""நீங்கள் என்னை விட்டு விலகி இருக்கும்போது விண்ணரசை விட்டு விலகியிருக்கிறீர்கள்; எனக்குப் பக்கத்திலிருக்கும்போதோ நெருப்புக்குப் பக்கத்தில் இருக்கிறீர்கள்''.
இது 2000 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய ஊருக்கு வந்த தாமசின் நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் ஒப்பற்ற வைரவரிகள். இயேசு பேசியதெல்லாமே கவிதைதான்.
யார் யார்க்கும் விண்ணரசை அடைவதுதானே நோக்கம். இயேசு நம் பக்கத்திலேதானே இருக்கிறார்; அவரை விட்டு விலகினால்தானே விண்ணரசு விலகிப் போகும். பக்கத்திலேயே இருப்போம் என்று ஒருவன் இந்த வசதியான முடிவுக்கு வந்தால், அவனை இயேசு எச்சரிக்கிறார்: ""எனக்குப் பக்கத்திலிருக்கும்போது நெருப்புக்குப் பக்கத்திலிருக்கிறீர்கள்''.
பிறந்தபடியே சாவதற்கு இயேசு தேவையில்லை. மாற்றமுறுவதற்கும், மாசுகள் நீங்கப் பெறுவதற்குமே இயேசு தேவை. மாசுகள் நீங்கப் பெறுவது எளிதில்லை. பாடுகளை ஏற்க வேண்டும். இயேசுவைத் தொட்டுக் கொண்டு திரிவதனால் மட்டுமே விண்ணரசு கிட்டி விடாது.
முதலில் மாற்றத்தை விரும்ப வேண்டும்; அது பாடுகளின் வழியாக அன்றி வெறும் வழிபாடுகளின் வழியாக வராது என்பதையும் தேர்ந்து தெளிந்து விட வேண்டும். அந்தக் குறைந்த அளவு அறிவாவது இருந்தால்தான் இயேசுவால் உதவ முடியும்.
"கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்' என்று இயேசு சொல்வார். எல்லாருக்கும்தான் காது இருக்கிறது; நுண்மையான ஒலிகளைக் கேட்கும் ஆற்றல் கூட அக் காதுகளுக்கு இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? மாற்றத்துக்கான மனவிருப்பம் பெறாதவனுடைய காதுகள் கேட்டும் கேளாத்தகையவையே. அவனுக்கு இயேசு பேசுவது காதில் விழாதே. மாறாக செவிடனுக்கும் இயேசு பேசுவது கேட்கும், அவன் மனம் திரும்ப விருப்பமுடையவனாக இருந்தால்.
கேட்கச் செவியுள்ளவர்களுக்கு இயேசு சொல்கிறார்: ""உங்களை நான் இளைப்பாற்றுகிறேன்; என் நுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிது; நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உடையவன். (மத்: 11 : 28)
வாழ்க்கை எளிதானதில்லை; சிக்கலானது; அந்தச் சிக்கலை அவிழ்க்க முயன்று மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்வதுதான் மனித இயல்பு. அந்த முயற்சியில் அவர்கள் களைத்தும் போய்விடுகிறார்கள். அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக உறுதி அளிக்கிறார் இறைமகன் இயேசு. ஆயினும் எந்தப் பாடும் இல்லாமல் உய்வு கிட்ட முடியாதே; பிற நுகத்தடிகளைப் போலன்றி அழுத்தாத நுகத்தடியை நான் உங்களுக்குத் தருகிறேன் என்கிறார்.
வாய்மையே வடிவானவர் இயேசு. என்னைப் பின்பற்றினாலே போதும்; உடனடியாக விடுதலை கிடைக்கும் என்று அவர் சொல்லவில்லை. கழுத்துப் புண்ணாகும் அளவுக்குக் கடினமான நுகத்தடிகளை விட்டுவிட்டு, அழுத்தாத என் நுகத்தடிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் அழைக்கிறார். ஆனால் நுகத்தடி இல்லாமல் விண்ணரசு வேண்டும் என்பார்க்கு இயேசுவிடம் விடை இல்லை. உயர்நிலை எய்துவது மனித முயற்சி சார்ந்ததுதான். பாடுகள் தவிர்க்க இயலாதவை; ஆனால் குறைவான பாடுகளில் நிறைவான வாழ்வை இறைமகன் இயேசுவால் பெற்றுத்தர முடியும்.
வாழ்வின் கடைசிக்கட்டத்தில் தன்னுடைய போதனைகளையெல்லாம் சுருக்கி ஒரு கட்டளை பிறப்பிக்கிறார்; அதைப் புதிய கட்டளை என்று இயேசுவே சொல்கிறார். இயேசுவின் நுகத்தடி எளிதானது என்பதற்கும் பின்பற்றத் தகுந்தது என்பதற்கும், ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை என்பதற்கும் அந்தக் கட்டளையே சான்று.
""ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் பிறரிடம் அன்பு செலுத்துங்கள்.'' (யோவான் 13 : 34)
தான் வாழ்ந்து காட்டிவிட்டுப் பிறரைப் பின்பற்றச் சொல்கிறார் இயேசு. இயேசு வெறுப்பையே அறியாதவர்; அன்புதான் அவருடைய வாழ்க்கை; அன்புதான் அவருடைய வாழ்வின் செய்தி.
இரவு உண்பதற்கு ஒருவருக்குத்தான் உணவிருக்கிறது. அதை வெளிக்காட்டாமல், கணவனை உண்ணச் செய்துவிட்டுத் தான் பசி பொறுத்துத் துயிலச் செல்கிறாள் ஒரு மாதரசி.
இருக்கின்ற காசில் ஒருவர்தான் வண்டியில் செல்லலாம். "உன்னால் நடக்க முடியாது; நீ வண்டியில் செல்; நான் நடந்து வருகிறேன்' என்று சிரமத்தைத் தான் மேற்கொள்கிறான் ஒரு பெருங்கணவன்.
நீ பாதி; நான் பாதி சாப்பிடலாம்; உனக்கு மட்டும்தான் வயிறு இருக்கிறதோ என்று கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கேட்டால் அது சட்டப்படி உரிமைக் கொள்கைதான்; ஆனால் வறண்ட கொள்கை; ஆனால் இயேசுவின் கொள்கை ஈரமான கொள்கை. எல்லாரும் உரிமைக் கொள்கையைப் போதிக்கிறார்கள். அது கழுத்தைப் புண்ணாக்கும் நுகத்தடி. இயேசு அன்புக் கொள்கையைப் போதித்தார்; அது அழுத்தாத நுகத்தடி.
ஆனாலும் இவ்வளவு எளிய இயேசுவின் போதனையைப் பின்பற்றி மண்ணிலே ஏன் விண்ணைக் காண முடியவில்லை என்றால் அன்பு செய்வது எளிதானதில்லை. அதற்குத் தன்னை இழக்க வேண்டும். அதனால்தான் எனக்குப் பக்கத்திலிருக்கும்போது நெருப்புக்குப் பக்கத்திலிருக்கிறீர்கள் என்கிறார் இயேசு.
கணவனுக்கும் மனைவிக்கும் சரியாக வரவில்லை என்றால் திருமணத்தை முறித்துவிடு என்று ஏதோ பட்டத்தின் வாலை அறுத்துவிடு என்று சொல்வதுபோல் மிக எளிதாகச் சொல்வான் மோயீசன். அவன் கடவுளிடமிருந்து கட்டளை பெற்றவன்; ஆகவே அவன் பேசியதெல்லாமே வேதம்தான்.
நான் வேதத்தை நிறைவேற்றவே வந்தேன் என்று சொல்லிக்கொண்டே அதை மாற்றிப் புதிய வேதம் படைப்பார் அறிவர்க்கெல்லாம் அறிவரான இயேசு.
மிகவும் மனத்தாழ்ச்சி உடையவரான இயேசு அதுபோன்ற இடங்களில் மிகுந்த அதிகாரத்தோடு, "நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்று அறுதியிட்டுப் பேசுவார்.
""அவளுடைய ஒழுக்கக் கேட்டிற்காக அல்லாமல், வேறு எக்காரணம் கொண்டும் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரம் செய்தவனாகிறான் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' (மத்: 19 : 19) என்று அதட்டிச் சொல்லுவார் மனித குலத்துக்கு உய்வு காட்ட வந்த இயேசு.
""அவர்கள் இருவரும் ஒரே உடலாய் இருப்பர்; இனி அவர்கள் இருவரல்ல; ஒரே உடல். கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' (மாற்கு 10 : 8)
மோயீசனையும் பழைய ஏற்பாட்டையும் இயேசு திட்டவட்டமாக மறுதலிக்கும் இடங்கள் பல; அதனால்தான் இயேசுவின் ஞானஉரைக்குப் புதிய ஏற்பாடு என்று பெயர்.
அறுத்துக் கொள்வதோ, அறுத்து விடுவதோ கழுத்தைப் புண்ணாக்கும் கடின நுகத்தடி; அது மோயீசனின் நுகத்தடி. ஓருடலாய் அன்பில் அழுந்தி வாழ்வது அழுத்தாத நுகத்தடி; அது இயேசுவின் நுகத்தடி.
""என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேர மாட்டான்; என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேர்வான்'' (மத் 7 : 21)
""மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை; உங்களை எனக்குத் தெரியும்'' (யோவான் 5 : 41) என்று முகத்திலடித்தாற்போல் சொல்லி விடுகிறார். மனிதர்கள் ஒரு சிறு நன்மை கிடைத்தால் தங்களையே விற்றுக் கொள்ளும் தன்மை உடையவர்கள். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வந்த இயேசுவுக்கு, மனிதர்களின் பாராட்டும், பழிப்பும் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. ""நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்'' (யோவான் 5 : 29) என்று இயேசு நல்லதற்கும், கெட்டதற்கும் நம்மைப் பொறுப்பாக்குகிறார்.
மாந்தன் இயல்பிலேயே தன்னலமானவன்; தனக்கு நன்மை வருமென்றால் தயங்காமல் பிறர்க்குத் தீமை செய்வான். தீய மனிதர்களைப் பிரளயத்தாலும் பிறவகையாலும் அழித்து அழித்துக் களைத்துப்போன இறைவன் மனித குலத்துக்கு நல்லதையும், கெட்டதையும் பாகுபடுத்திச் சொல்லி, அவர்களை அறியாமையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு விடுதலை தேடிக் கொடுக்கத் தன் மகன் இயேசுவை அனுப்பினான். உலகிலேயே அறிவான யூத இனம், ஒரு யூதப் பெண்ணான மேரியின் மகனை, பேரறிவின் இரட்சியை, பெருங் கருணையாளன் இயேசுவை அறிய மறுத்து அருங்குறி கேட்டது. கடைசியில் சிலுவையில் அறைந்து கொன்றது.
""நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். எவராவது உங்களை ஒரு கல் தொலைவு வரக் கட்டாயப்படுத்தினால், அவரோடு இரு கல் தொலைவு செல்லுங்கள்'' (மத் 6 : 39)
இயேசு தான் வாழ்நாளெல்லாம் போதித்ததற்குத் தானே இலக்கணமாய் வாழ்ந்து காட்டுகிறார். பகைவர்கள் விரும்பியவண்ணம் தன்னுடைய சிலுவையைத் தானே சுமந்து கொண்டு, அவர்கள் விரும்பிய தொலைவான மண்டைஓட்டு மலைக்கு நடக்கிறார். சிலுவையில் உயிர் நீப்பதற்கு முன், ""தந்தையே இவர்களை மன்னியுங்கள்; தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்''.
எந்தக் குற்றமும் செய்யாமல் சாகடிக்கப்படுகின்ற ஒருவன் சாகடித்தவர்களை மன்னிக்குமாறு இறைவனிடம் மன்றாடுவதைவிட ஒருவன் இறைமகன் என்பதற்கு என்ன அருங்குறி வேண்டும்? இன்றுவரை யூதர்கள் அதை உணரவில்லையே.
ஒரு கொலைக் கருவியான சிலுவை, இயேசு என்னும் புனித மகனைத் தாங்கியதால் உலகெங்கும் இரண்டாயிரம் ஆண்டுகளாக வணக்கத்திற்குரியதாகிவிட்டது!
ஒருமுறை கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி இயேசுவைப் பார்த்துக் குரலெடுத்துக் கூவினாளாம்: ""உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட முலைகளும் பேறு பெற்றவை'' (லூக்கா 11 : 27)
இயேசுவின் பிறப்பால் உலகம் பேறு பெற்றது. அவர் பிறப்புக்கு முந்தைய காலத்தை கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு.) என்றும், அவருக்குப் பிந்தைய காலத்தைக் கிறிஸ்துவுக்குப் பின் (கி.பி.) என்றும் அடையாளப்படுத்திப் பெருமைப்படுத்தியது உலகம்.
கட்டுரையாளர் : பழ. கருப்பையா
நன்றி : தினமணி
Friday, December 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment