக்கும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது போன்ற யோசனைகள் மிகவும் ஆபத்தானவை மட்டுமல்ல,​​ அபத்தமானவை.​ இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தொடங்கும்போதே,​​ "ஏன் இதனை சேர நாடு,​​ சோழ நாடு,​​ பாண்டிய நாடு என மூன்றாகப் பிரிக்கக் கூடாதா?' என்ற அடுத்த கேள்வியும் எழும்.​ அத்துடன் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமும் நீர்த்துப் போகும்.

அந்தக் காலத்தில் தமிழகம் பல நாடுகளாக இருந்தது என்பது உண்மைதான்.​ சேர நாடு,​​ சோழ நாடு,​​ பாண்டிய நாடு என்பவை முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டன.​ அத்துடன் பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கி.மு.​ 300 முதல் 600-ம் ஆண்டு வரை அரசாட்சி செய்திருக்கின்றனர்.​ பல்லவர்களை வென்று காஞ்சியைக் கைப்பற்றி சாளுக்கியர்களும் சிலகாலம் ஆட்சி செய்துள்ளனர்.

இதுதவிர,​​ தொண்டை நாடு,​​ கொங்கு நாடுகளும் இருந்தன.​ மூவேந்தருக்குக் கட்டுப்பட்டும்,​​ கட்டுப்படாமலும் குன்றுதோறும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு பல சிற்றரசர்கள் தனியாகவே ஆண்டுவந்தனர்.​ மேலும் தமிழ்நாட்டில் பல ஊர்களே நாடு என்ற பெயரில் வழங்கின.​ ஒரத்த நாடு,​​ பாப்பா நாடு,​​ பைங்கா நாடு,​​ வள நாடு எனக் கூறலாம்.​ இந்த ஊர்களே ஒரு நாடாக பல பண்ணையார்களால் ஆளப்பட்டுள்ளன.​ இன்றும் அவ்வூர்களில் அவர்களின் வம்சாவளியினர் இருக்கின்றனர்.​ இவையெல்லாம் கடந்த கால வரலாறு.

நாடு விடுதலை பெற்றதும்,​​ மாநில வரையறை பற்றிய கேள்வி எழுந்தது.​ பிரதமர் நேருவின் தட்சிணப் பிரதேசத் திட்டம் ஏற்கப்படாததால் மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து அமைப்பதற்காக "மாநிலப் புனரமைப்புக் குழு' நியமிக்கப்பட்டது.​ அதன் பரிந்துரை செயல்படுத்தப்பட்டது.

அப்போது சென்னை மாகாணம் என்பது திராவிட நாடாக-பல மொழிகள் பேசும் மாநிலமாக இருந்தது.​ 1953-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் முதலில் பிரிந்தது.​ 1956-ல் மலபார் மாவட்டம் பிரிந்து கேரளத்தில் இணைந்தது.​ தென் கன்னட மாவட்டம் பிரிக்கப்பட்டு கர்நாடகத்துடன் சேர்ந்தது.​ மீதம் இருந்ததே தமிழ்நாடானது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கட மலையும்,​​ தெற்கு எல்லையாக குமரியாறும்,​​ கிழக்கும்,​​ மேற்கும் கடலாகவும் இருந்தன என்று தமிழக வரலாறு கூறுகிறது.​ இதனையே,​​ "வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து' என பண்டைய புலவர்களும் பாடியுள்ளனர்.

ஆனால் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தின் பல பகுதிகள் பறிபோய்விட்டன.​ தமிழகத்தின் வட எல்லையான வேங்கடம்,​​ சித்தூர் முதலிய பகுதிகள் ஆந்திரத்துக்கும்,​​ தேவிகுளம்,​​ பீர்மேடு முதலிய தமிழ்ப்பகுதிகள் கேரளத்துக்கும்,​​ கோலார் தங்கவயல் முதலிய தமிழ்நிலம் கர்​ நாடகத்துக்கும் எடுத்துத் தரப்பட்டபோது இதுபற்றி இங்கே யாரும் கவலைப்படவில்லை.

தமிழ்நாட்டில் இருந்த பெரிய கட்சிகள் எல்லாம் கண்டும்,​​ காணாமல் இருந்தபோது,​​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யும்,​​ அவர் கட்சியினருமே குரல் கொடுத்தனர்.​ எல்லைப் போராட்டங்களை எடுத்து நடத்தினர்.​ வடஎல்லை பாதுகாப்புக் குழுவின் செயலாளராக இருந்த கே.​ விநாயகம்,​​ சித்தூர் மாவட்டத்தில் வாழ்ந்த 4 லட்சம் தமிழர்களுக்காகப் பாடுபட்ட மங்கலக்கிழார் இவர்களைத் தமிழக வரலாறு மறக்காது.

எனவே இழந்த மண்ணை மீட்காவிட்டாலும்,​​ இருக்கும் மண்ணையாவது இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.​ மாநிலத்தைக் கூறுபோடுவதைவிட அதன் முன்னேற்றத்துக்காக உழைப்பதே பெருமையாகும்.

தமிழ்நாட்டில் நிர்வாகம் எளிதாக இருக்க வேண்டுமானால் அரசுத் துறைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும்.​ எல்லாவற்றையும் தலைநகரிலேயே தேக்கி வைப்பது கடந்த காலங்களில் தேவையாக இருக்கலாம்;​ இனித் தேவை இல்லை.​ நாட்டின் கடைகோடியில் இருக்கும் ஒருவர் எல்லாவற்றுக்கும் அரசுத்துறையை நாடி சென்னைக்கு மூட்டை கட்டிக் கொண்டு வர வேண்டும் என்பது என்ன நியாயம்?​

தொழில் துறையை கோவை அல்லது திருப்பூருக்கும், வேளாண்மைத்துறையை தஞ்சாவூர் அல்லது திருச்சிக்கும் மாற்றவேண்டும். இது தவிர மதுரை, நெல்லை, சேலம் முதலிய புறநகரங்களுக்கும் பிற துறைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிவது ஆபத்தாகும்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.​ தமிழ்நாட்டின் தலைநகர் மாநிலத்தின் மையப்பகுதியாகிய திருச்சியில் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்.​ ஆனால் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ள விடாமல் அதிகாரிகளே தடுத்து விட்டனர் என்று அப்போது கூறப்பட்டது.​ தலைநகரை மாற்றுவதற்குப் பதிலாகத் துறைகளை மாற்றுவது எளிதாகும்.

இன்றைய அறிவியல் உலகில் அமைச்சர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியும்.​ "விடியோ கான்பரன்ஸ்' முறை இப்போதே செயல்பாட்டில் இருக்கிறது;​ மனம் வைத்தால் மார்க்கமா இல்லை?

அழகிய தேன்கூட்டைக் கல்வீசிக் கலைப்பதா?​ அவை கொட்ட வரும்போது எட்டி எட்டி ஓடுவதா?​ தெலங்கானா பிரச்னையைத் தொட்டுவிட்டு மத்திய அரசு செய்வது அறியாமல் திகைத்து நிற்பது போதாதா?​ சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுக்க வேண்டாம்.
கட்டுரையாளர் :உதயை மு.​ வீரையன்
நன்றி : தினமணி

Friday, December 25, 2009

புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு

கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது.​ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள்,​​ அமைப்புகள்,​​ இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.

இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம்.​ ​ மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது.​ இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால்,​​ ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும்,​​ முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான்.​ அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.​ உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது.​ ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது,​​ சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது;​ பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால்,​​ அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது.​ உலக நாடுகள் அனைத்தையும்,​​ ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் -​ கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும்,​​ வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால்,​​ அவற்றோடு சேர்ந்து பூமிக்கும்,​​ கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது.​ இவை ​ -​ நிலக்கரியும்,​​ பெட்ரோலியப் பொருள்களும் -​ சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம்,​​ காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது.​ இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் ​ பெருக்கின.​ இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின.​ கூடவே,​​ காடுகள் அழிக்கப்பட்டதும்,​​ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும்,​​ அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும்,​​ பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன.​ உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று,​​ நீர்,​​ அனைத்தும் ​ மாசுபட்டன;​ ​ மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின.​ வளர்ச்சியும்,​​ முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால்,​​ சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.

இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும்,​​ அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் ​ வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது.​ பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து,​​ மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது.​ பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின.​ இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால்,​​ மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை ​ எழுந்தது.

​ ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி,​​ அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.​ இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.​ இதையடுத்து ஐ.நா.​ முயற்சியில் 1989,​ 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.​ கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள்,​​ கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா.​ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் ​ உருவாக்கப்பட்டன.​ ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும்,​​ 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன.​ தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது.​ இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா.​ 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.

1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா.​ கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது.​ புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும்,​​ இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்;​ வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால்,​​ அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ,​​ கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது;​ ​ என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள்,​​ வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி,​​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது.​ இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன.​ ​ இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.​ இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து -​ இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் -​ வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.​ இந்த 1992-ன் ஐ.நா.​ கோட்பாடு,​​ உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும்,​​ இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது.​ இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா.​ எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.

எனினும்,​​ இந்த ஐ.நா.​ கோட்பாடு அடுத்தடுத்த ​ பேச்சுவார்த்தைகளுக்கும்,​​ மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.​ புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும்,​​ உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக,​​ சிறு தீவு நாடுகள்;​ தாழ்நிலைக் கடலோர நாடுகள்;​ சதுப்பு நிலம்,​​ காடுகள் நிறைந்த நாடுகள்;​ ​ ​ இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்;​ வறட்சி -​ பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்;​ நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்;​ எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்;​ எரிபொருள்களை ​(நிலக்கரி,​​ எண்ணெய்)​ எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள்,​​ சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது;​ வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.

ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா.​ கோட்பாட்டுக்கு,​​ வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது.​ ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும்,​​ 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் ​ சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது.​ 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு,​​ வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் ​(கரியமில வாயு)​ வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது.​ 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே,​​ புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ ​ உடன்பாட்டின் மையக் கோட்பாடு.​ இதுவே பொதுவான -​ ஆனால் பாகுபடுத்தப்பட்ட -​ பொறுப்புகள் என்று அறியப்பட்டது.​ இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா ​ இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி,​​ இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.

இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது.​ இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும்,​​ வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து,​​ கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.

சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும்,​​ கோபன்ஹேகனில் குழுமி,​​ ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு,​​ "பூமண்டலம் காப்போம்;​ ​ புவிவெப்பம் ​ தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று,​​ ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது.​ ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ,​​ சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ​ ஏற்க மறுத்தார்.

தனிநபர் சராசரிக் கணக்கில்,​​ இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா,​​ தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல்,​​ வளரும் நாடுகள் -​ குறிப்பாக சீனாவும் இந்தியாவும் -​ கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது;​ ​ அது மட்டுமல்ல,​​ வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.

வளரும் நாடுகள் ஜி -​ 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.

சர்வதேச நிதி நெருக்கடியின்போது,​​ வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது.​ கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில்,​​ அமெரிக்காவையும்,​​ வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.​ ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,​​ பிரேசில்,​​ தென்ஆப்பிரிக்கா,​​ இந்தியா,​​ சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன;​ ​ இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.

​ கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது,​​ 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே,​​ கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள்.​ இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.

இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள ​(கரியமில வாயு ​ குறைப்புக்கான)​ பொறுப்பு என்பது,​​ வளரும் நாடுகளான இந்தியா -​ சீனாவோ,​​ இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் -​ ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல்.​ கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக,​​ சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. ​

பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 -​ 2012-ல் 3000 கோடி டாலரும்,​​ 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.​ ஆனால்,​​ கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!
கட்டுரையாளர் : உ .ரா.​ வரதராசன்
நன்றி : தினமணி

வகுபடாத காலத்தை வகுத்த பெருமகன்!

""நீங்கள் என்னை விட்டு விலகி இருக்கும்போது விண்ணரசை விட்டு விலகியிருக்கிறீர்கள்;​ ​எனக்குப் பக்கத்திலிருக்கும்போதோ நெருப்புக்குப் பக்கத்தில் இருக்கிறீர்கள்''.

​ இது 2000 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய ஊருக்கு வந்த தாமசின் நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் ஒப்பற்ற வைரவரிகள்.​ இயேசு பேசியதெல்லாமே கவிதைதான்.

யார் யார்க்கும் விண்ணரசை அடைவதுதானே நோக்கம்.​ இயேசு நம் பக்கத்திலேதானே இருக்கிறார்;​ அவரை விட்டு விலகினால்தானே விண்ணரசு விலகிப் போகும்.​ பக்கத்திலேயே இருப்போம் என்று ஒருவன் இந்த வசதியான முடிவுக்கு வந்தால்,​​ அவனை இயேசு எச்சரிக்கிறார்:​ ""எனக்குப் பக்கத்திலிருக்கும்போது நெருப்புக்குப் பக்கத்திலிருக்கிறீர்கள்''.

பிறந்தபடியே சாவதற்கு இயேசு தேவையில்லை.​ மாற்றமுறுவதற்கும்,​​ மாசுகள் நீங்கப் பெறுவதற்குமே இயேசு தேவை.​ மாசுகள் நீங்கப் பெறுவது எளிதில்லை.​ பாடுகளை ஏற்க வேண்டும்.​ இயேசுவைத் தொட்டுக் கொண்டு திரிவதனால் மட்டுமே விண்ணரசு கிட்டி விடாது.

முதலில் மாற்றத்தை விரும்ப வேண்டும்;​ அது பாடுகளின் வழியாக அன்றி வெறும் வழிபாடுகளின் வழியாக வராது என்பதையும் தேர்ந்து தெளிந்து விட வேண்டும்.​ அந்தக் குறைந்த அளவு அறிவாவது இருந்தால்தான் இயேசுவால் உதவ முடியும்.

"கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்' என்று இயேசு சொல்வார்.​ எல்லாருக்கும்தான் காது இருக்கிறது;​ நுண்மையான ஒலிகளைக் கேட்கும் ஆற்றல் கூட அக் காதுகளுக்கு இருக்கிறது.​ இருந்தும் என்ன பயன்?​ மாற்றத்துக்கான மனவிருப்பம் பெறாதவனுடைய காதுகள் கேட்டும் கேளாத்தகையவையே.​ அவனுக்கு இயேசு பேசுவது காதில் விழாதே.​ மாறாக செவிடனுக்கும் இயேசு பேசுவது கேட்கும்,​​ அவன் மனம் திரும்ப விருப்பமுடையவனாக இருந்தால்.

கேட்கச் செவியுள்ளவர்களுக்கு இயேசு சொல்கிறார்:​ ""உங்களை நான் இளைப்பாற்றுகிறேன்;​ என் நுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்;​ என் நுகம் அழுத்தாது;​ என் சுமை எளிது;​ நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உடையவன்.​ ​(மத்:​ 11 :​ 28)

வாழ்க்கை எளிதானதில்லை;​ சிக்கலானது;​ அந்தச் சிக்கலை அவிழ்க்க முயன்று மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்வதுதான் மனித இயல்பு.​ அந்த முயற்சியில் அவர்கள் களைத்தும் போய்விடுகிறார்கள்.​ அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக உறுதி அளிக்கிறார் இறைமகன் இயேசு.​ ஆயினும் எந்தப் பாடும் இல்லாமல் உய்வு கிட்ட முடியாதே;​ பிற நுகத்தடிகளைப் போலன்றி அழுத்தாத நுகத்தடியை நான் உங்களுக்குத் தருகிறேன் என்கிறார்.

வாய்மையே வடிவானவர் இயேசு.​ என்னைப் பின்பற்றினாலே போதும்;​ உடனடியாக விடுதலை கிடைக்கும் என்று அவர் சொல்லவில்லை.​ கழுத்துப் புண்ணாகும் அளவுக்குக் கடினமான நுகத்தடிகளை விட்டுவிட்டு,​​ அழுத்தாத என் நுகத்தடிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் அழைக்கிறார்.​ ஆனால் நுகத்தடி இல்லாமல் விண்ணரசு வேண்டும் என்பார்க்கு இயேசுவிடம் விடை இல்லை.​ உயர்நிலை எய்துவது மனித முயற்சி சார்ந்ததுதான்.​ பாடுகள் தவிர்க்க இயலாதவை;​ ஆனால் குறைவான பாடுகளில் நிறைவான வாழ்வை இறைமகன் இயேசுவால் பெற்றுத்தர முடியும்.

வாழ்வின் கடைசிக்கட்டத்தில் தன்னுடைய போதனைகளையெல்லாம் சுருக்கி ஒரு கட்டளை பிறப்பிக்கிறார்;​ அதைப் புதிய கட்டளை என்று இயேசுவே சொல்கிறார்.​ இயேசுவின் நுகத்தடி எளிதானது என்பதற்கும் பின்பற்றத் தகுந்தது என்பதற்கும்,​​ ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை என்பதற்கும் அந்தக் கட்டளையே சான்று.

""ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.​ நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் பிறரிடம் அன்பு செலுத்துங்கள்.'' ​(யோவான் 13 :​ 34)

தான் வாழ்ந்து காட்டிவிட்டுப் பிறரைப் பின்பற்றச் சொல்கிறார் இயேசு.​ இயேசு வெறுப்பையே அறியாதவர்;​ அன்புதான் அவருடைய வாழ்க்கை;​ அன்புதான் அவருடைய வாழ்வின் செய்தி.

இரவு உண்பதற்கு ஒருவருக்குத்தான் உணவிருக்கிறது.​ அதை வெளிக்காட்டாமல்,​​ கணவனை உண்ணச் செய்துவிட்டுத் தான் பசி பொறுத்துத் துயிலச் செல்கிறாள் ஒரு மாதரசி.

இருக்கின்ற காசில் ஒருவர்தான் வண்டியில் செல்லலாம்.​ "உன்னால் நடக்க முடியாது;​ நீ வண்டியில் செல்;​ நான் நடந்து வருகிறேன்' என்று சிரமத்தைத் தான் மேற்கொள்கிறான் ஒரு பெருங்கணவன்.

நீ பாதி;​ நான் பாதி சாப்பிடலாம்;​ உனக்கு மட்டும்தான் வயிறு இருக்கிறதோ என்று கணவன் மனைவியையோ,​​ மனைவி கணவனையோ கேட்டால் அது சட்டப்படி உரிமைக் கொள்கைதான்;​ ஆனால் வறண்ட கொள்கை;​ ஆனால் இயேசுவின் கொள்கை ஈரமான கொள்கை.​ எல்லாரும் உரிமைக் கொள்கையைப் போதிக்கிறார்கள்.​ அது கழுத்தைப் புண்ணாக்கும் நுகத்தடி.​ இயேசு அன்புக் கொள்கையைப் போதித்தார்;​ அது அழுத்தாத நுகத்தடி.

ஆனாலும் இவ்வளவு எளிய இயேசுவின் போதனையைப் பின்பற்றி மண்ணிலே ஏன் விண்ணைக் காண முடியவில்லை என்றால் அன்பு செய்வது எளிதானதில்லை.​ அதற்குத் தன்னை இழக்க வேண்டும்.​ அதனால்தான் எனக்குப் பக்கத்திலிருக்கும்போது நெருப்புக்குப் பக்கத்திலிருக்கிறீர்கள் என்கிறார் இயேசு.

கணவனுக்கும் மனைவிக்கும் சரியாக வரவில்லை என்றால் திருமணத்தை முறித்துவிடு என்று ஏதோ பட்டத்தின் வாலை அறுத்துவிடு என்று சொல்வதுபோல் மிக எளிதாகச் சொல்வான் மோயீசன்.​ அவன் கடவுளிடமிருந்து கட்டளை பெற்றவன்;​ ஆகவே அவன் பேசியதெல்லாமே வேதம்தான்.

நான் வேதத்தை நிறைவேற்றவே வந்தேன் என்று சொல்லிக்கொண்டே அதை மாற்றிப் புதிய வேதம் படைப்பார் அறிவர்க்கெல்லாம் அறிவரான இயேசு.

மிகவும் மனத்தாழ்ச்சி உடையவரான இயேசு அதுபோன்ற இடங்களில் மிகுந்த அதிகாரத்தோடு,​​ "நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்று அறுதியிட்டுப் பேசுவார்.

""அவளுடைய ஒழுக்கக் கேட்டிற்காக அல்லாமல்,​​ வேறு எக்காரணம் கொண்டும் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரம் செய்தவனாகிறான் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' ​(மத்:​ 19 :​ 19) என்று அதட்டிச் சொல்லுவார் மனித குலத்துக்கு உய்வு காட்ட வந்த இயேசு.

""அவர்கள் இருவரும் ஒரே உடலாய் இருப்பர்;​ இனி அவர்கள் இருவரல்ல;​ ஒரே உடல்.​ கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' ​(மாற்கு 10 :​ 8)

மோயீசனையும் பழைய ஏற்பாட்டையும் இயேசு திட்டவட்டமாக மறுதலிக்கும் இடங்கள் பல;​ அதனால்தான் இயேசுவின் ஞானஉரைக்குப் புதிய ஏற்பாடு என்று பெயர்.

அறுத்துக் கொள்வதோ,​​ அறுத்து விடுவதோ கழுத்தைப் புண்ணாக்கும் கடின நுகத்தடி;​ அது மோயீசனின் நுகத்தடி.​ ஓருடலாய் அன்பில் அழுந்தி வாழ்வது அழுத்தாத நுகத்தடி;​ அது இயேசுவின் நுகத்தடி.

""என்னை நோக்கி ஆண்டவரே,​​ ஆண்டவரே என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேர மாட்டான்;​ என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேர்வான்'' ​(மத் 7 :​ 21)

""மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை;​ உங்களை எனக்குத் தெரியும்'' ​(யோவான் 5 :​ 41) என்று முகத்திலடித்தாற்போல் சொல்லி விடுகிறார்.​ மனிதர்கள் ஒரு சிறு நன்மை கிடைத்தால் தங்களையே விற்றுக் கொள்ளும் தன்மை உடையவர்கள்.​ இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வந்த இயேசுவுக்கு,​​ மனிதர்களின் பாராட்டும்,​​ பழிப்பும் ஒரு பொருட்டாக இருக்க முடியாது.​ ""நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்;​ தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்'' ​(யோவான் 5 :​ 29) என்று இயேசு நல்லதற்கும்,​​ கெட்டதற்கும் நம்மைப் பொறுப்பாக்குகிறார்.

மாந்தன் இயல்பிலேயே தன்னலமானவன்;​ தனக்கு நன்மை வருமென்றால் தயங்காமல் பிறர்க்குத் தீமை செய்வான்.​ தீய மனிதர்களைப் பிரளயத்தாலும் பிறவகையாலும் அழித்து அழித்துக் களைத்துப்போன இறைவன் மனித குலத்துக்கு நல்லதையும்,​​ கெட்டதையும் பாகுபடுத்திச் சொல்லி,​​ அவர்களை அறியாமையிலிருந்து விடுவித்து,​​ அவர்களுக்கு விடுதலை தேடிக் கொடுக்கத் தன் மகன் இயேசுவை அனுப்பினான்.​ உலகிலேயே அறிவான யூத இனம்,​​ ஒரு யூதப் பெண்ணான மேரியின் மகனை,​​ பேரறிவின் இரட்சியை,​​ பெருங் கருணையாளன் இயேசுவை அறிய மறுத்து அருங்குறி கேட்டது.​ கடைசியில் சிலுவையில் அறைந்து கொன்றது.

""நான் உங்களுக்குச் சொல்கிறேன்;​ தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.​ எவராவது உங்களை ஒரு கல் தொலைவு வரக் கட்டாயப்படுத்தினால்,​​ அவரோடு இரு கல் தொலைவு செல்லுங்கள்'' ​(மத் 6 :​ 39)

இயேசு தான் வாழ்நாளெல்லாம் போதித்ததற்குத் தானே இலக்கணமாய் வாழ்ந்து காட்டுகிறார்.​ பகைவர்கள் விரும்பியவண்ணம் தன்னுடைய சிலுவையைத் தானே சுமந்து கொண்டு,​​ அவர்கள் விரும்பிய தொலைவான மண்டைஓட்டு மலைக்கு நடக்கிறார்.​ சிலுவையில் உயிர் நீப்பதற்கு முன்,​​ ""தந்தையே இவர்களை மன்னியுங்கள்;​ தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்''.

எந்தக் குற்றமும் செய்யாமல் சாகடிக்கப்படுகின்ற ஒருவன் சாகடித்தவர்களை மன்னிக்குமாறு இறைவனிடம் மன்றாடுவதைவிட ஒருவன் இறைமகன் என்பதற்கு என்ன அருங்குறி வேண்டும்?​ இன்றுவரை யூதர்கள் அதை உணரவில்லையே.

ஒரு கொலைக் கருவியான சிலுவை,​​ இயேசு என்னும் புனித மகனைத் தாங்கியதால் உலகெங்கும் இரண்டாயிரம் ஆண்டுகளாக வணக்கத்திற்குரியதாகிவிட்டது!

ஒருமுறை கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி இயேசுவைப் பார்த்துக் குரலெடுத்துக் கூவினாளாம்:​ ""உம்மைத் தாங்கிய வயிறும்,​​ நீர் பாலுண்ட முலைகளும் பேறு பெற்றவை'' ​(லூக்கா 11 :​ 27)

இயேசுவின் பிறப்பால் உலகம் பேறு பெற்றது.​ அவர் பிறப்புக்கு முந்தைய காலத்தை கிறிஸ்து பிறப்பதற்கு முன் ​(கி.மு.)​ என்றும்,​​ அவருக்குப் பிந்தைய காலத்தைக் கிறிஸ்துவுக்குப் பின் ​(கி.பி.)​ என்றும் அடையாளப்படுத்திப் பெருமைப்படுத்தியது உலகம்.
கட்டுரையாளர் : பழ.​ கருப்பையா
நன்றி : தினமணி

சமாளிப்பா?​ திறமையின்மையா?

கடந்த 13 நாள்களாக ஆந்திர மாநிலம் முழுவதுமே கொதித்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலைமை மாறி,​​ தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேர பந்த் என்பதாக வரம்புக்குள் வந்துள்ளது வன்முறை.

வன்முறை வரம்பு கடந்ததற்கும்,​​ வரம்புக்குள் வந்ததற்கும் காரணம் மத்திய அரசின் நிலைப்பாடாக உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் வெளியிட்ட கருத்துதான்.​ தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை தொடங்கும் என்று அவர் அறிவித்தவுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.​ இப்போதைக்கு இல்லை என்று சொன்னதும் வன்முறையின் பரப்பளவு வரம்புக்குள் வந்துவிட்டது.

மத்திய அரசு எதற்காக அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவானேன்,​​ அவஸ்தைப் படுவானேன்,​​ இப்போது எதையெல்லாமோ நியாயப்படுத்தி,​​ விஷயத்தைத் தள்ளிப்போடுவானேன்!

தெலங்கானா விவகாரத்தில் முதலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உள்துறை அமைச்சர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்.​ ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்மாதம் 9-ம் தேதி அறிவித்தேன் என்கிறார்.​ அப்படியானால்,​​ அவர் சொன்ன அடுத்த நாளே நூற்று இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏன் ​ கொடுத்தார்கள்?​ அதுவும்,​​ காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,​​ எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன?​ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் எதற்காக இந்தப் போராட்டங்களை இக்கட்சிகள் நடத்தின?

தெலங்கானா பகுதிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டு,​​ தெலங்கானா போராட்டம் மறக்கப்பட்ட நிலையில் அதற்கு உயிர் கொடுத்து,​​ பலமும் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர,​​ சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அல்ல.

அதிக முக்கியத்துவம் இல்லாமல்,​​ கெüரவத்துக்காக தனக்கென ஒரு கட்சி என்ற அளவில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவை,​​ காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அதிக இடங்களில் போட்டியிட வைத்து,​​ வெற்றி பெறவும் வைத்து,​​ அவர்களைக் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க ​ விட்டு பெரிய ஆளாக்கிவிட்டவர் ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி.​ தெலங்கானா அமைப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்து,​​ அதை மத்திய கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தவரும் அவரே.​ அன்று செய்த அந்தத் தவறுக்காக இன்று ஆந்திரமே அமளிக்காடாகிவிட்டது.

இந்தியத் தேர்தல் முறையில்,​​ நேற்று முளைத்த கட்சிகூட தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு,​​ தன் சின்னத்துக்குக் கிடைக்கும் எல்லா கட்சியினரின் வாக்குகளையும் தனக்கானதாகக் காட்டி,​​ அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதும்,​​ மார்தட்டிக் கொள்வதும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.​ அதேபோன்றுதான்,​​ தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும்,​​ கூட்டணி வாக்குகளை தனது வாக்குகளாகக் காட்டி,​​ தன் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும்,​​ தெலங்கானாவுக்கு ஆதரவு இருப்பதாகவும் பேசியது.​ ஆனால்,​​ காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி,​​ தெலுங்கு தேசக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தபோது படுதோல்வி அடைந்தது.​ ஹைதராபாத் மட்டுமே தெலங்கானா ​ தலைநகரம் என்று சொல்லும் இக்கட்சி,​​ மாநகராட்சித் தேர்தலில் அடைந்த படுதோல்வி,​​ இந்தக் கருத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தி,​​ தலைக்குனிவை ஏற்படுத்தியது.

இழந்த கெüரவத்தை நிலைநிறுத்தத்தான் சந்திரசேகர ராவ் இத்தகைய போராட்டத்தை நடத்தினார் என்பதையும்,​​ இந்த வன்முறை திட்டமிட்ட சிலரின் நடவடிக்கையே என்றும்,​​ புரிந்துகொள்ள உள்துறை அமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதா,​​ அல்லது உளவுத் துறையினர் சரியான தகவல்களைத் தரவில்லையா?​ தெலங்கானாவைப் பிரித்தால்,​​ ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும்,​​ பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல்,​​ அறிவிப்புச் ​ செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால்,​​ அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா?​ அல்லது எல்லாம் தெரிந்திருந்தும்,​​ நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா!​ எப்படிப் புரிந்துகொள்வது?

இதனால் ஆந்திர மாநிலம்,​​ குறிப்பாக ஹைதராபாத் இழந்தவை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நினைக்கும்போது,​​ வேதனையாக இருக்கிறது.​ மருந்து உற்பத்தி,​​ தகவல்தொழில்நுட்பம்,​​ சேவைத் தொழில்கள் இவற்றில் மட்டுமே ரூ.​ 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.​ மேலும்,​​ இந்தியாவிலிருந்தும் 25 வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்த சிஐஐ பங்குதாரர் மாநாடு,​​ சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது.​ வழக்கமாக இந்த மாநாடு நடைபெறும்வேளையில் புதிய தொழில்ஒப்பந்தங்கள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.​ ​

இப்போதும்கூட,​​ ஆற அமர விவாதித்து சுமுக முடிவு காணப்படும் என்று சொல்வதனால்,​​ புதிய முதலீட்டாளர்கள் ஹைதராபாதை கண்டுகொள்ளப் போவதில்லை.

இதன் விளைவால் ஏற்படும் நஷ்டம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல.​ ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் தான்.​ உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.
நன்றி : தினமணி

Thursday, December 24, 2009

புதிய பாதையில் அத்வானி

ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் ​(ஆர்.எஸ்.எஸ்.)​ விரும்பியபடியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகிவிட்டார்.​ ஆனால்,​​ இதன் மூலம் அத்வானியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது.​ ஆர்.எஸ்.எஸ்.,​​ பா.ஜ.க.,​​ அத்வானி இணைந்து கட்சியை வலுப்படுத்த புதிய செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.​ அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான இத்திட்டம் நல்ல திட்டம்தான்.

பாஜகவின் அடுத்த தலைவர் நிதின் கட்கரி என்று ஆர்.எஸ்.எஸ்.​ தலைவர் மோகன் பாகவத் அறிவித்தபோது,​​ அதை அத்வானி உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர்.​ நிதின் கட்கரியைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அத்வானி கூறியிருந்தார்.​ அதேபோல்,​​ அத்வானி தன்னை அணுகி,​​ கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டதாக நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டிருந்தார்.​ இதன் மூலம் தனக்கு அத்வானியின் ஆதரவு உள்ளது என்பதை மறைமுகமாக நிதின் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் அத்வானிக்கு முக்கிய பங்கு இருந்தது.​ மக்களவையில் அத்வானிக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜும்,​​ மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.​ இதை சங்கப்பரிவாரங்களின் தலைவர்களும் ​ ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

பாஜகவின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டு,​​ நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு,​​ அதன் தலைவராக எல்.கே.அத்வானி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இதற்கு அத்வானியின் எதிர்ப்பாளர்களான மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை.​ ஏனெனில் இதற்கு ஆர்.எஸ்.எஸ்.​ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.

பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும்,​​ ஆர்.எஸ்.எஸ்.​ அமைப்பு இதில் அதீத ஆர்வம் காட்டவில்லை.​ கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் வழிநடத்திச் செல்ல அவரால்தான் முடியும் என்று நினைத்திருக்கலாம்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா,​​ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுத்து அவரது ஆதரவை உறுதி செய்தது போலத்தான் இதுவும்.​ இல்லையெனில் அத்வானியின் ஆதரவாளர்களான அடுத்த தலைமுறையினர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.

சோனியா காந்தி எம்.பி.யாவதற்கு முன்னதாகவே அதாவது 1998}ல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சட்டவிதிகளைத் ​ திருத்தி அமைத்தது.​ அதன் பிறகுதான் சோனியா காந்தி,​​ கட்சியில் முக்கியத்துவம் பெற்று அதிக சக்திவாய்ந்தவராக உருவானார்.​ 1999,​ 2004,​ 2009 தேர்தல்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது.

இப்போது பாஜகவும் சட்டவிதிகளைத் திருத்தியமைத்து அத்வானிக்குப் புதிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது.​ ஆனால்,​​ சோனியாவுக்கும் அத்வானிக்கும் வித்தியாசம் உள்ளது.​ சோனியா,​​ ஆளும் காங்கிரஸ் அரசின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார்.​ அத்வானி,​​ பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பார்க்கப்படுகிறார்.

புதிய பதவிக்கு வந்துள்ளதன் மூலம் அத்வானி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று யாரும் கருத வேண்டாம்.​ அதாவது பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவரானதன் மூலம் மக்களவை,​​ மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.​ அதேபோல அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.​ அவசரப்பட்டு அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்றாலும்,​​ முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அத்வானியை கட்சி மேலிடம் ஒதுக்கிவிட முடியாது என்பதுதான் இதன் சாராம்சம்.

பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அத்வானி இருப்பதால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாவுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இணைந்து செயல்பட வழிவகுக்கும்.​ இருவருக்கும் காபினெட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து,​​ சலுகைகள் கிடைக்கும் என்றாலும்,​​ மரபின் அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைவிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சற்று உயர்ந்ததுதான் என்று கூற வேண்டும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.​ வெளிநாட்டிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் யாராவது வந்தால்,​​ இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதுண்டு.​ மேலும்,​​ அரசு ஏதாவது குழு நியமித்தால் அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் இருக்கும்.​ முக்கிய நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரைக் குழுவில் சேர்க்காமல் எந்த முடிவையும் அரசால் எடுக்க முடியாது.

அத்வானியின் ஆதரவு இல்லாமல் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க முடியாது.​ அதுமட்டுமல்ல;​ அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானாலும் அதற்கு அத்வானியின் ஆதரவு தேவை.​ எனினும் அத்வானிக்குப் பதிலாக சுஷ்மாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலுக்கு தீர்வு காண முடியாது.

முதலாவதாக,​​ பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற சர்ச்சை எழுந்தது.​ அதற்கு ஒருவழியாகத் தீர்வுகாணப்பட்டுவிட்டது.​ இரண்டாவதாக,​​ பாஜகவின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ்.​ இயக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.​ பாஜகவின் முக்கியப் பதவியில் அத்வானி நீடிப்பது சங்கப்பரிவாரங்கள் தலையீட்டை எதிர்ப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும்.

ஆர்.எஸ்.எஸ்.​ ஆதரவாளரான நிதின் கட்கரி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.​ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பிரசாரகர்களை அவர் நியமிக்கக்கூடும்.

அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.​ ஆனாலும்,​​ சங்கப்பரிவாரங்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட முடியாது.

மூன்றாவதாக,​​ பாஜகவின் நிலைப்பாடு என்ன?​ நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது?​ இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது?​ என்பது முக்கியமான விஷயமாகும்.

பாஜகவில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து,​​ அக்கட்சிக்குக் கெட்டபெயர் ஏற்பட்ட நேரத்தில் புதிய தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றுள்ளார்.​ சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது.​ விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைதூக்கிய போதிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாஜகவால் ஏதும் செய்ய முடியவில்லை.

சங்கப்பரிவாரங்களைத் திருப்திப்படுத்தி,​​ எதிர்ப்பாளர்களைச் சமாளித்து கட்சியை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு,​​ புதிய தலைவரான நிதின் கட்கரிக்கு உள்ளது.​ மாநில அளவில் தலைவராக அவர் பேசப்பட்டவர்தானே தவிர தேசிய அளவில் அவர் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகிக்கவில்லை.

நாகபுரியைச் சேர்ந்த நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ்.​ பின்னணி இருக்கிறது.​ அதன் தலைவர் மோகன் பாகவத்துடன் சேர்ந்து பணியாற்றினாலும்,​​ அவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது.​ எனினும் 52 வயது இளைஞரான நிதின்,​​ பாஜகவுக்கும் சங்கப்பரிவாரங்களுக்கும் பாலமாக இருப்பார் எனத் தெரிகிறது.​ காங்கிரசில் ராகுல் காந்தி எப்படி இளைஞர் படையை வழிநடத்திச் செல்கிறாரோ அதேபோல நிதின் கட்கரியும் பாஜகவை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.

பாஜகவில் அடல் பிகாரி வாஜ்பாய்,​​ எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்துள்ளனர்.​ சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் திறம்படச் செயலாற்றி வந்தனர்.​ அவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.

புதிய தலைவரான நிதின்,​​ கட்சியில் எந்தக் கோஷ்டியையும் சேராதவர்.​ அது அவருக்குச் சாதகமான அம்சம்.​ அவரது தலைமையில் பாஜக புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது.​ வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக கட்சியில் சிறந்த பேச்சாளராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ்,​​ அதேபோல அருண் ஜேட்லியும் புதிய உத்திகளுடன் செயல்படக்கூடிய திறன்பெற்றவர்.​ இவர்களை அரவணைத்து நிதின் கட்கரி கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி